ஹொய்ச்சாள கலைவெளியில் – 2

பதினொன்றாம் தேதி காலை சோமநாதபுராவைப்பார்த்துவிட்டு மதியத்திற்குள் அருகே உள்ள பசலூரு என்ற ஆலயத்தைப்பார்க்கத்திட்டமிட்டோம். இந்தப்பகுதியில் முப்பது கிலோமீட்டர் தொலைவுக்குள் ஹொய்ச்சள சாம்ராஜ்யத்தின் கலைச்சின்னங்கள் அமைந்த புராதன நகரங்கள் ஏராளமாக உள்ளன. கிட்டத்தட்ட நாற்பது ஊர்களில் இருந்து பதினான்கு இடங்களை கிருஷ்ணன், ராஜமாணிக்கம் மற்றும் சந்திரசேகர் சேர்ந்து தெரிவுசெய்தனர். மூன்றுநாட்களில் எத்தனை அதிகமாகப்பார்க்கமுடியுமோ அத்தனை ஊர்களைப்பார்ப்பதாகத்திட்டம்.

பேலூர் ஹளபீடு இரண்டையும் நாங்கள் பலமுறை பார்த்துவிட்டிருந்தோம். ஆகவே அவற்றை தவிர்க்கலாமென முடிவுசெய்தோம். அடுத்த இலக்கு பசலூரின் மல்லிகார்ஜுனர் ஆலயம்

https://lh6.googleusercontent.com/-fUf6-_x-VbM/VfRPMVcuOQI/AAAAAAAAB8k/yD7BNXiYNoY/w853-h567-no/Hoysala-2914.jpg
காவேரியின் வடக்குப்பகுதியான இந்த நிலம் மிக வளமானது. மேட்டுநிலமாகையால் நீர் நிற்காது. ஹொய்ச்சாள மன்னர்கள் ஏராளமான ஏரிகளை வெட்டுவித்து இப்பகுதியை விளைநிலங்களாக்கினர். அவ்விளைநிலங்களின் மையமாக ஒரு ஆலயமும் அதைச்சுற்றி அக்ரஹாரமும் அமைந்தது. ஏரி, வேளாண் ஊர்கள் , நடுவே ஆலயநகரம் என்பது ஒட்டுமொத்தமான ஒரு பொருளியல் அலகு.

இவ்வாலயங்களின் முகமண்டபம் உண்மையின் குடிகள் அமர்ந்து பாசனம் முதலிய விஷயங்களை முடிவுசெய்யும் ஒரு சபை. சாய்ந்து அமர்ந்துகொள்வதற்குரிய அழகிய கல்பீடங்கள் சுற்றிலும் அமைந்த திண்ணைகள் அவை. நூறாண்டுகளுக்கு முன்புவரை குடிமராமத்துச் சபைகள் அங்குதான் கூடியிருக்கின்றன


ஹொய்ச்சள மன்னர் இரண்டம் வீரநரசிம்மரின் படைத்தலைவனாகிய ஹரிஹர தண்டநாயகனால் 1234ல் கட்டப்பட்டது மல்லிகார்ஜுனர் ஆலயம். மூன்று கருவறைகள் கொண்ட திரிகுடாச்சலம் என்னும் அமைப்பு கொண்டது. சிறிய சிகரங்கள் [குட்டிக்கோபுர அமைப்புகள்] ஒன்றுடன் ஒன்று இணைந்து செண்டுபோல ஆகி குவிந்து மேலெழுந்து வட்டவடிவமான குடத்தில் முடியும் இக்கோபுர அமைப்பு நாகர- திராவிட சிற்பமுறை எனப்படுகிறது. ஒரு கல்மரச்செண்டு.

கடையப்பட்ட தூண்கள் கரிய மெழுகுபோல மின்னுபவை. அவற்றின் மேல் அமைந்த குவைமுகடு ஒரு மாபெரும் கல்மலர். கல்மலர்தல் என்னும் சொல்லாட்சியே இக்கோயில்களை காணும்போது நெஞ்சில் எழுந்துகொண்டிருந்தது.


ஜகதி எனப்படும் விரிவான அடித்தளம் மீது எழுந்த கருவறைகளின்மீதே கோபுரங்கள் அமைந்திருக்கும். நுழைவாயிலில் கோபுரம் உள்ள திராவிட கட்டிடப்பாணி பின்னர் உருவானது. மூன்று கருவறைகளுக்கும் நடுவே ஒரு பொதுவான மண்டபம். பெரும்பாலும் வட்டவடிவமானது. அதை ஒட்டி ஒரு முகமண்டபம்.

ஹொய்ச்சள ஆலயங்களில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சைவ வைணவ பேதம் இவற்றில் பெரும்பாலும் இல்லை. சைவ ஆலயங்களின் சுற்றுச்சுவர்களில் ஏராளமான விஷ்ணுசிலைகளைக் காணமுடியும். வைணவ ஆலயங்களில் கணபதி, துர்க்கை, மகிஷாசுரமர்த்தனி சிலைகள் உள்ளன.

malligarjunar temple
malligarjunar temple

மல்லிகார்ஜுனர் ஆலயத்தின் மையப்பதிட்டை சிவலிங்கம்.வலப்பக்கம் சூரியனுக்கு சன்னிதி. அதை சூரியநாராயணர் என்கிறார்கள். இடப்பக்கம் நாகனும் நாகினியும் பாம்புடல்கள் பின்னி நிற்கும் சிலை பதிட்டைசெய்யப்பட்டிருக்கிறது. இலைதெரியாமல் பூத்த கொன்றைபோல சிற்பங்கள் மட்டுமே செறிந்த உடல்கொண்ட கலைப்படைப்பு இவ்வாலயம்

மதிய உணவை நாகமங்கலா செல்லும் வழியில் ஓர் கிணற்றடியில் அமர்ந்து சாப்பிட்டோம். புளிசாதமும் தக்காளி தொக்கும் கொண்டு வந்திருந்தோம். பயணங்களில் அறியாத ஓட்டல்களில் சாப்பிடுவது ஓர் இன்பம் என்றால் இப்படி கட்டுச்சோற்றை அவிழ்த்து அமர்வது இன்னொரு இன்பம்
1

[சௌம்யகேசவ ஆலயம் நாகமங்கலம்]

நாகமங்கலா இப்பகுதியில் இன்றும் முக்கியமாக உள்ள பழைமையான ஊர். இங்குள்ள சௌம்யநாராயணர் ஆலயம் மிகப்பெரியது. ஆனால் நாங்கள் செல்லும்போது உள்வாயில் மூடியிருந்தது. உள்ளே சுற்றிவந்து நோக்கினோம். பெரிய ஆலயமாயினும் சிற்பங்களேதும் இல்லை.

நுக்கெஹள்ளியின் லட்சுமிநரசிம்ம ஆலயம் 1246ல் ஹொய்ச்சள சக்கரவர்த்தி வீரசோமேஸ்வரரின் படைத்தலைவன் பொம்மண்ண தண்டநாயகனால் கட்டப்பட்டது. இதுவும் திருகுடாச்சல அமைப்பு கொண்டது. இப்பகுதி விஜயசோமநாதபுரா என்று அன்று அழைக்கப்பட்டது. முக்கியமான ஒரு நகரமாக இருந்துள்ளது. இன்று இது ஒரு சிற்றூர். பழைய ஓட்டுவீடுகளும் உடைந்த சாலையும் கொண்டது.
4

மாக்கல்லால் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள் செறிந்த வெளிச்சுவர் ஹொய்ச்சாள சிற்பக்கலையின் மிகச்சிறந்த உதாரணம். ஹொய்சாள சிற்பங்களில் திரும்பத்திரும்ப வரும் கருக்கள் உண்டு. பூமிதேவியை பன்றிமுகம் மீது தூக்கிய பூவராகன், மூன்றடி மண்கேட்டுப்பெறு வாமனன், உலகளந்த திருவடி, மகிஷாசுரமர்த்தனி, கோபாலகிருஷ்ணன், நர்த்தன வினாயகர், அர்ஜுனன் அம்புவிட்டு உறியிலிருக்கும் மீனை அடித்தல், கொற்றவை. ஒவ்வொருமுறையும் அச்சிலைகளை புதிதாகப்பார்க்கும் எழுச்சி ஏற்பட்டது. உற்றுநோக்கும்போது அவை புதிய நுட்பங்களைக் காட்டி அணுக்கமாக ஆகின்றன

ஹொய்ச்சள கட்டிடக்கலை மரக்கட்டிடங்களை கல்லில் அமைத்த வடிவம் கொண்டது. ஆகவே மேற்கூரைகள் உத்தரங்களும் பட்டியல்களும் கொண்டவை. கூரைவிளிம்புகள் தாமரை இதழ்போல மடிக்கப்பட்டிருக்கும்.

6
நுக்கெஹள்ளியில் சதாசிவர் கோயில் அருகே இருந்தது. சற்று கைவிடப்பட்ட மேலும் பழைய ஆலயம் சிதைந்த நிலையில் இருந்தது. நாங்கள் நுக்கஹள்ளிக்கு வரும்போது அந்தியாகிவிட்டது. எங்கள் பயணத்தில் அந்தியில் எப்போதும் ஓரு தொன்மையான ஊரில் இருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அது அளிக்கும் தியானநிலை அபாரமானது. ஒரு வாழ்க்கை நம் காலடியில் மறைந்துவிட்டிருக்கிறது, நாம் நடக்கும் மண் வரலாறால் ஆனது என்னும் மனஎழுச்சி

சதாசிவர் கோயிலை அரையிருளில் சுற்றிப்பார்த்தோம். சிற்பங்கள் இருளுக்குள் பாதிமறைந்து இருட்டு கெட்டியாகி உருவானவை போலத் தோன்றின. அவை நாமறியாத ஓர் இருப்புள்ளவை என்று தோன்றியது.

படங்கள்

முந்தைய கட்டுரைபுறப்பாடு கடிதம்
அடுத்த கட்டுரைஅடுத்தகட்ட வாசிப்பு