பொருளியல் விபத்து:கடிதங்கள்

வணக்கம் குரு.,
              இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் படும் அவஸ்தையான செயல்பாடுகள் பிறகு பல நேரங்களில் நினைத்து பார்க்கையில் நமக்கே நகைச்சுவை ஆகிவிடுகிறது. “எம்பிடு மட்டம் சொன்னேன்..மனுசனானா மனசிலாக்க வேண்டாமா”? “ஒடச்சுபிட்டாரு சாமி” இந்த வரிகளை நினைத்து நினைத்து பல முறை சிரித்தேன். அந்த நேரத்தில் பிச்சைகாரர்கள் கூட நீதி தவறாமல் சொல்ல கூடுவார்கள்.நீங்கள் போகும்போது குறைந்தபட்ச தானம் ஏதாவது செய்திருந்தால் கூட உங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்திருப்பார்கள் என்பது என் சிரிப்புனூடான சிந்தனை..! பொறுப்பு மேனேஜருக்கு  திருநெல்வேலி தொடர்பு கிடைத்ததா என்று எனக்கும் கேட்க ஆவலாக உள்ளது.
ஜீனியஸ்களின் வாழ்வில் இதெல்லாம் சகஜம் குரு.,
                                                                      அன்புடன் மகிழவன்.
8888

சார்!
வணக்கம்.
திங்கள் கிழமை காலையில் இரு திருமண நிகழ்ச்சிகளுக்குச்சென்று விட்டு மதியம் திருவட்டாருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது தக்கலையில் நெருக்கடிமிகுந்த அண்ணாசிலை எதிரே நீங்கள் நடந்து செல்வதைப்பார்த்ததும் மனதுக்குள் கேள்வி. இவர் ஏன் இந்நேரம் இங்கே நடந்து சென்று கொண்டிருக்கிறார்? என்று.. இருந்தாலும் உங்களைப்பார்த்த மகிழ்ச்சியில் பைக்கை நிறுத்தி கால் ஊன்றி விசாரித்தேன். அந்த இடம் டிராபிக் ஜாம் வேறு. என்னால் உடனே பைக்கைவிட்டு இறங்கவும் முடியவில்லை. உங்களிடம் இரண்டு நிமிடம் பேசியது சந்தோஷம்தான். உங்களிடம் பேசிவிட்டு பைக்கை கிளப்பியபின் மனதுக்குள் வருத்தம். சே எவ்வளவு பெரிய எழுத்தாளர். அவரை நிறுத்தி வைச்சு நான் உட்கார்ந்து பேசின‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ த‌ப்புனு ம‌ன‌சுக்கு ப‌ட்டுச்சி. சாய‌ந்திர‌ம் போன்ல‌ உங்க‌கிட்டே பேச‌ணும்நெனைச்சேன். ம‌றந்து போச்சு. இன்னிக்கு பொருளிய‌ல் விப‌த்து ப‌டிச்சப்ப‌தான் நீங்க‌ அன்னிக்கு எவ்வ‌ள‌வு ப‌த‌ட்ட‌த்துல‌ எங்கிட்டே பேசுனீங்க‌னு புரிஞ்ச‌து.
மூணு வ‌ருச‌த்துக்கு முன்னாடி நான் பேங்க்கில் ஏடிஎம் கார்டு வாங்கினேன். சுசீந்திர‌ம் தாணுமால‌ய‌சுவாமி கோயிலுக்கு  நானும் ம‌னைவி மீனாவும் ம‌க‌ன் அபிஷேக்கும் பைக்கில் போயிட்டிருந்தோம். அபிஷேக் அப்போ இர‌ண்டாம் வ‌குப்பு ப‌டிச்சிட்டிருந்தான். வட‌சேரியில் உள்ள‌ ஏடிஎம்ல் காசு எடுக்கிற‌துகாக‌ உள்ளே போனேன். உட‌ன் அபிஷேக்கும் வ‌ந்தான். உள்ளே கார்டை போட்டு ப‌ண‌ம் எடுத்த‌தும் அபிஷேக் என்னிட‌ம், அப்பா ந‌ம்ம‌ வீட்டுல‌யும் இது மாதிரி மிஷின் வாங்கி வ‌ச்சிடுங்க‌..எப்ப‌ வேணும்னாலும் ப‌ண‌ம் எடுத்துக்க‌லாம்ல‌.. என்றான். மீனாவும் நானும் வாய்விட்டுச்சிரித்தோம்.

ஏடிஎம்ல் ப‌ண‌ம் எடுக்கும்போது நீங்க‌ சொன்ன‌து மாதிரி திற‌க்க‌முடியாம‌ ப‌ல‌ரும் திண‌றுற‌தை அடிக்க‌டி பார்க்க‌லாம். அதுத‌விர‌ கார்டை எப்ப‌டி செருக‌ணும்கிற‌து தெரியாம‌ கேபினுக்குள் திண‌றுவ‌தையும் காண‌லாம். ஒருமுறை நான் டபிள்யூ.சி.சியில் உள்ள‌ ஏடிஎம்ல் ப‌ண‌ம் எடுக்க‌ச்சென்ற‌போது உள்ளே ஒருவ‌ர் ப‌ண‌ம் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்ப‌து அறியாம‌ல் நான் உள்ளே சென்று விட்டேன். அந்த‌ ந‌பர் என்ன‌ய்யா நீ நென‌ச்சுட்டிருக்கே.. ஆளு ப‌ண‌ம் எடுத்துகிட்டிருக்கிற‌து தெரிய‌ல‌யா. இப்ப‌ நான் உன்னைப்ப‌த்தி பேங்க் மேனேஜ‌ர் கிட்டே க‌ம்பிளைன்ட் ப‌ண்ணிடுவேன் என்று ஏக‌ வ‌ச‌ன‌த்தில் திட்ட..சாரி சார் நீங்க‌ உள்ள‌ இருக்கிற‌து என‌க்குத்தெரிய‌ல‌ .. தெரியாம‌ வ‌ந்துட்டேன்னு சொன்ன‌பிற‌கும் ச‌மாதான‌மாக‌ அந்த‌ ந‌ப‌ர் ப‌ண‌த்தை எடுத்த‌பின்ன‌ர் என்னைத்திட்டிய‌ப‌டியே வெளியேறினார்… ஏடிஎம்முன்னாடி ஒருநாள் நின்னீங்க‌னா ஏக‌ப்ப‌ட்ட‌ க‌தைக‌ள் கிடைக்கும் சார்..

அன்புட‌ன்,
திருவ‌ட்டாறு சிந்துகுமார்

8888

அன்புள்ள ஜெ,

எ டி எம் குறிப்புகள் சுவாரசியமாக இருந்தன.

புதிய பொறி இயல் உபகரணங்களின் பொது உபயோக அனுபவங்கள், மிக புதுமையானவை. ஒவ்வருவரிடமும் ஒரு கதை இருக்கலாம். இதில் எ டி எம் முக்கியமான ஒன்று.

எ டி எம் இலிருந்து வெளியேற இருக்கும் பித்தான்கள், வெவ்வேறு இடங்களில் இருப்பது ஒரு குழப்பமே. (சிலசமயம் கதவருகே இருக்கும். சில சமயம் எ டி எம் பொறி அருகே இருக்கும். சில சமயம் காகித குப்பைகளின் சுவரருகே இருக்கும்). உள்ளே மாட்டிக் கொண்டோம் என்கிற பதட்டம் எனக்கு பல முறை நேர்ந்துள்ளது.

நான் கூறும் அனுபவம் எனது நண்பர் ராஜேஷுக்கு நடந்தது. நான் கூட இருந்தேன். நாங்களிருவரும் லெக்ஸ்மார்க் என்கிற கம்பனிக்கு பணிபுரிய ஆர்லியன்ஸ் (பிரான்ஸ் நாட்டில் தென் நகரம்) ல் இருந்தோம். வாரக் கடைசியில், பாரிஸ் வருவோம். ராஜேஷுக்கு வெளி நாட்டில் முதல் முறை. நான் ஏற்கனவே வந்திருந்ததால் சில மெல்லிய அறிவுரைகள்.

எ டி எம் கடவுச் சொல் மிக முக்கியமானது. நாம் சரியாக டைப் பண்ணுகிறோம் என நினைத்தாலும், தவறாக மீண்டும் மீண்டும் டைப் செய்தால், மெஷின் அட்டையை எடுத்து கொண்டு விடும். ராஜேஷ், மூன்று முறை தவறாக டைப் செய்து, மெஷின் அட்டையை எடுத்துக்கொண்டு விட்டது.

ராஜேஷுக்கு ஒரே திகில். தன் பணத்தை, எவரோ எடுத்து கொண்டு விடுவார்கள் என. நாம் ஆர்லியன்ஸ் சென்று, வங்கியில் புகார் கொடுத்தால், புதிய அட்டை கொடுத்து பழயதை கான்செல் செய்து விடுவார்கள் என சொன்னேன். ராஜேஷுக்கு நான் சொன்னதில் நம்பிக்கை வரவில்லை. அவர் செய்த அடுத்த காரியங்கள், மிகவும் சுவாரசியமானவை

எ டி எம் அறைக்குள் ஒரு வயதான மூதாட்டி வந்தார். பிரான்சில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் குறைவு. தவிர, மூதாட்டிக்கு ஆங்கிலம் தெரிந்து இருக்கவில்லை.  ராஜேஷ் அவரிடம், தனக்கு நேர்ந்ததை ஆங்கிலத்தில் கூறினார். மூதாட்டி, சற்று தலையாட்டிவிட்டு முன்னே நகர்ந்தார். ராஜேஷ், சற்று முன் சென்று, தன் கூறியதை மீண்டு உரத்து கூறினார் (இரைந்து பேசினால், பொருள் புரிந்து விடுமோ).  நான் கூறும் எதையும் ராஜேஷ் கேட்க மாட்டாரோ என்றும், ஒரு சில விஷய அனுபவம் அவருக்கு உதவ கூடும் என்றும் நான் சும்மா இருந்து விட்டேன்.

தனக்கு நேர்ந்ததை விவரிக்க வேண்டிய எண்ணத்தில்,  மூதாட்டியின் கைகளில் இருந்த அட்டையை பிடுங்கி, எ டி எம் மெசினில் செலுத்தும் பாவனையில், மீண்டும் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். மூதாட்டி அதிர்ச்சி அடைந்து அலற, நான் திகைந்து நிற்க, மூன்று போலீஸ் ஆபீசர்கள் உள்ளே நுழைந்தனர். எங்களுக்கு தெரிந்தது ஆங்கிலம் – அவர்களில் ஒருவருக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும்,  தட்டு தடுமாறி சூழ்நிலை விவரித்து, போலீஸ் ஸ்டேஷன் சென்று, திரும்பி வருவதற்குள் அன்றைய பொழுது கழிந்து விட்டது.

நடந்த நிகழ்வுகளில், ராஜேஷ் ஏன் மூதாட்டியின் கைகளிலிருந்து அட்டையை வாங்கினார் (பிடுங்கினார்) என்று விவரிப்பது மிகவும் கடினமாக இருந்தது. கம்பனியின் அடையாள அட்டை, நாங்கள் பொறியாளர்கள், போன்றவை சற்று உதவின.

நல்ல வேளையாக அசம்பாவிதமாக ஏதும் நடக்கவில்லை.

மறுநாள், வங்கி சென்று, புகார் கொடுத்த அன்று சாயுங்கலமே புதிய அட்டை வந்து விட்டது. ராஜேஷ் பணம் ஒன்றும் களவு போகவில்லை. 

வனிதா, ராஜேஷின் மனைவி, அவரிடம் இந்த நிகழ்ச்சியை கூறிய பொழுது விழுந்து விழுந்து சிரித்தார்.

நாங்கள் பள்ளியில் படிக்கும் சமயம், ராபர்ட் லிந்துவின் கட்டுரை ‘without glasses’ நினைவிற்கு வந்தது.

அன்புடன் முரளி
888

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஏடிஎம்மைப் பயன்படுத்தி பணம் எடுத்தால் என்ன? முதல் முதலாக இப்படி நினைத்து கொண்டு உள்ளே போனேன். பித்தான்களை அழுத்தி கார்டைச்செருகினேன் பணமும் வந்தது பிறகு கதவைத் திறந்தேன்.இழுத்தேன். மீண்டும் இழுத்தேன்.நல்லவேளையாக எனது நண்பருக்கு செல்லில் அழைத்தேன் . அவர் சுச்சு இருப்பதாய் சொன்னார் .தப்பித்து வந்து விட்டேன் . அன்று அவருக்கு நன்றி சொன்னேன் . ஆனால் இப்பொழுது வருத்துகிறேன் . ஒருவேளை நான் கண்ணாடியைஉடைத்து இருந்தால் நான் இன்று ஒரு யுனீக் ரைட்டர் . எப்படியோ எனக்கு யுனீக் ரைட்டர் ஆக வழி தெரிந்து விட்டது . அடுத்தமுறை கண்ணாடியை உடைத்துவிட வேண்டியதுதான் .
செந்தில்குமார்

அன்புள்ள ஜெ,

குடும்பம் என்னும் அமைப்பு எத்தனை உன்னதமானது என்பதை, “ஒரு பொருளியல் விபத்துகட்டுரை அழகாக விளக்கியது. தவறு செய்துவிட்ட படபடப்பில் இருந்த உங்களை-தங்களின் சிரிப்பு மூலம்-உங்களின் குடும்ப உறுப்பினர்கள் குளிர்வித்த அந்தத்தருணம் ஒரு அழகியக்கவிதை. எஸ்.ராமகிருஷ்ணனின் எல்லா நாட்களையும் போலஎன்னும் சிறுகதையில், தன் அலுவலகப் பணத்தை வங்கியில் செலுத்தவரும் கதாநாயகன், வழியில் அதைத்தொலைத்துவிடுகிறான். இதனால் அவன் வேலையும் பறிபோய்விடுகிறது. மிகுந்த மனச்சோர்வுடன் அன்று வீடு  திரும்பும் அவனை, அவன் மனைவி கேவலமாகத்திட்டிவிடுகிறாள். குழப்பத்துடன் அவன் தூங்குவதாகக் கதை முடிகிறது.(http://www.sramakrishnan.com/yellanatkalaiyumpola_1.asp)

குடும்பத்தினரால், நிராகரிக்கப்படுவதைத் தவிர வேறு பெரியக் கொடுமை எதுவும் இருக்கமுடியாது.அந்த விஷயத்தில்,நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர் என்பதை இந்த சம்பவம் (மீண்டும்) மெய்ப்பிப்பதாக உணர்கிறேன்.

அன்புடன்,

பெத்துசாமி, செந்தாரப்பட்டி.

http://pethusamy.blogspot.com

முந்தைய கட்டுரைசாங்கிய யோகம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஊமைச்செந்நாய்:கடிதங்கள்