தேவதச்சன், விஷ்ணுபுரம்விருது: கவிதையின் ஆங்கிலத்தமிழ் பற்றி

devathatchan34[5]

அன்புள்ள ஜெ

தேவதச்சன் கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவரைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நான் தொடர்ந்து கவிதைகளை வாசித்துக்கொண்டிருப்பவன், அதிகமும் ஆங்கிலத்தில். தமிழில் நான் கவிதைகளைக் குறைவாகத்தான் வாசித்திருக்கிறேன்.

தேவதச்சனின் கவிதையில் நான் காணும் சிறப்புகள் என்ன என்று சொல்கிறேன். அவை நவீன கூருணர்வு [modern sensibility] கொண்டவையாக உள்ளன. கவிதைக்கு என்று நாம் ஒதுக்கி வைத்திருக்கிற காதல் ,பாசம், கொள்கை, இலட்சியவாதம் போன்றவை இல்லாமல் சாதாரண வாழ்க்கையில் உள்ள சாதாரண நுட்பங்களைக் கவிதையாக்குகின்றன. அவற்றில் இருந்து ஒரு பிரபஞ்சப்பார்வை [cosmic vision] நோக்கிச்செல்கின்றன. இதுதான் முக்கியமானது. இதற்கான மொழியையும் வடிவத்தையும் அவர் உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறார்

ஆனால் என்ன குறைஎன்று தோன்றுகிறது என்றால் அவரது கவிதையின் மொழிநடை மொழிபெயர்ப்பு மாதிரி இருக்கிறது. ஆங்கிலத்தின் அச்சிலே போட்டு வார்த்ததுபோல. இதுதான் அன்னியப்படுத்துகிறது என நினைக்கிறேன்

சாரங்கன்

அன்புள்ள சாரங்கன்,

நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். அன்றாட வாழ்க்கையின் பிரபஞ்சத்தன்மை என்பதே அவரது கரு. ஆகவேதான் மொழிநடை ஆங்கிலமாகிறது.

ஏனென்றால் அந்த பிரபஞ்ச அனுபவத்தைச் சொல்வதற்கு பழைய செவ்வியல்நடை, செய்யுளின் நடை நமக்கு நெடுங்காலமாக இருந்துள்ளது. நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுணுக்கே என்று சொல்லிச்செல்லலாம். ஆனால் நவீன அன்றாட வாழ்க்கையை அந்த மொழியில் சொல்லமுடியாது.

அதற்கு அதேயளவு செறிவுள்ள நவீன நடை தேவையாகிறது. அது நம் பேச்சுமொழிக்கு அண்மையில் இருக்கவேண்டும். ஆனால் பேச்சுமொழியாகவும் இருக்கக்கூடாது. பேச்சுமொழி செறிவற்றது. தன்னிச்சையானது. சுருக்கமாக, அடர்த்தியாகச் சொல்லும் மொழிதேவை.

தமிழின் எழுவாய் பயனிலை அமைப்பு முழுமையான சொற்றொடர்களை அமைக்கவே வழிவகுக்கிறது. அத்தகைய மொழியமைப்பு கவிதைகோரும் செறிவுக்கு எதிரானது. மரபுக்கவிதை சொல்லிணைவுகள் வழியாக செறிவை அடைந்தது. நவீனக்கவிதை சொற்றொடர்களை உடைப்பது வழியாகச் செறிவை அடைகிறது . உடைந்த ஓரிரு சொற்களிலேயே கவிதையை உணர்த்தும் வடிவம் அதற்கென உருவாகி வந்துள்ளது.

கவிதையின் ஒவ்வொரு சொல்லிலும் வாசகனின் கவனத்தை நிறுத்த இந்த வடிவம் உதவுகிறது. அதேசமயம்
இந்த உடைந்த சொற்றொடர் அமைப்புதான் நவீனக்கவிதையை ஆங்கிலத்தின் மொழியமைப்பு நோக்கித் தள்ளுகிறது. மொழியழகு வெளிப்படும் பிரமிள் தேவதேவன் கவிதைகள் இவ்வியல்பு இல்லாதவை. சொற்செறிவை மட்டுமே நாடும் கவிதைகள் இப்படி உள்ளன. இது இவ்வகைக் கவிதைகளின் இயல்பு என்று கொள்ளலாம்

மொழி பிறமொழிகளைச் சந்திக்கையில்தான் புதிய சாத்தியங்களைக் கண்டடைகிறது. நாம் இன்று கையாளும் அன்றாடமொழியேகூட ஆங்கிலத்தின் உறவாடலால் உருவாகி வந்தது. இதை அதன் இன்னொரு சாத்தியக்கூறு என்று கொள்வதே சரியானது

*
குளியலறையில்…

குளியலறையில் பல பொருட்கள் பயணம் செய்கின்றன

சோப்பு

தொட்டி

கொடி

கொடியில் சில

துணிகள்

தரையில் சில

குழாய்

திறக்கையில்

வரத் துவங்கி

வந்துகொண்டே இருக்கும்

தண்ணீர்,

மற்றும்

என் எண்ணங்கள்

ஒன்றுக்கொன்று

அருகாமையிலும்

சில தொலைவிலும்.

*

இக்கவிதையின் மொழியமைப்பு ஆங்கிலத்திற்கு நெருக்கமானது. அதற்கான காரணம் அது சொற்கள் ஒவ்வொன்றிலும் வாசகனை நிறுத்த விழைகிறது என்பதே

காட்சியாகப் பார்த்தால் குளியலறையில் கையால் துழாவித்தேடும் ஒருவன். கையுடன் மனமும் துழாவுகிறது. ஒவ்வொரு பொருளாக நின்று நின்று. குழாய் திறக்கையில் நீர் வரத்தொடங்குகிறது. எண்ணங்களும். அவை கொட்டத்தொடங்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரைசென்னை, வெண்முரசு விவாதச் சந்திப்பு
அடுத்த கட்டுரைஎம்.எம்.கல்புர்கி கொலை