பாலகுமாரனும் வணிக இலக்கியமும்

 

 

ஒரு எழுத்தாளர் படைக்கும் அனைத்தும் சீரிய இலக்கியமாக இருத்தல் அவசியமா? பாலகுமாரன் ஆரம்பகாலத்தில் எழுதிய சில நாவல்கள் (மெர்க்குரிப் பூக்கள், இரும்புக்குதிரைகள் போன்றவை) மேலும் கணையாழியில் வெளியான அவரது சில கவிதைகள் (குதிரைகள் பற்றிய அவர் கவிதைகள்) இலக்கியத்தரமுள்ளவை என்றே நினைக்கிறேன். அவர் வணிக எழுத்தாளர் என்பதாலேயே தமிழிலக்கிய சூழலில் அவற்றுக்குரிய இடம் மறுக்கப்படுவதாகத் தோன்றுகிறது.
ஜெகதீஷ் குமார்.
http://www.jekay2ab.blogspot.com.

தி.ஜானகிராமன் விக்கி

பாலகுமாரன் விக்கி

அன்புள்ள ஜெகதீஷ்குமார்

பாலகுமாரனைப்பற்றி சுருக்கமாக என் கருத்தைச் சொல்கிறேன். அவர் தமிழ் சிற்றிதழ் உலகில் இருந்து உருவான இலக்கியவாதி. அவரது தொடக்கம் கசடதபற சிற்றிதழ்க்குழு மற்றும் கணையாழிக் குழு என அறிவீர்கள்தானே? அன்று அவரது தளத்தில் செயல்பட்டு வந்த மாலன்,தேவகோட்டை வா மூர்த்தி, சுப்ரமணிய ராஜூ போன்றவர்களின் ஆதர்ச எழுத்தாளர் தி.ஜானகிராமன். ஜானகிராமன் ஆண்பெண் உறவின் நுண்மைகளுக்குள் கலையின் வசீகரமான பின்புலத்தை குறியீடாக ஆக்கி நுழைந்த இலக்கியவாதி.

இவர்கள் அந்த மையத்தில் இருந்தே ஆரம்பித்தார்கள். ஆண்பெண் உறவை வேறு வேறு களங்களில் நிறுத்தி ஆராய்ந்தார்கள். விரைவிலேயே இந்த வகை எழுத்தின் வணிகச் சாத்தியம் இவர்களுக்கு தெரிந்தது. இவர்களின் வணிகச் சாத்தியம் வணிக இதழ்களுக்கு -குறிப்பாக சாவிக்கு – தெரிந்தது. தமிழில் என்றும் உள்ள வணிகப்பொருள் என்பது ஆண் பெண் உறவே. நம் வணிக இதழ்கள் உறுதியாகப் பிரசுரிக்கும் கதை என்பது ஆண் பெண் உறவின் ஒரு புதிய சிக்கல் என்ற கரு கொண்டதே. அந்த தளத்தில் புதிய எழுத்துக்களுக்கான தாகம் எப்போதுமே வணிக உலகில் உண்டு

வணிக எழுத்தில் புதுமைகள் அங்கேயே உருவாக முடியாது. அவை எப்போதும் சிற்றிதழ் தளத்திலேயே நிகழ முடியும். பெரும்பாலான வெற்றிகரமான வணிக எழுத்தாளர்கள் இலக்கியத்தளத்தில் இருந்து இங்கே உள்ள சில நுட்பங்களுடன் அங்கே சென்றவர்களே. பாலகுமாரன் மட்டுமல்ல சுஜாதா இந்துமதி எல்லாருமே தான். அங்கிருந்து முற்றி இங்கே வந்தவர்களும் உண்டு — இந்திரா பார்த்தசாரதிபோல

எண்பதுகளில் தமிழில் வார இதழ் புரட்சி உருவானபோது இவர்கள் அனைவருமே வணிக இதழ்களுக்குச் சென்றார்கள். பாலகுமாரன் அங்கே தன்னை நுட்பமாக உருமாற்றிக்கொண்டு நீடித்தார். [அப்போது அவர் உருமாற்றிக்கொண்ட விதத்தை அவரது நண்பர் மாலன் மிகக் கடுமையாக கண்டித்து கதைகள் எழுதியிருக்கிறார்] வாழ்க்கைசார்ந்த சுயமான அவதானிப்புகள் மீது காமத்தின் மெல்லிய பூச்சு – இதுவே பாலகுமாரன்

பாலகுமாரனின் ’மெர்க்குரிப்பூக்கள்’ ’கரையோர முதலைகள்’ ’இரும்புக்குதிரைகள்’ ’பந்தயப்புறா’ போன்ற ஆரம்பகால ஆக்கங்கள் தமிழ் சிற்றிதழ் உலகில் உருவாகி வந்த மொழி- வடிவ நுட்பங்களை காணலாம். அதே சமயம் அவற்றை வணிகப்பொருளாக ஆக்கும்பொருட்டு அவர் அதிக ஆழமற்ற தளத்தில் பயன்படுத்துவதையும் காணலாம். எப்போதுமே காமத்தின் ஜிலுஜிலுப்பு கூடவே வருகிறது. காமத்தை எந்த எல்லைக்கும் கொண்டுசென்று ஆராய இலக்கியத்தில் இடமிருக்கிறது. ஆனால் வெறுமே வாசகக் கவற்சிக்காக அதை கையாள்வது வணிகம்.

விரைவிலேயே அவரது வாசகர்கள் உருவானார்கள். முதன்மையாக நகர்ப்புற சிறுநகர்ப்புற படித்த- வேலைக்குப்போகும் பெண்கள். அபபவுடனான உறவையும் பெண்ணுடனான உறவையும் சிக்கலாகக் காணும் இளைஞர்கள். சமூகக் கண்காணிபபல் பாலியல் அழுத்தங்களுக்கு ஆளாகி பகற்கனவில் ஒண்டியவர்கள். எண்பதுகளில் வேலையில்லாத புறக்கணிக்கப்பட்ட இளைஞன் ஒரு சமூகப்பிரச்சினை. அவனை நோக்கி அவனுக்குப் பிடித்தமாதிரி எழுதியவை பாலகுமாரன் ஆக்கங்கள்.

அதன்பின் அவர் எழுதியதெல்லாம் அவர்களுக்காக. அவர்களின் ரசனைக்காக. அவர்களுக்கு பிடித்த வகையில். விரைவிலேயே அவர் அதற்கான சூத்திர அமைப்பைக் கண்டுகொண்டார். அதன் பின் அதை மீளமீள படி எடுத்தார். அவரது வாழ்க்கை அவதானிப்பு என்பது அவரது முதிரா இளமையுடன் முடிந்துவிட்டது. அதைவிட்டு அவர் வெளிவரவே இல்லை. நேராகச் சென்றது முதிராத ஆன்மீகத்தை நோக்கி.

பாலகுமாரனை ராஜேஷ்குமார் வரிசையில் வைக்க முடியாது. வ்ணிக எழுத்திலும் படிகள் உள்ளன. பாலகுமாரன் வணிக எழுத்தில் உள்ள கொஞ்சம் நுட்பமான தளத்தைச் சேர்ந்தவர். தமிழ் மரபில் ஆர்வி, எல்லார்வி, பிவிஆர், மகரிஷி அடுத்தபடியாக பாலகுமாரன். இதுதான் வரிசை. பாலகுமாரனின் தளத்தில் அவரை விடச் சிறந்த ஆக்கங்களை முன்னோடிகள் எழுதியிருக்கிறார்கள். ஆர்வியின் அணையாவிளக்கு, கண்கள் உறங்காவோ பி.வி.ஆரின் கூந்தலிலே ஒருமலர் மகரிஷியின் வட்டத்துக்குள் ஒரு சதுரம், பனிமலை போன்றவை எந்த பாலகுமாரன் ஆக்கங்களை விடவும் நல்ல வாசிப்பனுபவம் கொண்டவை. மேலும் நுட்பமானவை. பாலகுமாரனைப்பற்றிப் பேசுபவர்கள் அவரில் ஆரம்பித்து முன்னும் பின்னும் செல்லாதவர்கள்.

இவை அனைத்துமே இலக்கிய அம்சம் கொண்ட நுட்பமான வணிக எழுத்துக்களே. ஆனால் ஏன் அவை வணிக எழுத்துக்கள் என்றால் 1. அவை ஆசிரியனின் தேடலில் இருந்து உருவானவை அல்ல, வாசகனின் தேவைநோக்கி அவன் வந்தமையால் உருவானவை 2 அவை புதிய எல்லைகளை நோக்கி சென்றுகொண்டே இருப்பவை அல்ல, எல்லைகள் வாச்கனாலும் எழுத்தாளனாலும் வரையறுக்கப்பட்டவை. அவன் கேட்பதையே இவர் கொடுக்க முடியும் ஆகவே அவை புதிதாகப் பிறக்கும் சாத்தியங்கள் அற்றவை 3 அவற்றின் மொழியும் வடிவமும் நிலையானவை. ஒரு கட்டத்தில் வெறும் தொழில் நுட்பம் மட்டுமாக சுருங்கிவிட்டவை.

பாலகுமாரனின் உடையார் அவரது மற்ற வணிக முயற்சிகளில் இருந்து மாறுபட்ட ஒரு பெரும் முயற்சி. அவரது கடுமையான உழைப்பு ஆராய்ச்சியிலும் திட்டமிடலிலும் தெரிகிறது. பல பகுதிகளில் படைப்பெழுச்சி உள்ளது. அது முக்கியமான ஆக்கமே. ஆனால் விரைவிலேயே அதன் ஆற்றல் தீர்ந்து சொல்வெளியாக நீள்வது போலவும் உள்ளது. நான் இன்னமும் முடிக்கவில்லை

இலக்கியத்துக்கும் வணிக எழுத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன? தி.ஜானகிராமனுக்கும் பாலகுமாரனுக்கும் உள்ள வேறுபாடுதான். ஜானகிராமனும் வணிக இதழ்களில் தொடர்களாகவே தன் நாவல்களை எழுதினார். அவரும் காமத்தையே கருப்பொருளாக்கினார். ஆனால் அவர் காமத்தின் அலைகளை மனித உளவியல்மூலம் அளக்க முனைந்தார். புகையை பிடிக்க முயல்வது போல அவர் அதை சொற்களில் அள்ள முயன்றார். பாலகுமாரன் காமத்தை வாசகனின் வாசிப்பின்பத்துக்காக மட்டுமே பயன்படுத்துகிறார். தி.ஜானகிராமன் என்றும் இருப்பார். பாலகுமாரன் அவரது சமகாலத்தில் வாசித்த சிலரது நினைவில் மட்டும் கொஞ்சநாள் நீடிப்பார். பின்பு ஆர்வியும் எல்லார்வியும் பிவிஆரும் சென்று சேர்ந்த இடத்தைச் சென்று சேர்வார். வணிக எழுத்தின் பெரிய அலமாரியில் ஒரு இடம்

ஜெ

பழைய விவாதம்

http://www.jeyamohan.in/?p=3888 பாலகுமாரன் மேலும் ….
http://www.jeyamohan.in/?p=3766 பாலகுமாரன் கடிதங்கள்
http://www.jeyamohan.in/?p=3720 ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்
http://www.jeyamohan.in/?p=3560 பாலகுமாரன்,கடிதங்கள்
http://www.jeyamohan.in/?p=3600 பாலகுமாரன்,ஒருகடிதம்
http://www.jeyamohan.in/?p=3417 பாலகுமாரன்

முந்தைய கட்டுரைகேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்
அடுத்த கட்டுரைஇலக்கிய விமர்சனம் என்பது…