நாளைக்கான நாளிதழ்

index

செய்தித்தாள்கள் என்ற அமைப்பு அச்சுக்கலை அளித்த கொடை. அச்சுக்கலைதான் உண்மையில் உலகை பேச்சிலிருந்து எழுத்து நோக்கிக் கொண்டுவந்தது. முன்பெல்லாம் எப்போதைக்குமான பதிவுகளே எழுத்தில் இருந்தன. அன்றாடப்பதிவுகள் செவிவழியாகப் பகிரப்பட்டன. ஆகவே செய்திகள் எப்போதும் ஒலியாகவே இருந்தன.

செய்தித்தாள் நம் அறிதலில் பெரும்புரட்சியை உருவாக்கியது. செய்தி எழுத்தில் பதிவாகிப் பகிரப்பட்டபோது அதற்கு ஆவணமதிப்பு வந்தது. ஒவ்வொருநாளும் நாம் செய்தியில் நம் நாட்டையும் சமூகத்தையும் உலகையும் கண்கூடாகப் பார்த்துக்கொள்கிறோம். இன்று காஷ்மீரில் கடையடைப்பு அஸாமில் தொழிற்சங்கப்போராட்டம் கோவாவில் திரைவிழா, நியூயார்க் பங்குச்சந்தை நிலவரம், சீனாவின் தொழில்நிலை என ஒரு விஸ்வரூபதரிசனத்தை அடைகிறோம்.நம் முன்னோர் கிராமங்களில் வாழ்ந்தனர். நாம் உலகில் வாழ்கிறோம். அவ்வுலகை செய்தித்தாள்கள் உருவாக்குகின்றன.

ஆனால் இன்று செய்தித்தாளின் இடம் மெல்ல மாறிவருகிறது. செய்தித்தாளின் அச்சு கோக்கப்படுவதற்கு முன்னரே செய்தியை தொலைக்காட்சிகள் அலசிக்காயவைத்துவிடுகின்றன. மிகச்சில ஆண்டுகளிலேயே இணையமும், இணையச் சமூகவலைத்தளங்களும் அந்த இடத்தை எடுத்துக்கொண்டன.

இந்த மாறியசூழலில் முந்தைய தலைமுறையினர் வெறும் பழக்கதோஷத்துக்காக வாசிப்பவையாக செய்தித்தாள்கள் ஆகிவிடக்கூடாது என உணர்ந்த முதல் தமிழ் நாளிதழ் தமிழ் ஹிந்து.

இன்றைய இணையச்சூழலில் செய்தித்தாள்கள் இரண்டு பணிகளை ஆற்றமுடியும்.

ஒன்று, இன்றைய நவீன ஊடகங்களில் வெளிவரும் பலகோணங்களிலான செய்திக்கொப்பளிப்புகளுக்கு அடிப்படையாக உறுதியான ஆய்வுப்புலம் கொண்ட செய்திகளை வெளியிடுவது. அதாவது முன்னரே அறிந்த செய்திகளையே நாளிதழில் சென்று மீண்டும் உறுதிசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது இன்று. அந்த நம்பகத்தன்மையை உருவாக்குவது இன்றைய நாளிதழின் தேவை.

அத்தகைய செய்திகள் நடுநிலைமை, தகவல்செறிவு கொண்டவையாக இருக்கவேண்டும். நாளிதழ் அவற்றுக்குப் பொறுப்பேற்கவேண்டும். ஊகங்கள் வதந்திகள் தவிர்க்கப்படவேண்டும். தமிழ்ஹிந்துவின் செய்திகளின் தரம் அத்தகையதாக உள்ளது. இன்று செய்திகளை அறிவதற்காக அல்ல தமிழ் ஹிந்துவின் நம்பகமான செய்தியாளர்குழு அதை எப்படிப்பார்க்கிறது என அறிவதற்காகவே நான் அதை வாசிக்கிறேன்.

இன்னொன்று, செய்திகளைப் புரிந்துகொள்வதற்கான சிந்தனைப்புலத்தை உருவாக்குவது. தமிழ்ச்சூழலில் இன்று செயல்பட்டுக்கொண்டிருக்கும் அத்தனை சிந்தனைத்தரப்புகளையும் தொகுத்து சுருக்கமாக அளித்துக்கொண்டே இருக்கிறது தமிழ் ஹிந்து. அக்கருத்துக்களை அறிந்தால் மட்டுமே செய்திகளை ஒட்டி வாசகன் சிந்திக்கமுடியும். அரசியலையும் இலக்கியத்தையும் சமூகத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.

இவ்விரு பணிகளையும் தமிழ் ஹிந்து மிகச்சிறப்பாகச் செய்துவருவதனால்தான் தமிழ்ச்செய்தித்தாள்களில் வழிகாட்டி நிலையில் நின்று எதிர்காலம் நோக்கிச் செல்கிறது

[தமிழ் இந்து மூன்றாண்டு நிறைவடைவதை ஒட்டி எழுதப்பட்ட வாழ்த்துக்கட்டுரை ]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 5
அடுத்த கட்டுரைசிலைகளும் மதிப்பீடுகளும்