பாரதி தமிழ் சங்கம் மற்றும் பிற…

அன்புள்ள ஜெயமோகன்,

காலம் தாழ்த்திய பதில் மன்னிக்கவும். கடந்த August 24 உங்களுக்கு இமெயில் அனுப்பிவிட்டு உறங்கச் சென்றேன். சில மனி நேரங்களில் தஞ்சையிலிருந்து தொலைபேசி வந்தது தந்தை இறந்துவிட்டாரென. எதிர்ப்பார்த்த செய்தி தான். அவர் 8 மாதங்களாக புற்று நோயின் உக்கிரத்தில் சிக்குண்டிருந்தார். அடுத்த நான்கு நாட்களுக்கு மேலாக பயணம், இறுதி சடங்கு என்று அலைக்கழிப்புகள். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் தளத்தையும் பேஸ்புக்கையும் பார்த்தால் ரணகளம். உடனே பதில் போட எத்தனித்தேன் ஆனால் அங்கேயிருந்த கணிணியில் தமிழ் எழுத்துருவெல்லாம் இல்லை. சரிப் போகட்டும் அமெரிக்காப் போனப் பிறகு எழுதிக் கொள்ளலாமென்று விட்டு விட்டேன். நடுவே நீங்கள் ஒத்திசைவு இஸ்ரோப் பற்றி எழுதியப் பதிவை சிலாகிக்கவும் அதைப் படித்தேன். வழக்கம் போல் அதற்கு எதிர் வினையும் ஆற்றி விட்டேன்.

முதலில் பாரதி தமிழ் சங்கம். அவர்கள் ஸ்தாபன குறிக்கோளே இந்து மதத்தின் விழுமியங்களை விதந்தோதுவது என்று கூறியிருக்கிறார்கள். என் பிழை அவர்கள் அதை வெளிப்படையாக செய்யவில்லை என்று எண்ணியது. அதற்குக் காரணம் அவர்கள் தங்களை தமிழ் சங்கம் எனப் பெயரிட்டுக் கொண்டது. ‘சைவமும் தமிழும்’ என்பதை நானறிவேன் ஆனால் 21-ஆம் நூற்றாண்டில் ஒருப் பண்மை சமூகத்தில் வாழ்பவர்கள் ஒரு மொழியை முழுவதுமாக ஒரு மதத்தோடு பினைப்பது என் போன்றோரால் ஏற்க முடியாதது மட்டுமல்ல அது வழமையாக தமிழ் சங்கம் என்றப் பெயரில் புழங்கி வரும் என்னற்ற மதச் சார்பற்ற சங்கங்களைப் போல் தான் இவர்களும் என்ற பிழையான எண்ணத்தைக் கொடுக்கின்றது. எப்படியோ அது அவர்களின் சுதந்திரம்.

அர்ஜுன் சம்பத்தை அழைத்தது அவர் திரு மறைகளில் வல்லவர் என்பதால் என்கிறார்கள். சரிப் போகட்டும். குமாரி சச்சுவை எதுக் கருதி மேடையேற்றினார்கள்? இதுப் போன்றவைகளைக் கேள்விக் கேட்டால் தான் எனக்கு அவப்பெயர். நான் நீங்கள் ஏன் அந்த மேடையில் ஏறினீர்கள் என்றெல்லாம் கேட்கப் புகவில்லை. இன்னும் சொல்லப் போனால் உங்களைப் போன்றோர் அவர்களிடையேப் பேசுவதால் அவர்களுக்கு நன்மையே. பெருமையும் கூட.

என் தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு பல நாள் சென்றுப் பார்க்க வேண்டுமெனத் திட்டமிட்ட கங்கைக் கொண்ட சோழப் புரம் சென்றேன். உங்களுடைய கலிபோர்னிய நண்பர்கள் கவணிக்க, அங்கே தந்தையின் பெயரில் ஒரு அர்ச்சனையும் செய்யப் பட்டது என்னால். அம்மாவின் ஆசை அது. அங்கே சென்ற போது தான் தெரிந்தது சிதம்பரம் கோயில் அருகில் தானென்று. சிதம்பரம் சென்றேன். கோயிலுக்கு வெளியேயுள்ள புத்தக நிலையத்தில் அற்புதமான பகவத் கீதை உரைக் கிடைத்தது. டேவிட் கார்டன் வைட் பாஷ்யங்களின் பெருமைகள் பற்றி எழுதியதைப் படித்ததிலிருந்து எனக்கு சங்கரர் மற்றும் ராமானுஜரின் பாஷ்யங்களைப் படிக்கும் அவா எழுந்தது. அக்கடையில் அந்த உரை சங்கரர், ராமானுஜர் மற்றும் மத்வரின் உரைகளை ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் தொகுத்தது. நான் படித்துப் பார்த்த வரையில் மிக சீராக தொக்குக்கப் பட்டிருந்தது. நேரமும் உற்சாகமும் கணிந்தால் அந்நூலை என்றாவது வாசிப்பேன் கட்டாயமாக.

எங்கள் வீட்டிலேயே வில்லி பாரதமும், ராஜாஜியின் வியாசர் விருந்தும், சித்பவானந்தரின் கீதை உரையும், புலவர் கீரனின் ராமாயண மற்றும் மஹாபாரத சொற்பொழிவு ஒலி நாடாக்களும் இருந்தன. ஒவ்வொரு கிறித்தவனையும் நடமாடும் மத போதகனாகப் பார்ப்பவர்களுக்கு இது வியப்பாக இருக்கலாம். என்னை ஏதோ தி.க. காரன் போல் இந்து மத எதிர்ப்பாளராக சித்தரிப்பது அவதூறு. அதுப் போகட்டும் அது என்ன இந்தியாவிலுள்ள சிறு பான்மையினர் மட்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் தங்கள் உள்ளங்களை, அநுமனைப் போல், திறந்துக் காட்ட நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்? ராமசந்திர குஹா ஒருக் கட்டுரையில் கூறியிருப்பார் எப்படி இந்தியா-பாக் கிரிகெட் பந்தயம் நடைபெறும் போது மும்பையில் இஸ்லாமிய வீடுகள் இந்திய தேசியக் கொடியைப் பறக்க விட்டு தங்கள் தேசாபிமானத்தை பறைச் சாற்ற வேண்டிய கட்டாயத்திற்குட்பட்டவர்கள் என்று. இந்து வீடுகளுக்கு அந்த கட்டாயமில்லை என்பதை குஹா பதிவு செய்திருப்பார். சிறுபான்மையினரை நோக்கி “இந்திய” இதிகாசங்களைப் படித்தீர்களா என்று அன்றாடம் கேள்வி எழுப்பப் படுகிறது. ஆனால் எத்தனை தமிழ் இந்துக்களுக்கு சூபி மரபும், விவிலியத்தின் செறிவானத் தமிழும் தெரியும்? ஆங்கில மோகி என்று பெயரெடுத்த எனக்கு இன்றளவும் தமிழ் விவிலியத்தின் ஒலி நயமே ஆதுரமான ஒன்று. “கர்த்தரின் ராஜரிகம் ஸர்வத்தையும் ஆளுகிறது” என்று சொல்வதிலுள்ள ஒலி நயம் எனக்கு King James Version-இல் கூட கிடைப்பதில்லை. கிரந்த எழுத்தை ஆட்சேபிக்கும் திமுக உறுப்பினர்களான என் இந்து உறவினர்களிடம் சொல்வேன் “கிரந்த எழுத்து இல்லையென்றால் தமிழ் விவிலியமில்லை”.

என்னுடைய இந்திய வெறுப்பாளன் என்கின்ற பிம்பம் குறித்து மட்டும் கொஞ்சம் விரிவாக.

இதோ இப்போதும் சென்னை ஹிக்கின்போதம்ஸ் சென்று இந்தியாப் பற்றிப் பல நூல்களை வாங்கி வந்துள்ளேன். “தமிழகத்தில் காந்தி” புத்தகம் வாங்கிய போது உங்கள் உரையாடலை நினைவுக் கூர்ந்தேன். நீங்கள் காந்தி தமிழகத்தில் வாழ்ந்த இடங்களை பட்டியலிட்டு அந்த இடங்கள் பெரும்பாலும் இன்று சிதிலமடைந்த அருங்காட்சியகங்கள் என்று வருத்தப் பட்டீர்கள். என் தனிப்பட்ட தொகுப்பில் இந்தியாப் பற்றி அற்புதமான நூல்களை கனிசமான பொருட் செலவில் சேகரித்துள்ளேன். வெறும் வெறுப்பும், முன் முடிவும், காழ்ப்பும் கொண்டு திட்டுவதென்றால் அது எதையும் நான் செய்யத் தேவையில்லை. தமிழச்சி முதல் அரவிந்தன் நீலகண்டன் வரை காந்தியையும் நேருவையும் பழித்த போது வரிந்துக் கட்டிக் கொண்டு எழுதியது நானா என்னைக் குறைக் கூறுபவர்களா? தமிழச்சி உவேசாவை பழித்துவிட்டு சீகன்பால்கு தமிழ் பற்றினால் தமிழ் படித்தார் என்று புளுகிய போது அது புளுகு என்று நிறுவியவனும் இந்த கிறித்தவனே. சீகன்பால்கு மதப் பிரசாரம் செய்வதற்காகவே தமிழ் படித்தார்.

நான் இந்தியாவை மட்டம் தட்டுகிறேன் என்று ஒத்திசைவுக் குமைகிறார். சிலக் குறிப்புகள் அதுக் குறித்து. 2013-இல் என் தந்தை ஒருச் சின்ன சாலை விபத்தில் இடுப்பு எலும்பு மாற்றும் படி ஆயிற்று. இந்தியா விரைந்தேன். என் தந்தை மருத்துவர் என்பதாலும் நானும் என் தம்பியும் அயல் நாடுகளில் சம்பாதிப்பதாலும் தொடர்புகளுக்கோ (contacts), பணத்திற்கோ கொஞ்சமும் குறைவில்லை. அற்புதமான மருத்துவ நண்பர்கள் உதவக் காத்திருந்தனர், உதவவும் செய்தனர். அப்படியிருப்பினும் சொல்வேன் அங்கே நான் கண்டவைகள் என்னைப் பித்துக் கொள்ள வைத்தன. சத்தியமாக சொல்கிறேன் பணமோ, தொடர்புகளோ (இரண்டுமே அத்தியாவசியம்) இல்லாத சாமான்யன் செத்தான். சிலப் பிரச்னைகளால் அப்பாவை தூக்கிக் கொண்டு, பணத்தை மூட்டையாகக் கட்டிக் கொண்டு (மிகையாக சொல்லவில்லை. 5 லட்சம் ரூபாயை ஒருப் பையில் போட்டுக் கொண்டு) அப்பொல்லோ ஓடி வந்தோம்.

அப்பொல்லோவில் நான் கண்டது ஜன சமுத்திரம். மீண்டும் எங்களுக்கிருந்த உற்றார் உறவினர் உதவினர். இல்லாதவன் செத்தான். அதேச் சென்னையில் அரசாங்க மருத்துவ மனையில் என் தந்தை பனியாற்றியிருக்கிறார். ஒருக் காலத்தில் அவர் அம்மருத்துவமனைகள் பற்றி மிக உயர்வாகச் சொல்வார். நான் பிறந்ததும் அங்கே தான். அப்படிப்பட்ட நகரில் இன்று சல்லிக் காசு இல்லாத ஏழை மட்டுமே அரசாங்க மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஏன்? இத்தனைக்கும் எந்த தனியார் மருத்துவமனையில் சேர்ந்தாலும் செலவு பல்லாயிரம். அங்கே நடக்கும் பித்தலாட்டங்களோ சொல்லி மாளாது. உள்ளம் பதை பதைத்தென்றால் மிகையில்லை.

எந்த நாட்டிலும் ஒரு சராசரி குடிமகனை அதிகம் பாதிப்பது அந்நாட்டுக் கல்வி மற்றும் மருத்துவத் துறைகள் தாம். அவையிரண்டுமே இந்தியாவில் சீரழிந்துவிட்டன. தமிழ் நாட்டைப் போல் வேறெங்கும் இப்படி காசுக்கு மருத்துவப் படிப்பை ஏலம் விட்டிருந்தால் அதைக் குறித்து சமூக அக்கறையோடும் கோபத்தோடும் விவாதிப்பார்கள். எழுதிக் கொடுக்கிறேன் இன்னும் இருபதாண்டுகளில் நல்ல மருத்துவரைக் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வதென்பது செல்வந்தர்களுக்கே ஒரு சவாலாக அமையும்.

ஆமீர் கான் மருத்துவர்களை சாடி ஒரு நிகழ்ச்சி நடத்திய போது நான் காட்டமாக ஒருப் பதிவிட்டேன். என் தந்தையே “இது மிகவும் காட்டமாக உள்ளது தேவையா” என்றார். நான் “அப்பா நான் எழுதியதில் உண்மையில்லையா” எனக் கேட்டேன், அதற்கு அவர் “நீ எழுதியது முற்றிலும் உண்மை இன்னும் சொல்லப் போனால் நீ சொன்ன உண்மைகள் குறைவு இங்கே நிதர்சனம் இன்னும் மோசம்” என்றார்.

அரவிந்த் கண் மருத்துவமனைப் பற்றி ஒத்திசைவு ஆகா ஓகோ என்கிறார். யார் மறுக்க முடியும் அரவிந்த் மருத்துவ மனையின் சாதனைகளை. அவர் பதிவைப் படித்து விட்டு நகைத்துக் கொண்டேன். இவர் பிரலாபிப்பதற்கு ஒரு தசாம்சம் முன்பே Harvard Business Review அரவிந்த் மருத்துவமனைப் பற்றி நீண்டதொரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டது. அதை மகிழ்வோடுப் படித்தேன். HBR அதன் பிறகு சில முறை மீண்டும் அரவிந்த் மருத்துவமனைப் பற்றியக் குறிப்புகளை வெளியிட்டது. அக்கட்டுரகைளைப் படித்திருந்தால் ராமசாமிக்கும் ஒரு மருத்துவமனைப் பற்றி எப்படி எழுத வேண்டுமென்று தெரிந்திருக்கும். “ஆமாம் நீ அமெரிக்காக்காரன் சொன்னால் தான் ஒப்புக் கொள்வாய்” என்றுக் கூறுவோர் அந்தக் கட்டுரைகளை ஒரு முறைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

இந்தியத் துணைக் கண்டத்தின் மருத்துவத் தேவைகளில் ஒரு மிகச் சிறிய எள் முனையளவை தான் அரவிந்த் மருத்துவமனை தீர்க்கிறது. இவ்வளவுப் பெரிய நாட்டில் சர்வதேசத் தரமுள்ள புற்று நோய் சிகிச்சை மையங்கள் எத்தனை? அவற்றில் என்ன வகையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன என யாருக்காவது தெரியுமா? காரணமில்லாமலா வி-பி-சிங் Memorial Sloan Kettering மருத்துவமனைக்கு வந்தார். ஹார்வர்ட் பல்கலையின் Dana Farber Institute-இன் மான்பு தெரிய வேண்டுமாப் படியுங்கள் ஸித்தார்த்தா முகர்ஜி எழுதிய “Emperor of Maladies”.

இந்தியாவை மட்டம் தட்டுகிறேன் என்று மாய்கிறார்களே எத்தனை தமிழக மருத்துவர்கள் முகர்ஜியின் புத்தகத்தைப் படித்திருப்பார்கள். அவருக்கு புலிட்ஸர் கிடைக்க நான் கிட்டத்தட்ட மொட்டைப் போடாதக் குறை. அவருக்கு புலிட்சர் கிடத்ததா என வினாடிக்கு வினாடி இணையத்தை புலிட்சர் அறிவிப்பு வெளியாகும் தினம் பார்த்துக் கொண்டிருந்தேன். அவருக்குப் பரிசுக் கிடைத்தது. இந்த வருடம் அதுல் கவாண்டேயின் “Being MOrtal” பற்றி எத்தனை இந்திய நண்பர்களுக்குப் பரிந்துரைத்திருப்பேன். ஒருவரோ, இருவரோ தான் அப்புத்தகத்தைப் படிக்க முயற்சியாவது செய்தனர். கவாண்டேவின் அனைத்துப் புத்தகங்களையும் ஆவலோடுப் படித்து இருக்கிறேன். அந்த வரிசையில் ஆப்ரகாம் வெர்கீஸையும் சொல்ல வேண்டும்.

தரம் ஒன்றே என் குறிக்கோள். அது இந்தியர்களிடமிருந்து வராதா என்பது தீராத ஆதங்கம்.

ஆமாம் என் பதிவுகளில் இந்தியாப் பற்றிக் கோபம் கொப்பளிக்கும். ஏன்? அவை அனைத்தும் ஒரு சாமனியனின் நிலையைக் கருத்தில் கொண்டு எழுதப் பட்டவை. ஆமாம் இன்று அமெரிக்காவில் இருப்பதால் எனக்குப் பலக் குறைப் பாடுகள் பூதாகரமாகத் தெரிகின்றன. நானும் என் தந்தையும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் புது வீடு கட்டினோம் தத்தமது நாட்டில். நான் சொல்லவும் வேண்டுமோ வித்தியாசங்களை.

அடிப்படை மனிதப் பண்புகளில் இரு தேசங்களுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள். தஞ்சையில் ஒரு விதவைப் பெண்ணின் வீடுப் புகுந்து நகைப் பறிப்பு நடந்தது. பெண் காவல் துறையிடம் முறையிடுகிறார். முதல் கேள்வி “நீங்கள் எந்த ஜாதி”, இரண்டாம் கேள்வி “விதவை என்கிறீர்கள் அப்புறம் ஏன் தாலி அணிந்திருந்தீர்கள்”. அவர் கணவர் இள வயதில் ஒரு விபத்தில் மரணமடைந்து விட்டார். இதை விவரித்தப் பெண்ணின் கண்கள் குளமாயின. என்ன வகையான சமூகமிது? ஒரு நள்ளிரவில் காலிங் பெல் அடிக்கவும் நானும் என் மனைவியும் கதவருகே சென்று யார் என்றுப் பார்த்தால் ஒருவரும் இல்லை. உடனே காவல் துறையைக் கூப்பிட்டோம். ஐந்தே நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விட்டனர். பின்னர் தான் தெரிந்தது எங்கள் வீட்டு காலிங் பெல் தான் பழுதாகி தானே அடித்ததென்று. போலீஸார் இன் முகத்தோடு “அதனாலென்ன பரவாயில்லை. வேறுத் தொல்லை இருந்தால் மீண்டும் தயங்காமல் கூப்பிடவும்” என்றுக் கூறிவிட்டு அந்த அதிகாரிகள் சென்றனர். இவற்றில் எது பண்பாடுள்ள சமூகம் என்றுக் கூறுவீர்கள்?

இந்தியாவின் கல்வி அமைப்பிலுள்ளக் குளறுபடிகள், ஊழல்கள், அறிவிலித் தன்மைக் குறித்தெல்லாம் நீங்களும் உங்களைப் போன்றோரும் எழுதுவதற்கும் என் கோபங்களுக்கும் அதிக வித்தியாசமில்லை என்பது என் புரிதல். அப்படியிருப்பின் நான் சொல்லுவது மட்டும் ஏன் மட்டம் தட்டுவதாகும். உங்களோடு இங்கே உரையாடிய போது தமிழக்த்தில் சமச்சீர் கல்வி எப்படி சீரழக்கிறது என்று ஆதங்கப் பட்டேன். அது வெறும் காழ்ப்பா? அதில் உண்மையில்லையா?

இன்று அமெரிக்காவில் கிடைக்கும் உயிர் காக்கும் புற்று நோய் மருந்துகள் இந்தியாவிலும் கிடைக்கிறது. ஆனால் அதில் நடக்கும் ஊழல் சொல்லி மாளாது. விலையோ ஒருக் குடும்பத்தையே திவாலாக்கக் கூடியவை. (அமெரிக்காவின் மருத்துவக் காப்பீட்டு முறைச் சிக்கல்கள் வேறு கதை). இந்தியா அத்தகைய மருந்துகளை உருவாக்கும் ஆராய்ச்சியின் எள் முனையளவுக் கூட செய்வதுக் கிடையாது. அழகரி போன்ற ஒரு தற்குறி மருந்துத் தயாரிப்பு உள்ளடக்கிய முக்கிய துறையின் அமைச்சர். இதை தான் நான் சாடுகிறேன். இந்தியாப் போன்ற ஒரு நாட்டில் சத்ருகன் சின்ஹாப் போன்ற ஒருவரை சுகாதாரத் துறை அமைச்சராக நியமிப்பது எத்தகையக் கயமை? மருத்துவரே அமைச்சராக நியமனம் செய்யப் பட்ட போதோ ஊழல் பெருக்கெடுத்து ஓடியது. என் தந்தைக்கு பரிந்துரக்கப் பட்ட மருந்தின் விலை ரூ 80,000. ஒரு மாதத்திற்கு. பரிந்துரைத்த மருத்துவர் ஆருயிர் நண்பராதலால் மருந்து கம்பெனியிடம் பேசி ரூ 64,000 ஒரு மாதத்திற்கு என்றுப் படிந்தது. மருந்து பலனளிக்கவில்லையாதலால் இரு மாதங்களோடு நிறுத்தி விட்டோம். பிறகு மருந்து கம்பெனி எங்களை நேரிடையாகத் தொடர்புக் கொண்டு ரூ 45,000-க்குத் தருகிறோம் தொடர்கிறீர்களா என்றனர். ரூ80,000 எங்கே ரூ45,000 எங்கே. அப்பாவுக்கு அந்த மருந்தைக் கொடுப்பதற்கு முதலில் ஒப்புக் கொண்டு நான் அமெரிக்காத் திரும்புவதற்கு காரில் சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த போது ஒரு டோல் கேட்டில் சாலை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களப் பார்த்தேன் ஒருக் கணம் மனம் துவண்டது “இவர்களின் பிள்ளைகளின் கல்விக்கோ, இவர்களின் உடல் நிலை நலிந்தால் மருத்துவத்திற்கோ மத்திய மாநில சர்க்கார்கள் என்ன செய்து கிழித்து விட்டன? சராசரி இந்தியனின் வாழ்வில் அரசாங்கத்தின் பங்களிப்பென்ன?”

இந்தியாவின் மீது ஒரே ஒரு விஷயத்தில் கட்டாயமாக எனக்குக் காழ்ப்புண்டு. அதுக் குறிப்பாக தமிழகத்தின் இட ஒதுக்கீட்டு முறையினால் விளைந்தது. அந்தக் காட்டு மிராண்டி தனத்தினால் தீண்டப் பட்ட ஒருவனுக்கு காழ்ப்பு இல்லையென்றால் அவன் பிணம். நான் பிராமணனில்லை ஆனால் இந்த ஒருப் பிணைப்பினாலேயே அவர்களோடு எனக்கு ஒரு பந்தம் உண்டானது. ஒரு விதி வசத்தால் கிட்டத் தட்ட என் நண்பர்கள் அனைவரும் பிராமணர்களே. எனக்கும் அவர்களுக்கும் மிகவும் நல்லுறவுண்டு.

என் மதைத்தை முன் வைத்து என் இந்திய துவேஷம் அலசப் பட்ட போது நான் வேறொரு வேடிக்கையை நினைத்துக் கொண்டேன். என் உறவினர் ஒருவர் அதி தீவிர திமுக அபிமானி, அவர்கள் வழியிலேயே பிராமணர்களை அறவே வெறுப்பவர். அவர் ஒரு நாள் என்னிடம் முறையிட்டார் “நீ பார் அவர்கள் எப்படி லகுவாக அமெரிக்காவில் சந்தோஷமாக தங்களை assimilate செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு மொழிப் பற்றோ, தேசப் பற்றோ இல்லை”. நான் மறுதலித்து சொன்னேன் “ஆமாம் அவர்களைப் போல் வேறெவராவது பிறந்த பூமியிலேயே வந்தேறிகள் என்று நாள் தோறும் இகழப் பட்டிருக்கின்றார்களா? அவர்கள் ஆற்றிய சமூக மற்றும் மொழிப் பணிகளை துடைத்தெறிந்து அவர்களை துவேஷிப்பதையே ஒரு தர்மமாக ஒரு சமூகமே வரித்துக் கொண்டால் அவர்கள் என்ன தான் செய்ய முடியும்? அவர்கள் தங்களை பலி ஆடுகளாக உன் முன் நிற்காததே உனக்கு எரிச்சலைத் தருகிறது”.

எப்போதும் ஏதோ ஒருக் கூட்டம் ஏதுக் காரணம் பற்றியோ இன்னொருவரின் கண்களுக்கு தேச விரோதிகளாகவும், இன விரோதிகளாகவும் காட்சித் தருகின்றனர்.

இட ஒதுக்கீட்டின் காரணமாக நான் கிட்டத் தட்ட இந்தியாவை விட்டுத் துரத்தப் பட்டதாகவே உணர்கிறேன். இது முற்றிலும் வேறொரு விவாதம் அதை இங்கே நீட்டிக்க விரும்பவில்லை. என் எண்ண ஓட்டத்தை சொல்கிறேன் அவ்வளவே.

கடைசியாக என் அமெரிக்க மோகம் குறித்து பரவலாக விவாதிக்கப் படுகிறது. இன்றும் இந்தியாத் திரும்புவதற்கு எனக்கு எந்த intellectual or economic incentive இல்லை. நான் கட்டாயமாக அமெரிக்கக் கலாசாரம், இங்கேயிருக்கும் மக்களின் பண்புகள், சராசரி வாழ்வில் நேர்மை ஆகியவை என்னைப் பெரிதும் ஈர்க்கின்றன. ஒத்திசைவு அவர்கள் என் பதிவுகளை ஆராய்ந்து எழுதுவதாக அறிவித்து இருக்கிறார். நலம். நான் அமெரிக்காவில் ரசித்தவைப் பற்றிச் சிலப் பதிவுகளாவது எழுதி இருக்கிறேன் அவற்றை ஆராய்ந்தால் நலம். Mac Arthur Prize, Caldecott Prize, Sesame Street பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன். ஒருக் குழந்தைகள் நிகழ்ச்சி Sesame STreet மாதிரிக் கொடுக்க நம்மவர்களால் ஏன் முடியவில்லை? ஒருக் குழந்தைகள் நிகழ்ச்சிக்குப் பின் எவ்வளவு ஆராய்ச்சி தேவைப் படுகிறதென்பதை மால்கம் கிளாட்வெல் ஒருப் புத்தகத்தில் மிக அழகாக விவரித்திருப்பார். அதுப் போன்ற ஒவ்வொன்றைப் படிக்கும் தோறும் “ஏன் இந்தியாவில் இவை சாத்தியப்படவில்லை” என்று குமைவது வாடிக்கை. பலர் என்னிடம் “நீ ஏன் இரண்டு தேசத்தையும் ஒப்பீடு செய்து கொண்டேயிருக்கிறாய்?” என்று கேட்பர்.

September 6-ஆம் தேதி நான் சென்னையிலிருந்தேன். சென்னை நகருக்குள் நுழைந்த எனக்கு அதிர்ச்சி. வ.உ.சி. யின் பிறந்த நாள் விழாவைக் கோலாகலமாக ‘வெள்ளாளர் சங்கம்’ கொண்டாடப் போவதாக நகரெங்கும் சுவரொட்டிகள். நான் டிஸ்கவரி பேலஸ் சென்ற போது கே.கே. நகரேக் குலுங்கியது. 50-60 வண்டிகளில் வெள்ளாளர் சங்கத்தினர், பல இளைஞர்கள் கட்டாயம் குடி போதையில், வ.உ.சி படம் தாங்கிய வண்டிகளில் ஓவென்று இரைந்தப் படி சென்றனர். பாவம் வ.உ.சி குடும்பத்தினர் வறுமையில் வாடிய போது இச்சங்கத்தினர் எங்கிருந்தனரென்று தெரியவில்லை. இதையெல்லாம் நொந்துக் கொண்டு டிஸ்கவரியில் உங்கள் புத்தகங்கள் (கொற்றவை, புறப்பாடு, மற்றும் பல), அசோக மித்திரன், நாஞ்சில், ஜோ.டி.குரூஸ் என ஒருப் பொட்டி நிறைய அள்ளி வந்தேன்.

ஒரிரு நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில் வேறொரு விவாதத்தில் இன்னொருவர் நீங்கள் வ.வே.சு ஐயர் பற்றி எழிதியப் பதிவினை மேற்கோள் காட்ட அதை மீண்டும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. படித்தப் பிறகு ஒருச் சோர்வு. நீங்கள் மேற்கோள் காட்டும் பலப் புத்தகங்கள் அல்லது தரவுகள் எளிதாக கிடைப்பவை அல்ல. இன்று வரை பாரதி, வ.உ.சி, சுப்ரமனிய சிவா போன்றோருக்கு நல்ல வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் கூட இல்லாத நாட்டில் ஜாதி சங்கங்களே மிச்சமிருக்கின்றன அவர்கள் பெருமைப் பேசுவதற்கு.

நாம் பிலடெல்பியா சென்ற போது அங்கே பல நூறு பள்ளிச் சிறார்கள் இலவசமாக, ஜூலை 4-ஆம் தேதி கொண்டாட்டங்களை முன்னிட்டு, இலவசமாக அரசியலமைப்பு அருங்காட்சியகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு அமெரிக்க வரலாற்றின் ஒரு மிக முக்கியமான பகுதியைக் கண்டுக் களிக்கும் காட்சியைப் பார்த்த போது உங்களுக்குத் தோன்றவில்லையா “ஏன் இதுப் போன்ற ஒரு அமைப்பு நம் தேசத்தில் இல்லை. அப்படி இல்லாததால் தானே அரை குறைகளெல்லாம் நம் தேச வரலாற்றை சிதைத்து பேசுகின்றனர் மேடை தோறும்”. பல இந்தியர்கள் அமெரிக்காவில் இருக்கும் போது அவர்களுக்கு இந்த தேசத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் ஒரு உயரிய அளவிலுருக்கும் ஆனால் இந்தியா என்று வந்து விட்டால் “அங்கே அவ்வளவு தான் முடியும், அங்கே அது தான் உச்சம்” என்று என்னமோ இந்தியர்கள் கீழ்மையையே அனுபவிக்கக் கடன் பட்டவர்கள் போல் எளிதாக ஒரு இரட்டை நிலைப்பாட்டைக் கைக்கொள்கின்றனர். அது என்னால் முடியாததனாலேயே “ஏன் இது முடியவில்லை” எனும் உணர்வு காழ்ப்பாக வெளி வருகிறது. சுருங்கச் சொன்னால் பல சமயம் ஆத்திரம் பொத்துக் கொண்டு வரும் “அமெரிக்காக்காரனுக்கு மட்டும் கடவுள் என்ன ஏழு அறிவையாக் கொடுத்தான்”. பெட்னா நிர்வாகிகளோடு மோதியிருக்கிறேண் “உங்களில் அமெரிக்கக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் உள்ளனரே அங்கே அவர்கள் கண்டு உணரும் மேன்மையான பழக்கங்களில் கொஞ்சத்தைக் கூடவா தங்கள் தமிழ் சங்கங்களுக்குள் கொண்டு வரக் கூடாது?”.

வலிந்து இத்துடன் முடித்துக் கொள்கிறேன். எழுதிக் கொண்டேப் போகலாம் ஆனால் உங்கள் தளத்தை என் விவாத மேடையாக்க விருப்பமில்லை. கங்கைக் கொண்ட சோழப் புரம் சென்ற போது இந்திய சிற்பக் கலைப் பற்றி ஏ.கே. ராமானுஜன் கருத்துகளை நீங்கள் முன் வைத்து உரையாடியது நினைவுக்கு வந்தது. உங்கள் ஹொய்சாள சிற்பங்கள் பற்றியப் பதிவுகள் ஆர்வமூட்டுகின்றன. ஓ ஒரு நற்செய்தி. இல்லையில்லை இல்லையில்ல் இது “அப்படிப்பட்ட” நற்செய்தியல்ல உண்மைய்லேயே நற்செய்தி. குறிப்பாக உங்கள் வாசகர்களுக்கு. சோழர் வரலாறுப் பற்றி நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய நூலே இன்று வரை definitive history. அப்புத்தகம் வெகு நாட்களாக பதிப்பில் இல்லை. நான் சமீபத்தில் இணையத்தில் ஒருப் பழையக் காப்பியை அதிக விலைக் கொடுத்து வாங்கினேன். இப்போது நான் தஞ்சையிலிருந்த போது அப்பாவின் நண்பர், வெகு விஸ்தீரணமானப் படிக்கும் பழக்கம் கொண்ட ஒரு அரிய மருத்துவர், அப்புத்தகம் இப்போது தமிழில் இரண்டு தொகுதியாக வெளி வந்ததை சொன்னார். அடித்தது அதிர்ஷ்டம் சென்னை ஹிக்கின் போதம்ஸில். NCBH வெளியீடாக சாஸ்திரியாரின் சோழர்கள் வரலாறு தமிழில் வெளி வந்துள்ளது. மொழியாக்கத்தின் நேர்த்திப் பற்றி என்னால் இன்னும் சொல்ல இயலாது. நான் மூல நூலையும் மொழியாக்கத்தின் சிலப் பகுதிகளையாவது ஒப்பு நோக்கிவிட்டு அதுப் பற்றிக் கூறுகிறேன்.

மனச் சோர்விலிருந்த நான் நீங்கள் அச்சிதழ்கள் பற்றியப் பதிவில் “நானும் அமெரிக்காவில் குடியேறிவிடுவேனோ” என்று எழிதியதைப் படித்து சோர்வு நீங்கி சிரித்து மகிழ்ந்தேன். உங்களைப் போன்றவரை அமெரிக்கா ஆவலோடு அனைத்துக் கொள்ளும்.

என்றும் உங்களை வாசித்து மகிழும்,

அரவிந்தன் கண்ணையன்

அன்புள்ள அரவிந்தன்,

உங்கள் உணர்ச்சிகளுக்கு ஒத்துப்போகும் என் சுருக்கமான பதில் இதுவே. நான் இந்தியாவிலேயே பிறமொழிச்சூழல்களுடன் தமிழை ஒப்பிட்டு எப்போதெல்லாம் பேசியிருக்கிறேனோ அப்போதெல்லாம் மலையாளி என்றோ தமிழ் வெறுப்பாளன் என்றோ வசைபாடப்பட்டிருக்கிறேன்.

ஒருசமூகத்தை விமர்சனம் செய்யும் தகுதி மட்டும் அல்ல பொறுப்பும் அச்சமூகத்தை கூர்ந்து நோக்கி அறிந்து எழுதும் அறிவுஜீவிக்கு உண்டு என்பதே என் எண்ணம். இந்தியாவை ஆதுரத்துடன் நோக்கும் எவரும் மனச்சோர்வும் குற்றவுணர்ச்சியும் கொள்ளவே அதிகம் வாய்ப்பு. அது இந்த ‘பேக்கேஜில்’ ஒருபகுதி. அதை மட்டும் வேண்டாம் என்று சொல்லமுடியாது.

தங்கள் தந்தை இறந்த மனச்சோர்விலிருந்து மீண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைஹொய்ச்சாள பயணம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசாப்ளின்