வணக்கம் ஜெயமோகன் ,
எப்படி இருக்கீங்க? அஜிதன் இப்ப என்ன பண்ணுகிறார் ? குடிப்பழக்கம் எந்த அளவிற்கு அடிமட்ட மக்களைப் பாதிக்கிறது என்று நீங்கள் தி இந்துவில் எழுதிய கட்டுரை மதுவின் கோரத்தை நெருக்கமாக உணர வைத்தது.
சமகாலத்தில் என்னை மிகவும் பாதித்த கவிஞரான தேவதச்சன் அவர்களுக்கு உங்கள் அமைப்பிலிருந்து விஷ்ணுபுரம் விருது அறிவித்திருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். கவிதை நூல்களில் தேவதச்சனின் கவிதை நூல்கள் மட்டுமே வாங்கியிருக்கிறேன் ; படித்திருக்கிறேன். நான் வாசித்தவரையில் வேறு எவரும் ஈர்க்கவில்லை. நான் கொண்டாடும் ஒரே கவிஞர் தேவதச்சன் மட்டும் தான். நன்றி சார்.
பிரியமுடன் ,
ஜெ.செல்வராஜ் ,
www.jselvaraj.blogspot.in .
அன்புள்ள ஜெ
தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அறிந்து மகிழ்ந்தேன். தேவதச்சன் தமிழ் நவீனக்கவிதையின் மகத்தான முன்னோடிகலில் ஒருவர். முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் தமிழிக்கவிதையை சாத்தியமாக்கியவர். அவரது கவிதைகளை நானும் ஆரம்பத்தில் என்னடா இது என்றுதான் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வதுபோல கவிதைக்கு என்று ஒரு பேசுபொருளும் பேருமுறையும் இருக்கிறது என்ற நம்பிக்கைதான் என்னை அந்தக்கவிதைகளிலிருந்து அகற்றியது என்று பின்னர் கண்டுகொண்டேன்.
தமிழ்க்கவிதை இதுவரை சொல்லாத ஒரு நவீன ஆன்மிகத்தை முன்வைக்கும் கவிதைகள் அவை என நான் கண்டறிந்தது அவர் எழுதிய
*
எனக்கு ஞாபகமுள்ள பௌர்ணமிகள் நான்கு
ஒன்று
எதிர்விட்டு அம்மாளின்
துஷ்டிக்கு
சுடுகாடு சென்று
திரும்புகையில் பார்த்தது.
நள்ளிரவில்
பஸ் கிடைக்காமல்
லாரி டாப்பில்
பிரயாணம் செய்கையில்
பிரகாசித்தது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாசலில்
அரசு அதிகாரி ஒருவரைக் காண
காத்திருக்கையில் கண்டது.
இண்டு இடுக்கு
மாடிக் குடித்தனத்தில்
மின்வெட்டு இருள்வேளையில்
ஜன்னல் வழியே
வந்து விழுந்தது.
*
என்ற கவிதைதான். நிலாவை நாம் பார்ப்பதேயில்லை என்ற அன்றாட அனுபவம் ஒருபக்கம் என்றால் நம்முடைய மரபில் நிலா என்பது நெற்றியில் எழும் கண் என்ற யோகமரபின் புரிதலையும் இணைத்துக்கொண்டபோது அந்தக்கவிதை அற்புதமாக மலர்ந்தது. அதாவது திருமூலரேதான். அருமையாகச் சொல்லியிருந்தீர்கள்.
ஜெகந்நாதன்
================================================================================================
தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது
தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்
தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது
தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது
======================================================================================
தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு
தேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்
தேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்
தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்