இலக்கிய விமர்சனம் என்பது…

இந்த விமர்சனத்தால் என்ன பயன் என்றசில கடிதங்கள் வந்தன. இலக்கிய விமர்சனம் என்பதே குறைநிறை கண்டு தரம் அறிந்து வகைப்படுத்தும் ஒரு செயல்பாடுதான். உலகமெங்கும் இலக்கியம் எங்கே உள்ளதோ அங்கெல்லாம் இலக்கிய விமர்சனம் உள்ளது. இலக்கியம் மேலும் மேலும் தன்னை கூர்மைப்படுத்திக்கொண்டு முன் செல்ல இலக்கிய விமர்சனம் இல்லாமல் முடியாது. இலக்கிய விமர்சனம் நிகழாத மொழியில் இலக்கியம் அழியும்.

ரசனை என்பது ‘ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குதல்’ அல்ல. இலக்கியத்தை நுண்ணுணர்வுடன் அறிவார்ந்த தீவிரத்துடன் வாசிப்பதே அது. அதில் ஒப்பீடும் தரப்படுத்தலும் நிகழாமல் இருக்காது. இதை விட இது, இதில் இருந்து இதற்கு என்ற ஒரு தொடர்புபடுத்தும் செயல் நம் மனதுக்குள் ரச்னையின் போது நிகழ்ந்தபடியே இருக்கும். அது இசை ஓவியம் சாப்பாடு எல்லாவற்றிலும்தான். ஆகவேதான் ராஜரத்தினம் பிள்ளை இசைமேதை என அறியப்படுகிறார். அவர் வாசிப்பதும் தஞ்சையில் எந்த ஒரு நாயனக்காரர் வாசிப்பதும் ஒன்றே என்று சொல்பவருக்கு இசை ரசனை இல்லை என்றே பொருள். இசை அவருக்கு சத்தம் மட்டுமே. ராஜரத்தினம் பிள்ளையையும் திருவெண்காடு சுப்ரமணியத்தையும் ஒப்பிடுவதன் மூலம் இருவருடைய வாசிப்பையும் நுட்பமாக புரிந்துகொள்ள முடிகிறது.

உலக இலக்கிய மரபில் என்று இலக்கியம் உருவானதோ அன்றே இலக்கிய விமர்சனம் என்ற முறையும் உருவாகிவிட்டது. அரிஸ்டாடில் மேலை இலக்கிய விமர்சனத்துக்கு முறைமையையும் அடிப்படைகளையும் உருவாக்கினார். நம் மரபில் ஜைமினி இலக்கிய விமரிசனத்துக்குரிய மீமாம்சைக் கோட்பாடுகளை உருவாக்கினார். அவை மொழியின் ஒலிக்கட்டுமானம் மற்றும் அர்த்தக்கட்டுமானம் சார்ந்தவை.

தமிழில் தொல்காப்பிய காலத்திலேயே கறாரான இலக்கிய விமர்சன முறை இருந்தது என்று தொல்காப்பியமே அடையாளம் காட்டுகிறது. நம் மரபில் இருந்த உரை எழுதும் பாரம்பரியம் கறாரான விமர்சனத்தையே காட்டுகிறது. அந்த உரைக்காரர்கள் வழியே தான் பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள 18 நீதி நூல்களில் ’நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்ற தரப்பிரிவினை செய்யப்பட்டது. நாலடியாரைவிட குறள் ஒருபடி மேலானதாக ஆகியது.

தமிழ் இலக்கிய மரபில் 17 ஆம் நூற்றண்டு வரை கறாரான இலக்கிய ஆராய்சியும் மதிப்பீடும் தரம் பிரித்தலும் இல்லாத ஒரு காலகட்டம் இருந்ததே இல்லை. அரங்கேற்றம் என்ற அமைப்பு தரமற்றவற்றை வெளிவரவே முடியாமல் த்டுப்பதற்காக உருவான ஒன்று. அதன் பின்னரே இலக்கிய விமர்சனம் நிகழ்கிறது. நம் உரைகளில் காணப்படும் கறாரான நோக்குக்கு இணையாக ஒன்றை இன்று கூட நாம் வேறு எங்கும் காணமுடியாது. நச்சினார்க்கினியரை தமிழ் திறனாய்வின் தந்தை என்றே சொல்வேன்

அப்பேற்பட்ட தமிழில் இப்போது இலக்கியம் வாசிப்பவர்களுக்கு இலக்கிய விமர்சனம் என்ற துறையே புதிதாக இருக்கிறது. அதைக் கண்டதுமே மிரள்கிறார்கள். நம் ரசனை கீழே விழுந்து கிடப்பதற்கான காரணம் இதுவே. பள்ளிகளில் இருந்தே நாம் ரசனையை பயிற்றுவிப்பதில்லை. எல்லாமே படிக்கவேண்டிய பாடம்தான் என்றுதான் கற்பிக்கிறோம்

ஒரு நிகழ்வு. வேதசகாயகுமார் சொன்னது. பேராசிரியர் ஜேசுதாசன் சிற்றூர் கல்லூரியில் வகுப்பெடுக்க வந்து நிற்கிறார். பாடமாக இரட்சணிய யாத்ரீகம். அவர் ஆரம்பிக்கிறார் ‘கவிதை என்றும் செய்யுள் என்றும் இரண்டு உண்டு. கவிதை பிறப்பது, செய்யுள் செய்யபப்டுவது. இரட்சணிய யாத்ரீகம் செய்யப்பட்டது, ஆகவே செய்யுள். இதை மதச்சார்பின்மையை கருத்தில்கொண்டு பாடமாக வைத்திருக்கிறார்கள். இதை நீங்கள் தேர்வில் எழுதுவதற்கு என்ன தேவையோ அதை மட்டும் இப்போது சொல்கிறன், எழுதிக்கொள்ளுங்கள். இதில் நடத்த ஏதுமில்லை. அந்த நேரத்தில் நான் ஆண்டாள் கவிதைகளை உங்களுடன் சேர்ந்து அனுபவிக்கிறேன்’

அத்தகைய ரசனை பள்ளி கல்லூரிகளில் இருந்தே நமக்கு அறிமுகமாகி இருந்தால் ’இலக்கிய விமர்சனமா என்ன அது’ என்று கேட்கும் நிலை வந்திருக்காது. ஆனால் அதற்கான ஆசிரியர்கள் நமக்கு அமைவதில்லை.

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், எந்த இலக்கிய விமர்சனமும் தீர்ப்பு அல்ல. அது ஒரு விமர்சகனின் கருத்து. அது விவாதத்தை உருவாக்குகிறது. அந்த விவாதம் மூலம் காலப்போக்கில் சமூகமனத்தின் தரவரிசையில் எழுத்த்துக்களின் இடம் நிர்ணயமாகிறது. இலக்கியவிமர்சனத்தின் பணி நுட்பமான விமர்சனத்தை உருவாக்குவதே

நான் இங்கே ஒரு விமர்சனத்தை முன்வைத்திருக்கிறேன். எவருமே அதைஎ திர்கொள்ளவில்லை. நான் சொன்ன இலக்கியமரபை எவருமே அறிந்திருக்கவில்லை. எவருமே ஒரு தரவரிசையை உருவாக்கும் அளவுக்கு பிறவற்றை வாசித்திருக்கவும் இல்லை. வாசித்தவற்றை இழக்க முடியாத தவிப்பையே நான் காண்கிறேன். அவற்றுடன் விவாதிக்கமுடியாது

இந்தவிவாதத்தை கவனிபப்வர்கள் சிலருக்கு புதிய வாசல் திறக்கலாம். முன்னேற ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். எனக்கு அப்படித்தான் கிடைத்தது. நான் செய்வது அதை பிறருக்குச் செய்வதை மட்டுமே. அது விமர்சகனின் கடமை

ஜெ

பிகு : இலக்கிய விமர்சனம் என்றால் என்ன, அதன் எல்லைகள் என்ன ,சாத்தியங்கள் என்ன என்பவற்றை என்னுடைய ஏழு இலக்கிய விமர்சன நூல்களின் வரிசையில் முதல் நூலான புதுமைப்பித்தன் பற்றிய நூலில் மிக விரிவாகவே எழுதியிருக்கிறேன்.

முந்தைய கட்டுரைபாலகுமாரனும் வணிக இலக்கியமும்
அடுத்த கட்டுரைகற்கண்டு கனவு வயல்