அரிசிக்கரே என்ற ஊரில் இரவு தங்குவதற்காக அறை போட்டிருந்தோம். மூன்று அறைகளிலாக ஓட்டுநருடன் சேர்ந்து பதினைந்து பேர் தங்கிக் கொண்டோம். வந்து அமர்ந்ததுமே நான் பயணக்கட்டுரையை எழுதி புகைப்படங்களுடன் வலையேற்றிவிட்டு படுத்தேன்
இம்மாதிரி பயணங்களில் விடியற்காலையை ஒருபோதும் தவறவிடக்கூடாது ஆகவே இரவில் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பது எங்கள் பயணங்களில் வழக்கமில்லை .காலையில் எழ முடியாது. விடியற்காலைகள் இழக்கப்படும் பகல் முழுக்க தூக்கக் கலக்கம் இருக்கும்.
பத்து மணிக்கெல்லாம் படுத்து காலை ஐந்து மணிக்கு எழுந்தேன். டீக்கடை நோக்கி குளிரில் கும்பலாகச்சென்றோம். எந்நகரத்தையும் காலையில் பார்ப்பது ஓர் அனுபவம்தான். ஒருவகையான இனிய மனநிலையை குளிரும் அமைதியும் உருவாக்கிவிடுகிறது. பயணங்களில் இத்தகைய சின்ன விஷயங்கள் அதிகமும் நினைவில் நிற்கின்றன
குளித்து கிளம்பும்போது காலை ஏழரை மணி தாண்டியிருந்தது நேராக அரிசிக்கரேயில் இருக்கிற ஈஸ்வர ஆலயத்திற்கு சென்றோம். 1220 –ல் ஹொய்ச்சாள அரசர் வெட்டிய அரசி கேரி என்ற ஏரியின் பெயரால் அமைந்த ஊர் இது கேரி என்றால் ஏரி. ஹொய்ச்சாள மன்னர்கள் காவேரி மற்றும் அதன் துணைநதிகளிலிருந்து நீரைத்தேக்கி ஏரிகளை உருவாக்கி அதன் கரையிலேயே கோயில்களைக் கட்டி சுற்றிலும் நகரங்களை அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலான ஊர்கள் கேரி கொளம் என்று அமைந்திருக்கின்றன
இப்பகுதியைச்சுற்றி ஏராளமான சிறு ஆலயங்கள் உள்ளன. ஈஸ்வர ஆலயம் அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தது பதினாறு முனைகள் கொண்ட நட்சத்திர வடிவிலான மண்டபம் இவ்வாலயத்தின் மிகச்சிறந்த ஒரு கட்டமைப்பு .கர்நாடகத்துக்கு வெளியே இப்படி ஒரு அமைப்பைக் காண்பது அரிது இதனுடைய கருவறையும் நட்சத்திர வடிவில் அமைந்தது மூன்று வெவ்வேறு வடிவங்களில் இந்த நட்சத்திர அமைப்பு உள்ளது கல் நினைத்த வகையிலெல்லாம் சிற்பியின் கைகளுக்கு வளைந்து கொடுப்பதனால் இந்த அமைப்பு வந்திருக்கிறது.
கல்லில் அமைந்தவைதான என வியக்கச்செய்யும் இவ்வாலயங்களின் தூண்களை எதனுடன் உவமிப்பது? மரமல்லிப்பூக்களை நூலில் கோத்து உருவாக்கும் மாலை என்று ஒரு தருணம் தோன்றியது. மெல்லிய புரிவடிவம் கொண்ட கொடித்தளிர் என மறுதருணம் தோன்றியது. மலரும் தளிரும் தற்காலிகமானவை. மானுட உள்ளம் கல்லில் அவற்றை நிரந்தரமாக ஆக்க முயல்கிறது.
இதுவும் மூன்று கருவறைகள் கொண்ட ஆலயம் நடுவே உள்ள வட்ட வடிவமான மண்டபம் இக்கருவறைகளை இணைக்கிறது. இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் இதனுடைய நேர் முகப்பில் வாயில் கிடையாது. உடுப்பி போன்ற ஆலயங்களில் இருப்பது போல பக்கவாட்டில் நுழைந்துதான் கருவறையில் திறந்திருக்கும் சிவலிங்கத்தை தரிசிக்கவேண்டும்.
ஹொய்ச்சாள ஆலயங்களில் மிகப்பெரிய வேலைப்பாடு இருப்பது அவற்றின் கூரையில்தான். பெரும்பாலும் மல்லாந்து படுத்தே இவ்வாலயங்களில் அழகை ரசிக்க முடியும் என்று தோன்றும். அடுக்கடுக்காக ஒன்றன்மேல் ஒன்றாக வைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட குவை மாடங்களில் ஒவ்வொரு அடுக்கிலும் மிகச்சிக்கலான கணித அமைப்புகள் அமைந்துள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று கொள்ளும் ஒத்திசைவினாலேயே அழகு பெறுகின்றன.
கற்கள் சில இடங்களில் சரிவதனால் அந்த ஒத்திசைவில் மிகச்சிறிய பிழை ஏற்படும்போது முதலில் நம் கவனத்திற்கு வருவது அப்பிழைதான். அது எதைக் காட்டுகிறது என்றால் இவ்வமைப்பை நாம் பார்க்கும்போதே முதலில் நம் எண்ணத்தில் ஒத்திசைவு தான் படிகிறது அல்லது ஒத்திசைவுக்காக நாம் தேடுகிறோம். அது அங்கிருக்கையில் நமக்கு ஆழமான ஒரு நிறைவு ஏற்படுகிறது. இம்மண்டபங்களின் அழகியல் அனுபவம் என்பது இவ்வொத்திசைவை நமக்குள்ளே இருக்கும் ஒத்திசைவை நாடும் ஓர் ஆழம் கண்டடைந்து தன்னைப்பொருத்திக் கொள்ளும் தருணத்தின் உவகை தான்.
காலையுணவுக்குப்பின் ஹார்ன்ஹள்ளி என்னும் ஊரிலுள்ள லக்ஷ்மி நாராயண ஆலயம் அடுத்தபடியாக. ஹொய்ச்சாள மன்னர் வீர சோமேஸ்வரரால் 1235ல் கட்டப்பட்டது இந்த ஆலயம். இந்த ஆலயத்தின் மிக அருகே சோமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
ஹொய்ச்சாள வைணவ ஆலயங்கள் பெரும்பாலும் மூன்று கருவறை- மூன்று கோபுர அமைப்பு கொண்டவை. நடுநாயகமாக விஷ்ணு. பெரும்பாலும் நின்றகோலம். இருகைகளில் தாமரை மலர்களை ஏந்தியிருக்கும் விஷ்ணுவை நாம் தமிழகத்தில் காணமுடியாது. கன்னங்கரிய சிலைகள் பேரழகானவை. வலப்பக்கம் கிருஷ்ணன் குழலூதி நின்றிருக்கும் சிலை. இடப்பக்கம் நரசிம்மர். பெரும்பாலும் லட்சுமிநரசிம்மர். அபூர்வமாக யோகநரசிம்மர். பூசைவேளை அல்லாத நேரங்களில் நரசிம்மருக்கு மட்டுமே ஆரத்தி காட்டி பிரசாதம் தருகிறார்கள்.
மாக்கல் வடிவமென்பது அதிகமாக காற்றும் மழையும் தாங்கக்கூடியதல்ல ஆகவே உள்ளே உள்ள சிற்பங்கள் ஓரளவு முழுமையாக இருக்கும் போது வெளியே உள்ள சிற்பங்கள் முகங்கள் சற்று மழுங்கியிருக்கின்றன. அத்துடன் இவை கைவிடப்பட்டுக் கிடந்த சில காலங்கள் விஷமிகளால் கணிசமான சிலைகளின் மூக்குகள் சிதைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
இதற்குள் ஹொய்ச்சாள கட்டிடக்கலையின் பொதுவான கட்டிடக்கலை கூறுகளை மூளை உள்வாங்கிக் கொண்டு விட்டது. அடுக்கடுக்காக அமைந்த வட்டத்தூண்கள் அத்தூண்கள் தாங்கும் குவை மாட முகப்பு. அம்மண்டபங்களை ஒட்டி அமைந்துள்ள மூன்று கருவறைகள் கருவறைகளை சுற்றியுள்ள சுவர்களில் செதுக்கப்பட்டு இடைவிடாது செறிந்திருக்கும் நூற்றுக் கணக்கான சிற்பங்கள்.
மடிப்பு மடிப்பாக அமைந்த சுவர்சிற்பங்களை கடந்து நடந்துசெல்வதென்பது ஓவியத்திரை ஒன்று அசைவதுபோல நீர்நிழல்பரப்பு நெளிவது போல விழிமயக்கு அளிக்கிறது. அவற்றில் உள்ள சிற்பங்களில் உள்ள வகைமையே ஓரளவுக்கு கவனத்தில் படிந்துவிட்டது. எங்கே ராவணன் கையாலத்தை தூக்குகிறார்? எங்கே அர்ஜுன்ன் மீனை அடிக்கிறான்? இது கோபாலகிருஷ்ணன் பூவராகன் என்று உடனடியாகக் கைவைத்து தொட்டுவிடுமளவுக்கு சிற்பங்கள் பழகிவிட்டிருக்கின்றன.
இவ்வாறு மூளை சிற்பங்களுக்கும் அமைப்புக்கும் பழகிவிடும்போது ஒருவித அமைதி உருவாகிறது. ஆரம்பத்தில் உருவான பரபரப்பும் உற்சாகமும் தணிந்து ஒரு மெல்லிய மோன நிலை என்று அதைச் சொல்லலாம். சிற்பங்களை கண்ணுக்கு அப்பால் உள்ள மேல் மனம் நேரடியாகக் கண்டு கொள்ளத் தொடங்குகிறது. அதன் பிறகு சிற்பங்களைப் பார்க்கும் அனுபவம் அல்ல இக்கோயில்களுக்குள் இருக்கும் அனுபவமே முக்கியமானது என்று தோன்றுகிறது.
எத்தனை நுணுக்கமாக தகவல்களைத் திரட்டிக் கொண்டாலும் எத்தனை கூர்மையுடன் சிற்பத்தை தொட்டுத் தொட்டு அறிந்தாலும் அடையாத ஓர் அனுபவம் என்பது இந்த ஆலயத்தின் உள்ளே இருக்கும் போது இருக்கும் தியான நிலைதான் என்று சொல்லலாம். வெளிமனம் திகைத்துச்செயலற்றபின் கூடும் நிலை அது
ஒரு படைப்பாளியாக என்னைப் பொறுத்தவரை இவ்வாறு இச்சிற்பங்களுக்கு உள்ளே இருக்கும் அனுபவமே பிறகெப்போதோ எழுதும்போது நினைவலைகளாக எழுந்து வருகிறது. நுணுகி ஆராய்ந்து எண்ணத்தில் சேர்த்து வைக்கப்பட்டவை எப்போதும் கை கொடுப்பதில்லை. ஆனால் நேரடியாக இந்த தியான மனநிலையில் கனவுக்குள் செல்லும் இச்சிற்பங்கள் புனைவின் உச்சநிலையில் கனவுச்சித்திரங்கள் போல் அலை அலையாக எழுந்து வருகின்றன .அப்போது மிக அருகே என ஒவ்வொன்றையும் தொட்டு பார்க்க முடிகிறது.
இந்த இரண்டாவது நாளில் ஹொய்ச்சாள கட்டிடக்கலையை நான் மறந்துவிட்டேன் மாறாக ஹொய்ச்சாள கட்டிடக்கலை நிகழ்ந்த வாழ்க்கைக் களத்தில் என்னில் ஒரு பகுதி தன்னை நடித்துக் கொண்டிருந்தது என்று சொல்லலாம்.
சோமேஸ்வரர் ஆலயம் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் சரிந்த மண்டபங்களுடன் நின்றிருந்தது. அதன் கருவறை மிகச்சிறியது. இருண்டு தூசடைந்து வவ்வால்மணத்துடன் இருந்தது. அங்கே எப்படி உள்ளே போய் நின்றார்கள் என்பதே ஆச்சரியம்தான். கருவறைக்குள் அமர்ந்தபடித்தான் பூசைசெய்ய முடியும். வணங்குவதுகூட அமர்ந்தபடித்தான் சாத்தியம். இது அரசகுடியினர் போன்று மிகச்சிலரே வழிபட்ட ஆலயமாக இருக்கலாம். இவற்றிலிருந்து தான் அனைத்துமக்களையும் இணைக்கும் அமைப்பான பேராலயங்கள் எழுந்து வந்திருக்கின்றன
அரிசிக்கரேயில் இருக்கும் கேசவ ஆலயத்திற்கு சென்றோம். பெரும்பாலான ஹொய்ச்சால வைணவ ஆலயங்கள் ஒரே அமைப்புகள் கொண்டவை மையக் கருவறையில் விஷ்ணு நின்ற திருக்கோலத்தில் இரு கைகளிலும் செண்டுகள் ஏந்தி சங்கு சக்கரத்துடன் முன்னால் நின்று கொண்டிருக்கிறார். அவர் சிலைக்கு வெள்ளி கவசங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஹொய்ச்சால பகுதிகள் எங்கும் கருவறையில் அமர்ந்த கோலத்திலோ படுத்த நிலையிலோ விஷ்ணு இல்லையென்பதை கவனித்தேன்.சுவர்ச்சிற்பங்களில்கூட அரிதாகவே அவை காணக்கிடைக்கின்றன
மூன்றாவது கோவில் புச்சேஸ்வர ஆலயம் இது கொவரங்களா என்ற ஊரில் அமைந்திருக்கிறது 1173ல் புச்சி அல்லது புச்சி ராஜா என்ற பேரில் ஹொய்ச்சாள தளபதியால் அமைக்கப்பட்டது. இவ்வாலயம் ஹொய்ச்சாள மன்னர் இரண்டாம் வல்லாளத்தேவரின் தளபதி. இதன் அருகே இரண்டு சிறு ஆலயங்கள் அழிந்த நிலையில் உள்ளன. இவ்வாலயங்களை சுற்றி சுற்றி வந்தோம் இங்கு காலபைரவருக்கு இருக்கும் ஆலயம் மிகுந்த வியப்பை அளிக்கக்கூடியதாக இருந்தது.
மையக்கருவறையில் காலபைரவர் அமைந்திருக்கும் ஆலயத்தின் உள்ளே நான் இதுவரைக்கும் சென்றதில்லை. காசியில் காலபைரவர் ஆலயம் உள்ளது. ஆனால் அதிலிருந்து மாறுபட்ட ஒரு ஆலயம் இது.கருவறைக்குள் சென்று தொட்டு பார்த்து தடவி காலபைரவனைப் பார்ப்பது ஒரு ஆச்சரியமான அனுபவம். மண்டையோட்டு மாலையும் கையில் கபாலமும் சூலமும் அருகே நாயுமாக பேய்கள் சுற்றிக் கூத்தாடும் கோலத்தில் இருந்த உக்ர ரூபியான காலபைரவர் ஆலயம் அச்சத்தையும் அச்சத்துக்கு அப்பால் உவகையையும் அளிக்கக்கூடியதாக இருந்தது. கன்னங்கரிய கல் எப்போதுமே அமைதி பயங்கரம் என்ற இரு உணர்வுகளுடன் தொடர்புடையதோ என்று தோன்றியது.