அஞ்சுவண்ணம் தெரு: தோப்பில் முகமது மீரானின் புதிய நாவல்

மரபான நாவல்களுக்குரிய வடிவமும் கருப்பொருளும் கொண்டது தோப்பில் முகமது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு . ஒரு தெருதான் கதைக்களம். அந்தத்தெருவில் வாழும் பலவகையான மனிதர்களின் வாழ்க்கைபற்றிய  ஒன்றோடொன்று பொருந்தும் உதிரிச்சித்தரிப்புகள்தான் கதை. காலமாற்றத்தில் அந்தத்தெருவுக்கு என்ன ஆகிறது என்பதுதான் கரு.

ஆனால் உயிரோட்டமுள்ள ஒரு இலக்கிய ஆக்கமாக இருக்கிறது இப்படைப்பு. உயிரோட்டம் என்னும்போதே நுட்பம், வளர்ந்துகொண்டே இருக்கும் இயல்பு இரண்டும் சுட்டப்பட்டுவிடுகின்றன. நல்ல கலைப்படைப்பின் இயல்பு அது. அஞ்சுவண்ணம் தெரு  அதன் கதாபாத்திரங்களின் உறவுகளுக்குள் விடப்படும் மௌனங்களையும் காலமாற்றம் மூலம் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கொள்ளும் வளர்சிதை மாற்றங்களையும் கணக்கில் கொள்ளும் வாசகர்களின் ரசனையில் சுருளவிழ்ந்துகொண்டே இருக்கும்.

 

மீரானின் இலக்கியத்தனித்தன்மையை நேர்மை, நகைச்சுவை உணர்வு என்ற இரு சொற்களில் வகுத்துரைத்துவிடலாம். அந்த இயல்புகள்தான் அவரது நாவல்களை சுவாரஸியமான இலக்கிய ஆக்கங்களாக ஆக்குகின்றன.சென்ற காலங்களில் தேர்ந்த இலக்கியவாதிகளாலும் எளிய வாசகர்களாலும் அவை ஒருங்கே பாரட்டபப்ட்டன. பிறிதொரு மொழியில் அவர் எழுதியிருந்தால் பெரும்புகழ்பெற்ற மக்கள் எழுத்தாராக இருந்திருப்பார்.

20 வருடம் முன்பு  சுந்தர ராமசாமி தோப்பில் முகமது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ யைப் படித்துவிட்டு சொன்னார், ‘இவரு மனிதாபிமானி. எளிய மக்களோட சுகதுக்கங்களிலே இயல்பா மனசு போய் படிஞ்சுடுது. அவங்க கஷ்டப்பட்டு மேலே வாறதுக்குமேலே இவருக்கு அலாதியான ஒரு கரிசனம் இருக்கு. இதுதான் இவரோட பலம்” ஆம், பெரும்பாலான சிறந்த யதார்த்தவாத இலக்கியவாதிகளைப்போலவே மீரானும் மனிதாபிமானி. மனிதவாழ்க்கையின் அவலங்களையும் அவற்றின் பாறைக்கனத்தினூடாக வேர் ஊன்றி தளிர்விட்டு எழும் அன்பின் அழியாத உயிரையும்தான் எப்போதும் அவர் சொல்கிறார். மீண்டும் மீண்டும் எளிய மனிதர்களின் துயரங்களையே அவர் புனைவு நாடுகிறது

ஆனால் எப்போதும் பக்கம்சாராத நடுநிலை நோக்குடன் வாழ்க்கைக்குள் செல்வது அவரது வழக்கம். எளிய சமன்பாடுகளை அவரது நாவல்கள் கொண்டிருக்கவில்லை. அந்த இயல்பு ‘அஞ்சுவண்ணம் தெரு’விலும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. இந்நாவலின் கருத்துக்கட்டமைப்பை இவ்வாறு வகுத்துக்கொள்ளலாம். ஒரு மண்ணில் முளைத்து அம்மண்ணின் இயல்பாகவே திகழும் மரபான வாழ்க்கைநோக்கு ஒருபக்கம். மறுபக்கம் புதிய காலத்தில் உலகளாவிய தன்மையுடன் வரும் வாழ்க்கை நோக்கு. இவ்விரண்டுக்கும் இடையேயான மோதலே அஞ்சுவண்ணம் தெரு .

மரபான வாழ்க்கை  யதார்த்தத்தின் ஊடுக்குப் பாவாக கனவாலும் நெய்யப்பட்டது. நீண்ட இறந்தகாலம் அவர்களின் ஆழ்மனத்தில் மொழியின் ஆழத்தில் கனவுகளாக மாறிவிட்டிருக்கிறது. வரலாறுதான் ஐதீகங்களாகவும் தொன்மங்களாகவும் நம்பிக்கைகளாகவும் ஆசாரங்களாகவும் கட்டமைக்கபப்ட்டிருக்கிறது. அவர்கள் நினைவில் நிறுத்திக்கொள்ள விரும்பிய விஷயங்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் சாரமாக முன்வைக்க விரும்பும் விஷயங்கள். அவையே அவர்களின் வழிபடுபொருளாக மெல்லமெல்ல மாறுகின்றன. வழிபாடென்பது ஒருவகையில் ஓர் உண்மையை தெய்வீகமானதாக ஆக்கி அதை எப்போதைக்குமாக நிலைநாட்டும் உத்தி.

இறைநேசர்கள், மாவீரர்கள், கவிஞர்கள்,அறிஞர்கள், தியாகிகள் ஆகியோரை மரபான மனம் தன் மனத்தில் இறைவனின் பிரதிநிதிகளாகவே நிலைநாட்டிக்கொள்கிறது. அவர்கள் தங்கள் வாழ்வில் முன்வைத்த மதிப்பீடுகளை தெய்வீக ஆணைகளாக ஏற்றுக்கொள்கிறது. இதன் விளைவாகவே எல்லா மதங்களிலும் புனிதர் வழிபாடு உருவாகியிருக்கிறது. சமணம், பௌத்தம், கிறித்தவம், இந்து, இஸ்லாம் எதுவுமே விதிவிலக்கல்ல. இஸ்லாமிய மதத்துக்குள் உள்ள தர்ஹா வழிபாடு மாமனிதர்களும் ஞானிகளுமான சூ·பிகளின் நினைவை நிலைநாட்டுகிறது.

‘வழிபடப்பட வேண்டியது இறைவன் மட்டுமே’ என்ற ஒற்றைத்தரிசனத்துடன் வஹாபிய கோட்பாடுகள் இச்சூழலில் அறிமுகம் ஆகின்றன. குர் ஆன் என்னும் மூலப்பிரதி அல்லாமல் பிற அனைத்தையுமே நிராகரிக்கக் கூடிய அடிப்படைவாதமே சீர்திருத்தமாக முன்வைக்கப்படுகிறது. இஸ்லாமுக்குள் இது ஒரு முக்கியமான முரண்பாடு. பிறமதங்களில் மதச் சீர்திருத்தங்கள் மத இறுக்கத்தை மனிதாபிமான நோக்கில் நெகிழச்செய்யவும், காலத்துக்கு ஏற்ப மாற்றங்களைக் கொண்டுவரவும்தான்  உருவாயின. இஸ்லாமில் மேலும் இறுக்கத்தையும் காலத்தில் பின்னோக்கிச்செல்லும் நோக்கத்தையும் கொண்டு வரக்கூடிய அணுகுமுறையே சீர்திருத்தமாக முன்வைக்கப்படுகிறது.

இன்று இந்தியாவெங்கும், உலகெங்கும், நிகழ்ந்துவரும் முரண்பாடையும் மாறுதலையும்தான் இந்நாவலும் முன்வைக்கிறது. இஸ்லாம் வேகமாக வஹாபி மயமாக்கபப்ட்டுவருகிறது. சமீபத்தில் பல ஊர்களில் வீடுவீடாக்ச்சென்று குணங்குடி மஸ்தான் சாயபு பாடல்கள், சீறாப்புராணம் போன்ற இஸ்லாமிய இலக்கியங்களை தேடிச் சேகரித்துக் கொண்டு வந்து முச்சந்திகளில் போட்டு எரித்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

அஞ்சுவண்ணம் தெரு நாவலில் தௌகீதுவாதிகள் அத்தரப்பை வேகத்துடன் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அன்ச்ஜுவண்ணம் தெருவின் ஆன்மீகப் பொக்கிஷமாக இருக்கும் தக்கலை பீரப்பா பாடல்களும் ஆலீம்புலவரின் மொஹராஜ்மாலை என்ற காவியமும் அவர்களால் இறைவனுக்கு இணைவைப்பாக கருதப்படுகின்றன. அவற்றைப்பாடுபவர்கள் நெறிதவறியவர்களாக வசைபாடபடுகிறார்கள். மெல்லமெல்ல ஒரு காலகட்டமே மூழ்கி மறைகிறது.

மரபான முறையில் உள்ள வழிபாடுகளும் நம்பிக்கைகளும் எளிய மக்களால் மேலும் மேலும் எளிமைப்படுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் மூடநம்பிக்கைகளின் எல்லைநோக்கிச் செல்கின்றன. அவை மக்களை இருளில் கட்டிப்போடுவனவாக, புதியகாலத்தை எதிர்கொள்ள முடியாமல் ஆக்குவனவாக ஆகின்றன. அதே சமயம் புதிய அடிப்படைவாதச் சீர்திருத்தப் போக்கு மூர்க்கமான ஒற்றைப்படைவாதத்தை முன்வைத்து மரபில் உள்ள மண்சார்ந்த அம்சங்களை முழுமையாக நிராகரிக்கிறது. மக்களின் பிரக்ஞையில் வேரூன்றியிருக்கும் விழுமியங்களை அழிக்கிறது. வரலாறற்ற வேரற்ற மக்களாக அது மக்களை மாற்றுகிறது.

நடைமுறையில் நோக்கினால்கூட மரபான நோக்கு இஸ்லாமியர்களை மனிதாபிமானம் கொண்டவர்களாக, பிற சமூகத்துடன் இணைந்து கலந்து வாழ்பவர்களாக, பிறரால் விரும்பப்படுபவர்களாக நிலைநாட்டியிருந்தது. புதிய அடிப்படைவாதச் சீர்திருத்த நோக்கு இஸ்லாமியர்களை உள்ளிருந்து வாசலைத் தாழிட்டுக் கொண்டவர்களாக, பிறரை மதம்சார்ந்து வெறுப்பவர்களாக, ஆகவே பிறரால் வெறுக்கப்படுபவர்களாக ஆக்கியிருக்கிறது.

மிகச்சிக்கலான இந்த கத்திமுனையில் தன் நேர்மைமூலமே தெளிவான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் தோப்பில் முகமது மீரான். எந்த ஒரு தரப்பையும் அவர் ஆதரிக்கவில்லை. எதன் பொருட்டும் அவர் வாதாடவில்லை. இரு தரப்பின் சித்திரத்தையும் நுட்பமாக அளித்துக்கொண்டு முன்னே செல்கிறார். இருதரப்பிலும் மிகச்சிறந்த கதைமாந்தர்களை கண்டடைகிறார். ஆனால் நாவலின் ஒட்டுமொத்தமாக மரபான நோக்கு மேலதிக அழுத்தத்தை பெறுகிறது. அதற்குக் காரணம் மீரானின் இயல்பான மனிதாபிமானமே. எளிய மக்களின் ஆன்மீகத்தைச் சார்ந்து அவரது ஆழ்மனம் கொண்ட நெகிழ்ச்சியே.

இந்த கருத்துச் சட்டகத்துக்குள் உயிருடன் ததும்பும் ஒரு வாழ்க்கையை தோப்பில் முகமது மீரான் சித்தரிக்கிறார். அஞ்சுவண்ணம் தெருவில் ஷேக் மதார் சாகிபிடமிருந்து விலைக்கு வாங்கிய பழைய வீட்டில் தாருல் ஸாஹினா என்று பெயர் சூட்டப்பட்ட வீட்டில் புதிதாக தன் மகளை குடிவைத்த வாப்பா அந்தத்தெருவின் கதையை எதிர்வீட்டு பக்கீர் பாவாவிடமிருந்து கேட்டுத்தெரிந்துகொள்ளும் விதமாக நாவல் ஆரம்பிக்கிறது.

அஞ்சுவண்ணம் தெருவின் ஓரத்தில் தாயாரின் சமாதி இருக்கிறது.பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் மலையாளத்து மன்னர் சோழபாண்டிய நாடுகளில் இருந்து கைதேர்ந்த நெசவாளிகளான ஐந்து முஸ்லீம் நெசவாளர்களை அந்த தெருவில் குடிவைத்தார். அவ்வாறு உருவானதுதான் அஞ்சுவண்ணம் தெரு  என்ற பெயர். அந்த நெசவாளர்களின் பரம்பரைதான் அங்குள்ளவர்கள். அவர்களின் பெண்கள் பேரழகிகள். அவர்களில் பெரிய அழகி ஹாஜறா. அவளை தற்செயலாகக் கண்ட மன்ன அவளை அடைய ஆள் சொல்லி அனுப்புகிறாள். மானத்தை இழக்க விரும்பாத ஹாஜறா தானே தன் குழியில் படுத்துக்கொண்டு உயிருடன் சமாதிசெய்யப்படுகிறாள். அவள் அந்தத்தெருவின் காவல்தெய்வமாக ஆகிறாள்.

அஞ்சுவண்ணம் தெருவின் ஆழ்மனத்தில் தயாரின் சமாதி ஒரு பெரிய இடம் வகிக்கிறது. அந்த சமாதியைச் சுற்றி ஏராளமான தொன்மங்கள் உருவானபடியே இருக்கின்றன. அவை அம்மக்கள் இறந்தகாலத்தை நிகழ்காலத்துடன் பொருத்திக்கொள்ளும் ஒரு முறை என்று சொல்லலாம். தாயாரம்மாவின் குடும்பம் ஊரைவிட்டு போய் பலநூற்றாண்டுகளுக்குப் பின் அவர்கள் மரபில் வந்த மகமூதப்பா மக்காவிலிருந்து வந்து தன்னுடைய ஜின்னுகளைக்கொண்டு கட்டியதுதான் அந்த தைக்கா பள்ளி. அவர்தான் தொழுவதெப்படி என்று அம்மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தார் என்பது ஐதீகம்.

அவரிடமிருந்து தீன் கற்றுக்கொண்டு முதலில் பாங்கு சொன்ன மம்மேலி மோதீனின் பரம்பரையில் வந்த மைதீன் பிச்சை மோதினார் அந்த தைக்கா பள்ளியில் பாங்கு சொல்கிறார்.ஆனால் தைக்கா பள்ளியில் எவரும் தொழுவதற்கு வருவதில்லை. இடிந்து சரிந்து கிடக்கிறது அது. மோதினார் அங்கே தவறாமல் விளக்கு பொருத்தி பாங்கு சொல்கிறார். அதற்கு மேலுலகில் கிடைக்கும் கூலியேபோதும் அவருக்கு. ஊரில் அவருக்கு ஒருவேளைச் சோறு கூப்பிட்டுக்கொடுப்பதற்குக்கூட ஆளில்லை.

இந்நாவலின் மையக்கதாபாத்திரமே மோதினார்தான் என்று சொல்லலாம். சென்றகாலத்தின் மையமான சில விழுமியங்களின் பிரதிநிதி அவர். அழுத்தமான மதநம்பிக்கை. பலனே எதிர்பாராத அர்ப்பணிப்புள்ள வாழ்க்கை. தனக்குள் கண்டுகொண்ட நிறைவு. சென்ற காலம் முழுக்க தொன்மங்களாக அவரது மனதில் படிந்திருக்கிறது. அவருக்கு தாயாரம்மாவும் ஆலிம்புலவரும் மஹமூதப்பாவும் எல்லாம் வாழும் உண்மைகள்.

சென்றகாலத்தின் இன்னொரு பிரதிநிதி குவாஜா அப்துல் லத்தீ·ப் ஹஜ்ரத். மொகராஜ் மாலை எழுதிய ஆலிம்புலவரின் வாரிசு அவர். அஞ்சுவண்னம் தெருவின் இலக்கியச் சொத்துக்குப் பாதுகாவலர். பீரப்பா பாடல்களும் ஆலிம்புலவரின் பாடல்களும் அவருக்கு பாடம். அவருடைய குரலாலேயே தெரு அந்த இலக்கியமரபை அறிந்திருக்கிறது.

தெருவின் பிரதிநிதியாக இருப்பவள் மகமூதும்மா. பரிபூரணமான அனாதை. தெருவிலேயே வளர்ந்து தெருவிலேயே மணம் முடித்து வீட்டுத்திண்ணைகளில் அந்தியுறங்கி வாழ விதிக்கபப்ட்டவள். மீரானின் உள்ளே உள்ள கலைஞனின் வல்லமை முழுக்க படிந்த முக்கியமான கதாபாத்திரம் இதுதான். நல்ல கலைபப்டைப்பில் ஆசிரியரை மீறியே சில கதாபாத்திரங்கள் இவ்வாறு முழுமையாக வெளிப்பாடுகொண்டுவிடும். சற்றும் தளராத வீரியம் கொண்டவள். எதற்கும் அஞ்சாதவள். அவளுடைய நாக்குதான் அவளுடைய ஆயுதம். தெருவின் குழாயை வல்லடியாகச் சொந்தமாக்கிக்கொண்டு அதையே தன் வாழ்வுக்கு ஆதாரமாக்கிக் கொள்கிறாள்.

அஞ்சுவண்ணம் தெரு  நாவல் முழுக்க வளர்ந்து முதிர்ந்து வரும் மம்முதும்மா பல முகங்கள் கொண்டவள். அனல் போன்ற நெறிகொண்டவளாயினும், ஊரிலுள்ள அனைவருடைய மீறல்களையும் தெரிந்து கொண்டு வசைபாடி அவர்களை அடக்கும் வல்லடிக்காரியாயினும், அவளுக்குள் குவாஜா அப்துல் லத்தீ·ப் ஹஜ்ரத் அவர்களுடனான உறவின் ஒரு ரகசியம் இருக்கிறது. அது அவளுக்கு ஒரு தெய்வீக அனுபவம். மெல்ல மெல்ல தெருவின் கடந்தகாலமாக மாறி மறையும் மம்முதும்மாவின் சித்திரம் ஒரு காலகட்டத்தையே கண்ணில் கண்டுவிட்ட அனுபவத்தை அளிக்கிறது.

வெள்ளிக்கிழமை மதச்சொற்பொழிவு ஒலிக்கத்தொடங்கும்போது புள்ளிச்சேலையை முகத்தின்மீது போட்டு அசையாமல் சிலை போல் இருந்து அதை முழுக்கக் கேட்கும் மம்முதும்மாவின் காட்சி தமிழிலக்கியத்தில் மிக முக்கியமான ஒரு தருணம். எளிய மக்களின் குணச்சித்திரத்தை அளிப்பதில் மீரானுக்கு எப்போதுமே ஒரு தேர்ச்சி உண்டு. கிட்டத்தட்ட வைக்கம் முகமது பஷீரை தொட்டுவிடும் எளிமையான நகைச்சுவையுடன் அவர்களின் மன ஓட்டங்களை அவரால் சொல்ல முடியும். விசித்திரமான ஐதீகக் கனவுகளும் நடைமுறை அச்சங்களும் கலந்து மம்முதும்மா உருவாக்கும் அஞ்சுவண்ணம் தெருவின் மாந்த்ரீகப்பிம்பங்களில் அந்த திறன் உச்சம் கொள்கிறது.

நாவலில் நவீன வஹாபியத்தின் சிறந்த முகமாக வருகிறார் வாப்பா. மூடநம்பிக்கைகள் சடங்குகள் கண்டு சலித்து வெறுத்து குர் ஆனின் தூய ஞானம் நோக்கி திரும்பியவர். அல்லாஹ் அன்றி அஞ்சவேண்டியதொன்றுமில்லை என்பதை குர் ஆனிலிருந்து கற்றுக்கொண்டவர். தன் நம்பிக்கைகளைச் சார்ந்தே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். குவாஜா அப்துல் லத்தீ·ப் ஹஜ்ரத் அவர்கள் மரியாதையுடன் ‘பாவா’ என்று அழைத்து ஆலிம்புலவரின் பாடலை ஓத அழைத்த போது ‘அதை நீரே வைத்துக்கொள்ளும்’ என்று தூக்கிவீசிச் சொல்லி அவரை திக்பிரமை கொள்ளச்செய்தவர் அவர். ஆனால் கைவிடப்பட்ட தைக்கா பள்ளிக்குள் சென்று தன்னந்தனியரான மோதினாருடன் சேர்ந்து அவரால் தொழமுடிகிறது.

நவீனகாலத்தின் அரசியல் நோக்கங்கள் முதன்மைப்பட்ட தௌஹீத் கட்சியினரின் அடையாளமாக வருகிறான் அபு ஜலீல். வெளிநாட்டுக்குச் சென்று வேலைசெய்து அங்கிருந்து வஹாபியக் கருத்துக்களைச் சுமந்து கொண்டு வந்து சேரும் அபு ஜலீல் இந்நாவலின் குறிப்பிடத்தக்க கதாபாத்திரம். அவனுக்கு மதம் என்பது திட்டவட்டமான சில கட்டளைகள் மட்டுமே. அம்மக்களின் வரலாற்று மரபும் மனமும் ஒன்றும் அவனுக்குப் பொருட்டல்ல. சாகுல் ஹமீது [சாவல்] என்று பெயருடன் பாத்திஹா ஓதியபின் விமானமேறியவன் சூ·பி பெயரே பாவம் என்று பெயரை மாற்றிக்கொண்டு திரும்பி வருகிறான். தொப்பி போட்டு தொழவேண்டுமென எந்த நூலில் சொல்லியிருக்கிறது என்று சொல்லி மசூதியில் விவாதம்செய்கிறான். தன் சுற்றத்தவர் அனைவருமே பாவிகள் என்கிறான்.

அரேபியப்பணத்தில் தௌஹீத்வாதிகளின் தரப்பு செயற்கையாக உப்பவைக்கபப்டுவதை தோப்பில் முகமது மீரான் சித்தரிக்கிறார். ‘கண்ணாடித் திரையில் எழுதி அனுப்ப அதை அங்கே கண்னாடித்திரையில் வாசித்து’ அனுப்பப்பட்ட பணத்தை இவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். வேம்படி பள்ளியின் நிர்வாகத்தை பணபலத்தால் கைப்பற்றியபின் அங்கே தௌஹீத் கொடியை ஏற்றி அந்த வெற்றியைக் கொண்டாடிவிட்டு அதைக் கைவிட்டு அடுத்த பள்ளிநோக்கி செல்கிறார்கள். அஞ்சுவண்ணம் தெருவில் அடிதடிகள் சாதாரணமாக நடக்கின்றன. போலீஸ் அதைப்பயன்படுத்தி உள்ளே நுழைந்து இளைஞர்களை வேட்டையாடுகிறது. தெரு அதன் அனைத்துத் தனித்தன்மைகளையும் இழந்து மெல்லமெல்ல அழிகிறது.

அஞ்சுவண்ணம் தெருவின் ஆதர்ச கதாபாத்திரங்கள் மெல்ல காலத்திரைக்குள் மறையும் காட்சியை விரிவாக விளக்கி முடிகிறது நாவல். மோதினார், ஹஜ்ரத் ஆகியோரின் இறப்பை அழுத்தமாகச் சித்தரித்திருக்கிறார் மீரான். மம்மதும்மாவில் கூடும் மௌனம் மரணத்தை விட அழுத்தமானது

விசித்திரமான ஒரு கனவுக்காட்சியுடன், அல்லது உருவெளிக்காட்சியுடன் , நிறைவுபெறுகிறது இந்நாவல். உறுதியான வஹாபிய நோக்கு கொண்டவரான வாப்பா தன் ஆத்மாவுக்குள் மோதினாரை காண்கிறார். அவருடன் இணைந்துகொள்கிறார். மரபின் சாரமும் புதுமையின் சாரமும் முரண்பாடில்லாமல் இணையும் ஆன்மீகமான புள்ளி ஒன்று உண்டு என்று கண்டுகொண்டு நிறைவுபெறுகிறது ‘அஞ்சுவண்ணம் தெரு’.

‘சாய்வுநாற்காலி’க்குப் பின்னர் சற்று இடைவேளை விட்டு மீண்டும் ஒரு முக்கியமான நாவலுடன் தமிழிலக்கிய உலகுக்கு வந்திருக்கிறார் மீரான்.

[ ‘அடையாளம்’ வெளியீடாக வெளிவரவிருக்கும் தோப்பில் முகமது மீரானின் ‘அஞ்சுவண்ணம் தெரு’ நாவல் குறித்து] 

தமிழில் சிறுபான்மை இலக்கியம்

என் குர்-ஆன் வாசிப்பு

பேருந்தில் தோப்பில் முகமதுமீரான்..

மீன்காரத்தெரு

புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.

முந்தைய கட்டுரைஅ.கா.பெருமாள் விழா:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅழிமுகம்:கடிதங்கள்