மூத்த கன்னட எழுத்தாளரான எம்.எம்.கல்புர்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். எல்லாவகையிலும் இது ஓர் அரசியல்படுகொலை. மற்ற அரசியல்கொலைகளுக்கும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் கொல்லப்படுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடுள்ளது. எழுத்தாளர்கள் தனிமனிதர்கள். ஆகவே பாதுகாப்பற்றவர்கள். சமூகமும் அரசாங்கமும்தான் அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கவேண்டும். ஆகவே ஓர் எழுத்தாளன் தாக்கப்பட்டால் அவ்வரசு அதன் கடமையிலிருந்து வழுவிவிட்டதென்றே பொருள். அந்தச்சமூகம் அறமிழந்துவிட்டது என்றே பொருள். இதில் அவ்வெழுத்தாளனின் கருத்து அல்லது செயல் குறித்த விவாதத்திற்கே இடமில்லை. அத்தகைய எந்த விவாதமும அடிப்படையில் இந்த கீழ்மையை மறைப்பதற்கான முயற்சி மட்டுமே.
எழுத்தாளர்கள் பெரும்பாலும் அவர்களின் சமகாலத்தைய உணர்வுநிலைகளாலும் நம்பிக்கைகளாலும் சிந்தனைமுறைகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாதவற்றைச் சொல்பவர்கள். ஆகவே பெரும்பான்மைக்கு எதிராகச் செல்பவர்கள். அவர்கள் ஏதோ ஒருவகையில் இருக்கும் சமூகத்தை நிராகரித்து தாங்கள் விழையும் ஒரு சமூகத்தை முன்வைக்கிறார்கள். ஆகவே இருக்கும் சமூகத்தின் எதிர்த்தரப்பாகவே அவர்கள் செயல்பட முடியும். எனவே அவர்களின் கருத்துக்கள் சீண்டக்கூடியவையாக எரிச்சலூட்டக்கூடியவையாகவே பெரும்பாலும் இருக்கும். எவர் மனதையும் புண்படுத்தாத கருத்தைச் சொல்லக்கூடியவர்கள் எழுத்தாளர்கள் அல்ல, பத்திரபதிவு எழுத்தர்கள்.
நாகரீகமான சமூகம் என்பது பேச்சுரிமை எழுத்துரிமைக்கு உறுதியளிப்பது. அவ்வுரிமைகளின் நோக்கம் ஒன்றே. இருக்கும் சமூக அமைப்பிலிருந்து மேலான சமூக அமைப்பை நோக்கிச் செல்வதற்கான விழைவு. தன்னை தொடர்ந்து மறுபரிசீலனை செய்யவும் தன் எல்லைகளை தொடர்ந்து விரிவாக்கிக்கொள்ளவும் ஒரு சமூகம் முயன்றபடி இருக்கவேண்டும். அதற்கு அது எல்லாவகையான விவாதங்களையும் அனுமதித்தாகவேண்டும். அனைத்துக்கருத்துக்களும் எழ இடமளித்தாகவேண்டும். அவை கருத்துத்தளத்தில் எத்தனை தீவிரமாகவேண்டுமென்றாலும் மறுக்கப்படலாம். ஆனால் சமூகத்தின் உதிரிகளும், மத அடிப்படைவாத அமைப்புகளும், சாதியவாதிகளும் எழுத்தாளனை அதன்பொருட்டு தாக்குவதென்பது அச்சமூகம் தன்னைத்தானே அழித்துக்கொள்வது மட்டுமே
இக்கொலையை இன்னொரு குடிமகனின் கொலை என்ற கோணத்தில் அரசும் காவல்துறையும் கையாளுமென்றால் அவர்கள் இக்கொலையைவிட மோசமான பிறிதொரு குற்றத்தைச் செய்கிறார்கள். சமூகத்தின் பண்பாட்டுச்செயல்பாட்டையே மறைமுகமாக அழிக்கிறார்கள். இக்கொலையைச் செய்தவர்கள் மட்டும் அல்ல, அதற்குத்தூண்டும் வகையில் பேசியவர்கள், வெறுப்புகளைக் கிளறியவர்கள், இப்போது இவற்றை ஏதேனும் வகையில் நியாயப்படுத்திப்பேசுபவர்கள் அத்தனைபேரும் குற்றவாளிகளே. அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டாகவேண்டும். ஏன், அந்த எழுத்தாளரும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் என்று பேசுபவர் கூட மானுடப் பண்பாட்டுக்கு எதிரான இக்கொலைக்கு உடந்தைதான்.
கர்நாடகத்தில் இத்தகைய வன்முறைகள் புதிதல்ல. பல ஆண்டுகளுக்கு முன் என் மதிப்பிற்குரிய நண்பர் எச்.எஸ்.சிவப்பிரகாஷ் பசவண்ணரைப்பற்றி ஒரு நாடகம் எழுதியதற்காக வீடுபுகுந்து தாக்கப்பட்டார். அவரை கைகளை கட்டி தெருவில் இழுத்துச்சென்று பசவண்ண மடத்தின் தலைவர் முன் போட்டார்கள்.அவர் மன்னிப்புகோரி நூலை திரும்பப்பெற்றுக்கொண்டார். அன்றே அந்த மடாதிபதி கைதுசெய்யப்பட்டிருக்கவேண்டும். அந்த ஆசாமி உரிய முறையில் தண்டிக்கப்பட்டிருந்தால் அதன் பின் இன்றுவரை தொடரும் வன்முறைகள் நடந்திருக்காது
அதைப்பற்றிய விவாதத்தில் என்னிடம் என்ன சிக்கல் என்று சொன்னார்கள். கர்நாடகத்தின் மிகப்பெரிய சீர்திருத்தவாதியான பசவண்ணர் இந்துமதத்திற்குள் உருவாக்கிய ஒரு துணைமதம் வீரசைவம். அது தலித்துக்கள் உட்பட வெவ்வேறு சாதிகளிலிருந்து மக்கள் திரண்டு உருவானது. அன்றைய சாதியமேலாதிக்கத்திற்கு எதிரான பேரியக்கம் அது. ஆனால் காலப்போக்கில் அதுவே ஒரு சாதியாக ஆகிவிட்டது. இன்று பணபலமும் எண்ணிக்கைபலமும் கொண்ட இடைநிலைச் சாதியான லிங்காயத்துக்கள் முக்கியமான சமூக சக்தி.
லிங்காயத்துக்கள் இன்று அதிதீவிர தலித் விரோதிகள். வெறிகொண்ட சாதியவாதிகள். அவர்களின் மடங்கள் மூடநம்பிக்கைகளாலும் ஆசாரங்களாலும் அந்தச்சாதியை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. பசவண்ணரின் உண்மையான வரலாற்றை எவர் எழுதினாலும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் கூறும் ‘அதிகாரபூர்வ’ வரலாறுதான் எழுதப்பட்டாகவேண்டும் என்று ஆணையிடுகிறார்கள். மீறுபவர்களைத் தண்டிக்கிறார்கள். இது இருபத்தைந்தாண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. எம்.எம்.கல்புர்கியும் உண்மை வரலாற்றைச் சொன்னமைக்காக அவர்களின் எதிரிப்பட்டியலில் இருந்தார்.
இது ஒரு தனிநிகழ்வு அல்ல. இந்தியா முழுக்கவே சாதிய அமைப்புகள் முன்னைவிடவும் வல்லமைகொண்டவையாக ஆகிவிட்டிருக்கின்றன. குறிப்பாக இடைநிலைச் சாதிகள். அவர்கள் அனைவருமே இன்று ‘ஆண்டபரம்பரை’ கதைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். வீரநாயகர்கள் கண்டெடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் ஆதாரமில்லாத புனைவுகள் அவை. அவற்றை ஏற்காத வரலாற்றாசிரியர்களும் எழுத்தாளர்களும் மிரட்டப்படுகிறார்கள். பெரும்பாலானவர்கள் வாயே திறப்பதில்லை
தமிழகத்தில் ஏதோ மாறுபட்ட சூழல் நிலவுவதாக ஒரு பிரமை இங்குள்ளவர்களிடம் உள்ளது. இங்குள்ள எண்ணிக்கைபலம் மிக்க, அரசியல்செல்வாக்குள்ள இடைநிலைச் சாதியினர் முன்வைக்கும் ஆண்டகதைகளை, போலிப்பெருமித வரலாறுகளை எவரும் ஆதாரபூர்வமாக மறுத்து எழுதுவதில்லை என்பதே உண்மை. இங்கு கல்புர்கிகள் இல்லை. உண்மையில் இங்குள்ள மத எதிர்ப்பாளர்கள் இடைநிலைச் சாதிவெறியை மறைக்க பிராமண எதிர்ப்பு பேசுபவர்கள் மட்டுமே. கல்புர்கி போல எவரேனும் பேசியிருந்தால் இங்கும் அவர்களுக்குப் பாதுகாப்பில்லை.
சென்ற ஆண்டு நாகர்கோயிலில் என் நண்பர் டாக்டர் பத்மநாபன் அவரது ஒரு நூலுக்காக சாதியமைப்புகளால் வீடுபுகுந்து மிரட்டப்பட்டார். அவர் அந்நூலை திரும்பப்பெற்றுக்கொண்டார். ஏன் வரலாற்றாய்வாளார் ஒருவர் எழுதிய மத்திய அரசின் பாடநூலே சாதிய அமைப்புக்களின் தெருமுனைப்போராட்டத்தால் எந்த விவாதமும் இல்லாமல் அதிகாரபூர்வமாகத் தடைசெய்யப்பட்டது. இங்கு எந்த ஒரு சிந்தனையாளனும் அதைப்பற்றி ஒரு சம்பிரதாய அபிப்பிராயம்கூடச் சொல்லி நான் கேட்கவில்லை.
எண்ணிக்கை பலமிக்க சாதிகளை எந்த அரசியல் கட்சியும் , எந்த அமைப்பும் பகைத்துக்கொண்டதில்லை. இன்று கல்புர்கி கொலைபற்றிப் பேசுபவர்கள்கூட அதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படும் இடைநிலைச்சாதிவெறியை கவனமாகத் தவிர்த்துவிட்டு எழுதுவதைக் காணமுடிகிறது.இந்துத்துவ எதிர்ப்பு என்று மிதமிஞ்சி பொங்குபவர்களின் உண்மையான முகம் அது.
சென்ற சில ஆண்டுகளாக இந்த சாதியரசியலை ஒன்றாகத்திரட்டி மதஅரசியலாக ஆக்க இந்துத்துவர்கள் முயன்று வருவது வெளிப்படை. சாதிவெறி நேரடியாகவே மதவெறியாக மாறி தோற்றமளிக்கிறது. சாதிவெறியர்களுக்கு இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படையாகவே பின்புலமாக நின்றிருக்கின்றன. கல்புர்கி கொலைபற்றி வரும் செய்திகளை பார்த்தால் இந்த இணைவால் நிகழ்த்தப்பட்டது இது என தெரிகிறது.
இப்போதே முளையிலேயே அழிக்காவிட்டால் சிந்தனை என்பதும் சுதந்திரம் என்பதும் வெறும் சொற்களாகவே போய்விடக்கூடும்