கல்புர்கி கொலை- கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

வழக்கமாக வெகு நிதானித்தே சரியான கருத்தை சொல்லும் நீங்கள் இந்த விசயத்தில் அவசரப்பட்டு விட்டீர்களோ என நினைக்கிறேன். எல்லாவகையிலும் இது ஓர் அரசியல்படுகொலை என்ற முடிவிற்கு அதற்குள் எப்படி வந்து விட்டீர்கள்?.”ஆனானப்பட்ட ” தி ஹிந்து நாளிதழே
( ஏனெனில் ‘ஹிந்துத்துவா கும்பல்’ இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்பதே அவர்களுக்கு மிகவும் உவப்பான செய்தி) இந்த கொலைக்கு சொத்து தகராறும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று செய்தி வெளியிட்டு இருக்கும்பொழுது நீங்கள் ஏன் இப்படி ஒரு முன் முடிவுக்கு வந்தீர்கள்?.
The police said that preliminary investigations had revealed that Kalburgi had intervened in a property dispute within the close family circle
மேலும் அரசு அளித்துள்ள போலீஸ் பாதுகாப்பையும் சில நாட்களுக்கு முன் அவரே வேண்டாம் என்று மறுத்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.

‘ஹிந்துத்துவா கும்பலை’ சற்றேனும் நியாய படுத்தும் எண்ணம் எனக்கு இதில் இல்லை ஆனால் நீங்கள் மற்றவர் முன்னால் தேவை இல்லாத விமர்சனத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்ற ஆதங்கத்தில்தான் இந்தக் கடிதம்…

அன்புடன்,

அ .சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி

சிலவருடம் முன்பு வேலூரில் இந்து முன்னணி தலைவர் வெள்ளையன் கொலைசெய்யப்பட்டார். அது முழுக்கமுழுக்க தனிப்பட்ட தொழில்விரோதத்தால் நிகழ்ந்த கொலை என்று போலீஸ்தரப்பில் சொல்லப்பட்டது. வழக்கும் முடிக்கப்பட்டது. ஒருவருடம் கழித்து இன்னொரு வழக்கில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினர் கைதுசெய்யப்பட்டபோது வெள்ளையன் கொலையை அவர்கள் செய்ததை அவர்களே ஒப்புக்கொண்டனர். இப்போது வழக்கு அவர்கள்மேல் திரும்பியிருக்கிறது

ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் கொலைசெய்யப்பட்டபோது அவரது தனிப்பட்ட ஒழுக்கம் நேர்மை ஆகிய அனைத்தையும் பழித்துரைத்து செய்திகள் கசியவிடப்பட்டன. அவரை ஒரு நிழல் உலக தாதா அளவுக்கு ஊடகங்களும் ஃபேஸ்புக் போராளிகளும் வசைபாடினர். அவரைப்பற்றி நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன். அரசியலை விடுங்கள். தனிமனிதர் என்ற வகையில் கருணையும் சேவைமனநிலையும் கொண்ட அற்புதமான மனிதர் அவர். நம்மூரில் அரசியல் பேசுபவர்களிலேயே அவருக்கு நிகரான நேர்மையும் கருணையும் கொண்டவர்கள் மிகச்சிலரே.

ஓர் அரசியல்கொலை நிகழும்போது கொல்லப்பட்டவரை எதிர்மறையாகக் காட்ட முயல்வதும், தனிப்பட்ட காரணங்களால் அது நிகழ்ந்தது என வாதிடுவதும், அரசல்புரசலான ஐயங்களைக் கிளப்பிவிடுவதும் பொதுத்தளத்தில் மிகமிக தவறான விஷயங்கள். அது தனிப்பட்ட கொலைதான் என ஐயம்திரிபற ஆகும்வரை அதை அரசியல்கொலை என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.அதுவே நியாயம்

இங்கே கல்புர்கி கொலைக்காகக் கொதிப்பவர்கள் அனைவருமே முன்பு ஆடிட்டர் ரமேஷ் முதலியவர்கள் கொலைசெய்யப்பட்டபோது அக்கொலைகளை அரசியல்கொலைகள் அல்ல என்று காட்டவும். குற்றவாளிகளை நியாயப்படுத்தவும் என்னென்ன செய்யமுடியுமோ அதைத்தான் செய்தார்கள். ஏனென்றால் அது அவர்களின் எதிர்தரப்பு. அதைக்கண்டு கொதித்தவர்கள் தங்களின் எதிர்த்தரப்பு கொலைசெய்யப்படும்போது அதே நிலைப்பாட்டை எடுப்பது எவ்வகையிலும் முறையல்ல.

உண்மையில் ஆடிட்டர் ரமேஷ் முதலியவர்கள் கொல்லப்பட்டபோது அதை அரசியல்கொலை என்று பார்த்தது நியாயம் என்றால் கல்புர்கி கொலையையும் அவ்வாறே பார்க்கவேண்டும் என எனக்கே சொல்லிக்கொண்டேன். கல்புர்கியின் அரசியல் எனக்கு உடன்பாடானதல்ல என்பதனால் முன்பு ஆடிட்டர் ரமேஷ் கொலையில் அவரது எதிர்தரப்பினர் செய்த அவதூறுப்பிரச்சாரம் மற்றும் மழுப்பல்களை நான் செய்யக்கூடாதென்று உறுதிகொண்டேன்

போலீஸ் பலகோணங்களில் விசாரிக்கட்டும். அது தனிப்பட்ட காரணங்களால் நிகழ்ந்த கொலை என நிறுவப்படுவது வரை அரசியல் தளத்தில் செயல்பட்ட ஒருவரின் கொலை அரசியல்கொலையே. அதை மழுப்ப, அவரை எதிர்மறையாகக் காட்ட முயல்வதைவிட அதை வன்மையாகக் கண்டிப்பதும் அதை ஆதரிப்பவர்களை எதிர்ப்பதும் உண்மை வெளிவரவேண்டுமென போராடுவதும்தான் நாம் செய்யக்கூடுவது.

நியாயம் என நாம் நம்புவதை நமக்கே நெறியாக ஆக்கிக்கொள்ளவேண்டும் அல்லவா?

ஜெ

முந்தைய கட்டுரைதேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…
அடுத்த கட்டுரைலாரிபேக்கர் – வாழ்க்கைப்படம்