அழுந்தி பகிர வேண்டி பரவி வந்த எழுத்துக்கள்…
“வேதனையின் உச்சத்திலும், உவகையின் உச்சத்திலும் …” முனகல் மட்டும் அல்ல. உள்ளே உறையும் நிசப்தம் கூட. வலியின் மற்றும் மகிழ்வின் உச்சத்தில் தனித்து நிற்கையில் வரும் ரீங்கரிக்கும் நிசப்தம். பேருந்து எனும் பெரு வாழ்வில் ஏறி மற்றும் இறங்கி சென்றபடி இருக்கும் பயணிகள் போல வார்டுகளில் நோயாளிகள். வினை பயன் தீர்க்க வேண்டி வந்தது போல கிடந்தது இருந்து வலித்து அழுது அலர்ந்து செல்கையில் பிரசவ வார்டில் புதிய தளிர்களின் வரவுகள் தரும் வானவில்களின் கலவைகள்.
அவரின் அம்மாவை பற்றிய வரிகள் நெகிழ்வு தந்தது. பழைய தலைமுறையின் கடைசி நூல் முடிச்சு. பாசம் எனும் தோணி கொண்டு சொர்க்கம் செல்லும் ஆசிர்வாதங்கள். மக்கள் எனில் தனது வேறா பிறர் வேறா என்ன அவர்களுக்கு? சில அம்மக்களின் கைகள் ஏந்துவதற்கும் விரல்கள் விழி நீரை சுண்டி விடுவதற்கும் வரம் வாங்கி வந்தவை…
நீள் பயண பேருந்தில் பக்கத்துக்கு இருக்கையில் சுகமான துணை ஆள் அமைவது போன்றது சீனுவின் வரிகள். கேட்டதாக கூறவும்
அன்புடன்,
லிங்கராஜ்
*
பிரிய ஜெ,
கடலூர் சீனுவின் கடிதம் படித்தேன். துயரநேரத்தில் அவர் சுற்றியிருக்கும் அனைத்தையும் அவதானிப்பதும் தன் மகள் துயரம் தாண்டி அன்னை அனைவரிடமும் அன்புடனிருப்பதும் படிக்க நெகிழ்ச்சியாக இருக்கிறது. துயரங்களில் அன்னைகள் தன் மகளை மட்டும் மனிதப்பிறவியாகவும் மற்ற அனைவரையும் வேற்று கிரகத்தினர் போல் பார்ப்பதையே இதுவரை பார்த்திருக்கிறேன். அவருடைய நல்ல மனம் அவருக்கு ஆறுதலையும் திடத்தையும் தருவதாக. அவருடைய தங்கை விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
அன்புடன்
மீனா
*
அன்பு ஜெயமோகன்,
உங்கள் மின்னஞ்சலுக்குக் கடிதம் எழுதி நீண்ட நாட்களாகி விட்டன. வெண்முரசுவைத் தொடர்ந்து வாசிக்க இயலாத சூழல். ஆகவே, கடிதங்களுக்கு வாய்ப்பு அமையவில்லை. மற்றபடி, தங்கள் இணையதளக் கட்டுரைகளையும், பதிவுகளையும் படிக்கத் தவறுவதில்லை. இன்று(செப் 3, 2015) வெளியாகி இருந்த கடலூர் சீனுவின் மருத்துவமனை அனுபவங்கள் என்னைச் சில மணிநேரங்கள் உலுக்கி எடுத்துவிட்டன. மேலும், உள்ளுக்குள் ஒருவிதக் குடைச்சம் தொடர்ந்தபடியே இருந்தது. இக்கடிதத்த்தைத் துவங்கியபொழுதில் கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியது.
செய்க தவம் எனும் எளிய வரியுடன் துவங்கி இருந்தார் கடலூர் சீனு. அவ்வரியின் தொடர்ச்சி மிக முக்கியம். செய்க தவம்; அன்பிற்சிறந்த தவமில்லை. பாரதியை நான் சரியாகப் படிக்கவில்லையோ எனும் குற்ற உணர்வை ஏற்படுத்தும்படியான வரிகளை அவ்வப்போது யார் மூலமாவது எதிர்கொள்வதுண்டு. இப்போது சீனுவின் முறைபோல் தெரிகிறது. நம் மரபின் ஆணிவேர் சரியாகத்தான் இருந்திருக்கிறது. “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள்” எனும் வள்ளுவனில் துவங்கி “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” எனும் வள்ளலாரின் காலம் வரை அன்பை முன்னிறுத்திப் பேசாத சான்றோர் இல்லை. நம் சமயத்தின் பக்தி(உணர்வு) மற்றும் சித்தி(அறிவு) தளங்களிலும் அன்பே வியந்தோதப்படுகிறது. ”அன்பே தகளியாய்” என்று பூதத்தாழ்வாரும், “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிகிலர்” என்று திருமூலரும் பாடியதை நினைவுக்குக் கொண்டு வருவோம்.
தவம் எனும் சொல்லை துறவறத்தோடு முடிச்சு போட்டே நாம் பழகிவிட்டோம். அங்குதான் ஒரு மாற்றுப்பார்வையை பாரதி முன்வைக்கிறான். செய்க தவம் எனச் சொல்லும் அவன் அன்பையே தவமாக பின் அடையாளம் காட்டுவது திடும்மென நிகழ்ந்த ஒன்று அல்ல என்றே நான் கருதுகிறேன். அக்கருத்து ஒரு மறைசரடாக நம் மரபில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன். ”உற்றநோய் நோன்றல்”, “உயிர்க்கு உறுகண் செய்யாமை” போன்றவற்றைத் தவத்தின் உருக்களாக அன்றே வள்ளுவன் சொல்லி இருக்கிறான். பாரதிக்கும் ஒருபடிமேலாக தவத்தின் உருவாக “உற்றநோய் நோன்றலை” வள்ளுவர் முன்மொழிவதை ஆழ்ந்து யோசிக்க வேண்டும். நோய் என்றவுடனே நாம் அய்யோ, குய்யோவென்று கூப்பாடு போடுகிறோம். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று வெந்து குமைகிறோம். உற்றநோய் நோன்றல் எனும் வாக்கியத்தின் அர்த்தம் விளங்கிக்கொள்ளும் ஒருவனுக்கு நோய்கள் பெரிதான சுமையாக இராது. மேலும் சமயத்தின் மையப்பொருளை நெருங்கும் ஒருவனுக்கு அவனின் உடல் மனநோய்களுக்கான மருந்தாக அதுவே இருப்பது புரியவரும். கொஞ்சம் கொஞ்சமாக அறிவுவழிப்பட்டிருக்கும் சிகிச்சை உணர்வுவழிக்கு நகரும்போது சிகிச்சை இயல்பாக அமையும் அற்புதமும் நிகழ்கிறது. வெப்பு நோய், குட்ட நோய் போன்ற கொடிய் நோய்கள் சிகிச்சையின்றியே நம் சமயத்தில் குணமாகி இருக்கின்றன என்பது இன்றைய தலைமுறை அறிந்திராத செய்தி.
“கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்” எனும் வரியை நேரிடையாக ’பகுத்தறிவு’ அர்த்தம் கொண்டு விளங்கிக்கொள்ளக் கூடாது. நம்பிக்கை எனுஞ்சொல் புறவயமானதன்று; முழுக்க அகவயமானது. அதனால்தான் தங்கள் “கடவுள் இல்லை” எனும் நம்பிக்கையில் உயிர்ப்புடன் இருக்கின்றனர் நாத்திகர்கள். “கடவுள் இருக்கிறார்” என்பது எப்படி ஒருவித நம்பிக்கையோ அப்படி “கடவுள் இல்லை” என்பது அதற்கு எதிரான நம்பிக்கை. அவ்வளவே. இரண்டிலும் நம்பிக்கைதான் அடிப்படை. அந்நம்பிக்கைக்கு வர குறைந்தபட்ச அறிவும் அவசியம். அதற்கு மேற்கொண்டு அறிவால் நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. நம் அறிவுத்துறையில் நிகழ்ந்த மாற்றங்கள்தான் நம் உடல் மன நோய்கள் அதிகரிப்புக்கான காரணம் என்பது என் தீர்மானமான கருத்து. உயிர் – உடல் – மனம் எனும் படிநிலையில் நம் சமயம் உயிரை முதன்மைப்படுத்துவதன் ஊடாக நம் அச்சத்தையும் நோய்களையும் களைந்தது. அறிவுத்துறைகளோ உடல்-மனம் என்பதாக மட்டும் நம்மை அடையாளப்படுத்தி நம்மைப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. திரும்பவும் சொல்கிறேன். சமயம் என்பது முட்டாள்தனமன்று; பொதுப்படையான பொருள் கொள்ளக்கூடியதும் அன்று. ஒரு குறிப்பிட்ட நிலத்தின் மரபும் வாழ்வியலுமே சமயமாக உருக்கொண்டிருகிறது. அதன் அடித்தளத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த முன்னோர்களின் நல்வாழ்வு உயிர்ப்போடு இருக்கிறது. அதைக் கண்டு தெளிபவனே சமயி. கடவுளை நம்புங்கள், நம்ப வேண்டாம் என ஒரு சம்யி வலியுறுத்துவதில்லை. மாறாக, தனிமனிதனை “நீ யார் என ஆயத்துவங்கு” எனத் தூண்டுவதே அவன் வேலையாய் இருக்கும். ”தம்மை உணரார் உணரார்” என்பது மெய்கண்டாரின் தரிசனம்.
”நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” எனும் சிந்தனையை அப்படியே நேரடியாக புரிந்து கொள்ளாமல் நம் உற்சாகத்துக்கு வலுசேர்க்கும் சக்தியாக எடுத்துக் கொள்கிறோமோ அப்படித்தான் கடவுள் நம்பிக்கையும். ”கடவுளை முழுதாக நம்பி அவனிடம் தன்னை ஒப்படைக்கும் ஒருவன் காப்பாற்றப்படுகிறான்” என்பதும் அப்படியான உந்துசக்தியே. அப்படியான நம்பிக்கை இல்லாமலேயே என்னால் வாழ்ந்துவிட முடியும் என்று சொன்னால் அவனையும் சம்யம் அணைத்துக்கொள்கிறது. சமயம் முன்வைப்பது எப்போதும் காரணம் அற்று மகிழ்ச்சியாய் இருக்கும் ஒருவித ஆனந்த்த்தையே. எவ்வழியில் நாம் அதை அடைந்தாலும் சமயம் மறுதலிப்பதில்லை. அதேநேரம், அவ்வானந்த்த்தை உடலுக்கும் மனதுக்கும் ஊறுவிளைவிக்கும் செயற்கைக்காரணிகள்(போதைப்பொருட்கள்) வழி அடைய நினைப்பதும் முட்டாள்தனம். அது வருவிக்கப்பட்ட ஆனந்தமாக இருக்குமே ஒழிய், இயல்பான ஆனந்தமாக இராது. நம் சமயம் வலியுறுத்துவது இயல்பான ஆனந்த்த்தை. நடராசப்பெருமானின் ஆனந்த நடனமும், முல்லைத் திருமாலின் குழலூதும் இசையும் அவ்வியல்பையே காட்சிப்படுத்தி இருக்கின்றன. சிலநேரங்களில் உயிர்க்கு நேரும் உறுகண் கண்டு நம்மில் வெளிப்படும் அழுகையும் சமயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. “கசிந்துருகி கண்ணீர் மல்கி” எனும் சொல்லாடல் இறைவனை மனதில் கொண்டு மட்டுமன்று.
எதையோ சொல்ல வேண்டும் என்று துவங்கி எங்கேயோ சென்றுவிட்டது என்பது போலிருக்கிறது. என்றாலும், நான் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டதான நிறைவு உள்ளுக்குள் முகிழ்த்திருக்கிறது. அந்நிறைவின் ஓரமாய் அழுதபடி நின்றிருக்கும் என்னைக் காண நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. உடம்பின் இடது பாகங்கள் முழுக்கச் செயலிழந்த நிலையில் மனவளர்ச்சி அற்ற இருபது வயதுப் பெண்ணின் முகத்தை மனதுக்குள் கொண்டு வாருங்கள்; போதும். செய்க தவம். அழுகையிற் சிறந்த தவமில்லை.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.