பகுதி ஒன்று : கனவுத்திரை – 3
அஸ்தினபுரியில் இருந்து நாற்பது காதம் தொலைவில் கங்கைக் கரையின் குறுங்காட்டுக்குள் அமைந்திருந்தது மாலினியின் தவக்குடில். பெருநகரிலிருந்து கிளம்பி கங்கை படித்துறைக்கு வந்து, அங்கிருந்து கரையோரமாகவே செல்லும் சிறிய படகில் நீரொழுக்கிலேயே சென்று, கங்கைக்குள் நீட்டி நின்றிருந்த பாறை ஒன்றின்மேல் அமைக்கப்பட்டிருந்த சிறிய படகு மேடையை அடைந்து, கரையேறி அங்கிருந்து காலடிப் பாதை வழியாக சென்று அக்குடிலை அடையவேண்டும்.
சுபகையும் முஷ்ணையும் சுஜயனுடன் கருக்கிருட்டிலேயே கிளம்பிவிட்டனர். அவன் முந்தைய நாள் அந்தி முதலே பயணத்திற்கான உளநிலையில் இருந்தான். கையில் ஒரு சிறிய துணிப்பையுடன் வந்து “இருட்டிவிட்டது நாம் எப்போது கிளம்புகிறோம்? என் உடைவாள் எங்கே?” என்று கேட்டான். “படுத்து துயிலுங்கள் இளவரசே. நாம் காலையில்தான் கிளம்புகிறோம்” என்றாள் சுபகை. “காலையில் நாம் கிளம்பும்போது அரக்கர்கள் எதிரே வந்தால் என்ன செய்வது?” என்றான் சுஜயன். “அரக்கர்கள் ஒவ்வொருவரையாக கொன்று கொண்டே போவோம்” என்றாள் சுபகை.
முஷ்ணை பின்னால் தோல் பைகளில் ஆடைகளை எடுத்து அழுத்திக் கொண்டிருந்தாள். அவள் திரும்பிச் சிரித்து “பேன் கொல்வதைப் பற்றி சொல்கிறீர்களா?” என்றாள். “போடி, என் வீரத்திருமகன் எவ்வளவு களங்களை காணப்போகிறாரென்று நீ என்ன கண்டாய்” என்றாள் சுபகை. “நான் அத்தனை பேரையும் கொல்வேன். ஆயிரம் அரக்கர்களை கொல்வேன்.” அவன் தன் இரு கைகளையும் விரித்து “நான் ஏழு அரக்கர்களை கொல்வேன்” என்றான். “ஆயிரத்தைவிட ஏழு பெரிய எண்ணென்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்” என்றாள் முஷ்ணை. “உனக்கு எப்போதும் என் இளவரசரைப் பார்த்தால் கேலிதான். அவரை என்னவென்று நினைத்தாய்? ஆலமரம் கூடத்தான் விதையில் சிறிதாக இருக்கிறது…” என்றபின் அவனிடம் குனிந்து “இல்லையா இளவரசே?” என்றாள்.
“நான் ஆலமரத்தை… ஆலமரத்தை ஒவ்வொரு கிளையாக வெட்டுவேன்” என்றான் சுஜயன். “ஒவ்வொரு கிளையாக வெட்டியபடியே படுத்துத் தூங்குங்கள். காலையில் உங்களை கூட்டிச் செல்கிறேன்” என்றாள் சுபகை. “நான் இப்போதே கிளம்புவேன். எனது தேர்கள் எங்கே?” என்று சொன்னபின் சுஜயன் ஓடிச்சென்று மஞ்சத்தில் கிடந்த தனது மேலாடையை எடுத்துக் கொண்டான். “மேலாடை எதற்கு?” என்றாள் முஷ்ணை. “இதை வைத்து நான் அரக்கர்களின் கண்களை கட்டுவேன்” என்றான் சுஜயன். சுபகை அவனை தூக்கிச் சென்று படுக்கையில் படுக்கவைத்து முதுகைத் தட்டியபடி “கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு அரக்கனாக எண்ணிக் கொண்டே இருப்பீர்களாம். ஆயிரம் அரக்கர்களை எண்ணி அதன் பிறகு ஏழு அரக்கர்களை எண்ணும்போது தூங்கிவிடுவீர்கள்” என்றாள்.
“நான் தூங்கும்போது கழுகுகள் வந்தால் என்ன செய்வது?” என்றான் சுஜயன். “ஒவ்வொரு கழுகாக நான் பிடித்து கயிற்றால் பிணைத்து இந்தச்சாளரத்தில் கட்டிப்போடுகிறேன். காலையில் நாம் அவற்றை வைத்து விளையாடலாம்” என்றாள் சுபகை. சுஜாதை அறைக்குள் வந்து “என்னடி சொல்கிறார்? இப்போது என்ன சிம்மங்களா? அரக்கர்களா? பாதாளநாகங்களா?” என்றாள். “எதையுமே அவரிடம் சொல்லவேண்டியதில்லை. அவரே நமக்கு சொல்கிறார்” என்றாள் சுபகை. சுஜயன் கைகளை ஊன்றி தலையைத் தூக்கி “ஏழு பாதாள நாகங்கள்! ஒவ்வொன்றும் அவ்வளவு நீளமானவை. அவற்றின் வால்…” என்றபின் வாலை விவரிப்பதற்கான உவமை கிடைக்காமல் “மிக நீளமான வால்” என்று சொன்னபடி தலையணையில் தலையை வைத்தான்.
அவன் குழலை நீவியபடி சுபகை “இத்தனை சிறிய உடம்பிற்குள் இருந்து படுத்தி வைப்பது எது?” என்றாள். “வேறென்ன? பல்லாயிரம் களம் கண்ட குருகுலத்து குருதி. அது இன்னொரு களத்தில் குருதி சிந்தினால் மட்டுமே அடங்கும்” என்றபின் தான் கொண்டு வந்திருந்த ஆடைப் பெட்டியை கீழே வைத்துவிட்டு சுஜாதை திரும்பினாள். “இதற்குள் இளவரசருக்கான ஆடைகள் இருக்கின்றன. காட்டுக்குள் அவர் எளிய தோலாடை மட்டும் அணிந்தால் போதும். அரச குலத்து ஆடையுடன் எங்கும் விளையாட விடக்கூடாது. அவருக்கு இன்னும் நீச்சல் தெரியாது. ஆகவே மலைச்சுனைகளைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்” என்றாள்.
“நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் சுபகை. “நீ பார்த்துக் கொள்வாய். ஆனால் இந்த உடலை வைத்துக் கொண்டு இவருக்குப்பின்னால் ஓட உன்னால் முடியுமா?” என்றாள் சுஜாதை. “இவர் செல்லும் இடத்துக்கெல்லாம் முன்னரே என் உள்ளம் சென்று நின்றிருக்கும்” என்றாள் சுபகை. “பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது. கொண்டு சென்று பார். முயல்குட்டியை மேய விடுவதற்கு நிகரானது இவரை கொண்டு செல்வது. அது என்ன செய்யப்போகிறதென்று அதற்கே தெரியாது” என்றபின் சுஜாதை நீள்மூச்சுடன் அவனை பார்த்தாள்.
“இதுவரை வலிப்பு ஏதும் வந்ததில்லை…. இச்செய்தி வெளியே தெரிந்தால் அதன்பின் இவரை தூக்கி சூதர்களுடன் பின்கொட்டிலில் சேர்த்துவிடுவார்கள். ஷத்ரிய வாழ்க்கைக்கும் இளவரசநிலைக்கும் மீளவே முடியாது” என்றாள். “எங்கே வெளித்தெரியப்போகிறது?” என்றாள் சுபகை. சுஜாதை “நமக்கு நலம்சொன்ன நிமித்திகர்தான் யாதவ அரசிக்கும் அவைநிமித்திகர்…” என்றாள். “அவர் காலைப்பிடிக்காத குறையாக கெஞ்சியிருக்கிறேன். பார்ப்போம்.” சுபகை “அவர் சொல்லமாட்டார்” என்றாள். சுஜாதை மீண்டும் நீள்மூச்செறிந்தாள்.
சுஜயனுக்கு வலிப்பு வந்ததைக் கண்டு கால்தளர்ந்து அருகிலேயே சுபகையும் விழுந்துவிட்டாள். முதியவள் வெளியே ஓடிவந்து சேடிகளை அழைக்க அனைவரும் அவனை சூழ்ந்துகொண்டனர். ஒருத்தி சுஜயனை தூக்கப்போக “தொடாதீர்கள். உடல்தசைகளும் நரம்புகளும் முறுகியிருக்கும். இறுகப்பற்றினால் முறியக்கூடும்” என்றாள் மருத்துவமறிந்த சேடி ஒருத்தி. அவள் சுஜயனைத் தூக்கி அவன் மூக்குக்குள் நீர் செல்லாமல் பார்த்து கொண்டாள். அவன் கைகால்கள் மெல்ல அவிழ்ந்து தளர்ந்தன. விரல்கள் ஒவ்வொன்றாக விடுபட்டன. வாய் திறந்து நுரையுடன் மூச்சு சீரடைந்தது.
“எளிய வலிப்புதான்…” என்றாள் மருத்துவச்சேடி. “வலிப்புக்கு உண்மையில் மருந்து என ஏதுமில்லை. தலைக்குள் குடியேறிய தெய்வங்களின் ஆடல் அது.” கண்விழித்தபோது சுபகை “எங்கே? இளவரசர் எங்கே?” என்றுதான் கூவினாள். “அவர் நலமாக இருக்கிறார். துயின்றுகொண்டிருக்கிறார்” என்றாள் முதியவள். சுபகை கையூன்றி எழுந்து தூணைப்பற்றி நின்று அவிழ்ந்த தன் ஆடைகளை சீரமைத்துக்கொண்டு விரைந்து சுஜயனின் அறைக்குள் சென்றாள். அங்கே சிறுகட்டிலில் மரவுரியை தன்னுடன் அணைத்துக்கொண்டு துயின்ற அவனருகே குனிந்து நோக்கினாள். அவன் முகத்தில் எச்சிலின் உப்புவீச்சம் இருந்தது. அவள் குனிந்து அவன் கன்னங்களில் முத்தமிட்டாள். அவை பிசுக்குடன் ஒட்டின.
மாலையிலேயே மருத்துவர் சரபர் வந்தார். சுஜயனை அருகே அமரச்செய்து அவன் நாடியைப் பற்றி கண்மூடி ஊழ்கத்திலமர்ந்தார். அஞ்சியபடி வரமறுத்த சுஜயனை சுபகைதான் கெஞ்சி மன்றாடி கொண்டுவந்து அமரச்செய்திருந்தாள். “இது பூதம். குழந்தைகளை தின்பது” என்றான் சுஜயன் அவரைச் சுட்டிக்காட்டி. அவர் புன்னகை செய்ய “சிரிக்கிறது” என்றான். அவர் அவனை நோக்கி “நீங்கள் மாவீரர் சுஜயர்தானே?” என்றார். “ஆம், எப்படித்தெரியும்?” என்றான் சுஜயன். “சூதர்கள் பாடினார்கள். இப்படி அமர்க… தங்கள் நாடியை நான் பார்க்கவேண்டும். நான் வீரர்களுக்கான மருத்துவன்” என்றார். சுஜயன் அவர் அருகே அமர்ந்துகொண்டு கையை நீட்டி “நான் குருதிசிந்தி போரிடும்போது என் நாடி துடிக்கிறது” என்றான்.
ஊழ்கத்தில் அமர்ந்த அவரது விழிகளை அவன் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். பிறகு “துயில்கிறாரா?” என்று சுபகையிடம் கேட்டான். அவள் “உஸ்” என்றாள். “துயில்கிறாரா?” என மெல்லிய குரலில் மீண்டும் கேட்டான். அவள் ஒன்றும் சொல்லாமை கண்டு “துயில் இல்லை. அவர் நினைக்கிறார்” என்றான். அவர் விழிகளைத் திறந்து “நரம்புகளில் புரவிக்கூட்டம் போல குளம்படிகள். உள்ளே உயிர் அருவி விழும் மரக்கிளை என பதறிக்கொண்டிருக்கிறது” என்றார். சுஜாதை “என்ன செய்கிறது?” என்றாள். “ஆனால் வாத பித்த கபங்கள் முற்றிலும் நிகர்நிலையில் உள்ளன. உடலில் எந்த நோயும் இல்லை.” என்றார் சரபர். “உள்ளம் கொள்ளாத எண்ணங்கள். காதல்கொண்ட பெண் இப்படி இருப்பாள் என்பார்கள். இவர் உடல் மிக நொய்மையானது. அவ்விசையை அது தாங்கவில்லை.”
“என்ன செய்வது மருத்துவரே?” என்றாள் சுஜாதை. “நிமித்திகர் ஒருவரை அழைத்து நாளும்கோளும் கணிக்கலாம். அவர் சொல்லக்கூடும் என்ன செய்யலாமென்று” என்றார். சுஜாதை நீள்மூச்சு விட்டாள். “நீங்களே நிமித்திகரையும் சொல்லிவிடுங்கள் மருத்துவரே” என்றாள் சுபகை. “அஸ்வகர் திறனுடையவர்” என்றார் மருத்துவர். அன்றே அஸ்வகர் வந்தார். முதிர்ந்து பழுத்த கூனுடலுடன் வந்த அவரை நோக்கி “கன்று வடிவ அரக்கன்” என்றான் சுஜயன். “அப்படி சொல்லக்கூடாது” என்றாள் சுபகை. “ஏன்?” என்று அவன் அவள் காதுக்குள் கேட்டான். “அவர் உங்களை தீச்சொல் இடுவார்.” அவன் “அவர் முனிவரா?” என்றான். “ஆம்” என்றாள் சுபகை. “முனிவர்களை வீரர்கள் வணங்கவேண்டும் அல்லவா?” என்றான் சுஜயன். “ஆம்” என்றாள் அவள்.
சுஜயன் அவனே சென்று அஸ்வகரை தாள்பணிந்தான். “அஸ்வக முனிவரை குருகுலத்து சுஜயன் வணங்குகிறேன்” என்று வீரர்களுக்குரிய முறையில் சொன்னான். அவர் அவனை தன் வெண்பூ விழுந்த கண்களால் நோக்கியபின் ஆடும்தலையுடன் “அமர்வதற்கு மஞ்சம் சித்தமாக உள்ளதா?” என்றார். “ஆம்” என்றாள் முஷ்ணை. அவர் புலித்தோல் மஞ்சத்தில் அமர்ந்தபின் தன் மாணவனை நோக்க அவன் தரையில் சுண்ணக்கட்டியால் கோடிழுத்து பன்னிருகட்ட வினாக்களத்தை வரைந்து அவற்றில் சோழிகளை பரப்பினான். அவர் சோழிகளை தன் விரல்வளைந்த கைகளால் அளைந்தும் குவித்தும் பிரித்தும் கணக்கிட்ட பின் “ஏதுமில்லை. பன்னிரு களங்களிலும் உகந்த கோள்களே உள்ளன” என்றார்.
“இந்த வலிப்பு…” என சுபகை சொல்லவர “இது அவர் உள்ளத்திற்கிணையாக உடல் வல்லமை கொள்ளாததனால் வருவது. நல்லுணவும் நற்சூழலும் தேவை. அதற்கு இந்தச் சிறிய அரண்மனைபோல தடை ஏதுமில்லை. அவர் காட்டுக்குச்சென்று தவக்குடில்களில் ஒன்றில் வாழட்டும். காட்டுயிர்களை அன்றாடம் காணட்டும். வெயிலும் காற்றும் ஏற்கட்டும். உடல் உறுதிகொள்ளும்” என்றார். “கூடவே மாவீரர்களின் கதைகளையும் அவர் கேட்கவேண்டும். அவர்களின் வெற்றியை மட்டுமல்ல தோல்வியையும் இடர்களையும் கூட. அச்சொற்கள் அவர் உள்ளத்தை உரமாக்கும்.”
சுபகை அவர் என்ன சொல்லப்போகிறார் என்று கண்கள் விரித்து நோக்கினாள். “அஸ்தினபுரியின் இளையோரெல்லாம் கார்த்தவீரியர் கதைகளையும் ரகுகுலராமன் கதைகளையும் கேட்டுத்தான் வளர்ந்தனர். இன்று அவர்களுக்கு இளையபாண்டவரின் கதைகளன்றி பிற எவையும் உவப்பதில்லை. இவரும் அர்ஜுனர் கதைகேட்டு அகம் மலரட்டும்” என்றார் அஸ்வகர். “இங்கேயே சூதர்களை வரச்சொல்லி…” என சுபகை தொடங்கவும் அவளை மறித்த சுஜாதை “இளையபாண்டவரை தூக்கி வளர்த்த செவிலி மாலினிதேவியின் தவக்குடில் கங்கைக்கரையோரமாக உள்ளது. அங்கே இவரை அனுப்பி மூன்றுமாதம் தங்கச்செய்கிறேன். அவரிடமே இளையபாண்டவரின் கதைகளைக் கேட்கட்டும். அச்சூழலும் நன்று. காடுகளுக்குரிய அனைத்தும் அங்குண்டு, அணுகுவதற்கும் அண்மை” என்றாள்.
“ஆம், அது நன்று” என்றார் அஸ்வகர். “சூதர் சொல்வதைவிட அன்னை சொல்வழியாக இவர் அக்கதைகளைக் கேட்பதே உகந்தது” என்றபின் புன்னகைத்து சுஜயனை நோக்கி “சரபர் இவரது நாடியைத் தொட்டபோது பெருங்காமம் கொண்டவரின் நாடியைப்போல் உணர்ந்ததாக என்னிடம் சொன்னார். இத்தனை சிறிய உடலை நான் எண்ணியிருக்கவே இல்லை” என்றார். சுபகை சிரித்தபடி “பெருங்காமமா?” என்றாள். “நாடி பொய்சொல்வதில்லை என்கிறார்” என்றார் அஸ்வகர். சுஜாதை “அது இவருடைய குருதியிலேயே இருக்கலாம். நாமென்ன கண்டோம்! நுரையடங்கி குருதி அமைதியானால் போதும்” என்றாள்.
“காலையில் கருக்கிருட்டுக்குள் கிளம்பியாகவேண்டும் என்பது ஸ்தானிகரின் ஆணை” என்றபடி சுஜாதை வெளியே சென்றாள். அரைத் துயிலில் விழிகள் சரிந்து கொண்டிருந்த சுஜயன் “முயலரக்கன்” என்று சொன்னான். “அவனை என் உடை வாளால்…” என்று சொன்னபின் சப்புக்கொட்டினான். சுபகை குனிந்து சற்றே வளைந்து மேலெழுந்த அவனது சிவந்த உதடுகளையும் உள்ளே தெரிந்த இரு வெண்பால்பற்களையும் பார்த்தாள். உதடுகளின் ஓரத்தில் தேனடையிலிருந்து தேன் என எச்சில் வழிந்தது. சுட்டு விரலால் அதை மெல்ல வழித்து தன் வாயில் வைத்து சப்பினாள். முஷ்ணை “என்ன செய்கிறாய்?” என்றாள். “தேன்” என்றாள் சுபகை.
முஷ்ணை “எனக்கு அச்சமாகத்தான் இருக்கிறது. இவரை எப்படி கொண்டுசென்று எப்படி திரும்ப கொண்டுவரப்போகிறோம் என்று” என்றாள். “இதெல்லாம் ஒரு நடிப்புதான் முஷ்ணை. இவர் ஒன்றுமறியாத குழந்தையுமில்லை. இவரைக் கட்டிக் காக்கும் பூதங்களுமில்லை நாம். என்ன செய்யவேண்டும் இவருக்குள் உறையும் தெய்வங்கள் அறியும். அவை இவரைச் சூழ்ந்து காக்கும். நாம் செய்வதற்கொன்றுமில்லை” என்றாள் சுபகை. “அந்த நம்பிக்கைதான் என்னை ஆறுதல் படுத்த வேண்டும்” என்று சொன்ன முஷ்ணை தோல் பையை இறுக முடிந்து குறுபீடத்தில் வைத்துவிட்டு “நான் சென்று சற்று ஓய்வெடுக்கிறேன் காலையில் எழவேண்டுமே” என்றாள்.
“ஆமாம். நான் இங்கேயே படுத்துக் கொள்கிறேன். இவர் எப்போது எழுவாரென்று தெரியவில்லை. எப்போதுமே நாணிழுத்து அம்பு பூட்டப்பட்ட வில் போலிருக்கிறார். சற்று தொட்டால் கூட வில் பறந்து எழுந்துவிடுகிறது” என்றாள். சுஜயன் ஆழ்ந்த தூக்கத்தில் “என் அம்புகள் எங்கே?” என்றான். சிரித்தபடி முஷ்ணை வெளியே சென்றாள். சுபகை மெல்ல இறங்கி சுஜயனின் மஞ்சத்திற்குக் கீழே வெறும் தரையில் தன் பருத்த உடலை அமைத்து கைகளை ஊன்றி மெல்ல படுத்துக் கொண்டாள். ஒரு கையால் சுஜயனின் கால்களை வருடிக் கொண்டே தன் எண்ணங்களை தொட்டுத்தொட்டுச் சென்று துயின்றுவிட்டாள்.
காலையில் சுஜாதை வந்து அவளை தட்டி எழுப்பிய போதுதான் விழித்தாள். அப்போது வெண்புரவி ஒன்றில் மலையடுக்குகள் வழியாக சென்று கொண்டிருந்தாள். அவளை தன் மடியில் வைத்து இடை வளைத்து இறுக அணைத்திருந்த அந்தக் கைகளை அவள் நன்கு அறிவாள். தசைகள் இறுகிய மெல்லிய கரங்கள். அம்புடன் அவை வில் விளையாடும்போது விழிகளால் தொட்டறிய முடியாத விரைவு கொண்டவை. கையூன்றி எழுந்தமர்ந்தபோது அவள் அக்கனவை உணர்ந்து ஒரு கணம் ஏங்கினாள். பின்பு அக்கனவின் தெளிவை எண்ணி தன்னுள் வியந்தாள். அதை வெறும் அகம் நிகழ்த்திக் கொண்டது என்று எண்ணுவதன் மடமை அவளை திகைக்கச்செய்தது.. அதிலிருந்த ஒவ்வொரு பருப்பொருளும் ஐம்புலன்களின் அறிதலாக இருந்தது. குளிர் காற்று, குளம்படியோசை, இளவெயில் தழைகளை வாட்டும் நறுமணம், அவன் கைகளில் வெம்மையும் உயிர்த் துடிப்பும் கொண்ட அணைப்பு.
எத்தனை காலமாயிருக்கும்! காலம் செல்லச் செல்ல அந்த ஒரு நாள் அவளுக்குள் முழு வாழ்க்கையாக விரிந்து அகன்று பரவியிருக்கிறது. பல்லாயிரம் அனுபவங்கள். அச்சங்களும் ஐயங்களும் உவகைகளும் உளஎழுச்சிகளுமாக அவனுடன் அவள் வாழ்ந்த முடிவற்ற தருணங்கள். நீள்மூச்சுடன் எழுந்து தன் குழலை சுழற்றி முடிந்து கொண்டாள். சுஜாதை உள்ளே வந்து “கிளம்பவில்லையா? நீராடி வந்தால் நேரம் சரியாக இருக்கும்” என்றாள். “ஆம்” என்றாள் சுபகை. “உன் நீள்மூச்சைக்கண்டால் கனவில் இளைய பாண்டவருடன் காதலாடியிருந்தாய் என்று தோன்றுகிறதே” என்றாள் சுஜாதை. “ஆம். அதற்கென்ன? ஒவ்வொரு நாளும் அவருடன்தான்” என்றாள் சுபகை. “உனக்குப் பித்து” என்றபின் சுஜாதை திரும்பி “முஷ்ணை எங்கே? அவளையும் நான்தான் போய் எழுப்ப வேண்டுமா?” என்றாள். “சேடியர் அறைக்குச் சென்று துயின்றிருப்பாள். அங்கு அவளுக்குத் தோழிகள் இருக்கிறார்கள்” என்றாள் சுபகை.
“நீங்கள் நீராடி வருவதற்குள் நான் இளவரசரை நீராட்டி ஆடை அணிவித்து வைக்கிறேன்” என்றாள். “நீராட்டவேண்டுமா?” என்று குனிந்து சுஜயனை நோக்கி சுபகை கேட்டாள். “இப்போது எழுப்பினால் துயில் கலைந்த எரிச்சலுடன் இருப்பார். எப்படியும் காட்டுக்குத்தானே செல்கிறோம். அங்கே நானே நீராட்டிக் கொள்கிறேனே.” சுஜாதை “முறைமை ஒன்றுள்ளது. நீராடாது அரண்மனை நீங்க இளவரசர்களுக்கு ஆணையில்லை” என்றாள். “எத்தனை சிறிய உடலாக இருந்தாலும் இது குருகுலத்துக் குருதி. அரசகுடியின் முறைமைகள் அனைத்தையும் கடைப்பிடித்தாகவேண்டும். கிளம்புகையில் கொம்பும் முரசும் ஒலித்தாக வேண்டும். நிமித்திகன் இளவரசர் அரண்மனை நீங்குவதை அறிவிக்க தேர்ப்பாகன் தலைவணங்கி வாழ்த்துக் கூறி வரவேற்க வேண்டும். கிளம்புகையில் வாழ்த்தொலிகளும் எழுந்து விடை கொடுக்க வேண்டும்” என்றாள் சுஜாதை.
சுபகை “இவர் ஒரு குழந்தை. அவ்வளவுதான். என் கைக்கும் உள்ளத்திற்கும் சிக்குவது அது மட்டுமே” என்றாள். “அனைத்துமே குழந்தைகள்தான். இத்தனை சடங்குகள் வழியாக இத்தனை சொற்கள் வழியாக ஓதி ஓதி அவற்றை அரசர்களாக்குகிறோம் கல்லை தெய்வமாக்குதல் போல” என்றபடி வெளியே சென்றாள் சுஜாதை. சுபகை மீண்டும் சுஜயனை நோக்கினாள். அவன் சுட்டுவிரலை கொக்கிபோல வைத்திருந்தான். உள்ளங்கால்கள் வெளிநோக்கி விரிந்து வளைந்திருந்தன.
சுபகை நீராடி ஆடை அணிந்து வருகையில் முஷ்ணை சுஜயனின் தலையில் மலர்மாலையை சுற்றிக் கொண்டிருந்தாள். நீராடி நறுஞ்சுண்ணமிட்ட உடலுடன் அவன் குறுபீடத்தில் உடல் ஒடுங்கி துயின்று கொண்டிருந்தான். சிறிய உதடுகளிலிருந்து எச்சில் வழிந்து அகல் விளக்கொளியில் மின்னியது. வெண்பட்டாடை இடையில் பாளைக் குருத்தின் படபடப்புடன் சுற்றப்பட்டிருந்தது. சுஜாதை உள்ளே வந்து “இப்போதுதான் நீராடி வந்தாயா? தேர்கள் சித்தமாகிவிட்டன. கிளம்பு” என்றாள். “இளவரசர் மறுபடியும் தூங்கி விட்டார்” என்றாள் முஷ்ணை. “அவரென்ன நீராடும்போதே தொட்டிக்குள் தூங்கிவிட்டார்” என்று சொன்ன சுஜாதை, அருகே வந்து குனிந்து அவன் முகத்தை பார்த்தாள். “சில சமயம் கவிழ்ந்து படுக்கத்தெரியாத கைக்குழந்தை என்று உளமயக்கு அளிக்கிறார்” என்றபின் அவனுடைய சிறிய கால்களை கையால் பற்றி தன் நெற்றியில் வைத்துக் கொண்டாள். பின்பு இரு உள்ளங்கால்களிலும் முத்தமிட்டு “சென்று வாருங்கள் இளவரசே! வாளேந்தும் வீரனாக திரும்புங்கள்” என்றாள்.
முஷ்ணை சுஜயனை மெல்ல தூக்கி தன் தோளில் சாய்த்துக் கொண்டாள். அவனுடைய கை சரிந்து தொங்கி ஆடியது. கன்னம் அழுந்த முகத்தை அவள் தோள் வளைவில் வைத்தபடி அவன் “வாள்?” என்றான். அவன் எச்சில் அவள் தோளில் வழிந்தது. அவள் சிரித்தபடி “உள்ளிருந்து திரவங்கள் வழிந்து கொண்டே இருக்கின்றன” என்றாள். சுஜாதை “பேச்சு போதும். இன்னும் பிந்தினால் ஸ்தானிகர் என்னைத்தான் சொல்வார்” என்றபின் வெளியே சென்றாள். சுபகை அறைக்குள் எட்டிப்பார்த்த இளம் சேடியிடம் “பொதிகள் அனைத்தும் தேரில் ஏறிவிட்டனவா?” என்றாள். ”ஆம் செவிலியன்னையே” என்றாள் சேடி. “செல்வோம்” என்றபின் சுபகை தன் சிறிய கால்களை எடுத்துவைத்து கைகளை ஆட்டி மெல்ல நடந்து சென்றாள்.
இடைநாழியின் எல்லையை அடைந்தபோதே மூச்சிரைக்கத் தொடங்கிவிட்டிருந்தாள். பின்னால் வந்த முஷ்ணை “இப்போதே மூச்சிரைக்கிறது. காட்டில் என்ன செய்யப்போகிறாய்?” என்றாள். “காடு வேறு இடம். அங்கு என் எடையில் பாதியை காற்று எடுத்துக் கொள்ளும்” என்றபடி கைப்பிடியைப் பற்றி சற்றே பக்கவாட்டில் சாய்ந்து ஒவ்வொரு படியாக காலெடுத்து வைத்து சுபகை கீழிறங்கினாள். சுஜயனை தோளிலிட்டு மெல்லத்தட்டியபடி முஷ்ணை தொடர்ந்து இறங்கி வந்தாள். அவர்களைப் பார்த்ததும் இடைநாழியில் நின்றிருந்த காவல் வீரர்கள் “குருகுலத்தோன்றல் வாழ்க! சுபாகுவின் மைந்தர் வாழ்க! நலம் சூழ்க!” என்று வாழ்த்தினர். அவ்வொலி கேட்டு தேரின் பாகன் திரும்பி நோக்க அவன் கையசைவில் கடிவாளம் இழுபட்டதனால் புரவிகள் குளம்புகளை தூக்கிவைத்து மணி குலுங்க தலையசைத்தன.
அரச முறைமைகளுடன் தேரிலேறிக் கொண்டதும் முஷ்ணை, ”அந்த தோலாடையை விரியுங்கள் இளவரசரை படுக்க வைத்து விடுவோம்” என்றாள். சுபகை விரித்த தோல் மேல் சுஜயனை படுக்க வைத்தாள் அவன் இரு கைகளையும் அறியேனென்ற முத்திரையுடன் விரித்தபடி வாய்திறந்து மல்லாந்து படுத்து துயின்றான் தேர் கிளம்பும் ஒலி எழுந்த போது முனகியபடி பாய்ந்து புரணடு அருகே இருந்த முஷ்ணையின் கால்களை பற்றிக் கொண்டான். சுபகை குனிந்து ”உள்ளே எத்தனை புரவிகள் போரிடுகின்றனவோ? யாரறிவார்கள்?”. சுஜயன் அவள் தொடையை இறுகப்பற்றியபடி பொருள் விளங்காது எதோ முனகினான். பின்பு “அம்மா” என்றான். சுபகை “அனைத்தையும் அடையும் இளவரசர்கள் இழப்பது” என்றாள்
முரசொலிகள் ஓய்ந்தன. புரவிகள் கல் சாலையில் குளம்புகளை ஓசையெழ வைத்து விரைவுகொள்ள சகடங்கள் அதிரும் ஒலியுடன் தேர் ஓடியது. சுஜயன் “யானைகள்” என்றான். “யானைகள்… நீரில்… படகில்..” என்று ஏதோ சொன்னான். அவன் உடலில் சிறு விதிர்ப்பு ஓடியது. தேரின் தோல் விரித்த பீடத்தின் மேல் வெம்மையான சிறுநீர் ஊறி வழியத்தொடங்கியது. சுபகை திரும்பி நோக்கி “கசிந்து விட்டார்” என்றாள்.
“இரண்டு வேளை” என்றாள் முஷ்ணை. “நள்ளிரவில் ஒரு முறை, விடியலில் ஒரு முறை.” தேருக்குள் வீசிய காற்றில் சிறுநீரின் மணம் சுழன்று கடந்து சென்றது. “நீ சற்று தூக்கு அவரை” என்றாள் சுபகை. முஷ்ணை அவனை மெல்ல தூக்க அவள் அவன் அணிந்திருந்த ஆடையை சுழற்றியெடுத்து கீழே வைத்துவிட்டு மரவுரியால சிறுநீரில் நனைந்திருந்த அவனுடைய மெலிந்த வெளிறிய கால்களை துடைத்தாள். சுஜயன் “குருதி” என்றான். “துயிலிலும் இதை மட்டும் மாற்றி சொல்லப்போவதில்லை. என்ன ஓர் உறுதி” என்றபடி சுபகை அவனுக்கு வெண்ணிற ஆடையை அணிவித்தாள். சிறுநீர் நனைந்த தோலாடையை எடுத்து அதற்குள் சிறுநீரில் ஊறிய பட்டாடையை வைத்து சுற்றிக்கட்டி ஒரு சிறு பைக்குள் வைத்துக் கொண்டாள். இன்னொரு தோலாடையை எடுத்து விரித்து அதில் சுஜயனை படுக்க வைத்தாள்.
சுஜயன் ஒருக்களித்து கட்டை விரலை வாய்க்குள் போட்டுக் கொண்டான். முஷ்ணை பெருமூச்சுடன் “ஒரு குழந்தை எத்தனை தனித்தது!” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றாள் சுபகை. “பெரியவர்கள் அனைவரும் ஒரே உலகில் வாழ்பவர்கள். சொற்களாலும் உணர்வுகளாலும் ஒன்றுடனொன்று பின்னப்பட்டு ஒற்றை கட்டுமானமாக ஆகிவிட்ட உலகு. குழந்தைகள் ஒவ்வொன்றும் தனி உலகில் வாழ்கின்றன. அங்கு அவர்களுக்குத் துணை என எவருமில்லை” என்றாள் முஷ்ணை. “ஆம். ஆனால் இவ்வுலகிலிருந்து அவர்கள் எடுத்துக் கொண்ட அனைத்தும் அங்குள்ளன” என்றபின் குனிந்து சுஜயனை நோக்கி “வியப்புதான்! இத்தனை சிறிய உடலுக்குள் எவ்வளவு பெரிய உலகம்!” என்றாள்.