பன்னிரண்டாம் தேதி சீட்டுகளின் மேல் சீட்டுகள் விழுவதுபோல ஆலயங்கள் நினைவின் மேல் அடுக்கடுக்காக வந்தமைந்தன. ஜவகலின் லட்சுமிநரசிம்ம சுவாமி ஆலயத்திற்குச் செல்லும் வழியில் மதியம் உணவருந்தினோம். 1250ல் ஹொய்ச்சள மன்னர் வீரசோமேஸ்வரரால் கட்டப்பட்டது இந்த ஆலயம். மையத்தெய்வம் லட்சுமியை மடியிலமர்த்திய நரசிம்மர். உக்கிரமான சிம்ம முகத்தில் சிருங்காரத்தைக் கொண்டுவருவதில் நடுக்காலகட்டத்துச் சிற்பிகள் பெருவெற்றி அடைந்திருக்கிறார்கள்.
வழக்கமான திருகுடாச்சல அமைப்பு கொண்ட கோயில் வட்டவடிவமான மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மண்டபத்தின் அமலக உட்கூரையே ஹொய்ச்சாள கட்டிடங்களில் உள்ளவற்றில் மிகப்பெரியது எனப்படுகிறது.. இங்குள்ள சிற்பங்களில் உள்ள கருக்கள் வழக்கமான ஹொய்ச்சள வைணவ ஆலயங்களில் உள்ளவையே. ஆனால் ஆய்வாளரான ஜெராட் ஃபொக்கீமா இவை மேலும் நாட்டாரியல் பாணியை கொண்டுள்ளன என்று கருதுகிறார்
சாளுக்கிய, ஹொய்ச்சாள கட்டிடக்கலையைப்பற்றி எழுதிய ஜெராட் ஃபொக்கீமா [Gerard Foekema] மிகமுக்கியமான ஓர் ஆய்வாளர். அனைத்து ஆலயங்களுக்கும் சென்று சிற்பங்களை எண்ணி கணக்கிட்டு அட்டவணை தயாரித்திருக்கிறார். அவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு சிறப்பியல்புகள் அனைத்தையும் பதிவுசெய்திருக்கிறார்.
தமிழகத்துக் கலைச்செல்வங்களைப்பற்றி இத்தகைய துல்லியமான ஆய்வுகள் இல்லை. குடவாயில் பாலசுப்ரமணியம் தஞ்சை கோயில் பற்றியும் கே.கே.பிள்ளையும் அ.கா.பெருமாளும் சுசீந்திரம் திருவட்டார் பறக்கை கோயில்களைப்பற்றியும் எழுதிய விரிவான நூல்களை மட்டுமே விதிவிலக்காகச் சொல்லவேண்டும். இணையத்தில் ஃபொக்கீமா பற்றி தேடியும் போதிய அளவுக்கு தனிப்பட்ட விவரங்கள் தெரியவில்லை.
கர்நாடகத்தின் கோயில்கள் தமிழக ஆலயங்கள் போலின்றி நன்றாகவே பராமரிக்கப்படுகின்றன. கர்நாடகத் தொல்பொருட்துறையும் பொறுப்பாகச் செயல்படுகிறது. முக்கியமாக தமிழகத்து ஆலயங்களைச் சுற்றிக்கிடக்கும் குப்பை மலைகள். கழிவுகள் கர்நாடகத்தில் இல்லை. இக்காரணத்தாலேயே இந்தப்பயணம் இனிமையானதாக இருந்தது.
மாலை கனிந்திருந்தது. அந்தியொளியில் கோயில்கள் ஒருவித துயரசாயை கொள்கின்றன. அங்கே நிறைந்திருக்கும் கடந்தகாலம் கனவுபோல் எழுந்துவருகிறது. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்திற்கு அடியில் புதைந்துவிட்டதுபோன்ற உணர்வு.
ஹொய்ச்சாளமன்னர்கள் ஆரம்பத்தில் சமணர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதன்பின்னர் அவர்கள் இந்துக்களாக ஆனார்கள். அவர்கள் பெரும்பாலும் சைவர்கள். ஆனாலும் வைணவத்தையும் சமணத்தையும் பேணினர். அவர்கள் கட்டிய சமணர்கோயில்கள் பல உள்ளன. ஹளபேடுவில் உள்ள தீர்த்தங்காரர் ஆலயம் ஹொய்சாள சமணக்கோயில்களின் சிறந்த மாதிரி
நேரமிருந்தால் ஹளபீடுவில் உள்ள காதரேஸ்வரர் ஆலயத்தையும் சமணர்கோயிலையும் பார்க்கலாமென எண்ணினோம். ஆனால் நாங்கள் செல்வதற்குள் அவை மூடப்பட்டிருந்தன. காதரேஸ்வரர் ஆலயத்தின் சுற்றிலும் இருந்த இரும்புவேலிமேல் தொற்றிக்கொண்டு அதன் சுற்றுப்பரப்பை மட்டும் பார்த்தோம். அங்கிருந்து இருளில் நடந்து மையச்சாலைக்கு வந்தோம். பேலூரில் கர்நாடக அரசுக்குரிய சுற்றுலா விடுதியில் தங்குவதற்கு முன்பதிவுசெய்திருந்தோம்
இரவில் பேலூரில் டீ குடிப்பதற்காக நண்பர்கள் அலைந்து திரிந்தனர். ஆறுமணியளவில் மொத்த ஹலபேடு அடங்கிவிடுகிறது. எங்கும் ஓசைகள் ஏதுமில்லை. அதிலும் சென்றசிலநாட்களாகவே கர்நாடகத்தில் கடுமையான மின்வெட்டு வேறு இருந்தது. ஆகவே எங்கும் இருள். நிழல்கள் போல மனிதர்கள் அலைந்துகொண்டிருந்தனர்
பேலூரின் விடுதி நன்றாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தில் இத்தகைய சிறந்த விடுதி என்பது ஓர் ஆச்சரியம்தான். இருபதுபேர் தங்கும் பொதுப்படுக்கைக்கூடம் மூவாயிரம் ரூபாய் கட்டணத்தில் கிடைத்தது. இதற்கு இணையான எந்த வசதியும் தமிழகத்தின் சுற்றுலாத்துறையில் இல்லை. நான் அறிந்தவரை முற்றிலும் கைவிடப்பட்ட சுற்றுலா துறையும் தொல்லியல்துறையும் தமிழகத்தில்தான் உள்ளன.
Hoysala_Somnathpur_Chennakesava_Temple
Hoysala_Basaralu_Mallikarjuna_temple
Hoysala_Nagamangala_Soumya_kesava_Temple
Hoysala_Nuggehalli_Lakshmi_Narasimha_Temple
Hoysala_Arsikere_Iswara_Temple
Hoysala_Harnahalli_LakshmiNarayana
Hoysala_Koravangala_Bucesvara_temple
Hoysala_Belavadi_Veera_Narayana_temple
Hoysala_Mosale_Nageshvara-Chennakeshava_temple
Hoysala_Govindanhalli_Panchalingeswara_temple
Hoysala_Javagal_Lakshmi_Narashimha_temple