இந்திரநீலம் நிறைவு

இந்திரநீலம் எழுதத் தொடங்கும்போது இருந்த திட்டத்தை வழக்கம்போல மீறி அதற்குரிய வடிவை தானாகவே அடைந்து முடிந்தது. என்னைப்பொறுத்தவரை இப்படி தன்னிச்சையாக எழுந்து முடிகையிலேயே கச்சிதமான வடிவம் அமைகிறது. எண்ணிக்கோத்து எழுதும்போது எப்போதுமே ஏராளமான சரடுகள் முடிவடையாது நின்றிருக்கும். அப்படைப்பு முழுமையடைவதே இல்லை. எழுத்தில் தர்க்கம் என்பது எத்தனை வலுவற்ற கருவி என்பதை மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறேன். இலக்கியம் என்பது கனவு. கனவின் துல்லியத்தையும் முழுமையையும் எவராலும் உருவாக்கிக்கொள்ள முடியாது

இந்நாவல் பெண்களின் கதை என்ற எண்ணம் இருந்தது. அவர்களின் நோக்கில் கிருஷ்ணனும் அர்ஜுனனும் வெளிப்படுவது என திட்டமிட்டேன். இந்திரநீலம் என்னும் தலைப்பு அவ்வாறு உருவானதே.ஆனால் கதை விருத்த கன்யகையில் தொடங்கியதுமே தன்னிச்சையாக உருக்கொள்ளத் தொடங்கியது. முழுமைபெற்ற பின் அதன் அத்தனை கண்ணிகளும் முழுமையாகப் பின்னியிருப்பதையும் தொடக்கப்பகுதிகளிலேயே முடிவு வரைக்குமான அனைத்து கதைமுடிச்சுகளும் படிமங்களும் அமைந்திருப்பதையும் கண்டு வியந்தேன்.

இந்திரநீலம் என்பது இங்கு சியமந்தகம். அது ஆழிவண்ணனாகிய அவனுடைய ஒரு துளியே. அவனிலிருந்து எழுந்து அவனில் அடங்கும் ஓர் சிற்றலை. மானுடருடன் விளையாடி மீள்கிறது. அலகிலா ஆடலின் ஒரு சிறு பகுதி. அதன் ஆடலில் அவன் அணுக்கத்தவர் அனைவரும் தங்கள் எல்லைகளை அறிகிறார்கள். ஊழ்கம் என்பது தன் எல்லைகளை தானே அறிவது. யோகம் என்பது அதைக் கடப்பது.

கட்டமைப்பில் கிருஷ்ணனின் எட்டு துணைவிகளைப்பற்றிய கதையாக இது உள்ளது. அஷ்டபார்யா எனும் கருத்துரு தெற்கில் செல்வாக்குடன் இல்லை. நமக்கு பாமாவும் ருக்மிணியுமே முக்கியமானவர்கள். அவர்களை பூதேவி ஸ்ரீதேவியாகக் கருதுகிறோம். எட்டு மனைவியரை திருமகளின் எட்டு வடிவங்களாக இந்நாவல் உருவகிக்கிறது. எட்டு நதிகள் கடலை வந்தடைகின்றன. தங்களைக் கண்டுகொள்கின்றன

அடுத்த நாவலை செப்டெம்பர் 15 அன்று தொடங்கலாம் என நினைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைகாளிந்தி காளிந்தி…
அடுத்த கட்டுரைசென்னை, வெண்முரசு விவாதச் சந்திப்பு