தேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…

1

ஜெ

தேவதச்சனின் இந்தக்கவிதை என்னை ஒருவகை சோர்வுக்கும் பின்பு ஒரு நிம்மதிக்கும் தள்ளியது.

இந்த நீலநிற பலூன்

இந்த நீலநிற பலூன் மலரினும்

மெலிதாக இருக்கிறது. எனினும்

யாராவது பூமியை விட கனமானது

எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்.

நீங்களாவது கூறுங்களேன், இந்த

நாற்பது வயதில் ஒரு பலூனை

எப்படி கையில் வைத்திருப்பது என்று…

பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது

காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது

பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.

எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்

பார்த்து விடுகிறார்கள்.

அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று

என்னை உரசியபடி வருகிறது. நான்

கொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்.

*

இந்தக்கவிதையை நான் என் சொந்த அனுபவத்திலிருந்தே பார்க்கிறேன். நீண்டநாட்களுக்குப்பின்னர் சென்னை கடற்கரைக்குப்போயிருந்தேன். என்னால் சிரிக்கவும் குதூகலமாக இருக்கவும் முடியவில்லை. உண்மையிலேயே அங்கே பலூன்களைப்பார்த்தேன். அவை போல பறக்கமுடியாமல் என்னை கட்டி வைத்திருப்பது எது என்று நினைத்தேன். என்னுடைய அதுவரைக்குமான வாழ்க்கையின் சுமைகள், அவற்றைப்பற்றிய ஞாபகங்கள்தான்

நான் ஒருசில பலூன்களை வாங்கி கையில் வைத்திருந்தேன். சில பலூன்களை பறக்கவிட்டேன். கொஞ்சநேரம் கழித்து நான் சிரிப்பதை நானே உணர்ந்தேன். பலூனின் எடையில்லாத இயல்ல்பு அவ்வளவு சந்தோஷத்தை தந்தது. நானே சின்னப்பெண்ணாக ஆகிவிட்டதைப்போல இருந்தது.

அதே அனுபவத்தை ஒருவர் கவிதையாக எழுதியிருப்பதைப்பார்க்கையில் சந்தோஷமாக இருந்தது. நினைத்து நினைத்து மகிழ்ந்துகொண்டிருந்தேன். கவிதை இந்தமாதிரி எழுதப்படும்போதுதான் அது நமக்கு நெருக்கமாக ஆகிறது

எஸ்.கலையரசி

அன்புள்ள கலையரசி,

அன்றாட வாழ்க்கையில் இருந்து எடுக்கப்படும் காட்சிகளை படிமமாக ஆக்குவதன் பெயரே நவீன கவிதை.

இக்கவிதை எனக்கு ஒரு இந்திக்கவிதையை நினைவுறுத்தியது. கவிஞர் நினைவில்லை. தோராயமாக என் வரிகளில் சொல்கிறேன்

*

பலூன்கள்

மென்மையானவை
எடையற்றவை
கைநீட்டி வானை நோக்கி எழுபவை
கடற்கரை முழுக்க
அவை பறந்தலைகின்றன
சிரித்து
கூச்சலிட்டு
இதோ
கடற்காற்றில் நடுங்க
கட்டிவைத்து
குறிபார்த்துச் சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்
நானும் சுட்டேன்
மென்மையான
எடையற்ற
வானத்தில் எழக்கூடிய
பறந்தலையக்கூடிய
நான்கை
பின்பு
மௌனமாக
எடைமிகுந்து
வீடுதிரும்பினேன்

*

ஒரு கவிதையில் இருந்து நினைவு வழியாக இன்னொரு கவிதை நோக்கிச் செல்வது மிகச்சிறந்த வாசிப்பனுபவம். இரு கவிதைகளையுமே தெளிவாக்கிவிடும் அது.

ஜெ

================================================================================================

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

======================================================================================

தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு

தேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்

தேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

முந்தைய கட்டுரைகோதானம்
அடுத்த கட்டுரைகல்புர்கி கொலை- கடிதம்