கற்கண்டு கனவு வயல்

சினிமாவில் பாட்டு தேவையா என்ற கேள்வி எப்போதுமே இருக்கிறது. சினிமாவின் இலக்கணத்தில் ஒருவேளை பாட்டு இலலமல் இருக்கலாம். ஆனால் எனக்கு என்னுடைய சினிமாவில் பாட்டு வேண்டும் என்ற எண்ணம்தான். ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையில் எப்போதுமே பாட்டு இருந்துகொண்டிருக்கிறது.

இளவயதிலேயே இரவுகளின் பாட்டுக்கூடல்கள் எனக்குப் பிடித்தமானவை. எந்த ஒரு இசைநிகழ்ச்சியைவிடவும் எந்த ஒரு பதிவிசையை விடவும் எனக்கு இத்தகைய கூடல்கள் பேருவகை அளித்தவையாக இருந்திருக்கின்றன. நான் பாடகன் அல்ல, இசை அறிந்தவனும் அல்ல. ஆனால் இசை எனக்கு என்றுமே ஒரு போதை.

இசை என்பது வாழ்க்கையின் தருணங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உணர்ச்சிகளின் தூயநிலை – என்று தல்ஸ்தோய் ஓர் இடத்தில் சொல்கிறார். அவர் உத்தேசிப்பது கருவியிசையாக இருக்கலாம். அது ஓரு தூய வடிவம்.ஆனால் பாடல் என்பது உணர்ச்சிகள் செறிவாக்கிச் சேர்க்கப்பட்ட இசை. ஆகவேதான் என்னால் மொழியில்லா இசையை அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை. எனக்கு உணர்ச்சிகள் இசைவடிவம் கொள்வதன் மேலேயே ஆர்வம். இது ஒரு இரண்டாம்படிநிலை ரசனையே என நான் அறிவேன்

இசையில் உள்ள எல்லா உணர்ச்சிகளும் என்னை அள்ளிச் செல்கின்றன. நான் பக்தன் அல்ல, கடவுள் வழிபாடு எனக்கு அறவே இல்லை. ஆனால் உக்கிரமான ஒரு பக்திப்பாட்டு என்னை புல்லரிக்கச் செய்து கண்ணீர் மல்கச்செய்வது ஏன் என்று புரிவதில்லை. என் நினைவில் அற்புதமான பல பக்திபபடல்கள் உள்ளன, இந்து கிறித்தவ இஸ்லாமியப்பாடல்கள். நான் ஈர்க்கப்படுவது இசையினாலா இசையில் ஏறி வரும் தீவிரமான உணர்ச்சிகளினாலா என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை.

அதனால்தான் போலும் நேரடியாக பாடப்படும் இசை என்னை இன்னமும் கவர்கிறது. அதில் பாடுபவனின் முகம் உள்ளது. அவனது பாவங்கள் உள்ளன. அவன்குரல் அவன் ஆன்மாவில் இருந்து நேரடியாக வெளி வருகிறது. நடுவே காலம் இல்லை தூரம் இல்லை. அனைத்துக்கும் மேலாக ஒன்றுண்டு, அந்தபாடல் அப்போதே காலத்தில் கரைந்து மறைந்துவிடும் என நான் அப்போது அறிகிறேன். அந்த தற்காலிகத்தன்மையே என்னை மேலும் அதை நோக்கி ஈர்க்கிறது. பூத்து மறையும் மலர்களின் அழகு அப்போது பாடல்களுக்கு வந்துவிடுகிறது.

நேரடியான பாடல்கள்கூட பயிலாத குரலில் ஒலிக்கும்போது இன்னமும் தீவிரம் கொள்கின்றன. சங்கதிகள் இல்லாத நுணுக்கங்கள் இல்லாத பச்சையான மானுடக்குரல் அளிக்கும் மனஎழுச்சி மகத்தானது. மானுடமே அங்கே வந்து நிற்பதுபோன்ற பிரமை எழுகிறது. அடிபட்டு அழும் மிருகத்தின் ஒலிபோல பறவை ஒன்றின் குரல் போல அந்த பாடல் இயற்கையானது, அப்பட்டமானது. அது நம்மைச்சுற்றி சூழ்கிறது ஒரு நீரோடை போல. அல்லது குருதி வாசனை போல.

நான் சிறுவனாக இருந்த நாள். ஒரு நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக அம்மா கைபற்றி வெளியே இறங்கினேன். அப்பால் அரசு பள்ளியின் மைதானத்தில் பஞ்சாயத்துக் கிணற்றின் மேடைமீது கூடிய இளைஞர்களின் குழுவில் அண்ணா ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். ‘’ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்’ அந்த உயிர்த்துடிப்பை டி.எம்.எஸ் பாடிய மூலப்பாடலில் தேடமுடியாது. அது அக்கணமே வெளிக்கிளம்பிய ஓர் இளைஞன் அகம்.

நிலவில் நிழல்கள் அந்தப்பாடலாக ஆடின. வானத்து மேகங்கள் பிரமித்து நின்றன. தூரத்தில் எங்கோ ஒரு பறவை இயல்பாக வந்து அந்தப்பாடலில் இணைந்துகொண்டது. நினைவுகள் நிழல்களுடன் பிணைந்து அசைந்தன. ஒரே கனவில் நானும் அம்மாவும் கலந்து நின்றோம். அம்மா சூடாக என்னை தொட்டிருந்தாள். ஆனால் அவரவர் உலகில் வெகு தூரத்திலும் இருந்தோம்.

பின்னர் எத்தனையோ நண்பர்களுடன் எங்கெங்கோ அமர்ந்து பாட்டு கேட்டிருக்கிறேன். மலைச்சரிவுகளில், காடுகளுக்குள், விடுதிகளின் அறைகளில். யுவன் சந்திரசேகர் நல்ல பாடகன். எங்கள் நண்பர்கூடுகைகளில் எப்போதும் ஒரு வலிதுக்குப் பின் அவனது பாடல் உண்டு. கும்பமேளாவில் கங்கை கரையில் படுத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடி அவன் பாடிய ஓராயிரம் பார்வையிலே பாடலை மீண்டும் கேட்ட நினைவு எழுகிறது

எத்தனை குரல்கள். திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் அதிகாலையில் படித்துறையில் அமர்ந்து பாடிய முதியவர். ஹலபேடு கோயிலில் திடீரென கணீர் குரலில் ‘குறையொன்றும் இல்லை’ என்று பாடிய தமிழே தெரியாத பக்தர். யுவன் அன்று கண்ணீர் விட்டு அழுதான். காசியில் அஸிகட்டில் ஒரு வெள்ளைக்காரக்குழு பாடிய ‘நெட்ராஜா நெட்ராஜா நெர்டன சுண்ட்ர நெட்ராஜா’ கூடவே இணைந்த ஓபோவும் கித்தாரும். கங்கோத்ரி சாலையில் சேர்ந்து பாடியபடி அக்டந்துசென்ற பஜனைக்குழு. ஜெய்சால்மர் சாலையில் ஒரு டீக்கடையில் பாலைவனத்தை பார்த்துக்கொண்டு கேட்ட ஒரு ராஜஸ்தானி பாட்டு. எத்தனை எத்னை குரல்கள்..

இன்றும் கேரளத்தில் மதுக்கிண்ணங்களுடன் அமர்ந்து பாடிக்கொள்வதே முக்கியமான கேளிக்கை. மிகக்குறைவாகவே தமிழகத்தில் அதைக் கண்டிருக்கிறேன் — இங்கே பெரும்பாலானவர்கள் குடித்ததுமே சலம்பத்தான் ஆரம்பிக்கிறார்கள். லோகி கையில் கோப்பையுடன் பழைய பாடல்களில் மிதப்பார். பாலசந்திரன் சுள்ளிக்காடு கனத்த குரலில் பாடுவார். பாடலும் குடியும் இணைந்திருக்கிறது கேரளத்தில். குடி மனதை இளக்காவிட்டால் அவர்களில் பலருக்கு பாடும் துணிவு வந்திருக்காது.

அந்த தருணங்களை எப்படி படத்தில் கொண்டு வருவது? அவை எனக்கு தேவை. பாடல் மனதை இளகவைத்து கனவுகளையும் நினைவுகளையும் கொந்தளிக்கச்செய்யும் நிலை. பல மலையாளப்பாடல்களில் அவை வந்துள்ளன. எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று இது, டி.வி.சந்திரன் இயக்கிய கதாவசேஷன் என்ற படத்தில் உள்ள காட்சி.

டி வி சந்திரன் பிரபல மலையாள கலைபப்ட இயக்குநர் பி ஏ பக்கரின் உதவி இயக்குநர். ஜான் ஆபிரகாமிடம்சேர்ந்து பணியாற்றினார் 1980ல் வெளிவந்த கிருஷ்ணன்குட்டி என்ற படம் முதல் முயற்சி. 1982ல் வெளிவந்த ஹேமாவின் காதலர்கள் என்ற தமிழ்ப் படம்தான் கலைரீதியாக வெற்றிபெற்ற படம். தமிழின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக அதைஅ சோகமித்திரன் மதிப்பிட்டு எழுதியிருக்கிறார். ஆனால் அவர் இங்கே கவனிக்கப்ப்டவில்லை.

ஆனால் 1989ல் வெளிவந்த ஆலிஈஸிண்டெ அன்வேஷணம் என்ற மலையாளப் படம்தான் சந்திரனை இந்தியக் கலைபப்ட இயக்குநர்களின் வரிசையில் அமர்த்திய படம். மம்மூட்டிக்கு தேசிய விருது பெற்றுதந்த பொந்தன் மாட [1993] அவரது அடுத்த படம். ஓர்மகள் உண்டாயிரிக்கணம் [1995] , மங்கம்மா[ 2001 ],சூசன்னா,டானி [2001] பாடம் ஒந்நு ஒரு விலாபம் [2003] கதாவசேஷன் [2004] விலாபங்கள்கப்புறம்[ 2008 ]பூமிமலையாளம் [2008] ஆகியவை அவரது படங்கள். மீண்டும் தமிழில் ஆடும்கூத்து[2006] என்ற படத்தை எடுத்தார், முடிக்கவில்லை.

பலமுறை கேரள அரசின் விருதுகளை பெற்றவர் சந்திரன். சர்வதேச திரைவிழாக்களில் பரிசுகள் பெற்றவர். பாடம் ஒந்நு ஒரு விலாபம் படத்துக்காக மீரா ஜாஸ்மின் தேசிய விருது பெற்றார். சந்திரனின் படங்கள் கட்டற்றவை, தொழில்நுட்ப தேர்ச்சி இல்லாமல் போகிற போக்கில் எடுக்கப்பட்டவ. குறைந்த முதலீட்டுப் படங்களும் கூட. சில படங்கள் கந்தல்கோளங்கள். ஆனால் மங்கம்மா, டானி, சூசன்னா ஆகியவை முக்கியமான கலைவெற்றிகள். பொந்தன்மாட, கதாவசேஷன், ஆலீஸிண்டே அன்வேஷணம் ஆகியவை கவனத்துக்குரிய முயற்சிகள். தனிப்பட்ட முறையில் டானி அவரது ‘மாஸ்டர்பீஸ்’ மம்மூட்டி எந்த வகையான ஆளுமைப்பண்பும் இல்லாத ஒரு வெறும் மனிதனாக நடித்த அந்தப்படம் இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்று.

கதாவசேஷன் திலீப் அவரே தயாரித்த படம். அதில் வரும் இந்தப் பாடல்காட்சி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதில் ஓர் அசலான கேரள குடிப்பாடல் தருணம் மிகையில்லாமல் உள்ளது. இந்திரன்ஸ் நடிக்கும் அந்த தெருப்பாடகனைப்போன்றவர்கள் இப்போதும் சாதாரணமாக கேரளத்தில் உள்ளனர். குடியரங்குகளில் பாடி அந்த ஊதியத்தில் வாழும் நாடோடிகள். அவர்களுக்குள் வாழ்க்கையின் துயரம் உமித்தீஎன நீறிக்கொண்டிருப்பதை பாடல்கள் வழியாக மட்டுமே காணமுடியும். நான் இளமையின் பரிச்சயம்கொண்டிருந்த முண்டன் குமார், காசர்கோட்டில் பழகியிருந்த ஹமீதுக்கா ஆகியோரின் முகங்கள் நினைவில் ஆடுகின்றன.

இந்தப்பாடல் காட்சியில் குடிப்பவர்கள் இயல்பான போதையில் இருப்பது தெரிகிறது. அவரவர் உலகில் அவர்கள் மிதக்கிறார்கள். செயற்கையான பாவனைகள் இல்லை. குடி அவர்களை பூமியில் இருந்து கொஞ்சம் மேலே தூக்கியிருக்கிறது

அதைவிட இதில் எனக்கு முக்கியமானது இதைப்பாடிய குரல். பழம்பெரும் இசையமைப்பாளர் வித்யாதரன் மாஸ்டர் பாடியிருக்கிறார். நகாசுக்கள் அற்ற குரல். அதேசமயம் மொக்கையானதும் அல்ல. உணர்ச்சிகரமானது. சங்கதிகள் விழுவதில்லை சுருதி நிலைப்பதில்லை, ஆனால் அதில் உண்மையான துக்கம் உருகிச்செல்கிறது. கூடவே பாடும் ஜெயசந்திரன் குரல் முழுக்கமுழுக்க நுட்பமும் சங்கதிகளும் கொண்டது. ஆனால் மலையாளத்தில் உணர்ச்சிகளை சிறப்பாக வெளிக்காட்டுபவர் என புகழ்பெற்றவர் பாடகர் பி. ஜெயச்சந்திரன். இருவரும் இணைகையில் அந்த கடைசி கால் பின்னும் நடை போல ஒரு விளைவு உருவாகிறது.

இந்தப்பாடலுக்கு இசையமைத்தவர் எம்.ஜெயச்சந்திரன். கௌரிமனோகரி, காபி என இரு ராகங்களில் இந்த பாடல் அமைந்திருக்கிறது. எழுதியவர் கிரீஷ் புத்தஞ்ச்சேரி. மீண்டும் மீண்டும் நான் கேட்கும் பாடல் இது.

கண்ணும் நட்டு காத்திருந்நிட்டும் என்றே
கரளிலே கரும்பு தோட்டம்
கட்டெடுத்ததாராணு?

பொன்னுகொண்டு வேலிகெட்டியிட்டும் என்றே
கற்கண்டு கினாவு பாடம்
கொய்தெடுத்ததாராணு?

கும்பிளில் விளம்பிய
பைம்பாலெந்நு ஓர்த்து ஞான்
அம்பிளி கிண்ணத்தே கொதிச்சிருந்நு
அந்நத்தே அந்தியில் அத்தாழப் பாத்ரத்தில்
அம்மதன் கண்ணீரோ திளச்சிருந்நு
அங்ஙனே ஞான் எந்நும் கரஞ்ஞிருந்நு

கிளிச்சுண்டன் மாவில் கண்ணெறிஞ்ஞு அந்நு ஞான்
கனி யொந்நு வீழ்த்தி ஒளிச்சுவச்சு
நீயது காணாதே காற்றின்றே மறவிலூடே
அக்கரைக்கு எங்ஙோ துழஞ்ஞு போயி
கடவத்து நான் மாத்ரமாயி

கண்களை நாட்டி காத்திருந்தபோதும் என்
இதயத்தின் கரும்பு தோட்டத்தை
திருடிச்சென்றது யார்?

பொன்னால் வேலிகட்டியிருந்தபோதும் என்
கற்கண்டு கனவு வயலை
அறுவடை செய்துகொண்டு சென்றது யார்?

உள்ளங்கையில் பரிமாறப்பட்ட
பசும்பால் என நினைத்து நான்
நிலவுக்கிண்ணம் மீது ஆசைகொண்டிருந்தேன்
அன்றைய அந்தியில் இரவுணவின் பாத்திரத்தில்
அம்மாவின் கண்ணீர்தான் கொதித்தது
அவ்வாறு நான் தினமும் அழுதுகொண்டிருந்தேன்

கிளிமூக்கு மாமரம்மீது கண்ணெறிந்து
அதிலொரு கனியை வீழ்த்தி உனக்காக ஒளித்து வைத்தேன்
நீ அதைக் காணாமல் காற்றின் மறைவில்
அக்கரைக்கு எங்கோ துடுப்பிட்டு சென்றாய்
படகுத்துறையில் நான் மட்டும் எஞ்சினேன்

முந்தைய கட்டுரைஇலக்கிய விமர்சனம் என்பது…
அடுத்த கட்டுரைபூவம்பழம்