கோதானம்

1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

கோதானம் நாவல் படித்து முடித்தவுடன் இம்மின்னஞ்சலை தங்களுக்கு எழுதுகிறேன்.

இந்த நாவல் காட்டும் இந்திய கிராமத்தின் சித்திரம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. அடுத்தவேளை உணவு பற்றி மட்டுமே சிந்தனை செய்து செய்து வாழ் நாளை கடத்துவது எத்தனை கொடுமையானது. எத்தனை கோடி ஹோரிராம்கள் இம்மண்ணில் இருக்கிறார்கள். இந்த கொடுமையான சூழலிலும் ஹோரி தனக்கென சில கடமைகளை மனதில் நிறுத்தி நெஞ்சில் அபரிமிதமான வலிமையோடு தன் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறான். குடும்ப வாழ்க்கை அளிக்கும் மனவலிமை எத்தனை அசாதரணமானது.

ஆங்கிலேயரின் கொடுமையான வரிவிதிப்பு நம் கிராமங்களை எப்படி வெறித்தனமாக உறிஞ்சி இருக்கின்றன. பெரிய பஞ்சங்கள் தவிர்த்து வெயில் காலங்களில் வெறும் கிழங்கிற்கும் பிடி அரிசிக்கும் எத்தனை போராட்டம் நடந்திருக்கிறது. அதே வேளையில் இப்போது இந்தியாவில் வீணடிக்கப்படும் அல்லது வெறித்தனமாக உண்ணப்படும் (நான் உட்பட) உணவறைகள் ஒரு வித குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றது

3

ஹோரி முழுமையாக தன்னை சமூகத்திற்கு ஒப்படைத்தவன். சமூகம் கிழித்த கோட்டை தாண்டாதவன் .தனியா கலகக் குரல். தன்னால் முடிந்த வரை வெற்று பெருமையும் அநியாயத்தையும் எதிர்த்து தன் குடும்பத்தை நடத்த முயல்கிறாள். கோபர் நிலவுடமை சமூகத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு இந்தியா வைத்த முதல் அடி. இன்று வரையில் முற்று பெறாத ஒரு முயற்சி. போகிற போக்கில் இது சரியான நகர்வு தானா என்ற கேள்வியும எழுகிறது. தன்னிறைவு கிராமங்கள் பெற்று காந்திய பாதைக்கு திரும்ப இயலுமா என்ற ஆசையும்.

மேஹ்தா மாலதி ஆண் பெண் விவாதங்கள், ஒரு ஆணோ பெண்ணோ தன் கடமையை, தன்னை உணர வேண்டிய அவசியத்தை , பிரசார அல்லது புத்திமதி கூறும் தொனி இல்லாது யதார்த்தமாக, அவற்றைப் பற்றி பேசுகின்றன .ராய் சாஹாபின் குற்ற உணர்ச்சிக்கும் இந்த நாவலில் இடம் இருக்கிறது அதுவே இந்த நாவலை முழுமையடைய செய்கிறது. மிர்சா சாகிப் ஒரு zorba. ஒரு கனவின் இடம் இவருக்கு.

koodhanam-1-600x600

என்னை மிகவும் நெகிழ வைத்த கட்டங்கள், மேஹ்தாவிடம் மலைப் பெண் காட்டும் அன்பு, தனியா,ஹோரி ஜுனியாவை ஏற்கும் தருணங்கள், சுஹியாவின் முலை சுரக்கும் தருணங்கள். இந்த மண்ணில் என்றும் இருக்கும் தாய்மையே நம்மை வாழ வைக்கும், புற பொருளாதார விஷயங்கள் ஓரளவே மனிதனை நெருக்கும். ஆனால் அவன் அதையும் மீறி ஒளிர்வான். இந்த நாவல் என்னுள் ஏற்படுத்தும் நம்பிக்கையை என்றும் தக்க வைக்க முயல்வேன்.

தங்கள் கட்டுரை மூலமே இந்த நாவல் அறிமுகம் ஆனது. சரஸ்வதி ராம்நாத் மிகுந்த அர்ப்பணிப்புடன் மொழிபெயர்த்திருக்கிறார்.

அன்புடன்,
மணிகண்டன்

முன்ஷி பிரேம்சந்த்

காலத்தைவென்ற கதைகள்

முந்தைய கட்டுரைஇலக்கியக்கோட்பாடுகள்
அடுத்த கட்டுரைதேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…