«

»


Print this Post

இலக்கிய விமர்சனம் என்பது…


இந்த விமர்சனத்தால் என்ன பயன் என்றசில கடிதங்கள் வந்தன. இலக்கிய விமர்சனம் என்பதே குறைநிறை கண்டு தரம் அறிந்து வகைப்படுத்தும் ஒரு செயல்பாடுதான். உலகமெங்கும் இலக்கியம் எங்கே உள்ளதோ அங்கெல்லாம் இலக்கிய விமர்சனம் உள்ளது. இலக்கியம் மேலும் மேலும் தன்னை கூர்மைப்படுத்திக்கொண்டு முன் செல்ல இலக்கிய விமர்சனம் இல்லாமல் முடியாது. இலக்கிய விமர்சனம் நிகழாத மொழியில் இலக்கியம் அழியும்.

ரசனை என்பது ‘ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குதல்’ அல்ல. இலக்கியத்தை நுண்ணுணர்வுடன் அறிவார்ந்த தீவிரத்துடன் வாசிப்பதே அது. அதில் ஒப்பீடும் தரப்படுத்தலும் நிகழாமல் இருக்காது. இதை விட இது, இதில் இருந்து இதற்கு என்ற ஒரு தொடர்புபடுத்தும் செயல் நம் மனதுக்குள் ரச்னையின் போது நிகழ்ந்தபடியே இருக்கும். அது இசை ஓவியம் சாப்பாடு எல்லாவற்றிலும்தான். ஆகவேதான் ராஜரத்தினம் பிள்ளை இசைமேதை என அறியப்படுகிறார். அவர் வாசிப்பதும் தஞ்சையில் எந்த ஒரு நாயனக்காரர் வாசிப்பதும் ஒன்றே என்று சொல்பவருக்கு இசை ரசனை இல்லை என்றே பொருள். இசை அவருக்கு சத்தம் மட்டுமே. ராஜரத்தினம் பிள்ளையையும் திருவெண்காடு சுப்ரமணியத்தையும் ஒப்பிடுவதன் மூலம் இருவருடைய வாசிப்பையும் நுட்பமாக புரிந்துகொள்ள முடிகிறது.

உலக இலக்கிய மரபில் என்று இலக்கியம் உருவானதோ அன்றே இலக்கிய விமர்சனம் என்ற முறையும் உருவாகிவிட்டது. அரிஸ்டாடில் மேலை இலக்கிய விமர்சனத்துக்கு முறைமையையும் அடிப்படைகளையும் உருவாக்கினார். நம் மரபில் ஜைமினி இலக்கிய விமரிசனத்துக்குரிய மீமாம்சைக் கோட்பாடுகளை உருவாக்கினார். அவை மொழியின் ஒலிக்கட்டுமானம் மற்றும் அர்த்தக்கட்டுமானம் சார்ந்தவை.

தமிழில் தொல்காப்பிய காலத்திலேயே கறாரான இலக்கிய விமர்சன முறை இருந்தது என்று தொல்காப்பியமே அடையாளம் காட்டுகிறது. நம் மரபில் இருந்த உரை எழுதும் பாரம்பரியம் கறாரான விமர்சனத்தையே காட்டுகிறது. அந்த உரைக்காரர்கள் வழியே தான் பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள 18 நீதி நூல்களில் ’நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்ற தரப்பிரிவினை செய்யப்பட்டது. நாலடியாரைவிட குறள் ஒருபடி மேலானதாக ஆகியது.

தமிழ் இலக்கிய மரபில் 17 ஆம் நூற்றண்டு வரை கறாரான இலக்கிய ஆராய்சியும் மதிப்பீடும் தரம் பிரித்தலும் இல்லாத ஒரு காலகட்டம் இருந்ததே இல்லை. அரங்கேற்றம் என்ற அமைப்பு தரமற்றவற்றை வெளிவரவே முடியாமல் த்டுப்பதற்காக உருவான ஒன்று. அதன் பின்னரே இலக்கிய விமர்சனம் நிகழ்கிறது. நம் உரைகளில் காணப்படும் கறாரான நோக்குக்கு இணையாக ஒன்றை இன்று கூட நாம் வேறு எங்கும் காணமுடியாது. நச்சினார்க்கினியரை தமிழ் திறனாய்வின் தந்தை என்றே சொல்வேன்

அப்பேற்பட்ட தமிழில் இப்போது இலக்கியம் வாசிப்பவர்களுக்கு இலக்கிய விமர்சனம் என்ற துறையே புதிதாக இருக்கிறது. அதைக் கண்டதுமே மிரள்கிறார்கள். நம் ரசனை கீழே விழுந்து கிடப்பதற்கான காரணம் இதுவே. பள்ளிகளில் இருந்தே நாம் ரசனையை பயிற்றுவிப்பதில்லை. எல்லாமே படிக்கவேண்டிய பாடம்தான் என்றுதான் கற்பிக்கிறோம்

ஒரு நிகழ்வு. வேதசகாயகுமார் சொன்னது. பேராசிரியர் ஜேசுதாசன் சிற்றூர் கல்லூரியில் வகுப்பெடுக்க வந்து நிற்கிறார். பாடமாக இரட்சணிய யாத்ரீகம். அவர் ஆரம்பிக்கிறார் ‘கவிதை என்றும் செய்யுள் என்றும் இரண்டு உண்டு. கவிதை பிறப்பது, செய்யுள் செய்யபப்டுவது. இரட்சணிய யாத்ரீகம் செய்யப்பட்டது, ஆகவே செய்யுள். இதை மதச்சார்பின்மையை கருத்தில்கொண்டு பாடமாக வைத்திருக்கிறார்கள். இதை நீங்கள் தேர்வில் எழுதுவதற்கு என்ன தேவையோ அதை மட்டும் இப்போது சொல்கிறன், எழுதிக்கொள்ளுங்கள். இதில் நடத்த ஏதுமில்லை. அந்த நேரத்தில் நான் ஆண்டாள் கவிதைகளை உங்களுடன் சேர்ந்து அனுபவிக்கிறேன்’

அத்தகைய ரசனை பள்ளி கல்லூரிகளில் இருந்தே நமக்கு அறிமுகமாகி இருந்தால் ’இலக்கிய விமர்சனமா என்ன அது’ என்று கேட்கும் நிலை வந்திருக்காது. ஆனால் அதற்கான ஆசிரியர்கள் நமக்கு அமைவதில்லை.

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், எந்த இலக்கிய விமர்சனமும் தீர்ப்பு அல்ல. அது ஒரு விமர்சகனின் கருத்து. அது விவாதத்தை உருவாக்குகிறது. அந்த விவாதம் மூலம் காலப்போக்கில் சமூகமனத்தின் தரவரிசையில் எழுத்த்துக்களின் இடம் நிர்ணயமாகிறது. இலக்கியவிமர்சனத்தின் பணி நுட்பமான விமர்சனத்தை உருவாக்குவதே

நான் இங்கே ஒரு விமர்சனத்தை முன்வைத்திருக்கிறேன். எவருமே அதைஎ திர்கொள்ளவில்லை. நான் சொன்ன இலக்கியமரபை எவருமே அறிந்திருக்கவில்லை. எவருமே ஒரு தரவரிசையை உருவாக்கும் அளவுக்கு பிறவற்றை வாசித்திருக்கவும் இல்லை. வாசித்தவற்றை இழக்க முடியாத தவிப்பையே நான் காண்கிறேன். அவற்றுடன் விவாதிக்கமுடியாது

இந்தவிவாதத்தை கவனிபப்வர்கள் சிலருக்கு புதிய வாசல் திறக்கலாம். முன்னேற ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். எனக்கு அப்படித்தான் கிடைத்தது. நான் செய்வது அதை பிறருக்குச் செய்வதை மட்டுமே. அது விமர்சகனின் கடமை

ஜெ

பிகு : இலக்கிய விமர்சனம் என்றால் என்ன, அதன் எல்லைகள் என்ன ,சாத்தியங்கள் என்ன என்பவற்றை என்னுடைய ஏழு இலக்கிய விமர்சன நூல்களின் வரிசையில் முதல் நூலான புதுமைப்பித்தன் பற்றிய நூலில் மிக விரிவாகவே எழுதியிருக்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7840

29 comments

Skip to comment form

 1. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ

  நான்தான் மீண்டும் எழுதுகிறேன். நீங்கள் சொன்னபின்னும் இதுதான் என் கருத்து. இந்த விவாதமே வீண். இலக்கியம் என்பது ஓர் அந்தரங்க அனுபவம். அதை அறிந்தவர்களுக்கு சொல்லவேண்டியதில்லை. அறியாதவர்களுக்கு சொல்லி புர்ய வைக்க முடியாது. வீண் விதண்டாவாதம்தான் மிச்சம். உங்கள் நேரம் வீண்

  செல்வா

  அன்புள்ள செல்வா

  அப்படி அல்ல என்பதே என் அனுபவம். இன்று தமிழில் தீவிரமான இலக்கியவாதிகளாக எழுதிக்கொண்டிருக்கும் சிலர்கூட என்னிடம் இதே தளத்தில் வந்து அறிமுகமானவர்கள்தான். உடனடியாக இக்கருத்துக்கள் எதிர்விளைவளிப்பதில்லை. ஆனால் கொஞ்சகாலத்திலேயே அவை அவர்களின் மனதில் ஊறி அவர்களின் பார்வையை மாற்றும். நாலிலெ ஒன்றிரண்டு பலித்தாலும் நல்லதே

  ஜெ

 2. jekay2ab

  ஒவ்வொரு எதிர் வினைக்கும் ஆழமான மறுமொழியாற்றும் உங்கள் பண்பு மலைக்க வைக்கிறது.
  ஜெகதீஷ் குமார்.

 3. pichaikaaran

  இனிய ஜெ.
  விளக்கங்களுக்கு நன்றி. நல்லதொரு புத்தகத்தை, அது எழுதப்படும்போதே படிக்கும் அனுபவத்தை இந்த இன்டரநெட் எழுத்து தந்தது .

 4. ramji_yahoo

  அன்பு ஜெமோ

  நாங்களும் இலக்கிய விமர்சனத்தை வரவேற்கிறோம். தொடர் முன்னேற்றத்திற்கு அதுதான் வழி செய்யும் (in Toyota’s terms they call as Continuous Improvement).

  ஆனால் தமிழ் படைப்பாளிகளிடம்/இலக்கியங்களில் உள்ள நிறைகளை அதிகம் சொல்லி குறைகளை குறைவாக சொன்னால் என் போன்ற வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், என்பதே வேண்டுகோள்.

 5. stride

  திரு.ராம்ஜி கூறுவது போல் இலக்கிய விமர்சனத்தோடு டொயோட்டாவின் continuout improvement’ஐ ஒப்பிடுவது வலது மூளை திறனை இடது மூளையுடன் ஒப்பிடுவது மாதிரி தான் இருக்கும். நமது கல்வித் திட்டத்தில் உரு போட கட்டாயப் படுத்தி இடது மூளையை மட்டுமே செம்மைப் படுத்துவதால் வலது மூளையின் நுண்ணுணர்வு, முழுதுவமாக நோக்கும் திறன் போன்றவை செயல் குறைவாகவே இருக்கிறது. அவையே இலக்கியே விமர்சனத்துக்கு தேவை.

  ஜெ ஒரு எழுத்தாளர் மேல் ஆழமான விமர்சனம் வைக்கும் போது அதனை எதிர் விமர்சனம் செய்பவர் அந்த எழுத்தாளரின் ஆக்கங்களில் இருக்கும் மொழி, உள் மொழி, கட்டமைப்பு, நேர்மை, ஆக்கத்தில் உள்ள சமூகத்தின் பிரதிபலிப்பு, சமூகத்தின் மேல் அந்த ஆக்கத்தின் தாக்கம் போன்ற பலவற்றை குறிப்பிட்டு எழுதினால் படிக்கும் அனைவருக்கும் பலனளிக்கும்.

  அதை விட்டு பாலகுமாரனைப் படித்து தான் திருந்தினேன் அவரை ஏன் குறை சொல்கிறீர்கள் என்று எழுதுவது எம்.ஜி.அர் படம் பார்த்து குடிப்பதை விட்டேன், அவர் நல்லவர் தானே என்று கேட்பது போல இருக்கிறது. எம்.ஜி.அர் படம் பார்த்து குடிப்பதை விடுவது நல்ல செயல் தான். ஆனால் இலக்கிய தளத்தில் அது போன்ற ஒற்றை வரி ஆட்சேபங்கள் உரையாடலை விரிவாக்காது என்பதே ஏன் கருத்து. விரிவாக பதிலளிப்பது மட்டுமே அதனை செய்யும்.

  சிவா

 6. tdvel

  இப்போதுதான் ஒரு பின்னூட்டம் இலக்கியவிமர்சனம்பற்றி எழுதினேன்.இப்படி நான் சொல்லவருவதை எல்லாம் சிறப்பாக நீங்களே எழுதிவிட்டால் நான் எதைத்தான் எழுதுவது:-).

 7. pichaikaaran

  பாலகுமாரன் எழுத்துக்களை இலக்கியநயம் , சொல்நயம் பாராட்டுதலை விட, அந்த எழுத்து ஒரு தலைமுறையையே மாற்றி அமைத்ததைத்தான் ஆய்வு செய்ய வேண்டும் .

 8. pichaikaaran

  நண்பர் சிவா அவர்களே . . . . எது சிறந்த படைப்பு என்பதை , அது வாசகன் மேல் ஏற்படுத்திய தாக்கத்தை வைத்து மதிப்பிட்டால் , பாலகுமாரன் சிறந்த இலக்கியவாதி என முடிவு செய்வீர்கள் . நீங்கள் இலக்கியவாதிக்கு வைத்திருக்கும் இலக்கணத்துக்கு உட்பட்டவர்களின் வாசகர் சிலர் தண்ணி அடிப்பதுதான் நாகரிகம் , பாலுணர்வை பற்றியே பேசுவதுதான் வீரம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள் . வலை உலகில் இதை தெளிவாக பார்கலாம் . பாலகுமாரன் வாசகன் ஒருபோதும் அப்படி இருக்க மாட்டான்

 9. எம்.ஏ.சுசீலா

  அன்பின் ஜெ.எம்.,
  கடந்த சில பதிவுகளில் (எத்தனை மணி நேரம் ஒன்றையே திரும்பத் திரும்பப் பாடம் எடுத்தும் புரிந்து கொள்ளாமல் அடம் பிடிக்கும் /அல்லது புரிந்து கொள்ள மறுக்கும் மாணவர்கள் போல்)தொடர்ந்து வரும் விவாதங்கள் மனச் சோர்வை அளித்ததால்
  சற்று அமைதி காத்தேன்.
  பண்டைத் தமிழ் இலக்கிய மரபில் நிலவிய அரங்கேற்ற மரபை நீங்கள் இப் பதிவில் சுட்டிக் காட்டியிருப்பதாலும்
  //சமகாலத்து எழுத்தாளர்களை நாளை தீர்மானிப்பதே சரியாக இருக்க முடியும் என்பது பொதுவான கருத்து!!!//
  என்று சென்ற பதிவில் ஓர் அன்பர் கருத்துச் சொல்லியிருப்பதாலும் அக்கால இலக்கிய அரங்கேற்ற மரபு குறித்த சிறு விளக்கத்தை இங்கே தர விழைகிறேன்.

  ஜெ.எம் கூறியபடி பழந்தமிழ் இலக்கியத்தில் கறாரான தரப்படுத்தலும் ,அந்தந்தக் காலகட்ட எழுத்தாளர்களை அன்றே..அப்பொழுதே தீர்மானிக்கும் மரபும் நிலவியதென்பற்கான சாட்சியங்களாகவே நூல் அரங்கேற்றங்கள் விளங்கிவந்திருக்கின்றன.
  எந்தத் தணிக்கையும் இல்லாமல் குப்பையாக ஒரு புத்தகத்தை நூல் வெளியீட்டு விழா என்று பகட்டாக வெளியிடும் இக்காலப் போக்குக்கு முற்றிலும் மாறுபட்ட வெளியீட்டு நிகழ்வு அது.
  கிட்டத்தட்ட ஒரு நேர்மையான – நடுநிலையோடான நேர்முகத் தேர்வு போலவே அது நடத்தப்பட்டு வந்திருக்கிறது.

  நுட்பமாக ஆராயும் கல்வித் திறனும்,அறிவு மேம்பாடும், உண்மையான தகுதிப்பாடும் கொண்ட சான்றோர் கூடியுள்ள அவையில் ஒரு புலவன் / படைப்பாளி தன் நூலை வாசிக்க வேண்டும்.
  நூல் சார்ந்து ( கவனிக்க;நூலுக்கு வெளியே அல்ல) எழுப்பப்படும் ஐயங்களுக்கு அவர்கள் உடனுக்குடன் பொருத்தமான மறுமொழிகளைக் கூற வேண்டும்.விளக்கங்களை அளிக்க வேண்டும்.குறிப்பிட்ட அந்த வல்லுநர் குழுவின் அங்கீகாரம் கிடைத்த பிறகே ஓலைச் சுவடி வடிவில் இருக்கும் அந்த நூல், மக்கள் மன்றத்துக்குச் செல்ல முடியும்.
  (தணிக்கைக் குழுவைத் தாஜா செய்வதோ பொருள் கொடுத்துச் சரிக் கட்டுவதோ எதுவும் அங்கு பலிக்காது)
  திருவள்ளுவர்,கம்பர்,சேக்கிழார் ஆகிய பலரும் இது போன்ற தரக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களே.
  சான்றோர் குழுவின் பரிந்துரைக்கேற்பப் படைப்பாளிகள் சில திருத்தங்கள் செய்த குறிப்பைக் கூடக் காண முடிகிறது.(உடன் இது எழுத்துச் சுதந்திரத்தில் குறுக்கீடு என்று யாரும் கொடி பிடித்து வந்து விட வேண்டாம். வாசகப் பார்வைக்கு ஒரு நூல் வைக்கப்படுவதற்கு முன் எத்தனை பொறுப்புணர்வுடன் இலக்கியத் தரம் பேணப்பட்டது என்பதை மட்டுமே இங்கே பார்க்க வேண்டும்.)
  தரக் கட்டுப்பாடு தேவைப்படுவது நுகர் பொருள்களுக்கு மட்டுமல்ல;மக்கள் அரங்கில் முன் வைக்கப்படும் இலக்கியங்களுக்கும்தான்.
  அந்தப் புரிதலும் , தரப் பாகுபாடுகள் பற்றிய தெளிவும் இல்லாத காரணத்தினாலேதான் – உணர்ச்சிவசப்பட்ட மன நிலையோடு தரமற்ற எழுத்தாளர்களுக்காகத் திரும்பத் திரும்பக் குரல் எழுப்பியபடி தரமான ஓர் எழுத்தாளரின் உன்னதமான படைப்புக் கணங்களைச் சிலர் இங்கே வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  இப்படிச் சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது.
  ஆனாலும் உண்மை அதுதான்.
  ,

 10. ஜெயமோகன்

  திரு ஜெயமோகன்

  நீங்கள் வணிக எழுத்தாளர் என்று சிலரை முத்திரை குத்துகிறீர்கள். ஆனால் சிறுபத்திரிக்கைகளில் எழுதுபவர்களை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறீர்கள். அவர்கள் எழுதுவதெல்லாம் இலக்கியம் என்று தம்பட்டம் அடிக்கிறீர்கள். இங்கே நீங்கள் வணிக எழுத்தாளர் என்று சொல்பவர்களை மட்டம்தட்ட நீங்கள் பயன்படுத்தும் வாதங்களை அவர்கள்மேல் போடுவீர்களா? மாட்டீர்கள். ஆகவே நீங்கள் செய்வது எழுத்து வியாபாரம் இல்லை எழுத்து விபச்சாரம் என்கிறேன்

  ஸ்ரீனிவாசன்,செம்பூர்

  அன்புள்ள சீனிவாசன்,

  நீங்கள் எழுதும் முதல்கடிதம். சூடாகவே இருக்கிறது. தங்கள் கருத்துக்கு நன்றி

  என் இணைய தளத்தையும் இப்போது, இதைச்சார்ந்துதான் வாசிக்கிறீர்கள் என நினைக்கிறேன். தமிழின் மகத்தான இலக்கிய சாதனையாளார்களாகவும் முன்னோடிகளாகவும் கருதப்படும், நானே அப்படி நினைக்கும், பலரைப்பற்றி இதில் கட்டுரைகள் உள்ளன. என் நண்பர்களும் வழிகாட்டிகளுமான சமகால இலக்கியவாதிகளைப்பற்றி கட்டுரைகள் உள்ளன. அவை யாவுமே மிகக்கறாராக ஆராயப்பட்டு குறைநிறைகளுடன் மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளன. வடிவம் மொழி உள்ளடக்கம் ஆகிய அனைத்துமெ எந்தவிதமான நீக்குபோக்கும் இல்லாமல் கணக்கிடப்பட்டுள்ளன. சிற்றிதழ் இலக்கியம் சம்பந்தமான ஒரு கடிதத்தில், ஒரு உரையாடலில்கூட அதே போன்ற கறார்தன்மையை நீங்கள் காணலாம். அந்த வகையான கறாரான மதிப்பீட்டை பாலகுமாரன் கல்கி அல்லது சுஜாதாவிடம் செய்வதில்லை என்பதே உண்மை – அவர்களின் எழுத்து அதை தாங்காது. அவர்கள் தங்கள் பிராபல்யம் மூலம் அளித்த பங்களிப்பை கருத்தில்கொண்டு ஒரு நெகிழ்வுத்தன்மையுடன் மட்டுமே அவர்கள் மதிப்பிடப்படுகிறார்கள். இலக்கியத்தை பொறுத்தவரை அவ்வகை நீக்கு போக்குகளே இல்லை. அவர்கள் இலக்கியம் எழுத வந் தவர்கள் அதை எழுதினார்களா எனப தே கேள்வியாக உள்ளது

  ஜெ

 11. Jeyapandian

  அய்யா பிச்சைக்காரன் அவர்களே,
  தாங்கள் “எது சிறந்த படைப்பு என்பதை , அது வாசகன் மேல் ஏற்படுத்திய தாக்கத்தை வைத்து மதிப்பிட்டால் , பாலகுமாரன் சிறந்த இலக்கியவாதி என முடிவு செய்வீர்கள் ” என்று சொல்வது ‘கோணபய ஊருல கொங்கனபய நாட்டம’ என்பதுபோல் உள்ளது.
  மஹாகவி பாரதியை பைத்தியக்காரன் என்று சொன்ன சமுகம் நம்முடையது! ஆயிரம் முட்டாள்கள் ஆதரித்தாலும் சரி தவறாகாது, தவறு சரியாகாது!
  பாலகுமாரன் சிறந்த இலக்கியவாதியா இல்லையா என்று நான் வாதிடவில்லை. ஆனால் அதற்கு தாங்கள் தரும் விளக்கம் உடன்பாடில்லை!!
  ஜெயமோகன் சார்! நாம் ஏன் எப்போதும் பெருவாரியான மக்களின் தீர்ப்புகளின் மேல் வாழ நிர்பந்திக்கபற்றிருக்கிறோம்.?! (Like majorty wins!) “நல்லதோர் வீணை” என்று பாரதி பாடியதில் “புழுதி” என்று இகழ்ந்தது சுயஅறிவின்றி பலர் சொல்ல வறட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்களை பற்றிதானோ???? பின் ஏன் அவன் அல்பாயுசில் போனான்?? பலர் சொன்னால்தான் சரியா? {நம்முடய அரசியல் முறையும் சேர்த்து!!)

 12. ஜெயமோகன்

  ஜனநாயகம் என்பது கலைகளில் சிந்தனையில் இல்லை . அங்கே உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பதே விதி. எந்தக் கலையும் அதற்கான கல்வியும் நுண்ணுணர்வும் உடையவர்களுக்கானது. எந்தச்சிந்தனையும் அதற்கான தகுதியும் ஆர்வமும் உடையவர்கலுக்குரியது. அவர்கள் ஒரு சிறு வட்டமே. பெருவாரி வெளியேதான் நிற்கும். ஆகவே ஜன்நாயக முறையில் பார்த்தால் கலைஞர்களையும் சிந்தனையாளர்களையும் சமூகம் உதறிவிடத்தான் வேண்டும்.
  ஜெ

 13. ஜெயமோகன்

  இந்த சில மாதங்களில் குஷ்பு என்று தேடி என் இணையதளத்துக்கு 1477 பேர் வந்திருக்கிறார்கள். இதுவே பெரும்பான்மையின் உளவியல்…
  ஜெ

 14. senthilkumar

  சிவா,
  தொடர் முன்னேற்றம் (continous Improvment) இடது முளை சார்ந்தது அல்ல .இந்தியா வில் இருந்து சென்று மீண்டும் இந்தியாயிவிற்கு
  இறக்குமதி செயப்பட்ட இன்னொரு மேலாண்மை முறை
  இதற்கு நிச்சியம் நுண் பார்வையும் ,Creativityium thevai
  தர மேம்பாட்டிற்கு(சரியான) விமர்சனமும் ,புரிதலும்,தர வரிசை உயர தேவையான முயற்சிகளும் சேர்ந்த ஒரு மேலாண்மை கொள்கை.சரியான மதிப்பிடல் மிக முக்கியம்.
  ஜெயமோகன் சொல்லும் அந்த கறாராக மதிப்பிடும் தன்மை,
  விஷ்ணுபுரம சிற்பியும், யானை மருத்துவரும் தரம் பற்றித்தான் பேசுகிறார்கள்
  இந்த தரத்தின் முதன்மையால் நம்மை நோக்கி பல படையெடுப்புகள் நிகழ காரணமும் ஆயின
  இன்று அந்த தரம் பற்றி சொல்லி தர, மேலாண்மை கல்வியாளர்கள் டோயோட்டவை மேற்கோள் கண்பிகிரர்கள்
  நிச்சியம் இன்றய தினத்தில் அவர்கள் உற்பத்தி முறையின் தரம்
  பலர் பார்த்து பல புத்தகம் எழுதியும் யாராலும் சரிவர செயல் படுத்த முடியாமல் போனதிற்கு காரணம் அதை இடப் பக்க மூளையினால் அணுகியது தான்.

  ஆனால் உங்களின்
  // இலக்கியம் என்பது ஓர் அந்தரங்க அனுபவம்// முழுக்க ஒத்து கொள்கிறேன். இந் நிலை அடைந்தவர்களுக்கு ,இந்நிலை நோக்கி வருபவர்களுக்கு மற்றும் இலக்கியத்தின் தரம் உயர்விற்கு வாசகனின் நுண் திறன் வளர்க்க இத்தகைய விமர்சனம் தேவை படுகிறது.இதில் கிடைக்கும் வேறுபட்ட பார்வைகள் /கருத்துகள் முலம் நான் எனது கருத்தை வந்து அடைவது சுலபமாக இருக்கிறது .
  (நானாக சிந்திக்கும் பொழுது சில விஷயங்கள் விடுபட கூடும் )

 15. Jeyapandian

  ஆமாம், குஷ்புதானே மஜோரிட்டி(மைனோரிட்டி) தமிழர்களின் தற்போதைய தமிழ் ஆசிரியை!! பின் தேடாமல் இருப்பர்களா என்ன?
  ஜெய்பாரதி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!111

 16. RV

  இலக்கிய விமர்சனம் என்று ஒன்று இல்லாவிட்டால் என்ன படிப்பது என்று எப்படித் தெரியும்? எல்லாருக்கும் பிறக்கும்போதே என்ன படிக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு ஜீன் இருக்கிறதா என்ன? இந்த மாதிரி சிம்பிள் விஷயங்களை எல்லாம் ஜெயமோகன் விளக்க வேண்டி இருப்பது எரிச்சலைத்தான் வரவழைக்கிறது. பிச்சைக்காரன், பாலகுமாரனைப் படிக்க வேண்டும் என்று எப்படி தெரிந்துகொண்டீர்கள்?

  ஜெயமோகனது மதிப்பீடுகளோடு நாம் மாறுபடலாம். (அவர் சிறந்த கேளிக்கை எழுத்து என்று போட்டிருக்கும் லிஸ்டில் பலதும் குப்பை என்றே நான் கருதுகிறேன், எனக்கு பிடித்த ரொமான்ச்களை அவர் குப்பை என்று கருதுவதும் தெரிகிறது.) அவரது மதிப்பிடும் வால்யூ சிச்டத்தொடும் மாறுபடலாம். அதைப் பற்றி பேசுவது புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கு இந்த இந்த காரணங்களால் பாலகுமாரன் இலக்கியம், கல்கி, ரமணி சந்திரன், இரும்புக் கை மாயாவி இலக்கியம், ungaL மதிப்பீடு இந்த இந்த காரணங்களால் தவறு என்று வாதிட்டால் அதில் அர்த்தம் இருக்கிறது. இலக்கிய விமர்சனம் அவசியம் என்று விளக்கும் தேவையை அவருக்கு உண்டு பண்ணி இருப்பது – என்னத்தை சொல்ல?

 17. stride

  அன்பு செந்தில், நான் continuous improvement’ஐ குறை சொல்லவில்லை. continuous improvement என்று கூறப்படுவது பொருள் உற்பத்தி தொழிலில் ஒரு முக்கிய அங்கம். பெரும்பாலும் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட செயல்முறை. ஒரு பொருள் உற்பத்தி செய்யும் போது போது எவ்வளவு குறைவான நேரத்தில், எவ்வளவு குறைவான செலவில் ஆனால் தரம் குறைவில்லாமல் இருக்க அந்த செயல்முறையை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருப்பதேயே அது குறிக்கிறது.
  அனைத்து துறைகளிலும் வேலை செய்வோர் தத்தம் செயலை மீண்டும் மீண்டும் மதிப்பிட்டு மேம்படுத்திக் கொள்வது முக்கியமே. ஆனால் அந்த பொறியியல் சம்பந்த கோட்பாட்டை இலக்கிய வாசிப்பு, விமர்சனத்தோடு ஒப்பிடும் போது நாராசமாக இருக்கிறது. ஒன்று பல பொறியியலாளர்கள் கூடி கணக்கிட்டு ஒரு விகிதாச்சசாரம் முடிவு செய்து அடுத்து மாத உற்பத்தி அதனில் அதிகமாகவோ குறைவாகவோ முயல்வது. இன்னொன்று ஆழ்மனது, நுண்ணுணர்வு, சமூக உணர்வு, கனவு கூடவே சிறிது பித்தும் சம்பந்தப்பட்டது. அதனை இதனோடு ஒப்பிட்டது எனக்கு ஒப்புக் கொள்ளக் கூடியதாக் இல்லை. அதனாலேயே இடது, வலது மூளை செயல் திறன் பற்றி கூறினேன். நம் கல்வித் திட்டத்தின் மேல் உள்ள ஆதங்கமும் அதிலிருந்து தான் பிறக்கிறது.
  இதனையே இன்னொரு தளத்தில் நீட்டித்து விவாதித்தால் நாம் அதிக அளவில் பொறியியலாளர்களை தான் உருவாக்குகிறோம் விஞ்ஞானிகளை அல்ல என்று உறுதியாக கூறலாம். அதற்கான அடிப்படை சிந்தனைத் தளத்தை நாம் போற்றுவிப்பதே இல்லை. நோபல் பரிசு பெற்ற ராமன், சந்திரசேகர், கொரானா முதலியோரும் நோபல் பரிசு பெறக்கூடிய தகுதி உடைய எஸ்.என் .போஸ் போன்றோரூம் பிரிட்டிஷ் கால கல்வி பெற்றவர்கள். கடந்த நாற்பது ஆண்டுகளாக அவர்கள் அளவுக்கு அறிவுத்திறன் கூடிய இளைஞர்கள இளைஞிகள் பத்தாம் வகுப்பு முடித்த உடன் கணிதம், உயிரியல் மட்டும் படித்து ஒரு சாரார் பொறியியல் கல்லூரி எம்.பி.ஏ என்றும் இன்னொரு சாரார் மருத்துவம் படித்து பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக கருதுகிறார்கள். விஞ்ஞானம் பயின்று ஆராய்ச்சிக்கும் செல்வது ஒரு சிலர் மட்டுமே.

  இப்போது நோபெல் பெற்ற வெங்கட்ராமனுக்கு ஐ.ஐ.டியில் இடம் கிடைக்கவில்லை என்பது எவ்வளவு அருமையான செய்தி. கிடைத்திருந்தால் அவர் ஏதாவது நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்திருப்பார். இது ஒழுங்கற்ற புலம்பலாகிக் கொண்டிருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

  சிவா

 18. pichaikaaran

  ஜெ மோ சார் . .
  நீங்கள் தலையில் வைத்து கொண்டாடும் சிற்றிதழ் இலக்கியவாதிகள் எப்படி பட்ட கருத்தாக்கத்தை சமூகத்தில் உருவாக்குகிறார்கள் . பொது இடத்தில் குடித்து விட்டு ரகளை செய்வது , ஆபாச வார்த்தைகள் , பெண்மையை இழிவுபடுத்தும் வசைகள் இதெல்லாம் ஏற்கத்தக்கன என்பதைதானே சிற்றாதழ் இலக்கியம் போதிக்கிறது .அதனால்தானே ஊட்டி சந்திப்புக்கு நீங்கள் நிபந்தனைகள் விதிக்க வேண்டியிருந்தது ? பாலகுமாரன் அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் வாசகர் படைக்கு இந்த நிபந்தனைகள் தேவையே படாதே . ஏனென்றால் அவர் எழுத்து வேறு வகை .
  தெரியாமல்தான் கேட்கிறேன் . தரமான எழுத்துக்கு வரையறை என்ன ? பின் நவீனத்துவம் , தோற்ற நிலை மெய்மை , நான் லீனியர் என அந்நிய கலை சொற்களை மொழிபெயர்க்க பழகுவதுதான் தரமான எழுத்தா? இதுதான் இலக்கியமா? 

 19. pichaikaaran

  ஜெயபாண்டியன் , ஆர்வி அவர்களே. . தரமான நூல் என்பதை அளவிட, ஜெமோ பயன்படுத்தும் அளவீட்டு கருவி தவறு என்பதைத்தான் நாங்கள் நிறுவ முயல்கிறோம் . இதுவும் விவாதத்தின் ஒரு பகுதிதான்

 20. gomathi sankar

  இலக்கியப் பேரம்பலத்தின் மேல்சாந்தி ஸ்ரீமான் ஜெயமோகன் அவர்களுக்கு [கீழ்சாந்தி யாரென்று நீங்களே சொல்லிவிடுங்கள்.நிறைய போட்டி இருக்கும் போல தெரிகிறது.] ஓணம் வாழ்த்துக்கள்.பாலகுமாரனைப் படிப்பவரெல்லாம் இலக்கியத் தற்குறிகள் என்றும் இலக்கியக் குடிகாரர்கள் என்றும் நீங்கள் சொன்னது அறிந்து மகிழ்ந்தேன்.ஒண்ணாங்கிளாசில் ஆனா ஆவன்னா படிப்பது நேரவிரயம் என்றும் நேரடியாக அவர்கள் சுசீலா மேடத்திடம் வருவதே சிறந்தது என்பதும் உண்மையில் ஒண்ணாங்கிளாஸ் படிப்பது அஞ்சாங்கிளாஸ் படிப்பதற்கு தடையாக இருக்கிறது என்பதும் புரிந்தது.உண்மையில் இந்த தளத்தில் வந்து விவாதம் செய்த பாலகுமாரன் வாசகரெல்லாம் குஷ்பூவைத் தேடிக் கொண்டு தவறுதலாக வந்துவிட்டவரே .நான் கூட அப்படித்தான் மலையாள நீலப் படம் ஒன்றைத் தேடினால் கூகிள் இங்கு கொண்டுவந்துவிட்டது!சுசீலா மேடம் வண்ணதாசன் எல்லாம் அவ்வளவு தீவிர இலக்கியம் இல்லையே. ஏன் ஜெமோவின் தீவிரம் கூட அவரது சிக்கலான மொழியில் வடிகட்டப் பட்டு சரியாக ரத்தத்தில் கலப்பதில்லை என்கிறார்கள் .சிலர் உங்கள் பாடமே பரவாயில்லை என்று படித்து திசைமாறி விடக்கூடும்..நேரடியாக இடுப்புக்கு கீழேயே எல்லா இலக்கியத்தையும் அதி தீவிரமாக ஆரம்பிப்பவர் நிறைய பேர் இருக்கிறார்களே..அவர்களை உங்கள் மாணவிகளுக்கு அறிமுகப் படுத்தி இருந்தால் அவர்கள் அதிவிரைவில் இலக்கிய முமுக்ஷு ஆகி இருப்பார்களே..[ஈரல் வற்றலோ ஹெச் ஐ வி தொற்றோ தடுக்காவிடில்]உங்களுக்கும் மில்டனின் சொர்க்கத்தில் ஜெமோவின் வலது பாரிசத்தில் ஒரு இடம் நிச்சயப் பட்டிருக்கும்.எது வயதுக்கு வந்த இலக்கியம் ,ஆன்மிகம் எது வயதுக்கு வராதது என்பது பற்றியும் எனக்கு சில கருத்துகள் உண்டு எனினும் அதையெலாம் சொல்லி ஒரு தீவிர இலக்கியவாதியின் நேரத்தை வீண் அடிப்பது தவறு என்று நீங்கள் சொல்லிவிட்டதால் சொல்லவில்லை.அவர் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கிறதோ இல்லையோ ..உங்கள் பொறுமைக்கு நிச்சயமாய் உண்டு எனத் தெரிகிறது.கடைசியாக ஒன்று…பாலகுமாரனை காலம் மறக்கும் என்று ஜெமோ சொன்னதற்கு என் நண்பர் கவலை வேண்டாம் போர்ஹெசைப் பற்றியும் இவ்விதம்தான் சொன்னார் என்றார்.உண்மையா …

 21. pichaikaaran

  இனிய ஜெ. . பெரும்பான்மை சிறுபான்மை என விவாதத்தை திசைதிருப்புவது நகைப்புக்குரியது. இதெல்லாம் அளவீடு அல்ல . பெரும்பான்மை ஆதரவு பெற்றிருந்த மகாத்மா காந்தி தாழ்ந்தவரும் அல்ல . சிறிய அளவு விற்பனையாகும் பிளாட்பாரம் புத்தகங்கள் மகா இலக்கியங்களும் அல்ல . குஷ்பூ கூட வேண்டாம் . ஷகீலா ரசிகர்கள் அளவில்தானே இன்றைய சிற்றிதழ் ரசனை இருக்கிறது ! உதாரணம் கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்

 22. down under

  dear JM,
  Few things , not directly related to this post .but I believe it could be relevant ..

  1.As a literary intellect you are in a unique position .In the sense .. the combination of a prolific writer with consistent,qualityand a very active critic (in tamil ).This is very rare indeed. I am not sure if there are many other contemporaries in tamil who would fit this mould.

  By nature what you are trying to do is perceived as a huge “conflict of interest”.What you write is / will be perceived as
  biased and subjective , especially when you do not hesitate to rate your own work amongst the best.This is bit touchy to our tamil psyche , this is more like .. “Rajiniganth ..declaring himself that I am the superstar ..:)

  Well we dont like it that way , superficial humility and humbleness is extremely highly rated in our culture, this is well
  evident in the “myth” of our heroes in movies , stories and public life.So all we want from rajni is to appear “hunble and simple” and we will take care of the rest :)

  2.//வாசித்தவற்றை இழக்க முடியாத தவிப்பையே நான் காண்கிறேன்//
  We naturally tend to consider a writer we “like” as a writer who is “great”, very similar to rating the actor we like has to be a great actor.This subjectivity is very difficult to surmount , because it means downsizing ones ego.
  Hero worship is a very integral part of out mental makeup.

  3. We are not used to critical views …in general .. ( I am not referring to taking sides and fighting , but plain objective talk about anything ).We are also not encouraged to provide critical views, as kids all we are repeatedly said not to ask questions and respect elders .This happened while I was in school ,my physics teacher was explaining the metrics ..quintal and ton and he was incorrectly referring to their values.After he continiously made the error for a very long time I gathered enough courage to very politely interrupted to say ..that maybe its not correct.
  Well he got so offended by my remark .that he threw the chalk out of the window and darted out of the class,and the rest of the class gave me that look as if I have abused the teacher.

  Critical thinking is take as offensive and offensive thinking is considered as critical.
  ————
  This aside,there is one question i would like to ask .if you have ever written a critical essay about your own work ?!
  Excuse me if this sounds stupid,but when you rate your own work as in “such and such” place .is it unfair to write abt it yourself as a critic ?
  I wasn’t asking this for ” vithandavatham” .. just curious :)

 23. RV

  அன்புள்ள ஜெயமோகன்,

  உங்கள் வால்யூ சிஸ்டம் பற்றி பேசுவோமே!

  சுருக்கமாக மனித மனதின் உச்சத்தை நேர்மையாக காட்டும் படைப்புகளை நீங்கள் சிறந்த இலக்கியம் என்று கருதுகிறீர்கள் என்று கொள்ளலாமா? எனக்கு தனிப்பட்ட மனித மனதின் உச்சம் ஒரு பகுதி என்று தோன்றுகிறது. ஒரு தருணத்தை அப்படியே பிடிப்பவை (அசோகமித்ரனின் ஒரு கதையில் ஒருவருக்கு திடீரென்று டிரைவிங் கை வந்துவிடும்), ஒரு குழுவினரின்/மனிதனின் வாழ்க்கை முறையை படம் பிடிப்பவை (பிறகு போன்ற நாவல்கள், ரத்னாபாயின் ஆங்கிலம்), டிவிஸ்டுகள் (சுராவின் விகாசம் சிறுகதை), கதைப் பின்னல் (plot என்பதை தமிழ்படுத்த என் முயற்சி, சரியாக வரவில்லை – பொன்னியின் செல்வன் போன்ற நாவல்கள்), சுவாரசியம் (ஸ்ரீமான் சுதர்சனம் போன்ற நாவல்கள்), சிந்தனையை தூண்டுபவை (புதுமைப்பித்தனின் சாப விமோசனம்), தொழில் திறமை (ஜே ஜே சில குறிப்புகள், பி.தொ.நி. குரலில் வரும் பலவிதப்பட்ட “இடைச்செருகல்கள்”) என்று நிறைய சொல்லலாம் என்று தோன்றுகிறது.

  எங்கோ படைப்புகளை தரவரிசைப் படுத்துவது என்ரென்றும் நடந்து வருவது என்று எழுதி இருந்தீர்கள். மோக முள்ளையும் கனவுத் தொழிற்சாலையையும் சுலபமாக ஒப்பிட முடிகிறது. ஆனால் மோக முள்ளையும் நாளை மற்றொரு நாளையையும் நீங்கள் எப்படி சீர்தூக்கி எது சிறந்தது என்று சொல்வீர்கள்? நான் இரண்டும் சிறந்த படைப்புகள், வேறு வேறு தளம் என்று சொல்லிவிட்டு நழுவிவிடுவேன். :-)

  நீங்கள் இதைப் பற்றி எங்காவது நிச்சயமாக எழுதி இருப்பீர்கள். சுட்டி கொடுத்தால் கூட போதும். விவரமாக மீண்டும் எழுதினால் மகிழ்ச்சியாக இருக்கும்.

 24. pichaikaaran

  இனிய ஜெமோ . . தனிப்பட்ட முறையில் இல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் இலக்கியம் சார்பாக பதில் அளிக்கவும் .
  இது வரை இல்லாத அளவுக்கு தமிழ் இலக்கிய உலகம் அதள பாதாளத்தை அடைந்துள்ளது. வெளிநாட்டு கலை சொற்களை மொழி பெயர்க்க பழகுவது , அவர்களை போல எழுதிபார்ப்பது, வாக்கியங்களை கூட அந்நிய மொழி பாணியில் எழுத முயல்வது -இதுதான் தமிழ் இலக்கியம் . மண்ணின் பண்பாடு , அதன் பிரச்சினை பற்றி பேசாமல் உலக இலக்கியம் படைப்பதாக உதார் விடுவதால் , இன்றைய இலக்கிய உலகம் மக்களை விட்டு விலகிவிட்டது. மாறாக வணிக எழுத்து என வர்ணிக்கப்படும் பாலகுமாரன் எழுத்துக்கள் மக்களுக்கு நெருக்கமாக உள்ளன . அப்படி பார்த்தால் பாலகுமாரன் எழுத்தை தமிழ் இலக்கியம் என்றும் நீங்கள் கொண்டாடும் எழுத்தை சர்வதேச இலக்கியம் என்றும் வகைப்படுத்தலாமா ?

 25. bala

  வேணாம்.. வலிக்குது.. அழுதுருவேன்

 26. droana

  //இது வரை இல்லாத அளவுக்கு தமிழ் இலக்கிய உலகம் அதள பாதாளத்தை அடைந்துள்ளது. வெளிநாட்டு கலை சொற்களை மொழி பெயர்க்க பழகுவது , அவர்களை போல எழுதிபார்ப்பது, வாக்கியங்களை கூட அந்நிய மொழி பாணியில் எழுத முயல்வது -இதுதான் தமிழ் இலக்கியம்//

  அதள பாதாளத்தை அடைந்த ஓர் இலக்கிய உலகினில் இது போன்ற ஆரோக்கியமான விவாதங்கள்(உங்களுடைய வாதத்தினை தவிர்த்து…) நிகழுமா அன்பரே..? எந்த மண்ணின் பன்பாட்டினை பேசாது விட்டன தமிழ் இலக்கியங்கள்..கி.ரா.வின் “கோபல்லபுர மக்கள்” நாவல் சொல்லாத தமிழர் பாரம்பரியமா..?இந்திரா பார்த்தசாரதியின் கதைகளிலும் , நாவல்களிலும் வெளிப்படாத
  சமூக பிரச்சனைகளா…,இல்லை உளவியல் சிந்தனைகளா? (வாசிக்க : “கிழவிக்கு தெரிந்த ரகசியம்”-சிறுகதை…மழை-நாடகம்)…ஜெயமோகனது “பத்ம வியூகம்” நெடுங்கதையிலோ,
  அல்லது எஸ்.ராவின் “வேனல் தெரு” சிறுகதையிலோ நீங்கள் எந்த அந்நியமொழி பாணியினை கண்டீர்கள்..?

  துரோணா

 27. ayyayyo

  தமிழிலக்கிய உலகம் அதல பாதாளத்தை அடைந்தாலும் சரி, விண்ணுயரப் பறந்தாலும் சரி, எந்தக் காலத்திலும் இந்தப் பத்தாயிரம் நபர்கள்தான் கூடிக் கூடி கும்மி அடித்துக்கொண்டிருக்க வேண்டும். மீதி உள்ள 7 கோடி சொச்சம் மனித சமுத்திரத்துக்கு இலக்கியம் என்றால் மாச நாவல், Story books, 6 மார்க் மனப்பாடச் செய்யுள், அனுராதா ரமணன், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கண்ணகியா மாதவியா பட்டிமன்றம், ராஜேஷ்குமார், வைரமுத்து, குமுதம், லோகல் கம்பன் கழகம், இம்சை பிடித்த தமிழ் அய்யாக்கள், அம்மாக்கள், நேர விரயம்…இந்த சட்டகம் தமிழ் முனைவர் பட்டம் வரை பயின்ற ஒரு சாராருக்கும் பொருந்தும் என்பதே தமிழ் இலக்கியத்தின் தலைவிதி.

 28. எம்.ஏ.சுசீலா

  அன்பின் ஜெ.எம்.,.,
  இந்த விவாதத்துக்கு நீங்கள் முற்றுப் புள்ளி வைக்குமுன் கோமதிசங்கருக்கு ஒரு சிறு விளக்கம் அளிக்க எனக்கு அனுமதி வேண்டும்..
  கோமதிசங்கர்அவர்களுக்கு..!
  என் ஆசிரியப் பணி பற்றிய இலேசான கிண்டல் தொனியும்,அதைக் கொச்சைப்படுத்தும் போக்கும் தங்களிடம் தென்படுவதால் இவ்விளக்கம்.
  80 களில் – தொலைக்காட்சி போன்ற பிற ஊடகங்கள் பரவலாகாத ஒரு காலகட்டத்தில் ஓரளவு வாசிப்புப் பழக்கமும் இலக்கிய ஆர்வமும் கொண்ட பல மாணவர்கள் – குறிப்பாகப் பெண்கள் , ரமணிசந்திர வாசிப்பிலிருந்து பாலகுமார வாசிப்புக்குத் தாவிக் கொண்டிருந்தார்கள்.(அதற்கான காரணங்கள் ஏற்கனவே ஜெ.எம்மால் பல பதிவுகளில் சொல்லப்பட்டும் இருக்கிறது.)
  ஆண்-பெண் உறவுகளை ஆரோக்கியமாகக் காட்டுவது போன்ற போர்வையில் மலினமான கிளர்ச்சியூட்டுவது…,வேலைக்குப் போகும் நடுத்தரவர்க்கப் பெண்கள் , முதிர் கன்னியர் மீது கரிசனம் காட்டுவது போன்ற பாவனையில் மிகச் சாதுரியமாக மீண்டும் ஆணாதிக்கக்கூண்டுக்குள்ளேயே அவர்களை அடைக்க முற்படுவது இவற்றைத்தான் அப்போது மிகத் தந்திரமாக பாலகுமாரன் செய்து எழுத்து வணிகத்துக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்தார்.பதின் பருவ மாணவியர் பலரிடம் அது உண்டாக்கிய பல தவறான தாக்கங்களை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
  (பாலகுமாரனின் போலிப் பெண்ணியம் என்றே பல்கலைக்கழகத்தில் நான் ஒரு கட்டுரை வாசித்ததுண்டு.வேண்டுமானால் என் வலையில் உங்களுக்காக அதை வெளிடுகிறேன்.)

  எந்த ஒரு நேர்மையான ஆசிரியருக்கும் இருக்கக்கூடிய அற உணர்வின் அடிப்படையே அந்தவகை எழுத்துக்களின் அடிப்படையே பிழையானது என்பதைச் சுட்டுமாறு என்னைத் தூண்டியது.
  ஒன்றாம் வகுப்பிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்து விட முடியுமா என்ன.
  தி.ஜா,லா.ச.ரா,சு.ரா என்று எல்லைகளை விரித்துப் பறக்க வழி மட்டும் செய்து தந்த பிறகு,அவர்கள் புற வழிகாட்டுதல்களின்றித் தாங்களாகவே நல்ல இலக்கியத்தைக் கண்டடைந்து கொண்டார்கள்.

  சிற்றிதழ்களில் தீவிரம் என்ற பேரில் முன் வைக்கப்படும் ஆக்கங்களின் மீதும் கூட(-நீங்கள் சொன்னது போலத் தீவிரம் என்று சொல்வதாலேயே அவற்றைப் பூப் போட்டு வழிபடாமல் – )எந்த இடத்தில் எதை வைக்க வேண்டும் என்ற புரிதல் அவர்களுக்கு வாய்த்தது.
  தேவைப்படும் இடங்களில் எவற்றின் மீதும் விமரிசனம் வைக்கத் தயக்கமற்ற மனப் பண்பே இத்தகைய கல்வியால் வாய்க்கக் கூடியது.
  அந்த எளிய பணியை மட்டுமே என்னால் இயன்றவரை நான் செய்துவந்தேன்.அவ்வளவுதான்.
  நான் குறிப்பிட்டதும் அதை மட்டும்தான்.
  தேர்வடம் பிடித்து இழுக்கத்தான் முடியும்.நகரவே மறுத்து இருக்கும் இடத்திலேயே நிலைப்பட்டால் அதற்கு வாய்த்ததது அவ்வளவுதான் என்று விட்டுவிட்டுப் போக வேண்டியதுதான்.

  என் பொறுமையின்மைக்குக் காரணம் ஒரே வினா வெவ்வேறு வடிவங்களில் வருவதையும்,விவாதங்களை ஆழ்ந்து படிக்காமல் மேலோட்டமாக எதையாவது சொல்வதையும் பார்த்துத்தான்.
  தளத்துக்குப் பொறுப்பானவரே அமைதி காக்கையில் நான் அப்படிச் செய்தது பிழைதான்.மன்னியுங்கள்.

  .

 29. ஜெயமோகன்

  இந்த இடுகை மீதான பின்னூட்டங்கள் நிறுத்தப்படுகின்றன
  ஜெ

Comments have been disabled.