ஷோபா சக்தியின் Box கதைப் புத்தகம் – கடிதங்கள்

images

ஜெ,

நான் பொதுவாக மனதை உலுக்கும் நூல்களையோ படங்களையோ நெருங்குவதில்லை. ஏழாம் உலகத்தை கையில் எடுத்து 20 பக்கங்கள் தாண்ட முடியாமல் வைத்துவிட்டு 6 மாதங்கள் கழித்தே மீண்டும் நூலை எடுத்தேன்.

BOX கதை புத்தகம் நாவலின் தொடக்கத்தில் அமையாள் கிழவி குளத்தில் மிதக்கும் காட்சியை வாசிக்கும் போதே என்னால் இதை படிக்க முடியாது என்று தோன்றியது. அதே நேரம் அந்த மொழி என்னை உள்ளே இழுத்தபடியேவும் இருந்தது. இந்த நாவலின் சொல்முறையை, அதன் அழகியலை பற்றி பேசுவதே கூட குற்றவுணர்வை தரக்கூடியதாக படுகிறது. நாவலின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் தப்பிவிடவே எண்ணினேன். என்னை முழு நாவலை முடிக்க வைத்தது ஷோபா சக்தியின் மொழியே.

இன்னமும் இந்த கேள்வி நிற்கிறது. இந்த நாவல் இத்தனை வடிவநேர்த்தியுடனும் அழகியலுடனும் எழுதப்பட்டிருக்க வேண்டுமா? ஷோபா சொல்வதை போல நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமும் சம்பவங்களும் இடமும் உண்மை என்று கொண்டால் இந்நாவலில் ஷோபா சக்தியின் பங்கு என்ன? இந்த நேர்த்தியும் எளிமையான வடிவமும் அந்த எளிமையை வந்தடைய அவர் மேற்கொண்ட பயணமுமே அவரது பங்கு என்று தோன்றுகிறது. குளத்தில் மிதந்த அமையாள் கிழவின் உடலை நிலவு மேகத்திலிருந்து வெளிவந்து பார்க்கிறது. பிறகு அதே நிலவு மெல்ல வன்னி நிலத்தில் அதே நேரம் நிகழ்ந்துகொண்டிருக்கும் அனைத்தையும் தொட்டுச்செல்கிறது. இதை இப்படி சொல்லாமல் நேரடி விவரணைகளாக சொல்லி இருந்தால் நான் 20 பக்கங்களை தாண்டி இருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன். இதை எழுத எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு கணமும் இந்த நாவலில் இருந்து தப்பிக்கவே நினைத்தேன். இதன் உள்ளடக்கம் என்னை மிகத்தீவிரமாக வெளியே தள்ளிக்கொண்டே இருந்தது. அப்படி வெளியேற விடாமல் தடுத்தது இதன் மொழியும் வடிவ நேர்த்தியும் தான். கார்த்திகை இறக்கும் தருணத்தை ஊரே சேர்ந்து நடித்துக்காட்டும் இடமும் அதில் கார்த்திகையாக அவனது தாயான அமையாள் கிழவி நடிப்பதும் அந்த தருணத்தின் சோகத்தை தாண்டி சிலிர்க்க வைத்தது.

நாவலின் இறுதி வரை அழாமல் படித்த என்னால், நாவலின் முடிவில் இடம்பெரும் இன்றைய இலங்கையின் பாலியல் விடுதிகளை பற்றிய விவரணைகளை கண்ணீரின்றி தாண்ட முடியவில்லை. சமீபத்தில் நான் வாசித்த அபாரமான நாவல் இது

சித்தார்த் வெங்கடேசன்

shoba

ஜெ,

சமீபத்தில் ஷோபாசக்தியின் பாக்ஸ் கதைப்புத்தகம் என்னும் நாவலை வாசித்தேன். ஷோபாசக்தியின் கொரில்லா நான் மிக விரும்பி வாசித்த நாவல். தமிழின் இலக்கியச் சாதனைகளில் ஒன்று அது. அவரது ம்ம் ஒரு முயற்சி என்றே தோன்றியது. அற்புதமான பல பகுதிகள் அதில் இருந்தன, ஆனால் முழுமை கைகூடவில்லை. ஆனால் இந்த நாவலில் முந்தைய இருநாவல்களிலும் இல்லாத ஒரு அம்சம் குடியேரியிருக்கிறது. இதை நல்ல நாவல் என்று சொல்லலாமா என்றால் உறுதியாகச் சொல்லலாம் என்றுதான் தோன்றுகிறது. போரின் மானுட அழிவுகளை இந்நாவல் சொல்கிறது. போர் என்பது படிப்படியா மானுடத்தை அழிக்கிறது. சரியான தரப்பு தப்பான தரப்பு என்று ஏடுமில்லாமல் ஆகிறது. ரெண்டு தரப்புமே எல்லாவற்றையும் செய்ய ஆரம்பிக்கின்றன. எல்லாவற்றையும் நியாயபப்டுத்தவும் செய்கின்றன. கொடுமைகள் வழியாகச் செல்லும்போது மனிதமனம் எந்த அளவுக்கு இருட்டானது என்று தெரிகிறது. வன்முறை வழியாக அன்பையும் கருணையையும் சொல்லும் நாவல் இது என்பதில் சந்தேகமே இல்லை

ஆனால் என்னுடைய கேள்வி அல்லது சந்தேகம் இன்னொன்று. இதில் உள்ள போர்க்கொடுமைச் சித்தரிப்புகளில் ஒரு சின்ன நம்பகத்தன்மை இல்லாமை உள்ளது. இது எனக்கு மட்டுமே தோன்றுவதாக இருக்கலாம். நேரடியாக வாழ்க்கையை அறிந்து எழுதுவதாகத் தெரியவில்லை. saw முதலிய சினிமாக்கள் அளிக்கும் morbid உணர்வை இந்நாவல் அளிக்கிறது. அமெரிக்க ஐரோப்பிய சினிமாக்களால் தாக்கம் பெற்று எழுதப்பட்டதா என்று இந்நாவலை நினைக்கத்தோன்றுகிறது. கொடுமைகள் சித்தரிக்கப்படுவதில் உள்ள சில இயல்புகளை வைத்து இந்த எண்ணத்தை அடைந்தேன். இப்படி நடந்ததா நடக்குமா என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை. அனுபவங்களில் இருந்து எழுத்து உருவாகும்போது வந்துசேரும் நுண்மை நிகழவில்லை. கற்பனைமூலமே எழுதப்படும்போது வந்துகூடும் ஒரு சின்ன மிகை அல்லது செயற்கைத்தனம் உள்ளது. ஷோபாவின் வேறு நாவல்களில் இதெல்லாம் இல்லை. இந்நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் வாசிப்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாது. நமக்கு நம் வாழ்க்கையும் மனநிலையும் தெரியும் என்பதனால் இது தோன்றுகிறது. இது ஒரு குறையாகவே இந்நாவலை வாசித்தபோது தோன்றியது.

அப்பட்டமான பட்டவர்த்தனமான நாவல். அதிர்ச்சியும் விழிப்பும் அளிப்பது. ஆனால் இந்த கலைக்குறைபாடு இருந்துகொன்டே இருக்கிறது

சாரங்கன்

முந்தைய கட்டுரைவலைப்பூ எழுத்திலிருந்து இலக்கியம் நோக்கி…
அடுத்த கட்டுரைகார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?