சினிமாவில் பாட்டு தேவையா என்ற கேள்வி எப்போதுமே இருக்கிறது. சினிமாவின் இலக்கணத்தில் ஒருவேளை பாட்டு இலலமல் இருக்கலாம். ஆனால் எனக்கு என்னுடைய சினிமாவில் பாட்டு வேண்டும் என்ற எண்ணம்தான். ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையில் எப்போதுமே பாட்டு இருந்துகொண்டிருக்கிறது.
இளவயதிலேயே இரவுகளின் பாட்டுக்கூடல்கள் எனக்குப் பிடித்தமானவை. எந்த ஒரு இசைநிகழ்ச்சியைவிடவும் எந்த ஒரு பதிவிசையை விடவும் எனக்கு இத்தகைய கூடல்கள் பேருவகை அளித்தவையாக இருந்திருக்கின்றன. நான் பாடகன் அல்ல, இசை அறிந்தவனும் அல்ல. ஆனால் இசை எனக்கு என்றுமே ஒரு போதை.
இசை என்பது வாழ்க்கையின் தருணங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உணர்ச்சிகளின் தூயநிலை – என்று தல்ஸ்தோய் ஓர் இடத்தில் சொல்கிறார். அவர் உத்தேசிப்பது கருவியிசையாக இருக்கலாம். அது ஓரு தூய வடிவம்.ஆனால் பாடல் என்பது உணர்ச்சிகள் செறிவாக்கிச் சேர்க்கப்பட்ட இசை. ஆகவேதான் என்னால் மொழியில்லா இசையை அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை. எனக்கு உணர்ச்சிகள் இசைவடிவம் கொள்வதன் மேலேயே ஆர்வம். இது ஒரு இரண்டாம்படிநிலை ரசனையே என நான் அறிவேன்
இசையில் உள்ள எல்லா உணர்ச்சிகளும் என்னை அள்ளிச் செல்கின்றன. நான் பக்தன் அல்ல, கடவுள் வழிபாடு எனக்கு அறவே இல்லை. ஆனால் உக்கிரமான ஒரு பக்திப்பாட்டு என்னை புல்லரிக்கச் செய்து கண்ணீர் மல்கச்செய்வது ஏன் என்று புரிவதில்லை. என் நினைவில் அற்புதமான பல பக்திபபடல்கள் உள்ளன, இந்து கிறித்தவ இஸ்லாமியப்பாடல்கள். நான் ஈர்க்கப்படுவது இசையினாலா இசையில் ஏறி வரும் தீவிரமான உணர்ச்சிகளினாலா என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை.
அதனால்தான் போலும் நேரடியாக பாடப்படும் இசை என்னை இன்னமும் கவர்கிறது. அதில் பாடுபவனின் முகம் உள்ளது. அவனது பாவங்கள் உள்ளன. அவன்குரல் அவன் ஆன்மாவில் இருந்து நேரடியாக வெளி வருகிறது. நடுவே காலம் இல்லை தூரம் இல்லை. அனைத்துக்கும் மேலாக ஒன்றுண்டு, அந்தபாடல் அப்போதே காலத்தில் கரைந்து மறைந்துவிடும் என நான் அப்போது அறிகிறேன். அந்த தற்காலிகத்தன்மையே என்னை மேலும் அதை நோக்கி ஈர்க்கிறது. பூத்து மறையும் மலர்களின் அழகு அப்போது பாடல்களுக்கு வந்துவிடுகிறது.
நேரடியான பாடல்கள்கூட பயிலாத குரலில் ஒலிக்கும்போது இன்னமும் தீவிரம் கொள்கின்றன. சங்கதிகள் இல்லாத நுணுக்கங்கள் இல்லாத பச்சையான மானுடக்குரல் அளிக்கும் மனஎழுச்சி மகத்தானது. மானுடமே அங்கே வந்து நிற்பதுபோன்ற பிரமை எழுகிறது. அடிபட்டு அழும் மிருகத்தின் ஒலிபோல பறவை ஒன்றின் குரல் போல அந்த பாடல் இயற்கையானது, அப்பட்டமானது. அது நம்மைச்சுற்றி சூழ்கிறது ஒரு நீரோடை போல. அல்லது குருதி வாசனை போல.
நான் சிறுவனாக இருந்த நாள். ஒரு நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக அம்மா கைபற்றி வெளியே இறங்கினேன். அப்பால் அரசு பள்ளியின் மைதானத்தில் பஞ்சாயத்துக் கிணற்றின் மேடைமீது கூடிய இளைஞர்களின் குழுவில் அண்ணா ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். ‘’ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்’ அந்த உயிர்த்துடிப்பை டி.எம்.எஸ் பாடிய மூலப்பாடலில் தேடமுடியாது. அது அக்கணமே வெளிக்கிளம்பிய ஓர் இளைஞன் அகம்.
நிலவில் நிழல்கள் அந்தப்பாடலாக ஆடின. வானத்து மேகங்கள் பிரமித்து நின்றன. தூரத்தில் எங்கோ ஒரு பறவை இயல்பாக வந்து அந்தப்பாடலில் இணைந்துகொண்டது. நினைவுகள் நிழல்களுடன் பிணைந்து அசைந்தன. ஒரே கனவில் நானும் அம்மாவும் கலந்து நின்றோம். அம்மா சூடாக என்னை தொட்டிருந்தாள். ஆனால் அவரவர் உலகில் வெகு தூரத்திலும் இருந்தோம்.
பின்னர் எத்தனையோ நண்பர்களுடன் எங்கெங்கோ அமர்ந்து பாட்டு கேட்டிருக்கிறேன். மலைச்சரிவுகளில், காடுகளுக்குள், விடுதிகளின் அறைகளில். யுவன் சந்திரசேகர் நல்ல பாடகன். எங்கள் நண்பர்கூடுகைகளில் எப்போதும் ஒரு வலிதுக்குப் பின் அவனது பாடல் உண்டு. கும்பமேளாவில் கங்கை கரையில் படுத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடி அவன் பாடிய ஓராயிரம் பார்வையிலே பாடலை மீண்டும் கேட்ட நினைவு எழுகிறது
எத்தனை குரல்கள். திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் அதிகாலையில் படித்துறையில் அமர்ந்து பாடிய முதியவர். ஹலபேடு கோயிலில் திடீரென கணீர் குரலில் ‘குறையொன்றும் இல்லை’ என்று பாடிய தமிழே தெரியாத பக்தர். யுவன் அன்று கண்ணீர் விட்டு அழுதான். காசியில் அஸிகட்டில் ஒரு வெள்ளைக்காரக்குழு பாடிய ‘நெட்ராஜா நெட்ராஜா நெர்டன சுண்ட்ர நெட்ராஜா’ கூடவே இணைந்த ஓபோவும் கித்தாரும். கங்கோத்ரி சாலையில் சேர்ந்து பாடியபடி அக்டந்துசென்ற பஜனைக்குழு. ஜெய்சால்மர் சாலையில் ஒரு டீக்கடையில் பாலைவனத்தை பார்த்துக்கொண்டு கேட்ட ஒரு ராஜஸ்தானி பாட்டு. எத்தனை எத்னை குரல்கள்..
இன்றும் கேரளத்தில் மதுக்கிண்ணங்களுடன் அமர்ந்து பாடிக்கொள்வதே முக்கியமான கேளிக்கை. மிகக்குறைவாகவே தமிழகத்தில் அதைக் கண்டிருக்கிறேன் — இங்கே பெரும்பாலானவர்கள் குடித்ததுமே சலம்பத்தான் ஆரம்பிக்கிறார்கள். லோகி கையில் கோப்பையுடன் பழைய பாடல்களில் மிதப்பார். பாலசந்திரன் சுள்ளிக்காடு கனத்த குரலில் பாடுவார். பாடலும் குடியும் இணைந்திருக்கிறது கேரளத்தில். குடி மனதை இளக்காவிட்டால் அவர்களில் பலருக்கு பாடும் துணிவு வந்திருக்காது.
அந்த தருணங்களை எப்படி படத்தில் கொண்டு வருவது? அவை எனக்கு தேவை. பாடல் மனதை இளகவைத்து கனவுகளையும் நினைவுகளையும் கொந்தளிக்கச்செய்யும் நிலை. பல மலையாளப்பாடல்களில் அவை வந்துள்ளன. எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று இது, டி.வி.சந்திரன் இயக்கிய கதாவசேஷன் என்ற படத்தில் உள்ள காட்சி.
டி வி சந்திரன் பிரபல மலையாள கலைபப்ட இயக்குநர் பி ஏ பக்கரின் உதவி இயக்குநர். ஜான் ஆபிரகாமிடம்சேர்ந்து பணியாற்றினார் 1980ல் வெளிவந்த கிருஷ்ணன்குட்டி என்ற படம் முதல் முயற்சி. 1982ல் வெளிவந்த ஹேமாவின் காதலர்கள் என்ற தமிழ்ப் படம்தான் கலைரீதியாக வெற்றிபெற்ற படம். தமிழின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக அதைஅ சோகமித்திரன் மதிப்பிட்டு எழுதியிருக்கிறார். ஆனால் அவர் இங்கே கவனிக்கப்ப்டவில்லை.
ஆனால் 1989ல் வெளிவந்த ஆலிஈஸிண்டெ அன்வேஷணம் என்ற மலையாளப் படம்தான் சந்திரனை இந்தியக் கலைபப்ட இயக்குநர்களின் வரிசையில் அமர்த்திய படம். மம்மூட்டிக்கு தேசிய விருது பெற்றுதந்த பொந்தன் மாட [1993] அவரது அடுத்த படம். ஓர்மகள் உண்டாயிரிக்கணம் [1995] , மங்கம்மா[ 2001 ],சூசன்னா,டானி [2001] பாடம் ஒந்நு ஒரு விலாபம் [2003] கதாவசேஷன் [2004] விலாபங்கள்கப்புறம்[ 2008 ]பூமிமலையாளம் [2008] ஆகியவை அவரது படங்கள். மீண்டும் தமிழில் ஆடும்கூத்து[2006] என்ற படத்தை எடுத்தார், முடிக்கவில்லை.
பலமுறை கேரள அரசின் விருதுகளை பெற்றவர் சந்திரன். சர்வதேச திரைவிழாக்களில் பரிசுகள் பெற்றவர். பாடம் ஒந்நு ஒரு விலாபம் படத்துக்காக மீரா ஜாஸ்மின் தேசிய விருது பெற்றார். சந்திரனின் படங்கள் கட்டற்றவை, தொழில்நுட்ப தேர்ச்சி இல்லாமல் போகிற போக்கில் எடுக்கப்பட்டவ. குறைந்த முதலீட்டுப் படங்களும் கூட. சில படங்கள் கந்தல்கோளங்கள். ஆனால் மங்கம்மா, டானி, சூசன்னா ஆகியவை முக்கியமான கலைவெற்றிகள். பொந்தன்மாட, கதாவசேஷன், ஆலீஸிண்டே அன்வேஷணம் ஆகியவை கவனத்துக்குரிய முயற்சிகள். தனிப்பட்ட முறையில் டானி அவரது ‘மாஸ்டர்பீஸ்’ மம்மூட்டி எந்த வகையான ஆளுமைப்பண்பும் இல்லாத ஒரு வெறும் மனிதனாக நடித்த அந்தப்படம் இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்று.
கதாவசேஷன் திலீப் அவரே தயாரித்த படம். அதில் வரும் இந்தப் பாடல்காட்சி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதில் ஓர் அசலான கேரள குடிப்பாடல் தருணம் மிகையில்லாமல் உள்ளது. இந்திரன்ஸ் நடிக்கும் அந்த தெருப்பாடகனைப்போன்றவர்கள் இப்போதும் சாதாரணமாக கேரளத்தில் உள்ளனர். குடியரங்குகளில் பாடி அந்த ஊதியத்தில் வாழும் நாடோடிகள். அவர்களுக்குள் வாழ்க்கையின் துயரம் உமித்தீஎன நீறிக்கொண்டிருப்பதை பாடல்கள் வழியாக மட்டுமே காணமுடியும். நான் இளமையின் பரிச்சயம்கொண்டிருந்த முண்டன் குமார், காசர்கோட்டில் பழகியிருந்த ஹமீதுக்கா ஆகியோரின் முகங்கள் நினைவில் ஆடுகின்றன.
இந்தப்பாடல் காட்சியில் குடிப்பவர்கள் இயல்பான போதையில் இருப்பது தெரிகிறது. அவரவர் உலகில் அவர்கள் மிதக்கிறார்கள். செயற்கையான பாவனைகள் இல்லை. குடி அவர்களை பூமியில் இருந்து கொஞ்சம் மேலே தூக்கியிருக்கிறது
அதைவிட இதில் எனக்கு முக்கியமானது இதைப்பாடிய குரல். பழம்பெரும் இசையமைப்பாளர் வித்யாதரன் மாஸ்டர் பாடியிருக்கிறார். நகாசுக்கள் அற்ற குரல். அதேசமயம் மொக்கையானதும் அல்ல. உணர்ச்சிகரமானது. சங்கதிகள் விழுவதில்லை சுருதி நிலைப்பதில்லை, ஆனால் அதில் உண்மையான துக்கம் உருகிச்செல்கிறது. கூடவே பாடும் ஜெயசந்திரன் குரல் முழுக்கமுழுக்க நுட்பமும் சங்கதிகளும் கொண்டது. ஆனால் மலையாளத்தில் உணர்ச்சிகளை சிறப்பாக வெளிக்காட்டுபவர் என புகழ்பெற்றவர் பாடகர் பி. ஜெயச்சந்திரன். இருவரும் இணைகையில் அந்த கடைசி கால் பின்னும் நடை போல ஒரு விளைவு உருவாகிறது.
இந்தப்பாடலுக்கு இசையமைத்தவர் எம்.ஜெயச்சந்திரன். கௌரிமனோகரி, காபி என இரு ராகங்களில் இந்த பாடல் அமைந்திருக்கிறது. எழுதியவர் கிரீஷ் புத்தஞ்ச்சேரி. மீண்டும் மீண்டும் நான் கேட்கும் பாடல் இது.
கண்ணும் நட்டு காத்திருந்நிட்டும் என்றே
கரளிலே கரும்பு தோட்டம்
கட்டெடுத்ததாராணு?
பொன்னுகொண்டு வேலிகெட்டியிட்டும் என்றே
கற்கண்டு கினாவு பாடம்
கொய்தெடுத்ததாராணு?
கும்பிளில் விளம்பிய
பைம்பாலெந்நு ஓர்த்து ஞான்
அம்பிளி கிண்ணத்தே கொதிச்சிருந்நு
அந்நத்தே அந்தியில் அத்தாழப் பாத்ரத்தில்
அம்மதன் கண்ணீரோ திளச்சிருந்நு
அங்ஙனே ஞான் எந்நும் கரஞ்ஞிருந்நு
கிளிச்சுண்டன் மாவில் கண்ணெறிஞ்ஞு அந்நு ஞான்
கனி யொந்நு வீழ்த்தி ஒளிச்சுவச்சு
நீயது காணாதே காற்றின்றே மறவிலூடே
அக்கரைக்கு எங்ஙோ துழஞ்ஞு போயி
கடவத்து நான் மாத்ரமாயி
கண்களை நாட்டி காத்திருந்தபோதும் என்
இதயத்தின் கரும்பு தோட்டத்தை
திருடிச்சென்றது யார்?
பொன்னால் வேலிகட்டியிருந்தபோதும் என்
கற்கண்டு கனவு வயலை
அறுவடை செய்துகொண்டு சென்றது யார்?
உள்ளங்கையில் பரிமாறப்பட்ட
பசும்பால் என நினைத்து நான்
நிலவுக்கிண்ணம் மீது ஆசைகொண்டிருந்தேன்
அன்றைய அந்தியில் இரவுணவின் பாத்திரத்தில்
அம்மாவின் கண்ணீர்தான் கொதித்தது
அவ்வாறு நான் தினமும் அழுதுகொண்டிருந்தேன்
கிளிமூக்கு மாமரம்மீது கண்ணெறிந்து
அதிலொரு கனியை வீழ்த்தி உனக்காக ஒளித்து வைத்தேன்
நீ அதைக் காணாமல் காற்றின் மறைவில்
அக்கரைக்கு எங்கோ துடுப்பிட்டு சென்றாய்
படகுத்துறையில் நான் மட்டும் எஞ்சினேன்
15 comments
1 ping
Skip to comment form ↓
ஜெயமோகன்
August 22, 2010 at 12:53 am (UTC 5.5) Link to this comment
சந்திரமோகன்: இப்போதுதான் கற்கண்டு கனவு பாட்டை கேட்டேன், படித்தேன். மலையாளக் கலைஞர்களைப்பற்றிய தகவல்களுக்கு நன்றி. அவர்களைப்பற்றி குறைவாகவே எங்களுக்கு தெரிகிறது..
ஜெ: நன்றி
சந்திரமோகன்: நீங்கள் சரியாகவே சொன்னதுபோல குடிக்குப் பின் பாடுவது ஒரு சொற்க அனுபவம்.நான் அப்படி பாடுவதுண்டு- இப்போது இல்லை
ஜெ: எனக்கு பிடித்த பாட்டு இது
சந்திரமோகன்: திலீப் சிகரெட் பிடித்தபடி இயல்பாக தலையசைத்து பாட்டில்சேர்ந்துகொள்வது மலையாள சினிமாவில்தான் பார்க்க முடியும்
ஜெ: ஆம் மொத்தக் காட்சியுமே இயல்பாக இருக்கிறது. அந்த மூடிய கடையில் குடிப்பவர்கள் மிக இயல்பாக இருக்கிறார்கள்…
சந்திரமோகன்: அந்த பாடுபவர்தான் அந்த சிறுவன் இல்லையா? அப்படி என்றால் இயக்குநரை எத்தனை பாராட்டினாலும் தகும். அதே பையன் சமகால ஃப்ரேம் வழியாக ஓடிப்போகிறான்…ஆச்சரியமான கற்பனை
ஜெ: ஆம் அது ஃப்ளாஷ்பேக்… ஒரே ஃப்ரேமில் நிகழ்கிறது
சந்திரமோகன்: ஆச்சரியம்..நம்மாட்கள் போல அரிவுஜீவி மிரட்டல் இல்லாமல் எளிமையாக இருக்கிறது
ஜெ:ஆம் சந்திரனின் படங்களில் இதேபோல எளிமையான அற்புதங்கள் பல உண்டு…
சந்திரமோகன்: இன்னொன்று இரவில் ஊரே உறங்கும்போது திறந்த வெளிகளில் இருப்பதும் குடிப்பதும் பாடுவதும் சுகம். இந்தப்பாட்டும் அதைத்தான் சொல்கிறது. அந்த உணர்வே தனிதான். விடிந்தால் பகல் என்றாலும் அந்த இரவே கடைசி இரவு என்று தோன்றிவிடும்.இரவுக்குடி இனிமையானது
ஜெ; இருக்கலாம் நான் சாட்சி மட்டுமே
சந்திரமோகன்: தெரியும்…இந்தப்பாடலை மற்றவர்கள் பொருட்படுத்தாமல் போகலாம். அதில் உள்ள எளிமை நேரடித்தன்மை காரணமாக. அதை நீங்கல் கண்டுபிடித்து அறிமுகம் செய்திருக்கிறீர்கள்..நன்றி
suka
August 22, 2010 at 11:21 am (UTC 5.5) Link to this comment
அன்புள்ள மோகன்,
எப்போதுமே கைபேசியில் நான் வைத்திருக்கும் பாட்டு இது. மதுரையில் இசை விமர்சகர் மம்முதுவுடன் நாம் பேசிக் கொண்டிருக்கும் போது என் கைபேசியிலிருந்து உங்கள் கைபேசிக்கு நான் அனுப்பிய இந்தப் பாடல் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேனா என்று ஞாபகமில்லை. இயக்குனர் டி.வி.சந்திரன் துபாய்க்குச் சென்றிருந்த போது ஒரு நண்பர் அவரது வீட்டுக்கு உணவருந்த அழைத்திருக்கிறார். அவருடன் அந்த வீட்டுக்குள் இவர் நுழையும் போது ’கண்ணும் நட்டு காத்திருந்நிட்டும்’ வீட்டுக்குள்ளிருந்து ஒலித்திருக்கிறது. வீட்டுக்குள்ளே ஹார்மோனியம் வாசித்தபடி பாடிக் கொண்டிருந்திருக்கிறார், வித்யாதரன் மாஸ்டர். இருவரும் ஒருவரையொருவர் எதிர்பாராமல் சந்தித்து நெகிழ்ந்திருக்கின்றனர். இந்தப் பாடலைப் பற்றிப் புகழ்ந்து நான் பேசிக் கொண்டிருந்த போது இந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்துச் சொன்னார் டி.வி.சந்திரன்.
நீங்கள் சொல்லியிருப்பது போல மலையாளத்தில் உணர்ச்சிகளை சிறப்பாக வெளிக்காட்டுபவரான ஜெயச்சந்திரனின் நுட்பமான, சங்கதிகள் நிறைந்த குரலை விட உணர்ச்சிகரமான வித்யாதரன் மாஸ்டரின் குரலில் இந்தப் பாடலைக் கேட்பதே எனக்கு விருப்பம். இதே போல தமிழில் ’முத்தான முத்தல்லவோ’ திரைப்படத்தின் ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ என்ற பாடலை இணைந்து பாடியிருக்கும் இருவரில் பாலசுப்ரமணியத்தின் குரலைவிட விஸ்வநாதனின் குரலில் கேட்பதுதான் சுகம்.
சுகா
ஜெயமோகன்
August 22, 2010 at 12:51 pm (UTC 5.5) Link to this comment
சுகா, டிவி சந்திரன் நகைச்சுவைகளிலேயே உச்சம் நீங்கள் கேள்விப்பட்டு சொன்னது. சந்திரனும் உதவியாளாரும் ஸ்கூட்டரில் சென்னையில் சாலையில்செல்கிறார்கள். சந்திரன் போதையில் சொல்கிறார் ‘ரமணி வீடு வந்தா சொல்லுடா’ ரமணி ஆம் என்கிறார். மீண்டும் சந்திரன் ‘ரமணி வீடு வந்தா சொல்லுடா’ ரமணி ஆம் என்கிறார்.இப்படியே சொல்லிக்கொண்டே வண்டி அதுபாட்டுக்கு போகிறது. இதில் விசெஷம் என்னவென்றால் வண்டியை ஓட்டியது சந்திரன்
ஜெயமோகன்
August 22, 2010 at 12:54 pm (UTC 5.5) Link to this comment
ஜெ, கதாவசேஷன் என்றால் என்ன அர்த்தம்?
சாம், தோகா கத்தர்
அன்புள்ள சாம்
’கதையானவன்’
கதாநாயகர்கள் செத்துப்போவதை அப்படிச் சொல்கிறார்கள். கதைகளை விட்டுச்சென்றார்கள் என்று. கதையாக எஞ்சியவன். அவசேஷம் என்றால் மிச்சம்
படத்தில் முதல் காட்சியில் திலீப் செத்துப்போகிறார். அவரது வாழ்க்கையை மற்றவர்கள் அலசுகிறார்கள்
ஜெ
bala
August 22, 2010 at 10:25 pm (UTC 5.5) Link to this comment
நான் படித்த ஊராக மேலாண்மை கழகத்தில் (institute of rural management, anand – founded by Dr.V.kurien, chairman, NDDB) ஒரு நவீன ஆடிட்டோரியம் உண்டு.. அதில் பண்டிட் ஜஸ்ராஜ், லீலா சாம்சன் எனப் பலரும் நிகழ்சிகளை நடத்தியிருக்கிறார்கள்.. அதையெல்லாம் விட ஒரு நாள் உஸ்தாத் அம்ஜத் அலி கானின் சீடர் ஒருவர் இரவில் எங்களோடு (குடித்து விட்டுத்தான்) எங்களைப் பாடச் சொல்லி ட்ரம்ஸ் வாசித்தார்.. ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா பாட்டுக்கு.. இன்னும் மனதிலேயே நிற்கிறது.. எங்கள் கர்ண கடூரமான (புரியாத மொழியினுள்) வினாடியில் புகுந்து அவர் தாளம் கண்டு பிடித்த கணம் – ரொம்ப சந்தோஷமா இருந்தது..
bala
August 22, 2010 at 11:00 pm (UTC 5.5) Link to this comment
சினிமா பாடல்கள் தமிழர் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒரு விஷயம் போன்றே தோன்றுகிறது.. என் மகளும் மனைவியும் நான் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு பாட்டு பாடுவது கேட்டு அருகில் இருக்கும் திடப் பொருளில் முட்டிக் கொள்வார்கள். லேட்டஸ்ட் – திருவண்ணாமலை சென்றிருந்த போது எனக்கு தலைவலி.. calpol மாத்திரை சாப்பிடரிங்க்களா? என்று கேட்டவருக்கு நான் பாடிய பாடல் “பால் போல் சிரிப்பதில் பிள்ளை..” தமிழர்களைத் திருத்துவது கடினம்..
ஜெயமோகன்
August 22, 2010 at 11:17 pm (UTC 5.5) Link to this comment
பாலா
நானும்தான் சினிமாப்பாடல்களை அதிகமாக பாடுவேன். எல்லாவற்றுக்கும் பாரடி பாடல்களை சுடச்சுட பாடுவதில் நான் ஒரு கவிராயர். என் முதல் ரசிகை சைதன்யாதான். என் முக்கியமான கவிதை ‘ஆலய மணியின் ஒலியினை நான் கேட்டேன். அருண்மொழி போடும் பறவைகள் ஒலி கேட்டேன்’
ஜெ
bala
August 22, 2010 at 11:25 pm (UTC 5.5) Link to this comment
சாரி.. இந்த டூயட்டுக்கு.. இருந்தாலும் எழுதிடறேன்.. தனியாக மும்பையில் இருக்கும் போது அவர்கள் நினைவாகவே இருக்கிறது.. என் பாடலுக்கு மகன் அருண் ரசிகன்.. அதுவும் “நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கழுதை வாங்கி வந்தேன்” என்று பாடும் போது என் மனைவி பாக்காமல் அவங்களைக் கைகாட்டிப் பாடியது கேட்டு அவன் கெக்கே பிக்கே என்று சிரித்த கணத்தில் கடவுள் தெரிந்தார்..
ஜெயமோகன்
August 23, 2010 at 8:10 am (UTC 5.5) Link to this comment
I read you blog on “whether songs are necessary in cinema”. I was interested in this topic because I am of the opinion that songs(not music) are not necessary in cinema and that they stop the flow of narration but at the same time I am prepared to be convinced otherwise. On this point your blog was rather disappointing because it later talks about the efficacy of music in human beings. I am also a great admirer of music and I am hearing music for the past six decades, all sorts of music classical Indian, Western and folk music. Perhaps to some extent I do not agree in your statement “ஆகவேதான் என்னால் மொழியில்லா இசையை அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை”. That is because we are used to sahitya based music. I agree that Carnatic music without Sahitya is difficult to appreciate and that is why I do not much hear solo instrumentalists. But at the same time I remember an occasion when Chaurasia played Malkauns alap for 45 minutes. There was neither whisper nor a cough throughout the period. At the end of the 45 minutes alap there was a great sigh in the audience as if they have controlled even the noise of their breath (which would disturb the music). I agree I am also not an expert or theoretician on music. Beethoven’s sixth symphony creates a dramtic atmosphere and some of Mozarts music creates exhilaration, these are emotional responses. You blog is an excellent exposition of effect of music on human being and it is interesting and educative to read it. But that did not convincingly answer the question whether songs (not music) are necessary in cinema and I am still waiting to be convinced. Suppose there is an audio book of one of your novels and would you like introduce a song in between, however appropriate it may be. (Is this perhaps not a convincing argument?)
sitrodai
August 23, 2010 at 9:30 am (UTC 5.5) Link to this comment
ஜெமோ,
‘ஸ்வப்னங்கள் கண்டேழுதிய’ (பாக்ய தேவதா) என்ற பாடல் சமிபத்தில் மலையாளத்தில் வந்த சிறந்த பாடல் என்று எண்ணுகிறேன் . கேட்டு இருக்கிறீர்களா?
சிற்றோடை
Rajan
August 23, 2010 at 11:05 am (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெயமோகன்
இயல்பான நெகிழ்ச்சியான பாடல்.
காட்சியில் ஆர்மோனியம் வாசித்தவாரே பாடலைப் பாடும் நடிகரின் பெயர் இந்திரன் என்று நினைக்கிறேன். ஒரே ஃப்ரேமில் கடந்த காலமும் நிகழ்காலமும் ஒன்றிப் பிரியும் அந்தச் சிறிய தருணம் உணர்ச்சிகரமானது. சிறு சிறு காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்பவர் இந்திரன். மலையாளத்தின் அத்தனை சிறு நடிகர்களும் அவ்வாறே. அவர்களின் அற்புதமான இயல்பான நிஜமான நடிப்பு அவர்களை நம் மனதில் பதித்து விடும்.
கதவிசேஷத்தின் கதைகள் போலவே மலையாளத்தில் பல படங்கள் எடுக்கப் பட்டு விட்டன, இருந்தாலும் ஒவ்வொரு படமுமே நம் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அருமையான படங்களே. நாடகத்தில் இருந்து காணாமல் போகும் தபலா கோபியின் மறைவை விசாரிக்கும் யவனிகா, தன் மனைவியின் காரணம் தெரியாத தற்கொலையைத் தன் பத்திரிகையாள நண்பனைக் கொண்டு விசாரிக்கும் உத்தரம், தான் பிறக்கும் பொழுது நடந்த ஒரு தற்கொலையை ஐம்பது வருடன் கழித்துப் போய் விசாரிக்கும் பாலேரி மாணிக்யம் என்று கதையானவர்களைப் பற்றி அறியத் துடிக்கும் எத்தனையோ கதைகள்.
சினிமாக்களில் பின்ணணி இசையோ பாடல்களோ படத்தின் காட்சிகளுடன் இயையந்து இயல்பாக இருக்க வேண்டும் என்பது என் கட்சி. நானும் சினிமாப்பாடல்களின் ரசிகனாக இருந்த பொழுதும் கதையுடன் ஓட்டாமல் திணிக்கப் படும் ஆடலும் பாடலும் இசையும் எரிச்சலையே ஏற்படுத்துகின்றன. இருந்தாலும் நமக்கும் பல இனிமையான பாடல்கள் இந்த வழியாகவே கிடைப்பதினால் இந்த அத்து மீறல்களைப் பொறுத்துக் கொள்ளவே வேண்டியுள்ளது. எந்த கணவனும் மனைவியும் முதல் இரவில் ஓடிப் பிடித்து விளையாடி பாடல் பாடுகிறார்கள், எந்தக் காதலர்கள் மரத்தைச் சுற்றி ஓடி பாட்டுப் பாடுகிறார்கள். நிஜத்தில் அப்படிப் பாடினால் பிராந்து என்று கல்லால் அடிக்க வர மாட்டார்களா? இப்பொழுதெல்லாம் பாடல்கள் இல்லாமலோ, அல்லது இயல்பாகப் பொருந்தும் வண்ணம் பாடல்கள் அமைக்கவோ நிறையப் படங்களில் கற்றுக் கொண்டு விட்டார்கள் என்பது ஒரு திருப்தி.
முதல் இரவில் கணவனும் மனையும் ஓடிப் பிடித்து பாட்டுக்கள் பாடுவதில்லை. ஆனால் அந்த இரவில் உறவினர்கள் கூடி, தீ யின் நடுவே மது அருந்தி கூட்டமாகப் ஆடிப் பாடும் இந்தப் பாடல் எவ்வளவு இயற்கையாக உள்ளது என்று பாருங்கள்
வண்ணாத்திப் புழையுட தீரத்துத் திங்கள் கண்ணாடி பார்க்கும் நேரத்து………………
http://www.youtube.com/watch?v=A2HPrkYIKvE
மது அருந்தி மலையாளப் பாடல்களைப் பாடி அதன் கவித்துவத்தை ரசிக்கும் காட்சியை நீங்கள் கேரள கஃபேயின் முதல் கதையிலும் பார்க்கலாம்.
இது போல காட்சியில் இருந்து வெளியே போகாமல் இயற்கையாகப் பாடல் காட்சிகள் அமைக்கப் பட்டால் அந்தப் பாடல்களுக்கு இன்னும் அர்த்தம் கூடும். கொஞ்சம் மெனக்கெட்டு அர்த்தம் புரிந்து கொண்டால் மலையாளத் திரையிசைப் பாடல்கள் கொடுக்கும் ஆழமான கவித்துவம் மிக அழகானவை.
பல வருடங்களுக்கு முன்னால் எதேச்சையாகக் கேட்க்கக் நேர்ந்த இந்தப் பாடலே என்னை மலையாளப் பாடல்களை தேடிப் பிடித்து ரசிக்க வைத்தது. கவித்துவமும், அழகும், இயற்கையும் நிறைந்த ஆர்ப்பாட்டவில்லாத அழகான பாடல்கள். தனித்த இரவுகளில் கேட்க்கும் பொழுதெல்லாம் என் மனதைக் கரைய வைத்த பாடல் இது. தனிமையில் இரவில் கேட்டுப் பாருங்கள். இது ஒரு நதியைப் பற்றிய பாடல் என்பதை பின்னரே அறிந்து கொண்டேன்.
http://www.youtube.com/watch?v=ZuylmOQ0AzA&feature=related
அன்புடன்
ராஜன்
sureshkannan
August 23, 2010 at 12:05 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெயமோகன்,
பாடல் பரிந்துரைக்கும் அறிமுகத்திற்கும் நன்றி. இந்தப்பாடல், கேட்கும் ஒவ்வொரு முறையும் அப்படியே தன்னுள் இழுத்துக் கொண்டே போகிறது.
தமிழிலிருந்து உற்பத்தியானதுதான் என்றாலும் பொதுவாக மலையாளத்தை புரியாமல் வெறுமனே கேட்டுக் கொண்டிருப்பதிலேயே ஏற்படுகிற ஒலி ஸ்பரிச சுகத்தை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. மாறாக தெலுங்கும் கன்னடமும் கேட்பதற்கு எரிச்சலை ஏற்படுத்தும் மர்மமும் தெரியவில்லை. (வாசிப்பவர்களே, இதை பொதுவாக என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சொல்கிறேன். எந்த மொழி அரசியலும் இதில் இல்லை.)
இன்னொரு அவதானிப்பும் பொதுவானது. அழகாக உள்ள நாயகர்களுக்கு சிற்ப்பான முன்னணி பாடகர்களின் குரல், துணை நடிகர்கள் அல்லது நகைச்சுவை நடிகர்கள் என்றால் அவர்களக்கு சுமாரான பாடகர்களின் குரல் என்றே பிரித்து பொதுவாக உபயோகிக்கப்படுகின்றன. எம்ஜிஆர் என்றால் டிஎம்எஸ், நாகேஷ் என்றால் சீர்காழி கோவிந்தராஜன். இந்தப்பாடலில் கூட நாயகன் திலீப்பிற்கு ஜெயச்சந்திரன்தான் குரல் தந்திருக்கிறார். சுமாரான அழகுடையவர்கள் என்றால் அவர்களின் குரலும் அப்படியே இருக்கும் என்கிற கற்பிதமும் அதை தொடர்ந்து நீளச் செய்கிற இயக்குநர்களின் கிளிஷேவும்தான் இதற்குக் காரணம் என நினைக்கிறேன். சிறந்த பாடகர்களில் எத்தனை பேர் மிக அழகாக இருக்கிறார்கள் என்பதையும் யோசித்துப் பார்க்கலாம்.
ஜெயமோகன்
August 23, 2010 at 12:16 pm (UTC 5.5) Link to this comment
படம் : என்றே நந்தினிக்குட்டிக்கு
இசை ரவீந்திரன்
பாடல் ரவீந்திரன் மாஸ்டர்
பாடியது ஜேசுதாஸ்
புழயொரழகுள்ள பெண்ணு
ஆலுவ புழயொரழகுள்ள பெண்ணு
கல்லும் மாலையும் மாறில் சார்த்திய
செல்லக்கொலுசிட்ட பெண்ணு
மழபெய்தால் துள்ளுந்ந பெண்ணு
மானத்தொரு மழவில்லு கண்டால்
இளகும் பெண்ணு
பாடத்தே நெல்லினும் தீரத்தே தைகள்க்கும்
பாலும் கொண்டோடுந்ந பெண்ணு
அவளொரு பாவம் பால்காரிப்பெண்ணு
பால்காரிப்பெண்ணு
வெயிலத்து சிரிதூகும் பெண்ணு
சிவராத்ரி விருதமுமாய்
நாமம் ஜபிக்குந்ந பெண்ணு
பெண்ணினே காணுவான் இந்நலே வந்நவர்
சொன்னபோல் பிராந்தத்தி பெண்ணு
அவளொரு பாவம் பிராந்தத்தி பெண்ணு
அதுகேட்டு நெஞ்சு பிடஞ்ஞு
காலிலே கொலுசெல்லாம் ஊரி எறிஞ்ஞு
ஆயிரம் நொம்பரம் மாறிலொதுக்கிக் கொண்டு
ஆழத்திலேக்கவள் பாஞ்ஞு
அவள் ஒந்நும் ஆரோடும் மிண்டாதே பாஞ்ஞூ
மிண்டாதே பாஞ்ஞூ
ஆறு ஓர் அழகான பெண்
ஆலுவா ஆறு ஓர் அழகான பெண்
கல்லும் மாலையும் மார்பிலணிந்து
செல்ல கொலுசணிந்த பெண்
மழைபெய்தால் துள்ளும் பெண்
வானத்தில் ஒரு வானவில்கண்டால்
நிலைமறக்கும் பெண்
வயல் நெல்லுக்கும் கரையோர செடிகளுக்கும்
பால் கொண்டு செல்லும்பெண்
அவள் ஒரு பாவம் பால்காரிப்பெண்
வெயிலில் புன்னகைக்கும் பெண்
சிவராத்திரி விரதத்துடன்
சிவநாமம் ஜெபிக்கும் பெண்
பெண்ணை பார்க்க நேற்று வந்தவர்
சொல்லி விட்டுச் சென்றது போல
ஒரு பித்துபிடித்த பெண்
ஒரு பாவம் பித்துப்பிடித்த பெண்
அதைக்கேட்டு நெஞ்சு துடிக்க
காலில் உள்ள கொலுசையெல்லாம் உருவி எறிந்து
ஆயிரம் வலிகளை மார்பில் அடக்கி
ஆழங்களை நோக்கிப் பாய்ந்தாள்
அவள் யாரிடமும் ஏதும் சொல்லாமல் பாய்ந்தாள்
சொல்லாமல் பாய்ந்தாள்
sureshkannan
August 23, 2010 at 12:20 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெயமோகன்,
நேரம் வாய்க்கும் போது திரைப்பட பட்டியல் போல, உங்களுக்கு மிகவும் பிடித்த மலையாள திரையிசைப் பாடல்களையும் ஒரு பட்டியலிட்டால் நன்றாக இருக்கும்.
ஜெயமோகன்
August 23, 2010 at 12:21 pm (UTC 5.5) Link to this comment
சுரேஷ்
அது உண்மை. அதற்குக் காரணம் அரசியல் என்பதை விட அழகியல் முன்முடிவு என்றே சொல்லலாம். படத்தில் கச்சாவான ஒரு முகம் என்றால் குரலும் அப்படியே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் மலையாளத்தில் அதற்கும் ஜேசுதாசையே வழக்கமாக போடுவார்கள். உதாரணம், செங்கோல் படத்தின் ‘மதுரம் ஜீவாம்ருத பிந்து’ என்ற பிச்சைககரன் பாட்டு
தமிழில் கார்த்திக்குக்கு இளையராஜா பாடி அதை ஏற்றும் கொண்டிருக்கிறார்கள்
ஜெ
குட்டி ஸ்ராங் « அவார்டா கொடுக்கறாங்க?
February 5, 2011 at 5:31 pm (UTC 5.5) Link to this comment
[…] இவரது இசையில் வந்த ஒரு பாடலை மிகவும் சிலாகித்திருந்தார். ஆடும் கூத்து படத்தில் இவர் தமிழ் […]