டிவிட்டர்- ஒரு கடிதம்

திரு ஜெமோ

நான் டிவிட்டரில் இருக்கிறேன். என் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை. உங்கள் பெயரை நான் இன்றைக்குத்தான் கேள்விப்படுகிறேன். நீங்கள் டிவிட்டரில் இருப்பது எனக்குத்தெரியாது. சினிமாவுக்கு வசனம் எழுதும் வசனகர்த்தர் என்று சொன்னார்கள். நிங்கள் டிவிட்டரில் எழுதும்பெண்களை விமர்சித்து எழுதியதை வாசித்தேன். டிவிட்டரில் எழுதும்பெண்களெல்லாம் இப்போதுதான் வெளியுலகத்துக்கு வந்திருக்கிறார்கள். நிறைய எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். அது உங்களுக்குப்பொறுக்கவில்லை. டிவிட்டரில் எத்தனையோ ஆண்களெல்லாம் கப்பித்தனமாக எழுதுகிறார்களே அதை நீங்கள் எழுதவில்லை. உங்களுக்கு டிவிட்டரில் எழுதுபவர்களுக்கு இருக்கும் ஃபாலோயர்களைப்பார்த்துப் பொறாமை . அது உங்கள் எழுத்திலேயே தெரிகிறது. நீங்களும் வாசிக்கும்படி எழுதினால் உங்களுக்கும் வாசகர்கள் வருவார்கள். பத்திரிகையில் பேட்டி வரணும் என்றால் அதற்கு உழைக்கவேண்டும். பொறாமைப்படுவதனால் பிரயோசனம் இல்லை. வளரும் எழுத்தாளர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்கமூட்டுவதைத்தான் மூத்த எழுத்தாளர்கள் செய்யவேண்டும். நீங்கள் கரித்துக்கொட்டியிருக்கிறீர்கள். மேலும் பெயர்களைச் சுட்டிக்காட்டி எழுதுவதெல்லாம் மிகப்பெரிய தப்பு. இளைஞர்களின் மகிழ்ச்சி உங்களைப்போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை. இனிமேலாவது பொறுப்புடன் எழுதுங்கள்

எஸ்

அன்புள்ள எஸ்

பிரம்மாண்டமான கடிதம். அதற்குள் எத்தனை குற்றச்சாட்டு, ஆலோசனை, சிந்தனைத்தெறிப்பு. எப்படி 140க்குள் அடங்கி வாழ்கிறீர்கள் என்பதே தெரியவில்லை.

முதலில் கடைசியிலிருந்து.

1. நான் இளைஞர்கள் ‘ஜாலியாக’ இருப்பதை எதிர்க்கவில்லை. அந்தப்பிராந்தியத்திலேயே நான் நடமாடுவதில்லை. ஓர் இதழ் அப்படி ஜாலியாக இருப்பதை மட்டுமே செய்துகொண்டிருக்கும் சிலரை ’தமிழகத்தின் நம்பிக்கைக் கீற்றுகள்’ என்று சொல்வதை மட்டுமே விமர்சனம் செய்கிறேன், சரியா?

2. நான் டிவிட்டர் ஃபேஸ்புக் எதிலும் இல்லை. அங்கே நீங்கள் பேசுவதில் எனக்கு அக்கறையும் இல்லை. ஆகவே எனக்கு ஃபாலோயர்ஸ் தேவையில்லை. என் தளத்திற்கு வாசகர்கள் போதிய அளவுக்கு இருக்கிறார்கள். கடைசியில் உங்கள் வரை வந்துசேர்ந்திருக்கிறேனே!

3. நீங்கள் அறிந்தேயிராத நான் பொறாமையுடன் எழுதுவதை பெரும்புகழுடன் இருக்கும் நீங்கள் முற்றிலும் புறக்கணிக்கலாம் இல்லையா?

4. பத்திரிகையில் பேட்டிகள் வருவதற்கான முயற்சிகள் என்னென்ன என எழுதியனுப்பினால் நாளைமுதல் நானும் கடுமையாக உழைக்கிறேன்.

5. பெண் டிவிட்டர்களை நான் தேர்வுசெய்யவில்லை. அவர்கள் எவரென்றே எனக்குத்தெரியாது.நான் எழுதியதெல்லாம் அந்த இதழில் வந்தவர்களைப்பற்றி மட்டுமே. அந்த இதழில் சொல்லப்பட்டிருந்தவற்றை மட்டுமே நான் சுட்டிக்காட்டினேன் டிவிட்டர் என்றாலே இளம்பெண்கள் என எண்ணுபவர்கள் அவர்கள்தான். அதோடு கடங்கநேரியான் என்பவர் பெண் என எனக்குத்தெரியாது. படம் கூட ஆணின் படமாகவே இருந்தது

6. பெயர் படத்துடன் முழுவிலாசத்துடன் பேட்டி ஓர் இதழில் வெளிவந்துள்ளது. ஆனால் அதைச் சுட்டிக்காட்டக்கூடாது என்பது என்ன லாஜிக் என எனக்குப்புரியவில்லை. ஒருவேளை அது பெயரும் படமும் இல்லையா? ஏதாவது டிஜிட்டல் விஷயமா?

7. பெண்கள், இளைஞர்கள் உருப்படியான எதையாவது செய்யும்போது அதற்கான முதல் அங்கீகராமே என்னிடமிருந்து , இந்த இணையதளத்திலிருந்துதான் வரும். இந்த ஒருவாரத்து கட்டுரைகளை மட்டுமே பார்த்தால் தெரியும். நான் சுட்டிக்காட்டியபின்னரே பிறர் அதை அறிவார்கள்.

8. ஆனால் இருபத்துநான்கு மணிநேரம் கடலை போடுவதை எல்லாம் ஒரு சாதனையாக எண்ணி நான் பாராட்டி தட்டிக்கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா?

ஜெ

முந்தைய கட்டுரைஅச்சிதழ்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு கலந்துரையாடல்