அச்சிதழ்கள்

அச்சு இதழ்கள் முன்னைவிட இப்போது நிறைய வருகின்றன. மின்னூடகம் வந்தபின் அச்சு ஊடகங்கள் குறையும் என்னும் எண்ணம் பரவலாக இருந்தது, ஆனால் அது பொய் என இவை காட்டுகின்றன. ஆனால் இவை தற்காலிகமாக நிகழ்பவையா என்றும் ஐயமாக இருக்கிறது. கல்குதிரை, சிலேட் போன்ற சீராக வெளிவராத சிற்றிதழ்கள் ஒருவரிசை. உயிர்மை , காலச்சுவடு, தீராநதி போன்ற நடுத்தர இதழ்கள் இன்னொரு பக்கம். அமிர்தா, அந்திமழை, ஆழம், நற்றிணை, உயிர் எழுத்து போல மேலும் ஜனரஞ்சகமாக, மேலும் ‘அமெச்சூர்’ எழுத்துக்களுடன் வரும் இதழ்கள் இன்னொரு பக்கம். என் மேஜையில் ஒவ்வொருநாளும் ஒரு இதழ் இருக்கிறது.

july-2015-big

இந்த அச்சுப்பெருக்கமே இவற்றை அதிகம்பேர் வாசிக்காமலாக்கி விடுகிறது என்று நினைக்கிறேன். இத்தனை பக்கங்களை நிரப்புவது பெரிய வேலை. இந்த அளவுக்கு தமிழில் எழுத ஆளில்லை என்பதே உண்மை. ஆகவே எதையாவது போட்டு நிரப்பவேண்டியிருக்கிறது. இன்று தமிழில் எவர் என்ன எழுதினாலும் அச்சாகிவிடும். முன்பு நம் வாரஇதழ்களின் ஆசிரியர்கள் ஒவ்வொருநாளும் நூறுகதைகளை வாசிப்பார்கள், அவற்றில் ஒன்றை தேர்வுசெய்து பிரசுரிப்பார்கள். அப்படி வாசித்துவாசித்து கதைவாசிக்கும் ரசனையே மழுங்கிவிட்டது என ரா.கி.ரங்கராஜன் ஒருமுறை சொன்னார். இன்று அந்த உதவியாசிரியர் வேலையையும் வாசகனே செய்யவேண்டியிருக்கிறது. தனக்கு அனுப்பப்படும் அனைத்தையும் அப்படியே பக்கவடிவாக்கம் செய்து அச்சுக்கு அனுப்புவதே இதழ்களின் வேலை, தட்டச்சு கூட செய்யவேண்டியதில்லை, பிழை திருத்தவேண்டியதில்லை

உயிரெழுத்து ஏராளமான கதைகளை மாதம்தோறும் வெளியிட்டுத்தள்ளுகிறது. அதைப்பார்க்கையில் எல்லாம் பெரிய முட்டைமூட்டையுடன் எட்டுகாலில் வரும் அன்னைச்சிலந்தி போல எனக்கு ஒரு பிரமை. சரி இந்தமுறை துணிவோம் என எல்லா கதைகளையும் வாசித்தேன். என்ன சொல்ல? தமிழில் நூறாண்டுகளாக நவீன இலக்கியம் எழுதப்படுகிறது. நூறாண்டுகளாக வணிக எழுத்தும் உள்ளது. இலக்கியப் பரிச்சயமும் இல்லாமல் வணிகஎழுத்தின் தொழில்தேர்ச்சியும் இல்லாமல் ஓர் ஆசைக்காக எழுதிப்பார்க்கப்பட்ட படைப்புகள். குமுதம் விகடன் போன்றவை கதைகளை வெளியிடுவதைக் குறைத்துவிட்டதனால்தான் இத்தகைய இதழ்களின் தேவை உருவாகிறதோ என்ற எண்ணமும் ஏற்பட்டது. ஆச்சரியம்தான், தமிழில் இத்தனை எழுதி வாசிக்கப்பட்ட பின்னரும் இவை துணிந்து எழுதப்படுகின்றன.

ஆனால் இவற்றை எவருமே வாசிப்பதில்லை என்றே எனக்குப்பட்டது. என்னைச் சந்திக்கவரும் இளைஞர்கள் அனைவரிடமும் இவற்றைப்பற்றிக் கேட்டேன். சிற்றிதழ்வாசகர்கள், நடுத்தர இதழ் வாசகர்கள். அவர்கள் இவற்றை பார்க்கிறார்கள். புரட்டுகிறார்கள். இவை அமெச்சூர் கதைகள் என அவர்களுக்கே தெரியும். எவரேனும் தனியாக சிபாரிசு செய்யவில்லை என்றால் இவர்கள் வாசிக்கத் துணிவதே இல்லை. நல்லதுதான்

3
இந்தச் சிக்கலைத்தான் அந்திமழை போன்ற பத்திரிகைகள் எதிர்கொள்கின்றன. அவை வாசிக்க வைக்க முயல்கின்றன. ஆகவே படங்களை பெரிதாகப்போட்டு நாலைந்துவரிக் குறிப்புகளுடன் நிறுத்திக்கொள்கின்றன. அந்திமழையின் அமைப்பு இந்தியா டுடே போல. ஆனால் இந்தியா டுடேயில் ஒருவகை ஊடகத்திறன் இருந்தது. ஆசிரியர்குழு என ஒன்றிருந்தது. இதில் அப்படி ஏதும் இருப்பது போலத் தெரியவில்லை. இவ்விதழ் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்னும் தலைப்பில் இளைஞர் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. ஒரே நோக்கம் நாலைந்து இளைஞர்களையாவது வாசிக்க வைப்பது. இந்தியாடுடே செய்ததுதான், ஆனால் அவர்களுக்கு ஓர் ஆசிரியர்கொள்கை இருந்தது. இவர்களுக்கு அப்படி ஏதுமில்லை. ஆசிரியர்குழுவிலோ அல்லது அலுவலகத்திலோ எவருக்கேனும் தெரிந்தவராக இருந்தால்போதும் போலிருக்கிறது.

இணையத்திலிருந்து எடுத்த செய்திகள், பி.ஆர்.ஓக்கள் அளிக்கும் சினிமாச்செய்திகளுக்கு அப்பால் ஆசிரியர் குழு அவர்களே தேர்வு செய்த நம்பிக்கை நட்சத்திரங்களைப்பார்த்தால் என்னத்தைச்சொல்ல.யசோதா தேவி என்று ஒரு பெண். ‘பிரபல ட்வீட்டர்’ ஆம். எதையும் வாசிப்பதில்லை, இணையத்திலேயேகூட என அறிவிக்கிறார். ’நான் பொதுவா எதையும் எழுத மாட்டேன். மத்தவங்களோட டிவீட் எனக்கு புடிச்சிருந்தா அதை ஆர்டி பண்ணுவேன்’ என்கிறார். ‘ஃபாலோ பண்னாதீங்க. ஹிஹி நொந்துடுவீங்க. வொர்த்தா ஒரு டிவீட்கூட இருக்காது. ஆர்டி மட்டுமே’ என்று அறிவித்திருக்கிறாராம். ஆனால் 12000 பேர் இவரை தொடர்கிறார்கள் [தொடரமாட்டார்களா பின்னே?] இதற்காக இவர் தமிழகத்தின் நம்பிக்கைநட்சத்திரம்! இதே தரத்தில் நந்தினி என இன்னொரு நம்பிக்கை ஒளிக்கீற்று, பக்கத்திலேயே.

பக்கத்திலேயே ஒருவர், கடங்கநேரியான் என்னும் ஹரிஹரசுதன். முகநூல்பிரபலமாம். கவிதைகளெல்லாம் எழுதியிருக்கிறாராம். சரிதான் அதையும்தான் பார்ப்போம் என இணையம் சென்று கவிதைகளைப்பார்த்தால், முகநூல்கவிதைகளின் கடைசித்தரம். அண்ணன் அறிவுமதியை நகல் செய்து மேலும் நூறுமடங்கு தண்ணீர் கலந்து உருவாக்கிய கவிதைகள். இவர் தமிழகத்தின் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம். அந்திமழை ஆரம்பத்தில் நான் ஓரிரு கட்டுரைகள் எழுதிய இதழ். இதழ்களில் வணிகதந்திரங்கள் கொண்டவை உண்டு. மொண்ணையானவைகூட உண்டு. தமிழில் பிரபல இதழாக இருக்க வேறுவழியில்லை. ஆனால் அந்திமழை போல கேனத்தனமான ஒரு இதழ் இதுவரை வந்ததில்லை என நினைக்கிறேன்

சுற்றிச்சுற்றிப்பார்த்துவிட்டு மேற்கொண்டு வாசிக்கவேண்டாம் என முடிவெடுத்தேன். எதற்கு ரத்தக்கொதிப்பு. கடைசியில் நாமும் அரவிந்தன் கண்ணையன் போல ஆகி அமெரிக்கா போய் செட்டில் ஆகவேண்டியிருக்கும்

முந்தைய கட்டுரைகார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?
அடுத்த கட்டுரைடிவிட்டர்- ஒரு கடிதம்