மன்மதன் – ஒரு கடிதம்

மன்மதன் கதை

மரியாதைக்குரிய ஜெ அவர்களுக்கு,

கூசிய கண்களோடு உள்நுழைவு. கறுபளிங்கு சிலை உயிர்பெற்று வருவது பெரும் பிரமிப்பைத் தருகிறது..,அப்படி ஒரு பிரமிப்பை சற்று நினைத்தாலே நெஞ்சம் நிறைந்து பாரமாகிவிடுகிறது. பெண் வடிவின் சிற்ப இலக்கணங்கள் சதைகளோடும் நரம்புகளோடும் உருண்டு திரண்டு உடலசைத்து உரையாடிக்கொண்டிருக்கும் அதிசயம் தரும் ஸ்தம்பிப்பு, இனிமை. வர்ணனையில் கொடுக்கப்படும் குறிப்புகள் நேரில் பல நேரம் பார்த்து, ஒவ்வொன்றாக குறிப்பெடுத்தால் மட்டுமே கிட்டக்கூடும், இங்கோ படிக்கும் கணமே காட்சிகளாய் கண்முன்னே..!

“ஆனால் அந்த முதற்பரவசப் பரபரப்பே சிற்பம் அளிக்கும் பேரனுபவம். அதன்பின் உள்ளது அந்த ஒட்டுமொத்த அனுபவத்தை சிறிய துண்டுகளாக ஆக்கி விழுங்கும் முயற்சி மட்டுமே” – பலமுறை உணர்ந்தும், விளக்கமுடியாத இத்தகைய மன எழுச்சிகளை இவ்வார்த்தைகள் கண்டெடுத்து பெயர்சூட்டுகின்றன.. அமைதியையும் ஒருவித பெருமிதத்தையும் ஏனோ அளிக்கின்றன…நன்றிகள்.

பொருட்படுத்தப்படாத மஞ்சள் கயிறு, ஆண் ஒருவன் உடன் வருகிறான் என்பது மட்டும் எரிச்சலூட்டுகிறது. வீரத்தை ரசமாய் மாற்றியதை அறிந்தவன், தொட்டு ரசித்து சாமுத்திரிகா லட்சினத்தையும் சந்தியா பத்ம நிலையையும் வேறுபடுத்த தெரிந்தவன், ரதியின் நாணம் கண்டவன், மன்மதனின் நோக்குசூட்சமம் கண்டுணர்ந்தவன், இரு கண்களால் இவன் காணாதவற்றை இரு கைகளால் கண்டறிந்து உள்வாங்கி உணர்ந்து சொற்களால் அடையாளம் கூறும் அளவுக்கு யோகம் கொண்டவன், அவளுக்கு மன்மதன். இவ்வாறானது என் வாசிப்பின் தொகுப்பு.

– நன்றி

சாலினி

 

முந்தைய கட்டுரைவெண்முரசு கலந்துரையாடல்
அடுத்த கட்டுரைஹொய்ச்சாள கலை நோக்கி…