சிந்தாமணி

15265

 

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முழுமையாகக் கிடைப்பவை மூன்று. சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி. வளையாபதியும் குண்டலகேசியும் கிடைப்பதில்லை. இம்மூன்றில் சமநிலையும் அழகும் கொண்ட காப்பியம் சிலப்பதிகாரமே. ஆனால் ஒரு காப்பியத்திற்குரிய விரிவு சீவக சிந்தாமணியிலேயே காணக்கிடைக்கிறது.

காவியச்சுவை என்பது சுருக்கமாகச் சொன்னால் ஒரு மொழியின் அழகின் அனைத்து முகங்களும் வெளிப்படும் நிலையே. ஆகவே ஒரு காவியம் என்பது ஒரு வாசகனால் வாழ்நாள் முழுக்க வாசிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். அவ்வகையில் பார்த்தால் தமிழில் கம்பராமாயணமும் சீவகசிந்தாமணியும் மட்டுமே அந்தத் தகுதி கொண்ட மாபெரும் காப்பியங்கள்.

ஆயினும் கம்ப ராமாயணம் அளவுக்கு சீவசிந்தாமணி புகழ்பெறவில்லை. அதற்கான காரணங்கள் பல. முக்கியமாக இந்தக் காப்பியத்தின் கதை மிகவும் வலுவற்றது. சீவகன் என்ற மன்னன் தன் வீரத்த்தாலும் கொடையாலும் அழகாலும் பெறும் லௌகீகச்சிறப்புகளும், இறுதியில்அவற்றை  அவன் துறந்து அறிவர் அடிசேர்ந்து பெறும் முக்தியும் மட்டுமே இக்காப்பியம் எனலாம். ஆகவே கம்பராமாயணம் போல இந்த காப்பியத்தில் மகத்தான நாடகத்தருணங்கள் இல்லை. உணர்ச்சிகொந்தளிப்புகள் இல்லை.

மேலும் கதைநாயகனாகிய சீவகன் உள்பட இக்காப்பியத்தின் எல்லா கதைமாந்தரும்  காப்பியச்சுவைக்குரிய உதாரண வடிவங்களே ஒழிய ஆசையும் பாசமும் எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட மானுட வடிவங்கள் அல்ல. சீவகன் எந்தவிதமான குணக்குறையும் இல்லாத முழுமுற்றான ஒரு காவியத்தலைவன் மட்டுமே. சீவகன் மணக்கும் பெண்களும் தமிழ் மரபில் உள்ள தலைவி என்ற வடிவத்தை மட்டுமே கொண்டவர்கள்.

மேலும் சீவக சிந்தாமணி தன் மையச்சுவையாக காதலை– அதாவது அகம் – மட்டுமே கொண்டது. .இத்¢ல் உள்ள போர்ச்சித்தரிப்புகள் பொதுவாக ஆழமில்லாதவை. கம்பராமாயணத்துடன் ஒப்பிடும்போது அது ஏன் என்று தெரியும். கம்பராமாயணம் தீமையின் பெரும் சித்தரிப்பை அளிக்கின்றது காமகுரோதமோகங்கள் அலையும் ஒரு சொல்வெளி அது. அவற்றின் உக்கிரமான மோதலின் உச்சமாகவே அதில் போர்கள் நிகழ்கின்றன. சீவகசிந்தாமணி சமண காப்பியம். ஆகவே ஆசிரியருக்கு வன்முறை உகந்தது அல்ல. போர்களை ஆநிரை கவர்தல் மீட்டல் என்ற அளவில் எளிய குறியீட்டுச் செயல்பாடுகளாகவே ஆசிரியர் சித்தரிக்கிறார்.

ஆகவே சீவக சிந்தாமணியை அதன் மொழியின் பேரழகுக்காக மட்டுமே வாசிக்க வேண்டும். வர்ணனைகளிலும் சொல்லாட்சியிலும் செறிந்துள்ள நுட்பங்கள் தமிழைச் சுவைக்கத்தெரிந்தவர்களுக்கு தீராத விருந்தாக அமையக்கூடியவை. அத்துடன் இது சமண மதத்தின் அடிப்படைக்கோட்பாடுகளை அறிந்துகொள்வதற்கான மூலநூலும்கூட.

இந்நூல் பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் வழக்கொழிந்தது. காரணம் சைவ வைணவ மதங்களின் எழுச்சி. இந்தக் காலகட்டத்தில் பக்தி இலக்கியங்கள் மட்டுமே இலக்கியங்களாகக் கருதப்பட்டன. ஐம்பெருங்காப்பியங்கள் தமிழிலக்கிய மாணவர்களுக்கே தெரியாத நிலை.காரணம் சீவசிந்தாமணியை வாசிக்கத்தேவையான தத்துவப்பின்புலம் இல்லாமலாகிவிட்டிருந்தது. ஆனாலும் பல தமிழறிஞர் வீடுகளில் சீவகசிந்தாமணி சிதைந்த வடிவில் இருந்தது. அக்காலத்தில் பத்து வருடம் ஒரு ஏடு பிரதியெடுக்கப்படவில்லை என்றால் அது அழிந்துவிடும்.

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களிடம் பலகாலம் தமிழ் கற்றபின் சேலம் ராமசாமி முதலியார் என்பவரை சந்திக்கச் செல்லும் உ.வெ.சாமிநாதய்யரிடம் அவர் ‘என்ன கற்றீர்?’ என்று கேட்கிறார். உ.வே.சாமிநாதய்யர் தான் கற்ற புராணங்கள் , கலம்பகங்கள் , பிள்ளைத்தமிழ்களைச் சொல்கிறார். முதலியார் ”என்னபிரயோசனம்?”  என்று கேட்கிறார். உ.வே.சா மனமுடைந்து போகிறார். தமிழின் செல்வங்களே ஐம்பெரும்காப்பியங்களும் சங்க இலக்கியங்களும்தான். அவற்றை கல்லாதவன் தமிழ் அறியாதவனே என்று சொல்கிறார் முதலியார். அந்த நூல்களை அன்று எவருமே அறிந்திருக்கவில்லை. அவற்றை கண்டடைவதும் எளிதல்ல

அந்தக் கேள்வியே உ.வே.சாமிநாதய்யரை தமிழிலக்கியங்களை கண்டடையவும் பிழை நீக்கிப் பதிப்பிக்கவும் தூண்டியது. சேலம் ராமசாமி முதலியார் சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்கும்படி வற்புறுத்திக்கொண்டே இருந்தார். ஆனால் தனக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்று உவே.சா தயங்கினார். பின்னர் வற்புறுத்தலுக்கு இணங்கி சீவகசிந்தாமணியை தேட ஆரம்பித்தார். திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய மகாதேசிகர் மடத்தின் சேமிப்பில் இருந்து சுவடியை எடுத்துக் கொடுத்ததுடன் திருநெல்வேலி முதலிய இடங்களில் இருந்தும் சுவடிகளை  வரவழைத்துக் கொடுத்தார்.

இங்கே ஒரு தகவல் குறிப்பிடப்படவேண்டும். சீவகசிந்தாமணியை பதிப்பிக்கத்தூண்டியவர் சமணர் அல்ல. அந்நூலின் பிரதி சைவ மடத்தில் பத்திரமாக இருந்துள்ளது. அச்சுவடியை அளித்து பிறசுவடிகளை வரவழைத்தும் அளித்து அதை பதிப்பிக்க உதவியவர் சைவ மடாதிபதி. இதை உவேசா சீவசிந்தாமணி நூல் பதிப்பிற்கு 1887ல் எழுதிய முதல் முன்னுரையில் அவரே திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். உவேசாவு சைவர். சைவமடத்தின் ஊழியராக வேலைபார்த்தவர்.

ஆனால் சைவ மடங்கள் சமண நூல்களை படிக்கக் கூடாதென தடுத்ததாகவும், அவற்றை அழித்ததாகவும் சில சைவமடாதிபதிகளின் உதிரிக்கூற்றுகளை மேற்கோள் காட்டி ஒரு தரப்பு சமீபகாலமாக உருவாக்கப்பட்டு  அறியாதோர் மத்தியில் பரவலாக பிரச்சாரம்செய்யபப்ட்டுவருகிறது.

இந்நூலை பதிப்பிக்கும் போது உருவான சிக்கல்களை உவே.சா சொல்கிறார். முதல் செய்யுளே மூவாமுதலா உலகம் என்று ஆரம்பிக்கிறது.  மூப்பும் பிறப்பும் இல்லாத உலகம் என்ற கருத்து உவே.சாவை அதிர்ச்சி உறச் செய்கிறது. உலகம் பிறந்து அழிவது என்றுதானே எல்லா நூல்களும் சொல்கின்றன? அந்த தேடல் அவரை சமண கருத்துக்களை நோக்கிக் கொண்டு செல்கிறது. வீரூர் சந்திரநாதச் செட்டியார் என்ற சமணர் இந்நூலில் உள்ள சமண சமயக் கருத்துக்களை அய்யருக்கு விளக்கினார்.

1887ல் உவே.சா பதிப்பித்த சீவசிந்தாமணியின் தெளிவுரையுடன் கூடிய பதிப்பு வெளியாகியது. இப்போதும் அதே நூல் அப்படியே ஒளிநகல் எடுக்கப்பட்டு உவேசாநூலகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

சீவகனின் கதை வடமொழியில் பல நூல்களில் சொல்லப்பட்டதுதான். இது புராணமோ வரலாறோ அல்ல, ஒரு வகை உருவகக்கதை மட்டுமே. க்ஷ¡த்ரசூடாமணி என்ற நூல் சீவசிந்தாமணியின் முதல் நூலாக இருக்கலாம் என்று உவே.சா எண்ணுகிறார்.

சீவக சிந்தாமணியை அவ்வப்போது ஓரிருசெய்யுடகளாக வாசிப்பதே நல்லது. முழுக்கமுழுக்க மொழியின் இன்பத்துக்காக வாசிப்பது மேல். உவமைகளில் காணக்கிடைக்கும் புதுமை பல சமயங்களில் வியப்பு கொள்ளச்செய்வது. கம்பனுக்கு நிகரான மொழி ஒழுக்கு. ஆனால் கம்பனில் காணக்கிடைக்காத ஒரு யதார்த்தத் தன்மை சீவசிந்தாமணியில் உண்டு.

உதாரணமாக ஆநிரைகவர்தல் பற்றிய இக்கவிதை
மோட்டும் முதுநீர் முதலைக்கு வலியதுண்டேல்
காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும் நாம் என்று
ஏட்டைப் பசியில் இரை கவ்விய நாகமேபோல்
வேட்டை நிரையை விடலின்றி விரைந்ததன்றே

ஆழமான நீரில் வாழும் பெரிய முதலைக்கு நீரில் எதிரி உண்டென்றால் நாமும் காட்டுக்குள் எதிரியைக் காணக்கூடும் என மூச்சு சீறியபடி கொடும்பசியில் இரை கவ்விய நாகம் போல வேட்டை பசுநிரையை விடாது பின் தொடர்ந்தார்கள்.

ஆநிரையைக் கவரப்போகிறவர்களைப்பற்றிய சித்திரம் இது. நீரில் முதலைக்கு எதிரி இல்லை, நமக்குக் காட்டில் எதிரி இல்லை என்ற எண்ணத்துடன் வேட்டுவர் ஆநிரை கவரச் செல்கிறார்கள். இரையை கவ்விய நாகம்போல் என்று அவர்களின் போக்கு உவமிக்கப்படுகிறது. நாகம் இரையைக் கொத்தியபின் விட்டுவிடுகிறது. பின்னர் அதை விடாப்பிடியாக பின் தொடர்ந்து சென்று அது தளரும்போது பிடித்துக்கொள்கிறது.

முதலையை முதலில் குறிப்பிடுவதும் பொருத்தமாகவே இருக்கிறது. முதலை எதிரி இல்லை என்பதனால் மட்டுமல்ல. முதலை நீரில் மௌனமாக வேகமாக பின் தொடர்ந்து சென்று இரையைப் பற்றக்கூடியது. விடாப்பிடி கொண்டது. முதலை பாம்பு என இரு உவமைகள் வழியாக ஆநிரை கவர்பவர்களின் இயல்பை உணர்த்துகிறது கவிதை. இத்தகைய இயற்கையான உவமைகளை சங்க இலக்கியங்களில்தான் பொதுவாகக் காணமுடியும். சீவகசிந்தாமணி சங்க இலக்கியங்களை ஒட்டியே நிற்கிறது.

சங்கப்பாடல்களின் அகச்சித்தரிப்பின் பிரம்மாண்டத்தோற்றமே சீவக சிந்தாமணி என்று சொல்லலாம். சமணம் தமிழகத்துக்கு வந்தபோது எப்படி தமிழ் மரபை உள்வாங்கிக்கொண்டது என்பதற்கான சிறந்த உதாரணம் இது.
வாளரம் துடைந்த வைவேல் இரண்டுடன் மலைந்தவே போல்
ஆள் வழக்கொழிய நீண்ட அணிமலர் தடங்கண் எல்லாம்
நீள் சுடர் நெறியை நோக்கு நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போற்
காளை தன் தேர் செல் வீதி கலந்துடன் இருக்க வொற்றே

அரத்தை வைத்து ராவிக் கூர்மைபப்டுத்திய இரண்டு நுண்ணிய வேல்முனைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டவை போல காண்பவர் நிலை மறக்கச்செய்யும்  நீண்ட அணி மலர் விழிகள் சூரியன் செல்வதை நோக்கும்  இதழ்கள் அடர்ந்த நெருஞ்சிப்பூக்களைப்போல அவ்விளங்காளை தேரில் சென்ற பாதையில் மலர்ந்து நின்றன.

இந்த வருணனையிலும் சீவகசிந்தாமணியின் யதார்த்த தன்மையைக் காணலாம். கூரிய வேல்கள் உரசிக்கொண்டது போல ஒளிரும் கண்கள் என்பது ஒரு கோணம். வேல்நுனியும் வேல்நுனியும் உரசுதல் என்பது கூர்மைக்கான உவமையும் கூட. கண்களை நெருஞ்சியுடன் ஒப்பிடுவது அபூர்வமானது. நெருஞ்சிப்பூ மென்மையானது. சூரிய ஒளியில் வாடாதது. ஒளியில் சுடர் விடுவது. அனைத்துக்கும் மேலாக கூட்டம் கூட்டமாக நிலம் நிரப்பி விரியக்கூடியது. சீவகனைக் கண்டு தெருவெங்கும் கண்களாயின என்ற பொருள் வருவதற்காகவே நெருஞ்சி உவமிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மலரும் அந்த பொருளை அளித்திருக்காது.

சீவகசிந்தாமணியின் தத்துவ நுட்பம் சமண அறிஞர்களால் விரிவாக விளக்கப்பட்டுள்ளது செறிவான சொற்களில் சமணக் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ள பாடல்கள் பல. உயர்நிலையில் சமணம் உலகியல் துறப்பை அடிப்படையாகக் கொண்டது.  ஆனால் நடைமுறையில் அது உலகியலை ஏற்றுக்கொண்டது. உலகியலை திறம்பட ஆற்றி அதில் முழுமை கண்டபின் துறந்து முக்தி அடைவதை சீவகசிந்தாமணி முன்வைக்கிறது. சமணம் தமிழகத்துக்கு வந்து வாழ்க்கையைக் கொண்டாடும் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ப தன்னை மறு அமைப்பு செய்துகொண்டதன் சான்று இக்காப்பியம். தமிழின் ஆகச்சிறந்த காதல்சுவை நூல் முற்றும் துறந்த சமண முனிவரால் எழுதப்பட்டது என்பது ஆச்சரியம்தான்.
அருமையின் எய்தும் யாக்கையும் யாக்கையது அழிவும்
திருமெய் நீங்கிய துன்பமும் தெளிபொருள் துணிவும்
குருமை எய்திய குணநிலை கொடைபெறு பயனும்
பெருமை வீட்டொடும் பேசுவல் கேளிது பெரியோய்.

பெரியவனே, அரிதாக கிடைக்கப்பெறும் மானுட உடலும், அந்த மானுட உடலின் நிலையின்மையும், தன் தூய இயல்பிலிருந்து விலகுவதன் மூலம் பெறப்படும்துன்பமும், தத்துவ மெய்ப்பொருள் கற்றுத் தெளிதலும், அறிவர் பாதம் பணிந்து அடையும் உயர்நிலையும்,  அனைத்தயும் விட உயர்ந்ததான வீடுபேறும் ஆகிய சமணக் கருத்துக்களைப் பேசுவேன் கேள்.

சமண மதத்தின் தத்துவக் கட்டமைப்பே இந்த ஒரே செய்யுளில் வந்து விட்டிருக்கிறது. 1. மானுடப்பிறப்பு அருமையிலும் அருமையானது 2. மனிதனுக்குரிய வாழ்க்கை மிகமிக தற்காலிகமானது 3. மனித இயல்பு என்பது நன்மை சார்ந்தது. அவ்வியல்பை விட்டு நீங்குதலே பாவம் என்பது 4. நூல்கள் கற்றும் அறிந்தவர் சொல் கேட்டும் தத்துவத்தெளிவடைவது மனிதனுக்குக் கடமை 5. முற்றும் துறந்த அறிவர் பாதம் பணிந்து அவர்களின் குணநிலைகளைப் பெற்று முழுமை அடைதல் வேண்டும் 6. இறுதியில் வீடுபேறு அடைதலே வாழ்க்கையின் முழுமை.

சீவகசிந்தாமணியைப் படிப்பவர்கள் மிகவும் அருகி வருகிறார்கள். கம்பராமாயணம் பெரிய புராணம் போன்ற நூல்கள் அவற்றைப்பற்றிய சொற்பொழ்வாளர்களால்தான் மக்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. சீவகசிந்தாமணிக்கு அப்படிப்பட்ட பேச்சாளர்கள் இல்லை. சமண மதத்தினர் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சிந்தாமணியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் அமைப்புகளை உருவாக்கி அதை முன்னெடுக்க வேண்டும்.

 

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம்  Nov 18, 2008

 

 

கம்பனும் காமமும்:அணிகளின் அணிநடை

மரபிலக்கியம் இரு ஐயங்கள்

கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது

கம்பனும் காமமும், இரண்டு

கம்பனும் காமமும், இரண்டு

முந்தைய கட்டுரைமேமாதங்கள்
அடுத்த கட்டுரைசிறுகதைகள் – கடிதங்கள்.