வலைப்பூ எழுத்திலிருந்து இலக்கியம் நோக்கி…

3
எஸ்.கெ.பி. கருணா

 

பதினைந்தாண்டுகளுக்கு முன் வலைப்பூக்கள் அறிமுகமானபோது பண்பாட்டுச்சிந்தனையாளர்கள் நடுவே ஓர் எதிர்பார்ப்பு எழுந்தது. பிரசுரம் என்பது ஒரு பிரச்சினை அல்ல என்று ஆகிவிட்டது. எவரும் எழுதலாம், எழுதியவற்றை உடனடியாக வெளியிடலாம். ஆகவே ஒரு புதியவகை எழுத்து உருவாகி வரக்கூடும்.

அச்சு ஊடகத்தின் மிகப்பெரிய சிக்கல் அது குறைந்தபட்ச பிரதிகள் வெளியாகியாகவேண்டும் என்பது. ஆகவே குறைந்தபட்ச வாசகர்களும் அதற்கு அமைந்தாகவேண்டும். அந்தக் கட்டயாமேதும் வலைப்பூக்களுக்கு இல்லை. பத்துபேர் தங்களுக்குள் எழுதிவாசித்துக்கொண்டால்போதும்.

இந்தச் சுதந்திரம் காரணமாக ‘எழுத்தாளர்’ அல்லாதவர்களும் எழுதத் தொடங்குவார்கள். எழுத்துக்கென தனித்திறனை நெடுங்கால உழைப்பாலும் கவனத்தாலும் வளர்த்துக்கொண்டவனே எழுத்தாளன். அத்துடன் தன் அடையாளத்தை எழுத்தாளன் என வகுத்துக்கொண்டவன். இவ்விரு இயல்புகளும் அவன் பார்வையை வடிவமைக்கின்றன.

இவ்வியல்புகள் உருவாக்கும் அடையாளம் அற்றவர்கள் வாழ்க்கையின் வெவ்வேறு களங்களில் இருந்து நேரடியாக எழுதவரலாம். தச்சர்கள் ,சிற்பிகள், விவசாயிகள், அலுவலக ஊழியர்கள், கணிப்பொறியாளர்கள் என பலவகையினர் தங்கள் அனுபவங்களை நேரடியாகப் பதிவுசெய்யக்கூடும். அது இலக்கிய எழுத்தில் பெரிய மாறுதல்களை உருவாக்கும் என எழுதிய பண்பாட்டாய்வாளர்கள் பலர் உண்டு.

இவ்வகை எழுத்தை ஒருவகை நவீன நாட்டாரியல் எனச் சொல்லலாம். இலக்கியத்திற்கும் கலைக்கும் உரிய தனிப்பயிற்சி அற்றவர்கள், இலக்கியவாதி அல்லது கலைஞன் என்னும் அடையாளம் அற்றவர்கள் நேரடியாக தங்கள் கலையிலக்கிய எழுச்சியை வெளிப்படுத்துவதே நாட்டாரியல். எப்போதுமே அது இலக்கியத்திற்குப் பின்னணிவிரிவாக, விளைநிலமாக இருந்துவந்துள்ளது. இசையும் கலைகளும் இலக்கியமும் தங்கள் வாழ்க்கைக்கூறுகளை, வடிவங்களை அங்கிருந்து தொடர்ச்சியாகப் பெற்று வருகின்றன. அப்படி ஒரு புதிய நாட்டாரியல் உருவாகி வரக்கூடும்.

இலக்கியவாதியால் பதிவுசெய்யப்படும் வாழ்க்கை வாழ்க்கையின் நேரடிச்சித்திரம் அல்ல. அது இலக்கியவாதியின் பார்வைக்கேற்ப மறுஆக்கம் செய்யப்பட்டது. இலக்கியவாதி இலக்கியத்தின் துணைத்தளங்களான வரலாறு தத்துவம் ஆகியவற்றை அறிந்தவன். ஆகவே அவனுடைய பார்வையை அச்சூழலின் பொதுவான சிந்தனைப்போக்கு தீர்மானிக்கிறது. அப்பெருக்கில் தன் பங்களிப்பை ஆற்றவே அவன் வாழ்க்கையை ஆராய்கிறான். ஆகவே தன்னிச்சையான வாழ்க்கைப்பதிவு நிகழ்வதில்லை.

1

நேரடியாகவே வாழ்க்கையை எழுதுபவர்கள் ஏராளமாக வரும்போது இலக்கியத்திற்கு நிகரான ஒரு போக்காக அவ்வெழுத்து நிலைகொள்ளக்கூடும். அது இலக்கியத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு விசையென ஆகக்கூடும், அதன் நுண்மைகளும் உணர்வுகளும் இலக்கியத்தை வளப்படுத்தக்கூடும் என்ற எண்ணம் எழுந்தது.

நவீனத்தமிழ் இலக்கியத்தை எடுத்துக்கொள்வோம். அதில் எப்போதும் பேசுபொருளாக இருந்தது அகத்துறை மட்டுமே. காமம், குடும்பம் இரண்டுமே பெரிதும் எழுதப்பட்டுள்ளன. புறத்துறை மிக அரிதாகவே எழுதப்பட்டுள்ளது. தொழில்களங்கள், மக்களியக்கங்கள் மிகக்குறைவாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் இடதுசாரி அரசியலியக்கங்களால் அவை நிகழ்ந்தன. ஆகவே அவை அரசியல்பதிவுகளாகவே எஞ்சின. வலைப்பூக்கள் வழியாக எழுதப்படாத புறவுலகம் விரிவாக எழுதப்படக்கூடும் என பண்பாட்டாய்வாளர் எண்ணினர். கெ.சச்சிதானந்தன் அதை விரிவாக எழுதியிருக்கிறார்

ஆனால் ஒன்றும் நிகழவில்லை. வலைப்பூக்களில் எழுதியவர்கள் பெரும்பாலும் அச்சு ஊடகங்களில் எழுதமுயன்று பின்னுக்குத்தள்ளப்பட்டவர்களே. சிறுபிரசுரங்களாக நாம் ஏற்கனவே வாசித்துக்கொண்டிருந்த செயற்கையான கவிதைகள், அரசியல் விவாதங்கள், எளிய பண்பாட்டுப்பதிவுகளே வலைப்பூக்களாக வெளிவந்தன. வலைப்பூவுக்காக எழுத வந்து தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் மிகச்சிலரே. ஒரே சொல்லில் தமிழ் வலைப்பூ எழுத்தை ‘முதிரா எழுத்துக்கான பயிற்சிக்களம்’ என்றே சொல்லவேண்டும்

அத்துடன், இவ்வாறு தாங்களே எழுதி வாசிக்கும் பழக்கம் உருவானதனால் எழுத்தை மேம்படுத்துவதற்கான அறைகூவல் இல்லாமலாகியது. பத்தாண்டுகளுக்கும் மேலாக வலைப்பூக்களில் எழுதும் சிலருண்டு, அவர்களின் மொழியோ அறிவோ இம்மிகூட மேம்படவில்லை.அவர்கள் வேறு எதையும் வாசிக்காமலானார்கள் என்பதற்கான சான்று அது

ஆனால் வேறு ஒன்று நிகழ்ந்தது. இலக்கியவாசிப்பு கொண்ட, ஆனால் தங்களை எழுத்தாளர்கள் என உணரத்தயங்கிய ஒருசிலர் எழுதவந்தனர். அவர்கள் இணையம் அளிக்கும் வாய்ப்புகள் இல்லையேல் எழுதவந்திருக்கமாட்டார்கள் என உறுதியாகச் சொல்லமுடியும். இலக்கியத்தின் அறைகூவலை அவர்கள் முழுமையாக எதிர்கொள்ளவில்லை, எனவே தங்களை எழுத்தாளர்கள் என முன்வைக்கவில்லை. ஆகவே இலக்கிய இயக்கத்தை முன்னெடுத்துச்சென்றனர் என்று சொல்லமுடியாது. அதேசமயம் பிறர் எழுதாத பல இடங்களை எழுதியது வழியாக இலக்கியத்தின் பரப்பை விரித்தெடுத்தனர்.

அத்தகைய எழுத்தாளர்களில் என் நண்பர் சுகா முக்கியமானவர். வலைப்பூவில் எழுதி அங்கிருந்து பிரபல இதழ்களுக்குச் சென்று எழுத்தாளராக அடையாளம் பெற்றவர். அவருக்கான எழுத்துமுறை ஒன்றை மெல்ல உருவாக்கிக்கொண்டார். வலைப்பூ எழுத்துக்கள் இலக்கியமாக ஆவதன் பரிணாமம் என சுகாவையே முதன்மையாகச் சுட்டிக்காட்டுவேன். இப்போது இன்னொருவராக எஸ்.கே.பி. கருணாவைச் சொல்வேன்.

கருணா என் நண்பர். அவரது கவர்னரின் ஹெலிகாப்டர் எனக்கு ஆறுமாதம் முன்னரே கைக்கு வந்துவிட்டது. நான் மதிக்கும் அ.முத்துலிங்கம் அதைப்பற்றி எழுதியிருந்தார். அப்போதே வாசித்தும்விட்டேன். உடனே இக்குறிப்பை எழுதியிருக்கலாம். ஆனால் இச்சலுகைகளை இந்நூலுக்கு அளிக்கவேண்டியதில்லை என்று முடிவெடுத்தேன். ஆறுமாதம் கடந்தும் இந்நூல் என்னில் இதன் தாக்கத்துடன் நீடிக்கிறதா என்று பார்க்கலாம் என எண்ணினேன்

இந்நூலின் முதன்மையான அனுபவக் கட்டுரை அல்லது அனுபவக்கதை என்பது ராக்கெட் வயலில் இறங்கும் சித்திரம்தான். அதற்கும் தலைப்புக்கட்டுரையான கவர்னரின் ஹெலிகாப்டருக்குமான ஒப்பீடு வலைப்பூ எழுத்திலிருந்து இலக்கியத்திற்கான தொலைவை தெளிவாக வரையறை செய்ய உதவும்.

கவர்னரின் ஹெலிகாப்டர் தன் கல்லூரிக்கு கவர்னரை அழைத்துவர கருணா எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைச் சித்தரிக்கிறது. மெல்லிய சுயகிண்டலுடன் தெளிவான மொழியில் அந்த முயற்சியின் சிடுக்குக்ளைச் சொல்லிச்செல்கிறார். ஹெலிபேட் பயனற்றுபோக கவர்னர் சொல்தவறாது வந்து கலந்துகொள்ளும் நம்பகமான அனுபவ விவரணையாக அது முடிகிறது

2

ஆனால் வயலில் ராக்கெட் இறங்கும் அனுபவக்கதை ஒரு சித்தரிப்பு என்பதற்கும் மேலாகச் செல்கிறது. சோதனைக்காகக் கொண்டுசெல்லப்படும் ராக்கெட் ஒரு வயலில் இறங்கிவிடுகிறது. சரசரவென அதிகார வர்க்கம் வயலைச் சூழ்கிறது. அந்த விவசாயியின் வயல் அழிந்துவிடுகிறது. ஆனால் அதற்கு அவன் அரசுக்கு மேலும் கப்பம் கட்டநேர்கிறது. அந்த ராக்கெட் அரசாக, அதிகாரமாக , அரசை நிலைநிறுத்தும் தொழில்நுட்பமாக இன்னும் என்னென்னவோ ஆக மாறிக்கொண்டே செல்கிறது .

மண்ணில் பரந்த வயலுக்கும் வானைக் குறிநோக்கும் ராக்கெட்டுக்குமான முரண்பாடு. ஒவ்வொரு வரியையும் எழுதப்பட்டவற்றிலிருந்து விரித்து கொண்டே செல்லமுடிகிறது. நெடுங்காலம் முன்பு ஐஎஸ்ஆர்ஓ ஒரு ராக்கெட் பகுதியை சோதனைக்காக மாட்டுவண்டியில் கொண்டுசெல்லும் புகைப்படம் ஒன்று இலஸ்டிரேட்டட் வீக்லியில் வெளியாகியது. இந்தியா என்ற சொல்லையே அடிக்குறிப்பாக அளிக்கும்தகுதி கொண்ட புகைப்படம் அது.அச்சித்திரத்தை நினைவூட்டியது இக்கதை.

கவர்னரின் ஹெலிகாப்டரில் அந்த ஹெலிபாட் வெறும் ஹெலிபாட்தான். அதற்குமேல் அது விரிவதில்லை. ஆனால் ராக்கெட் வெறும் பொருள் அல்ல. எந்த முயற்சியும் செய்யப்படாமல் அது குறியீடாக ஆகிவிட்டிருக்கிறது. ஆகவே அது இலக்கியப்படைப்பு. தமிழின் நல்ல சிறுகதைகளில் ஒன்று.

கருணாவின் இந்நூலின் கதைகளை இவ்விரு எல்லைகளுக்கு நடுவே நிற்பவை என்று சொல்ல முடியும். கலர்மானிட்டர் என்னும் கட்டுரையை ஒரு சரியான வலைப்பூ எழுத்து என்று சொல்லமுடியும். கணிப்பொறி வந்தபோது உருவான பரவசம், சிக்கல்கள் போன்றவை மிக ஆர்வமூட்டும் வகையில் பதிவாகியிருக்கின்றன. நிழல்மரியாதையும் அத்தகைய ஒரு பதிவு. வலைப்பூ எழுத்து என்னும் வகைமை இந்த பாணியில்தான் பெருகி எழுந்திருக்கவேண்டும்

ஆனால் கணிசமான கதைகள் இலக்கியப்புனைவை நோக்கியே நகர்ந்துள்ளன. ஆகவே வலைப்பூ எழுத்தாளர் என்னும் இடத்திலிருந்து சிறுகதையாசிரியர் என்னும் இடம் நோக்கியே கருணா சென்றிருக்கிறார் என்று சொல்லமுடியும். பிரியாணி போன்றவை அனுபவக்குறிப்புகளாக தங்களை முன்வைக்கையிலேயே கதையாகவும் நின்றுகொண்டிருக்கின்றன.

அபூர்வமாக ஒருகாலகட்டத்தின் பதிவாக எழுதப்பட்டு அதைக்கடந்து கதையென்னும் வடிவிலேயே வலுவாக நீடிக்கும் படைப்புகள் நிகழ்கின்றன. அவை புனைவு அல்ல. ஆனால் புனைவாக வாசிக்கையிலேயே முழுமையடைகின்றன. அத்தகைய ஒரு கதை அட்சயபாத்திரம். ஈழப்போராளிகளை வரவேற்று தன் தோட்டத்தில் தங்கவைத்த தன் தந்தையின் செயலை கருணா இக்கதையில் நினைவுகூர்கிறார்.

வெறும் சித்தரிப்பு. ஆனால் அவர்களின் உளவியல் மற்றும் நடத்தை பற்றிய நுட்பமான சித்தரிப்புகள், அவர்களுக்கும் உள்ளூர்க்காரர்களுக்குமான விருப்புவெறுப்பு கலந்த உறவு, திடீரென ஒருநாள் அவர்கள் அப்படியே மெல்லிய சுவடுகளை மட்டும் விட்டுவிட்டுக் காணாமலாவது ஆகியவை ஒட்டுமொத்த ஈழப்போரையே சுருக்கமாகச் சொன்னதுபோல ஆகி அற்புதமான உளஎழுச்சியை அளிக்கின்றன.

சுஜாதாவின் கையெழுத்தை மூச்சிரைக்க ஓடிச்சென்று வாங்கும் சித்தரிப்பை வலைப்பூ எழுத்தின் சிறந்த மாதிரி என்பேன். கருணாவில் தீவிரமான பாதிப்பைச் செலுத்திய எழுத்தாளர்கள் என சுஜாதாவையும் வண்ணதாசனையும் சொல்லலாம் என்று தோன்றுகிறது. சுஜாதாவின் பாதிப்புள்ளவர்கள் செய்யும் செயற்கையான மொழியாட்டங்களைச் செய்யாமல் அந்தரங்கமான மொழிக்குச்செல்ல வண்ணதாசன் கருணாவுக்கு உதவியிருக்கிறார். வண்ணதாசன் ரசிகர்களின் மிகைநெகிழ்வைநோக்கிச் செல்லாமல் கச்சிதமாக உணர்வுகளை நிறுத்திக்கொள்ள சுஜாதா உதவியிருக்கிறார். நல்ல விளைவு

===============================================================================================

கவர்னரின் ஹெலிகாப்டர் : எஸ்.கே.பி. கருணா. வெளியீடு : வம்சி புக்ஸ். 19, டி. எம்.சாரோன், திருவண்ணாமலை – 606601. ஓவியங்கள் : ஓவியர் கோபு. விலை : ரூபாய். 200/-

=======================================================================================================
எஸ்.கே.பி.கருணா இணையதளம்

கீரனூர் ஜாகீர்ராஜாவின் விமர்சனம்

முந்தைய கட்டுரைபதாகை – சு வேணுகோபால் சிறப்பிதழ்
அடுத்த கட்டுரைஷோபா சக்தியின் Box கதைப் புத்தகம் – கடிதங்கள்