ஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு

index

கிபி 1300 ல் முகமதியர்கள் வருகை வரை தக்காண பீடபூமியின் அரசியல் வரலாறு ஸ்திரமற்றதாக இருந்து வந்தது, பெரும்பாலும் சிறியதும் பெரியதுமான சிற்றரசர்களின் பிடியில் இருந்தது. அவர்களும் முழுமையாக சுதந்திரமாக இல்லாமல் வடகர்நாடகத்தையோ வட தமிழ்நாட்டையோ தலைமையாக கொண்டிருந்த ஏதேனும் பெரிய அரசுகளிடம் அடிபணிந்து இருக்கும் சூழலே நிலவியது. எனவே கர்நாடக மற்றும் தமிழக பேரரசுகள் இருவரும் தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளும் பொதுவான இடமாகவே தென்கர்நாடகம் இருந்து வந்தது. சில காலமே நீண்ட அந்த சிற்றரசுகளில், தங்கள் பண்பாட்டு மேன்மையாலும், ஒப்பீட்டளவில் நீண்ட கால ஆட்சியாலும் குறிப்பிட தகுந்தவர்கள் தலக்காட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த கங்கர்கள்.தலக்காடு காவேரியை ஒட்டி இருக்கும் இன்றைய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான சோம்னாத்பூருக்கு அருகே மைசூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. கங்கர்களின் ஆட்சிக் காலத்தில் தான் ஸ்ரவணபெலகொலவில் இருக்கும் மிகப் பெரிய சிலை நிறுவப் பெற்றது.

கிபி 1000-தில் தென்னிந்தியா இரண்டு பெரிய பேரரசுகளிடமே இருந்தது, தமிழகத்தை ஆண்ட சோழர்கள் மற்றும் வடகர்நாடகத்தை ஆண்ட கல்யாணி சாளுக்கியர்கள். இரண்டுமே அப்பொழுதுதான் அவற்றின் உச்சத்தில் இருந்தன, சாளுக்கியர்கள் ஆட்சிக்கு வந்து 25 வருடங்கள் ஆகி இருந்தன. சோழர்கள் நூற்றைம்பது வருடங்களாக ஆட்சி செய்து வந்திருந்தனர். எனினும் அப்பொழுதுதான் வலிமையான ஒரு அரசாக உருவாகி வந்திருந்தனர். இரண்டு அரசுகளும் தங்களுக்குள் போரிட்டு சுற்றி உள்ள சிற்றரசுகளை தங்களுடன் இணைத்துக் கொண்டும், இணையாகக் கொண்டும் ஆட்சி செய்து வந்தனர். இரண்டு அரசுகளுமே 11 ம் நூற்றாண்டில் செல்வச்செழிப்போடும், சாதனைகளோடும் விளங்கின.

3
சோழர்களைப் பொறுத்த வரையில் அவர்களின் கலைச் சாதனைகள் இன்றும் தஞ்சையை சுற்றி உள்ள இடங்களில் காணக் கிடைக்கின்றன. சாளுக்கியர்களின் வளத்தை அறிய அவர்களின் அன்றைய தலை நகரான கல்யாணாவில் ( பிதரிக்கு அருகில் இருக்கும் இன்றைய பசவ கல்யாணா) இன்று நமக்கு கிடைக்கும் சான்றுகள் குறைவு, எஞ்சியவை பதினோராம் நூற்றாண்டில் உருவான கட்டடக் கலையின் மறுமலர்ச்சி என மதிப்பிடப்படும் கல்யாண சாளுக்கியர் கட்டுமானங்களே, அவையே அவர்களின் செழிப்பை உணர்த்துகின்றன.

கடக்கில் கோயில் கட்டுமானக் கலை துவங்கிய பொழுதிலிருந்து உள்ள கட்டுமானங்கள் கிடைக்கின்றன. எனினும் பதினோராம் நூற்றாண்டுக்குப் பிறகு அவை எண்ணிக்கையில் அதிகமாயின. மேலும் புதிய மற்றும் வளமான பாட் ஸ்டோன் அறிமுகப்படுத்தப் பட்டது, அது வரை ஆலயக் கட்டுமானங்களுக்கு சோப்பு கல்லையே பயன்படுத்தினர். நுட்பமான வேலைப்பாடுள்ள இந்த கட்டுமானங்களே பின்னாளில் ஹொய்சளர் கட்டக் கலைக்கு முன்னோடியாக அமைந்தது.

இந்த அரசியல் சூழலின் நடுவேதான் ஹோய்சாளர்கள் அரசு தோன்றியது. ஆரம்பத்தில் மேலை சாளுக்கியர்களின் கீழே ஒரு சிற்றரசாக ஆரம்பித்து, நூறாண்டுகளுக்குப் பிறகு பிட்டிக தேவர் என்ற மன்னன் தலைமையில் தலக்காட்டை ஆண்டு வந்த சோழர்களின் ஆளுனரை தோற்கடித்தனர். இந்த பிட்டிகா தான் பின்னாளில் விஷ்ணுவர்தன் என்று அறியப்பட்டவர். ராமானுஜரால் ஈர்க்கப்பட்டு ஜைன மதத்திலிருந்து ஹிந்துவாக மதம் மாறியவர். கிபி 1116 ல் தலக்காட்டை வென்று சோழர்களின் அரசுக்குட்பட்ட இடங்களை ஹோய்சாலர் அரசோடு இணைத்துக் கொண்டார். இந்த வெற்றியை கொண்டாட 1117 ல் பேலூரில் சென்ன கேசவர் ஆலயம் என்ற ஒரு வைணவ ஆலயத்தை நிறுவினார்.

சோழர்களைத் தொடர்ந்து சாளுக்கியர்களின் மீதும் போர் தொடுத்தார், முதலில் வெற்றி கிடைத்தாலும் பின்னர் நடந்த தொடர் போர்களில் தோற்று 1123 ல் சாளுக்கியர்களின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளும்படி நேர்ந்தது. எனினும் இது அவர்களின் சமூக சூழலை அதிகமும் மாற்றவில்லை. இப்பொழுது தலக்காட்டை ஆண்டு வந்த கங்கர்களின் வலிமையான, அனைவராலும் அஞ்சப்படும் தொடர்ச்சியாக அறியப்பட்டனர். இந்த காலகட்டத்தின் உற்சாகத்தில் கட்டப் பட்டது ஹெலபீடில் உள்ள ஹோய்ச்சலேச்வர ஆலயம்.

இதன் தொடர்ச்சியாக இன்றைய மைசூருக்கும் ஹசனுக்கும் இடைப்பட்ட, நூற்றாண்டுகளாக பேரரசுகளின் பொதுக்களமாகவும் போர்க்களமாகவும் இருந்து வந்த நிலப் பகுதி இப்பொழுது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் வளமானதாகவும் மாறியது. இந்த நிலை இரண்டு நூற்றாண்டுகள் தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில் கட்டப் பட்டவையே இன்று நமக்கு கிடைக்கும் நூறுக்கும் அதிகமான ஹோய்சாலர் கட்டுமானங்கள். இந்தக் கோவில்கள் பெரும்பாலும் குடிமக்களாலும், அதிகாரிகளாலும், வணிகர்களாலும் மற்றும் ஆளுனர்களாலும் கட்டப் பட்டவையே. அரசு செலவில் கட்டப் பட்டவை மிகக் குறைவே.

2

ஹோய்சாலர்கள் தொடர்ச்சியாக சாளுக்கியரிடமிருந்து தங்களை சுதந்திரமாக்கிக் கொள்ளவும், தங்கள் ஆட்சியை விஸ்தரித்துக் கொள்ளவும் முயன்று வந்தனர். அவர்களின் முயற்சி விஷ்ணுவர்தனின் சிறுமைந்தர் இரண்டாம் வீர வல்லாளன் காலத்திலேயே சாத்தியமானது. இந்தக் காலகட்டத்தில் ஹோய்சாலர்களை நசுக்கி வந்த இரண்டு பேரரசுகளும் தங்கள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். சாளுக்கியர்கள் அவர்களுக்கு வடக்கே தேவகிரியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த யாதவர்களால் பேரழிவிற்கு நகர்த்தப்பட்டனர்.வீர வள்ளலானும் யாதவர்களோடு சேர்ந்துகொண்டு சாளுக்கியர்களை தாக்கி மேலை சாளுக்கியர்கள் எனும் கல்யாணி சாளுக்கியர்களின் பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்தார்.பின் சிறிது காலத்திலேயே கைப்பற்றிய பகுதிகளை யாதவர்களிடம் இழக்க வேண்டி வந்த பொழுதிலும், ஹோய்சாலர்கள் தங்களை சுதந்திரமாக நிறுவிக் கொள்ள இந்தப் போர் வழி வகுத்தது. பின் வந்த காலங்களில் பேலூர் ஹெலேபீடை மையமாகக் கொண்டு ஹோய்சாலர் அரசு 1200களில் அதன் உச்சத்தை அடைந்தது.

தெற்கே சோழர்களின் அரசில் வேறு ஒரு சிக்கல் நிலவியது. சோழர்களின் தெற்கே ஆண்டு வந்த பாண்டியர்கள் தலை எடுக்கத் துவங்கினர். அவர்களை வெல்ல ஹோய்சாலர்களிடம் உதவி கோரினர் சோழர்கள், விளைவாக பாண்டியர்களுக்கும் ஹோய்சாலர்களுக்கும் இடையே ஆன போர் பல வருடங்களாக நீண்டு கொண்டே வந்தது. இடைப்பட்ட காலத்தில் வட தமிழ்நாடு ஹோய்சாலர்களின் ஆளுகைக்குட்பட்டது, ஹோய்சாலர்களின் எல்லையை எப்பொழுதும் இல்லாத அளவுக்கு விரிவாக்கியது, அது நீடித்தது குறைந்த காலமே எனினும். பின்பு பாண்டியர்களின் எழுச்சி ஹோய்ச்சலர்களை பின்னோக்கி, தற்போதைய தமிழக கர்நாடகா எல்லையை நோக்கித் தள்ளியது.

1296 ல் அதுவரையிலான இந்து பேரரசுகளின் காலம் சட்டென முடிவுக்கு வந்தது. டெல்லிசுல்தானியர்களால் அனுப்பப்பட்ட முகமதிய படைகளின் வருகையால். முதலில் அவர்கள் வரி வசூலிக்கவே வந்தனர். கி.பி 1331 ல் அவர்கள் ஹெலேபீடு வந்த பொழுது ஹோய்சாலர்களின் கடைசி மன்னனான மூன்றாம் வீர வல்லாளன் அவர்களின் முற்றுகையையும், அதன் விளைவாக ஏற்படக் கூடிய வீழ்ச்சியையும் தவிர்க்க அவர்களுக்கு வரி செலுத்த ஒப்புக் கொண்டார். கி.பி1320 ல் சுல்தான்கள் டெல்லியில் ஆட்சிக்கு வந்த பொழுது தென்னிந்தியாவை அவர்களின் ஆட்சிக்குக் கீழே கொண்டு வர விரும்பினர். குறுகிய காலத்திலேயே பெரும்பான்மையான ஹிந்து அரசுகள் தோற்கடிக்கப்பட்டன. முஹம்மது துக்ளக் தன்னுடைய தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினார். தேவகிரியின் பெயரையும் தொளலதாபாத் என மாற்றினார். மூன்றாம் வீர வல்லாளன் அமைதியை வேண்டி அவர்களுடன் சமதானம் செய்து கொண்டார். இப்படியாக இரு நூறாண்டுகால ஹோய்சாலர்களின் சுதந்திரம் முடிவுக்கு வந்தது. எனினும் மூன்றாம் வீர வல்லாளன் பின்னாளில் துக்ளக்குக்கு எதிரான ஹிந்து மன்னர்களின் எழுச்சியில் பங்கு கொண்டார்.

இந்த எழுச்சி 1329 ல் ஹரிஹரா மற்றும் புக்கா என்ற இரண்டு சகோதர்களால் முன்னெடுக்கப் பட்டது. இவர்கள் இருவரும் ஏற்கனவே சிறை பிடிக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பட்டு முகமதியர்களாக மதம் மாற்றப்பட்டவர்கள். பின்பு புரட்சியை தடுக்கும் பொருட்டு சுல்தான்களின் பிரதிநிதியாக தெற்கே அனுப்பி வைகபட்டனர், எனினும் இங்கு வந்த பின்பு மீண்டும் ஹிந்துவாக மதம் மாறினர். இவர்கள் ஹிந்து மன்னர்களை ஓன்று திரட்டி கி.பி 1336 ல் விஜயநகரப் பேரரசை நிறுவினர். கி.பி 1342 ல் சுல்தான்களுடன் நடைபெற்ற போரில் வீர வல்லாளன் கொல்லப் பட்டார். பிறகு ஹோய்சால அரசு விஜய நகர பேரரசுடன் இணைத்துக் கொள்ளப் பட்டது. இதன் வழியாக முதல் முறையாக மொத்தத் தென்னிந்தியாவும் ஒற்றை ஹிந்து பேரரசின் கீழ் வந்தது. இதன் பலனாக ஹோய்சாலர்களின் கலை சின்னங்கள் அழியாமல் நம் கைகளுக்கு கடத்தபட்டிருகின்றன.

A Complete Guide to Hoysaḷa Temples By Gerard Foekema என்கிற நூலில் இருந்து

மொழியாக்கம் ஏ.வி. மணிகண்டன்

முந்தைய கட்டுரைபத்மபாரதியும் அச்சிதழ்களும்
அடுத்த கட்டுரைஹொய்ச்சாள கலைவெளியில் – 1