ஹொய்ச்சாள கலைவெளியில் – 1


காலையில் ஆறு மணிக்கே கிளம்பவேண்டும் என்பது திட்டம். என் ரயில் ஆறரை மணிக்குத்தான் வந்து சேர்ந்தது. டீ குடிக்காமலேயே குளித்துவிட்டுக் கிளம்பினேன். ஏழுமணிக்கெல்லாம் வேனில் ஏறிவிட்டோம். அந்தியூர் கடந்த பின்னரே பெட்காபி அருந்த முடிந்தது. தாமரைக்கரை வழியாக கொள்ளேகால் சென்று அங்கிருந்து காலை பத்துமணிக்கு சோமநாதபுரா வந்து சேர்ந்தோம்.

ஹளபேடு பரவலாக அறியப்பட்ட சிற்பக்கோயில்களின் தொகை. பலர் பார்த்திருக்கக் கூடும். ஹொய்ச்சாள கட்டிடக்கலையின் உச்சம் என்பது அதுதான். சோமநாதபுராவின் சென்ன கேசவ கோயில் ஹொய்ச்சாள கட்டிடக்கலையின் சாதனைகளில் ஒன்று, பரவலாக அறியப்படாதது.

ஹொய்ச்சாள என்றால் சிங்கத்தை வென்றவர்கள் என்று பொருள். அவர்களின் இலச்சினை பெரும்பாலான ஆலயங்களில் உள்ளது. சிங்கத்துடன் போரிடும் இளவரசன். மகாபாரதத்தின் தொன்மமான பரதனின் கதையிலிருந்து வந்திருக்கலாம். அல்லது சிங்கத்தை தங்கள் இலச்சினையாகக் கொண்ட கலிங்கத்தை வென்றதிலிருந்து வந்திருக்கலாம்.

ஹொய்ச்சாள கட்டிடக்கலையின் முக்கியமான தனித்தன்மை அக்கோயில்களைக் கட்ட பயன்படுத்தப்பட்ட கல்லில் இருக்கிறது. சோப் ஸ்டோன் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கரிய மாக்கல்லில் கட்டப்பட்டவை இக்கோயில்கள். நீரில் ஊறவைத்தபின் வெறும் கையால் மரத்தில் செதுக்குவதுபோல சிற்பங்களைச் செதுக்க முடியும். ஆகவே இக்கோயில்கள் மரத்தாலான கோயில்களின் அதே அமைப்பில் உள்ளன. சிற்பங்களை பத்தடி தொலைவில் வைத்துப் பார்த்தால் மரச்சிற்பங்கள் என்றே தோன்றும்.

கற்சிற்பங்களில் புடைப்புகள் ஓரளவுக்கு மேல் பகைப்புலத்தில் இருந்து எழ முடியாது. மரச்சிற்பங்களில் நீளமான உளிகளை உள்ளே விட்டு பல அடுக்குகளாக சிற்பங்களை அமைக்கமுடியும். அதை இச்சிற்பங்களிலும் செய்திருக்கிறார்கள். கல்லில் ஒருபோதும் சாத்தியமில்லாத அதிநுணுக்கமான சிற்பச் செதுக்குகள். சில சிற்பங்கள் கட்டைவிரல் அளவே உள்ளன.


மொத்தக் கோயிலுமே அத்தகைய நுண்ணிய சிற்பங்கள் செறிந்த கற்களை அடுக்கி எழுப்பப்பட்டவை. ஆகவே அவை கோயில்கள் அல்ல கல்லில் செய்யப்பட்ட நகைகள் என்ற விழிமயக்கை அளிக்கின்றன. பார்த்துப் பார்த்துத் தீராதது இவற்றின் கலையழகு. செவ்வியல்கலையின் முக்கியமான சிறப்பே இதுதான். அவை இயற்கையை பிரதியெடுக்க முயல்கின்றன. ஒரு மலர்க்காட்டை பார்த்து முடிக்க முடியுமென்றால்தான் இவற்றையும் பார்த்து முடிக்கமுடியும். இடைவெளியே இல்லாமல் சிற்பங்கள். அவை பார்ப்பவர்களுக்காக அமைக்கப்படவில்லை. ஓர் அமைப்பு தன்னைத்தானே முழுமை செய்துகொள்ளும் போக்கில் இவ்வடிவை அடைந்திருக்கிறது என்பதே சரியானது.

ஹொய்ச்சாளச் சிற்பங்களுக்கே சில தனித்தன்மைகள் உண்டு. அஜந்தா எல்லோரா ஓவியங்களின் பாணியின் அமைந்த பெரிய மணிமுடிகள். மார்பிலும் இடையிலும் மணிகள் செறிந்த சல்லடங்கள். உடைக்குமேல் உலோகத்தாலானவை எனத் தோன்றும் மணித்தொங்கல்கள். கைகளிலும் கால்களிலும் வளைகளும் கடகங்களும் தோள்வளைகளும் கழல்களும் சிலம்புகளும். நடனநிலையில் விழிவிரித்து உதடுகளில் சொற்கள் உறைந்திருக்கும் நிலைகள்.

1268ல் ஹொய்ச்சள சக்கரவர்த்தி இரண்டாம் நரசிம்மரின் தளபதியான சோமா என்பவரால் கட்டப்பட்ட ஆலயம் இது காவிரியின் கரையில் இருக்கும் சோமநாதபுரா ஒருகாலத்தில் வளமான நெல்வயல்களின் நடுவே இருந்த செல்வச் செழிப்பான நகரம்.மூன்றாம் நரசிம்மரின் காலத்திலும் இவ்வாலயத்தின் கட்டுமானம் தொடர்ந்து நடந்திருக்கிறது.

உயரமான அடித்தளம் மீது மூன்று கருவறைகளுக்குமேல் எழுந்த மூன்று கோபுரங்களுடன் அமைந்த இந்தவகைக் கோயில்களுக்கு திரிகுடாச்சலம் என்று பெயர். நடுவே அழகிய பெருமாள், நின்ற திருக்கோலம். வலப்பக்கம் கோபாலகிருஷ்ணன், இடப்பக்கம் நரசிம்மர். கோயில் சுவர் என்பது இந்தியாவின் அற்புதமான கலைக்கண்காட்சிகளில் ஒன்று. அங்குள்ள சிற்பங்களை ஒவ்வொன்றாகச் சொல்வதென்பது வீண். பார்ப்பதற்கே பலநாட்களாகும்.

சிற்பங்களின் தனித்தன்மை அவை தமிழகச்சிற்பங்களை விட சற்று மாறுபட்ட சிற்ப இலக்கணங்கள் கொண்டுள்ளன என்பது. பாசாங்குசத்துடன் ஏடும் வீணையும் ஏந்தி நடனமிடும் சரஸ்வதி சிலை ஓர் உதாரணம். நான்கு முகங்களுடன் அமுத கலசமும் வராஹ வீணையும் வஜ்ராயுதமும் அக்‌ஷமாலையும் ஏந்தி நின்றிருக்கும் பிரம்மன் இன்னொரு உதாரணம். புடவி சமைத்த கலைஞன். படைக்கும்சொல் இசையும் சுவையும் தியானமும் மின்னலின் வேகமும் கொண்டிருக்கவேண்டும்.

ஹொய்ச்சளக் கோயில்களின் அமைப்பில் உள்ள முக்கியமான சிறப்பம்சம் அதன் உருண்ட தூண்கள். மாக்கல்லை உருளையில் உருட்டிச் செய்யப்படும் இத்தூண்கள் நூற்றுக்கணக்கான கலசங்களையும் தட்டுகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிய வடிவம் கொண்டவை. ஒளியில் மையென மின்னுபவை.

ஹொய்ச்சாள ஆலயங்களின் மண்டபங்கள் இந்தியக் கட்டிடக்கலையின் சாதனைகள் என்று சொல்லப்படுகின்றன. உருளைத் தூண்களின் மீது குவை மாடங்கள் அமைந்துள்ளன. குவை மாடங்கள் ஒன்றன் மேல் ஒன்றென அடுக்கப்பட்ட மலர் வடிவ வட்டங்களால் ஆனவை. ஒரு மாபெரும் கல்மலர் தலைகீழாகத் தெரிவதுபோல. சரிவிகித ஒழுங்கின் பேரழகு என்று இந்த அமைப்பைச் சொல்லலாம்.

கருவறையின் தெய்வங்களின் கன்னங்கள் ஒளிகொண்டிருந்தன. வளைவுகள் அனைத்திலும் ஆலயத்தின் வெயில் தேங்கிய சாளரங்கள் தெரிந்தன. கல்லின் குளிர். கல் கனிந்த மென்மை. பார்த்துப் பார்த்துத் தீராத ஒரு கலைப்படைப்பு சோமநாதபுரா. ஏதோ ஒரு கட்டத்தில் மெல்லிய பெருமூச்சுடன் விலகிச்செல்லவேண்டியதுதான்

படங்கள் அனைத்திற்கும் சுட்டி

முந்தைய கட்டுரைஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு
அடுத்த கட்டுரைபுறப்பாடு கடிதம்