மதங்கள்- இன்னொரு கடிதம்

அன்புள்ள ஜெ,

நண்பர் அரவிந்தன் நீலகண்டனின் கடிதம் கண்டேன். ஒரு சில தெளிவுகளை முன்வைக்க விரும்புகிறேன். கிறித்துவம் முதன்முதலில் யூத மதத்திலிருந்து பிரிந்த சிறு யூத குழுவாகவே அமைந்தது. ஆனால் பிற இனத்தவரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனும் முடிவு பீட்டர் பவுலின் காலத்திலேயே முடிவு செய்யப்பட்டது மட்டுமல்ல மிக முக்கியமான ‘ஜென்டைல்’ திருச்சபைகள் உடனடியாகவே உருவாகி வளரவும் செய்தன. சில ஆதாரங்களின்படி இந்த பிற இன திருச்சபைகள் உருவாகும் முன்னரே ‘சமாரிய கிறித்துவம்’ இருந்தது. பிலிப் என்பவர் சமாரியர்களின் மத்தியில் ஏற்கனவே இருந்த சில கிறித்துவர்களுடன் இணைந்து சமாரிய கிறித்துவத்தை வளர்த்தார் என்பது அப்போஸ்தலர் பணியில் குறிப்பிடப்படுகிறது. இயேசு சமாரியர்களை வெறுத்தார் அல்லது வெறுக்க சொன்னார் என்பதற்கு எந்தவித நேரடி ஆதாரங்களும் கிடையாது. இயேசு ‘சமாரியனே நல்லவனாய் இருக்கும்போது நீங்கள் ஏன் இருக்க முடியாது’ என்று சொல்வதாக எடுத்துக்கொண்டாலும் அது ஒரு இனத்துக்கு எதிரான நேரடியான அறைகூவலெல்லாம் அல்ல. அது ஒரு கதை என்கிறவகையில் எப்படி வேண்டுமானாலும் புரட்டி பொருள்கொள்ள முடியும். அதற்கு ‘நல்ல சமாரியன்’ என கிறித்துவர்கள் பெயர் வைத்துக்கொள்வதிலும் நண்பருக்கு இருக்கும் வயித்தெரிச்சலை புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏனென்றால் இனத்தூய்மை பேசிய இயேசுவின் பிள்ளைகள் பைபிளை திரித்து அதை ஒரு அற்புதமான மானுட அனுபவத்தின் கதையாக மாற்றிவிட்டதில் ஆச்சர்யம்தான்.

கிறித்துவின் பிறப்பு இனத்தூய்மைவாதத்தில் அமைந்தது என்பது புரட்டு என்றே சொல்லலாம். பொதுவாக கிறித்துவம் என நாம் பரவலாக அறிந்திருக்கும் எந்த அமைப்புமே இனத்தூய்மைவாதத்தின் அடிப்படையில் அமைந்ததே இல்லை. இன்றளவும் அப்படி ஒரு திருச்சபையில் இந்த இனத்தவர்தான் இந்தப் பதவியில் இருக்க முடியும் என்றெல்லாம் ஒட்டு மொத்த திருச்சபையின் பதவிகளுக்கும் எந்த அமைப்பும் இல்லை. தனது ஆரம்ப காலத்திலேயே அது பல்வேறு இனங்களின் அமைப்பாக மாறியது. புனித பால் ஒரு மூன்றாம் பாலினத்தவரை மதம் மாற்றியதாகவும் பைபிளில் படிக்க முடிகிறது. இயேசுவின் பிறப்பு தாவீதின் வழியில் சொல்லப்படுவது மெசியாவின் பிறப்பை ஒட்டிய முன்னறிவுப்புகளை (Prophecies)பூர்த்தி செய்யும் விதமாக அன்றி வேறொன்றும் அதிலிருந்து பெறுவதற்கில்லை. கிறித்துவமும் அதை இனத்தூய்மைக்கான முகாந்திரமாய் எடுத்துக்கொள்ளவுமில்லை என்பது மிக அப்பட்டமான உண்மை..

அடிமை அமைப்பை உருவாக்கியதில் கிறித்துவத்துக்கு மிக வருந்தத்தக்க வகையில் ஒரு பங்கு இருந்தது என்றாலும் அதே அடிமைகள் அடிமைகளாய் இருக்கையிலேயே கிறித்துவர்களாக இருக்கவும் முடிந்தது என்றால் எங்கே வருகிறது கிறீத்துவ இனத்தூய்மைவாதம். இயேசுவே பிற இனத்தவருடனும் பாவிகளுடனும் நேர‌டியாக உறவாடியவர் என பைபிள் குறிப்பிடுகிறது.

பரிசேயர்கள் அன்றைய பிரபுக்களான சதுசேயர்களுடன் உடன்படாமல் விவாதித்திருக்கலாம் ஆனால் அவர்கள் பழைய சட்டத்தின்படி வாழ்ந்தவர்களே, ஆசாரங்களை பின்பற்றிய யூதர்களே. அவர்கள் இயேசுவைப்போல ஒரு உலகளாவிய சகோதரத்துவத்தை போதித்தவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதுவே இயேசு அவர்களை மறுப்பதற்கான முகாந்திரமும். அவர்கள் போதிப்பதை செய்யுங்கள் ஏனனில் அவர்கள் மோசேயின் சட்டத்தை போதிக்கிறார்கள் ஆனால் அவர்கள் நடந்துகொள்வதை பின்பற்றாதீர்கள் என்பதே இயேசுவின் போதனை.

அக்குவினாசும் அகஸ்டினும் அவரவர் காலத்தில் இருந்த அடிமை அமைப்பை உருவாக்கவில்லை. அவர்கள் அதற்கான இறையியல் காரணங்களை தேடினார்கள். அவர்களின் வழக்கப்படி அவர்களது இறையியல் பார்வைகளை முன்வைத்தனர். அக்குவினாஸ் பிளேட்டோவால் மிகவும் இன்ஸ்பையர் ஆனவர். பிளேட்டோவின் இயற்கையிலேயே சிலர் ஆளவும் பிறர் ஆட்டுவிக்கவும் பிறப்பிலேயே முடிவானது போன்ற கருத்தை அக்குவினாஸ் இறையியலாக்கினார். பாவத்தை தவிற வேறெதுவும் இப்படி ஒரு நிலைக்கு விளக்கமாக அமையாது என அவர்கள் கருதினர். கிறீத்துவம் உலகின் பல்வேறு சிந்தனை மரபுகளுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருப்பது. அது மிக பலமான அமைப்பாக அரசியல் பலத்துடன் அமைந்தபோது சகிக்கமுடியாத பல தவறுகளையும் செய்துள்ளது. ஆனால் இயேசுவின் போதனைகளின் அடிப்படை விழுமியங்கள் ஒருபோதும் வெறுப்போ, இனவாதமோ அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கும் பல புனிதர்களையும் சேவகர்களையும் உருவாக்கி உலகுக்களித்தது. வெறும் சேவையை மட்டும் மனதில் கொண்டு எல்லா இன மக்களுக்காகவும் தன்னலமின்றி உழைத்து நம்பிக்கையிழந்த இனங்களுக்கெல்லாம் கருணையின் சிறு கீற்றால் ஒளிகாட்டிச் சென்ற லட்சக்கணக்கான கிறீத்துவ பாதிரியர்கள், கன்னியர்கள், போதகர்கள், சேவகர்கள் அனைவரும் அடிப்படையில் ஒரு இனவெறியரை, இனவெறுப்பை போதித்த ஒருவரை பின்பற்றியிருக்கிறார்கள் என்பது அரவிந்தன் நீலகண்டன் உண்மையில் நம்புவதுதானா?

அன்பிற்காகவன்றி வேறெந்த குறிக்கோளுடனும் பைபிளை விளக்கக்கூடாது என அகஸ்டின் சொன்னதை எல்லா மத புத்தகங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் நாம் எடுத்துக்கொள்வோமானால் உலகம் எத்தனை அற்புதமானதாயிருக்கும்.

சிறில் அலெக்ஸ்

முந்தைய கட்டுரைதன்வரலாறுகள்
அடுத்த கட்டுரைகாடு- கடிதம்