பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 3
கடல்மாளிகையின் இடைநாழியின் மறுஎல்லையில் அகன்ற கற்படிகள் மேலேறிச்சென்றன. அவற்றின் வெண்பளிங்குக் கைப்பிடிகள் யவன நாட்டு நுண்ணிய சிற்பங்கள் செறிந்திருந்தன. சாத்யகி ஒவ்வொன்றையாக தொட்டுக்கொண்டு வந்தான். முப்பிரி வேலேந்திய கடல் தெய்வங்கள, மின்னலை ஏந்திய வானக தெய்வங்கள். ஒவ்வொரு சிற்பமும் பிறிதொன்றுடன் பின்னி ஒன்றாகி ஒற்றைப் பரப்பென மாறி நின்றது. “வானமென்பது இடைவெளியின்றி பின்னிப் பரவிய தெய்வங்களின் விழி என யவனர் எண்ணுகிறார்கள்” என்றான் சாத்யகி. “விண்மீன்களைப்போல எத்தனை விழிகூர்கிறோமோ அத்தனை தெரிகின்றன.”
திருஷ்டத்யும்னன் ஒரு சிற்பத்தை நோக்கி நின்றான். கையில் ஏடும் இறகுமாக வெற்றுடலுடன் நடனக்கோலத்தில் நின்ற தெய்வம் விழிகளை தொலைதூரம் நோக்கித் தீட்டியிருந்தது. “இந்த தெய்வத்தின் சிலை அங்கே களியாட்டுமன்றிலும் உள்ளது. ஹெர்மியர் என்று அவர்கள் சொல்கிறார்கள். எழுத்தின் தெய்வம்” என்றான் சாத்யகி. கைசுட்டி “அதுவும் அவரே. எல்லைகளுக்கும் பயணத்திற்கும் ஹெர்மியர்தான் தெய்வம்.” அங்கே கையில் பயணத்திற்கான இரட்டை நாகங்கள் சுற்றிய சிறகுள்ள கோலும் தொலைவு நோக்கி சுட்டும் விரலுமாக அது நின்றது. கால்களிலும் சிறகுகள்.
ஆமைமேல் ஒரு கையை வைத்து சாய்ந்து நிற்கும் இன்னொரு சிலையைச் சுட்டி “கடற்பயணங்களை அமைப்பவரும் அவரே” என்றான் சாத்யகி. “நிகரற்ற மாயம் கொண்டவராக அவரை சொல்கிறார்கள்.” குதிரைலாட வடிவிலான நரம்பிசைக் கருவியை நெஞ்சோடு சேர்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றார். அப்பால் தோளில் ஒரு செம்மறியாட்டை தூக்கியபடி நிற்கும் சிலையைச் சுட்டி “அவரும் ஓர் ஆட்டிடையன் என்கிறார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் அப்போதுதான் அச்சிலைகளை யவனர் அங்கு அமைத்தது ஏன் என சித்தத்தில் தெளிவடைந்தான்.
ஒவ்வொரு படி ஏறுகையிலும் சாத்யகியிடமிருந்து முற்றிலும் தனித்து விலகலானான். அவனது சொற்கள் மிக அப்பாலென ஒலித்தன. இறுதிப்படி முற்றிலும் தனித்திருந்தான். சாத்யகியும் அவ்வண்ணமே உணர்ந்தவன் போல அவனிடமிருந்து முடிந்தவரை விலகிக்கொண்டான். உப்பரிகைக்கூடத்தின் வாயிலில் நின்ற இரு காவலரும் அவர்களைக் கண்டதும் தலைவணங்கி உள்ளே செல்லும்படி பணித்தனர். திருஷ்டத்யும்னன் அவ்வாயிலைக் கடக்குமுன் ஒரு கணம் நின்றான். தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உரைப்பதற்குரிய சொற்களை ஒவ்வொன்றாக எடுத்து கோத்து திரட்டி வைத்திருந்தான். அப்போது எத்தனை தேடியபோதும் அவை எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை.
அந்தத் திணறல் அவன் உடலை எடை கொள்ளச் செய்தது. கணுக்கால்கள் கடுத்து உடல் ஒரு பக்கமாக சாய்ந்தது. தன் உடலை நிலை நிறுத்திக்கொண்டு நீள் மூச்சுடன் உறைந்தகால்கள் மேல் அசையாமல் நின்று பின்பு அசைத்து பெயர்த்து எடுத்துவைத்து உள்ளே சென்றான். உள்ளம் ஒரு சொல் இன்றி வெறும் பதைப்பு மட்டுமாக இருந்தது. கூடத்திற்குள் இளைய யாதவர் கடலை ஒட்டிய கைப்பிடியின் அருகே போடப்பட்டிருந்த பீடத்தில் அமர்ந்திருந்தார். அவரைச்சுற்றி சிறிய அணிப்பீடங்களில் எட்டு அரசியரும், சுபத்திரையும் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் உள்ளே நுழையும்போது அக்ரூரர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். காலடி ஓசை கேட்டு அவர்கள் அனைவரும் திரும்பி நோக்க திருஷ்டத்யும்னன் அப்பார்வைகளை விலக்கி தலைகுனிந்தான். சாத்யகி தன்னைத் தொடரவில்லை என உணர்ந்து திரும்பி நோக்க அவன் அறை வாயிலிலேயே நின்று விட்டிருப்பதை கண்டான். அக்ரூரர் அவனை உள்ளே வரும்படி கையசைத்தார். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. தலை வெம்மை நோய் கண்டவன் போல ஆடியது.
எட்டு அரசியரும் அங்கிருப்பார்களென்று திருஷ்டத்யும்னன் எண்ணவில்லை. அரசியருடனிருக்கையில் தங்கையையும் அமைச்சரையும் ஏன் அழைத்தார் என்று எண்ணிக் கொண்டான். மீண்டும் சாத்யகியை திரும்பி நோக்கினான்.
இளைய யாதவர் சாத்யகியை நோக்கி “வா இளையோனே, நீ இங்கு வரும்போது விழைந்தது போல் ஒரு இனிய விளையாட்டுக்கென இங்கு கூடியுள்ளோம்” என்றார். சாத்யகி “இல்லை… நான்…” என்று சொல்லத்தொடங்கி இரு கைகளையும் கூப்பியபடி “நான் கள்ளருந்தியுள்ளேன் அரசே” என்றான். இளைய யாதவர் நகைத்தபடி “ஆம், அங்கு எனது இனிய மாணவன் ஒருவன் உங்களை சந்தித்திருப்பான். குசலனும் நானும் இணைந்து பல நாடுகளுக்கு சென்றுள்ளோம். பல முனிவர்களை சீண்டி இழிசொல்லும் தீச்சொல்லும் பெற்று தப்பியோடியிருக்கிறோம். அவன் நாவில் வாழும் கலைமகள் இரு கைகளிலும் சாட்டையை ஏந்தியவள்” என்றார்.
திருஷ்டத்யும்னன் “ஆம் அரசே, அவரிடம் பேசும்போது எவ்வகையிலோ தங்களை அறிந்தவர் அவரென்று தோன்றியது” என்றான். அந்தப்பேச்சு அவனை இறுக்கத்திலிருந்து மீட்டது. “என்னை நன்கறிந்தவன் அவன்” என்றார் இளைய யாதவர். சாத்யகி பீரிட்ட அழுகையோசையுடன் “அரசே, நான் அவச்சொல் சொன்னேன். உங்களிடம் களியாடவேண்டுமென்று சொன்னேன். என் நெஞ்சில் கட்டாரியை குத்தி இறக்கும் வலியை விழைந்தே அவ்வண்ணம் சொன்னேன்” என்றான்.
இளைய யாதவர் உரக்க நகைத்தபடி எழுந்து “மூடா, நீ நானறியாத ஒரு சொல்லையேனும் சொல்ல முடியுமென்று எண்ணுகிறாயா?” என்றார். “இல்லை” என்றான் சாத்யகி. பின்பு திரும்பி ஓட விழைபவன் போல இரண்டு அடிகளை பின்னால் எடுத்து வைத்து அங்கிருந்த சுவரில் முட்டிக் கொண்டு கைகளைத் துழாவி அதை பற்றிக்கொண்டான். அவனை அணுகிய இளைய யாதவர் “மூடா மூடா” என்றபடி அவன் தோளில் கை வைத்து தழுவி இறுக்கி அணைத்துக் கொண்டார்.
“எந்தையே! எந்தையே!” என்றழைத்தபடி அவர் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டான் சாத்யகி. “என்னிடம் ஏன் இப்படி விளையாடினீர்? என்னை ஏன் ஆராய்கிறீர்?” என்று தோளில் அழுந்திய உதடுகள் மூச்சில் வெம்மை கொள்ள அவன் கேட்டான். “உன்னிடம் அன்றி எவரிடம் விளையாடுவேன்? நீ எனக்காக ஐந்து தொழும்பர் குறிகளைச் சுமப்பவன் அல்லவா? உனக்கு இங்கு நிகர் எவர்?” சாத்யகி திகைத்து தலைதூக்கி நோக்கினான். இமைகளில் கண்ணீருடன் அவன் கண்கள் சுருங்கின.
“இளையோனே, ஒவ்வொருவரும் தன் எல்லையை தன்னுள் ஒவ்வொரு கணமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அஞ்சித் திரும்புபவனை உலகியலான் என்கிறோம். அறிந்து வகுத்துக் கொள்பவனே அறிஞன் என்கிறோம். கடக்கத் துணிபவனே யோகி.” சாத்யகி “என் எல்லை என்னை அச்சுறுத்துகிறது எந்தையே” என்றான். “அச்சுறுத்துவது என்றாலும் வழிமயக்குவதென்றாலும் அறிவு பிறிதொன்று இல்லாத பாதை. தெய்வங்களுக்கு உகந்தது, தூயது” என்றார் இளைய யாதவர்.
“இளையோனே, இப்புவியில் ஒவ்வொரு உயிரும் தன்னை முழுதறியும் இறையாணையைப் பெற்றே வந்துள்ளது. தன் இருளையும் ஒளியையும் அறிந்து இருளென்றும் ஒளியென்றும் அமைந்திருக்கும் ஒன்றை அணுகுபவன் விடுதலை அடைகிறான். வருக!” என்று அவன் தோளை அணைத்து அழைத்து வந்தார். அருகே நின்ற திருஷ்டத்யும்னனை பிறிதொரு கையால் தோள் வளைத்து அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அரசியர் நடுவே சென்று அங்கிருந்த பீடங்களைக் காட்டி “அமர்க!” என்றார்.
இருக்கையில் அமர்ந்தபோது திருஷ்டத்யும்னன் தன் உடல் நீர் நிறைந்த பெருந்தோற்கலம் என உணர்ந்தான். எடையுடன் அவனை பீடம் நோக்கி அழுத்தியது. நாற்புறங்களிலும் ததும்பி அலை குலுங்கியது. திவலை எழுந்து தொண்டையைக் கரித்து மூக்கை அடைந்தது. இதழ்களை இறுக்கி தன்னை செறிவாக்கிக் கொண்டான். மழை நனையும் தவளை இலை மேல் அமர்ந்திருப்பது போல பீடத்தின் விளிம்பில் தொற்றி அமர்ந்து உடல் குறுக்கி தலைகுனிந்து அழுது கொண்டிருந்தான் சாத்யகி. மடிமேல் கோட்டிய கைகளில் விழிநீர் உதிர்ந்து கொண்டிருந்தது. பனையோலை கிழிபடும் ஒலியில் அவ்வப்போது விசும்பினான்.
திருஷ்டத்யும்னன் சூழ்ந்திருந்த அரசியரின் முகங்களை நோக்கினான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வு நிலையில் புல்நுனியில் பனித்துளி என உடலில் திரண்டெழுந்த விழிகள் கொண்டிருந்தது. அவர்கள் அமர்ந்திருக்கும் முறையிலேயே உள்ளம் அமைந்திருக்கும் வகை தெரிவதை விந்தையுடன் நோக்கினான். இரு கைகளையும் பீடத்தின் கைப்பிடிகள் மேல் வைத்து சிம்ம முகப்பை இறுகப்பற்றியபடி விரைப்புடன் நிமிர்ந்து அமர்ந்திருந்தாள் சத்யபாமா. அருகே கழற்றி கைபோன போக்கில் போடப்பட்ட பட்டுச்சால்வை போல பீடத்தில் வளைந்து அமர்ந்திருந்தாள் லக்ஷ்மணை. அவளருகே பத்ரை பீடத்தின் நுனியில் முழங்கால்கள் மேல் கைகள் வைத்து வேட்டைக்கு எழ சித்தமான சிறுத்தை போல் அமர்ந்திருந்தாள்.
பீடத்தை நிறைத்த கரிய உடலுடன் குழைந்த மண்ணில் செய்த சிற்பம் போல் அமர்ந்திருந்தாள் ஜாம்பவதி. ஆடை நுனியைப் பற்றி விரல்களால் சுழற்றியபடி கால் கட்டை விரலை தரையில் நெருடியபடி ருக்மிணி அமர்ந்திருக்க எங்கிருக்கிறோமென்றே அறியாதவள் போல மித்திரவிந்தை இருந்தாள். அவளருகே நக்னஜித்தி சலிப்புடன் என சாளரத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். எழுவரும் முதல்நிரையில் அமர்ந்திருக்க அவர்களுக்குப் பின்னால் இடப்பட்ட சிறிய பீடத்தில் தன்னை இளையவரிடமிருந்து ஒளித்துக்கொள்பவள் போல காளிந்தி அமர்ந்திருந்தாள்.
திருஷ்டத்யும்னன் அவளை முதலில் பார்க்கவேயில்லை. இருக்கும்போதே அங்கு தன்னை இல்லாதது போல் ஆக்கிக் கொள்ளும் கலை ஏவலருக்கு எளிதில் வருவது. அடிநிலை மாந்தர் அனைவரும் கற்றுக் கொள்வது. உள்ளம் மறைக்கப்படும்போது உடலும் மறைந்துபோகும் விந்தை அது என திருஷ்டத்யும்னன் எண்ணுவதுண்டு. அவள் உடலும் முகமும் விழிகளும்கூட அடிநிலை மாந்தருக்குரியதென தோன்றியது. அணிந்திருந்த அரச உடையை அவள் உடல் நாணியது போல் தெரிந்தது. கொடைநாளில் மட்டும் பட்டுசுற்றும் காட்டுத்தெய்வம் போல.
தோளிலிருந்து சரிந்த மேலாடையை வலக்கையால் சுற்றி இடையுடன் அழுத்திப் பற்றியிருந்தாள். கரிய வட்ட முகத்தில் நிறைந்த நீள் விழிகள். சிறு மூக்கு. குவிந்த சின்னஞ்சிறு உதடு. நீள்கழுத்து. அவள் நீளக்கைகள் காளிந்தியில் துடுப்பிடுவதற்கு உகந்தவை என்று அவன் எண்ணிக் கொண்டான். அக்கணமே அவள் பீடத்தில் அமர்ந்திருந்ததுகூட நீரில் செல்லும் படகொன்றில் உடலை நிமிர்த்தி தோளை நிகர் நிலையாக்கி இருப்பது போல் தோன்றியது. உடனே அவ்வெண்ணத்திற்காக சற்று நாணினான்.
இளையவர் சாத்யகியிடம் “இங்குள ஒவ்வொன்றையும் நான் முழுதறிகிறேன் இளையோனே. ஏனென்றால் நானன்றி எதுவும் இந்நகரில் இல்லை. மாளிகை முகடுகளில் பறக்கும் கொடிகளின் பட்டொளியும் இருண்ட கழிவு நீர் ஓடைகளில் எழும் சிற்றலையும் நானே. இந்நாள்வரை நீயென ஆகி நடித்ததும் நானே” என்றார். புன்னகையுடன் கை நீட்டி சாத்யகியின் தொடையைத் தொட்டு “நான் என ஆகி நீ நடித்ததையும் நான் அறிவேன்” என்றார்.
சாத்யகியின் உடல் குளிர்ந்த நீர்த்துளி விழுந்ததுபோல் சற்று அதிர்ந்தது. ஆனால் அவன் விழி தூக்கவில்லை. திருஷ்டத்யும்னன் அங்கிருந்த ஏழு அரசியரும் இளைய யாதவர் சொல்லப்போகும் பிறிதொன்றுக்காக காத்திருக்கிறார்கள் என்று உய்த்துக் கொண்டான். அங்கு அவர்கள் அதற்கெனவே வந்திருக்கிறார்கள். அமர்ந்த பின் ஒவ்வொரு கணமும் அதை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவரோ அவர்களின் எதிர்பார்ப்புகளை தன் கைகளால் எற்றி விளையாடுகிறார். அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவர்களின் எதிர்பார்ப்பை நகையாடுகிறது.
சத்யபாமா மேலும் மேலும் சினம் கொண்டு வருவதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். கொதிகலனில் இருந்து வெம்மை பரவுவதுபோல் அவள் உடல் கதிர் வீசிக் கொண்டிருந்தது. அவன் மீண்டும் காளிந்தியை நோக்கினான். பொன்நகைகளுக்கு அடியில் தன் இருகைகளிலும் அவள் இரும்பு வளையல்கள் இரண்டை அணிந்திருந்தாள். மச்ச நாட்டிலிருந்து யாதவப் பேரரசனை மணம் கொண்டு அரசியென தலைநகர் புகுந்து பாரதவர்ஷத்தின் பெருமாளிகையில் அமைந்த பின்னரும் அதை அவள் கழற்றவில்லை என்பது வியப்பளித்தது.
ஆனால் வியப்பதற்கொன்றுமில்லை என்ற எண்ணம் மீண்டும் வந்தது. இங்கிருந்து எழுந்து சென்று மீண்டும் காளிந்தியில் பகலும் இரவும் படகோட்ட இவளால் இயலும். மீன் கணங்கள் அனைத்தையும் அறிந்திருப்பாள். அலை நுட்பங்களும் அவற்றில் ஆடும் காற்றின் கணக்குகளும் காற்றை ஊதி விளையாடும் விண்ணின் மீன் நிரைகளையும் அறிந்திருப்பாள். இந்நகரம் கூட பெரு நதியொன்றில் மிதந்து செல்லும் சிறு படகென்றே அவளுக்கு பொருள்படும்.
அப்போது தெரிந்தது, அவள் அவர்களுக்குப்பின் ஒளிந்து அமர்ந்திருக்கவில்லை என. படகின் பின் இருக்கையில் அமர்ந்து இரு கைகளாலும் துடுப்பிட்டு அதை அவள் முன் செலுத்துகிறாள். என்ன உளமயக்கு இது என அவன் புன்னகையுடன் தன்னை நோக்கி வினவினான். ஏன் இவளைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறேன்? நக்னஜித்தி விழிகளால் மித்திரவிந்தையிடம் ஏதோ வினவ அவள் இல்லை என்று கருவிழிகளை மட்டும் அசைத்து சொல்லி விலகுவதை கண்டான். லக்ஷ்மணை ஓர் எண்ணத்திலிருந்து மெல்லிய உதட்டுப்பிதுக்கம் வழியாக இன்னொன்றுக்கு சென்றாள். சத்யபாமா வழுக்கும் கைகளை சிம்மத்தலையில் ஒருமுறை உரசிக்கொண்டாள். காற்று சுடரில் அசைவைக் காட்டுவது போல ஒவ்வொருவரின் எண்ணங்களும் அக்கணமே உடலில் திகழ்ந்தன.
திருஷ்டத்யும்னன் அங்கிருந்து விலகிச் செல்ல விழைந்தான். வரும் போதிருந்த உணர்வுகளும் அதற்கேற்ப கோத்து உருவாக்கப்பட்ட சொற்களும் நெடுந்தொலைவில் எங்கோ கிடந்தன. நினைவுகளில் துழாவி உடைசல்களையும் சிதிலங்களையும் என அவற்றில் சில பகுதிகளை மட்டுமே மீட்க முடிந்தது. அங்கு உணர்வு நில்லா இளையவன் போல அமர்ந்திருந்தான். இந்த நாற்கள விளையாட்டின் மறுபக்கம் அமர்ந்திருக்கும் இவரோ தன்னையும் ஒரு பேதையென்றாக்கி முன் வைக்கிறார். பேதையென்றும் பித்தனென்றும் ஆகாமல் இவருடன் களம் நின்று காய்கோக்கவே எவராலும் இயலாது.
எட்டு திருமகள்கள், எட்டு வகை பேரழகுகள், எட்டு குன்றாச்செல்வக் குவைகள் இவர்கள் என்கின்றனர் சூதர். எட்டு முகம் கொண்டு எழுந்த விண் நிறைந்த பெருந்திரு. அது அறிந்திருக்குமா இவன் யாரென்று? அறிந்தபின்னரும் மாயை என்ற பொற்சித்திரப்பட்டுத்திரை அதை மூடியிருக்குமோ?
திருஷ்டத்யும்னன் காலடியில் பாம்பு ஒன்று இருக்கும் உணர்வு எழுவது போல சியமந்தகம் தன் இடையில் இருப்பதை உணர்ந்தான். அவ்வுணர்வை ஓர் உடலதிர்வாகவே அடைந்து இருக்கையிலிருந்து சற்று எழுந்துவிட்டான். இளைய யாதவரன்றி பிறர் விழிகளனைத்தும் அவனை நோக்கி திரும்பின. அதை உணர்ந்து அவன் இருக்கையில் சற்று பின்னால் சாய்ந்தான். இத்தனை நேரம் அதை மறந்துவிட்டிருந்ததன் விந்தை அவனை ஆட்கொண்டது. இத்தனை சொற்களும் நகையாட்டுகளும் அதை மறப்பதற்குத்தானா என்று எண்ணிக் கொண்டான்.
அதை உணர்ந்த உடனேயே அவன் இடைக் கச்சை இரும்பாலானது போலாயிற்று. பின்பு எரியும் அனல் போல் அது அவன் வயிற்றைத் தொட்டது. மெழுகை அனல் துளி போல் எரித்துக் குழைந்து உட்சென்றுகொண்டே இருந்தது. அதை எடுத்து பீடத்தின் மேல் வைக்க வேண்டுமென்றே எண்ணினான். அவ்வெண்ணம் பிறரெவரோ எண்ணுவது போல் எங்கோ இருந்தது. தொடர்பின்றி அவன் உடல் அங்கிருந்தது. அதை அவரிடம் அளித்துவிட வேண்டும், என்ன நிகழ்ந்தது என்று சொல்லி தன் எண்ணமென்ன என்று உரைத்துவிடவேண்டும். ஆனால் அதற்குரிய ஒரு சொல்கூட அவனிடம் இருக்கவில்லை. செய்யக்கூடுவது கச்சையுடன் அப்பேழையை எடுத்து அவர் முன் வைப்பதொன்றே.
ஆனால் சூழ்ந்திருந்த அரசியர் விழிநடுவே அதை தன்னால் செய்யமுடியாதென்று உணர்ந்தான். அவர்கள் ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு விதமாக எண்ணிக் கொள்வார்கள். அவன் அதை கவர்ந்து சென்றதாகக்கூட எவரேனும் எண்ணக்கூடும். அனைத்தும் அவன் ஆடிய ஆடலே என மயங்கக்கூடும். எண்ண எண்ண அவன் உருமாறி கள்வனென ஆகி வந்து நின்றான். சியமந்தகத்துடன் துவாரகையை விட்டு தப்பி ஓட முயன்ற அவன் சூழ்ந்த பாலையில் தொடு வானை நோக்கி திகைத்து நின்றபின் திரும்பி வந்திருக்கிறான்.
திகைத்து அவன் அக்ரூரரை நோக்கினான். சியமந்தகத்துடன் தப்பி காசிக்கு ஓடியதும் அவனேதானா? அதை கவர்ந்தமைக்காக வெற்றுடலுடன் தேர்த்தட்டில் அமர்ந்து அவை முன் வந்து குனிந்து விழுந்ததும் அவன்தானா? படையாழியால் கழுத்து வெட்டுப்பட்டு துடித்து விழுந்ததும் அவனேதானா?
என்னென்ன உளமயக்குகள்! இவற்றை என் முன் ஏதும் அறியாதவர் போல் அமர்ந்திருக்கும் இவர்தான் உருவாக்குகிறாரா? அனைவர் விழிகளும் தன் மேல் குவிந்திருப்பது போல் உணர்ந்தான். ஒவ்வொரு முகத்தையாக நோக்கினான். எவரும் அவனை பார்க்கவில்லை. பின்னர் உணர்ந்தான், அவர்கள் அவனிடமிருந்து விழியை திட்டமிட்டு திருப்பி வைத்திருக்கிறார்கள் என. ஒவ்வொருவரின் அகவிழியும் அவனில்தான் இருக்கிறது. அவனில் அல்ல, அவன் இடையில் அமிழ்ந்த சியமந்தகத்தில்.
இப்போது செய்வதற்குள்ளது ஒன்றே, அதை எடுத்து பீடத்தில் வைப்பது. ஆம், பிறிதொன்றுமில்லை. அவனிடம் சொல்வதற்கான சொற்களேதும் உள்ளத்தில் இல்லை. ஆனால் அதை எடுத்து அவ்வண்ணம் வைக்கும் போதே ஒவ்வொன்றும் நிறைவுற்றுவிடுகிறது. அதற்கு மேல் சொல்வதற்கு என்ன உள்ளது? எந்தையே, உன் உடல் ஒளிர்ந்து சொட்டிய ஒரு துளி என்னிடம் வந்தது. அதை ஏந்தியிருக்கும் தகுதியும் ஆற்றலும் எனக்கில்லை. இதோ உன் காலடியிலேயே திரும்ப வைத்துவிட்டேன். அருள்க! அதற்கப்பால் எச்சொல் சொன்னாலும் அது ஆடல் களத்தில் காய்களென்றே ஆகும்.
எண்ணி எங்கோ இருந்த அவன் முன் சதைப்பிண்டமென பீடத்தில் அமர்ந்திருந்தது அவன் உடல். தன் எண்ணத்திலிருந்து கை நீட்டி அவ்வுடலைத்தொட்டு அசைக்கமுயன்றான். குருதி முழுக்க கலந்து ஓடி விரல்நுனிகள்தோறும் துளித்து நின்ற கள்ளில் ஊறி குளிர்ந்திருந்தது உடல். இளைய யாதவரின் இதழ்கள் அசைந்து “சியமந்தகம்” என்று சொல்வதைக் கண்டு அவன் திடுக்கிட்டான். மாபெரும் கண்டாமணியின் நா அசைவது போல செவிப்பறை உடையும் பேரொலியுடன் மேலும் ஒரு முறை அவர் சொன்னார் “சியமந்தகம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!”
சியமந்தகமா என்றவன் வியந்தபோது அவர் சொல்வது பிறிதொரு சொல்லென உணர்ந்தான். “இந்நாளில்தான்…” என்றார் இளைய யாதவர். “நான்காண்டுகளுக்கு முன்பு…” என்ன சொல்கிறார் என்று திருஷ்டத்யும்னன் திகைப்புடன் சாத்யகியை நோக்கினான். சாத்யகி முற்றிலும் அங்கிருந்து விலகி விட்டிருந்தான். கடலிலிருந்து வந்த காற்று அந்தக் கூடத்தை சூழ்ந்திருந்த சாளரங்களினூடாக திரைச்சீலைகளை பறக்கவைத்து உள்ளே வந்து சுழன்று சென்றது. மிகத்தொலைவில் என கடலோசை கேட்டுக் கொண்டிருந்தது.
“அன்று நானும் அஸ்தினபுரியின் இளையவனும் யமுனை ஆட முடிவு செய்தோம்” என்றார் இளைய யாதவர். “நீராடி கரை சேர்ந்து பாறை ஒன்றில் அமர்ந்திருக்கையில் இந்த நதியின் ஊற்று முகம் எது என்று அவன் கேட்டான். சற்று வேதாந்த விளையாட்டை ஆடலாமென்று முடிவு செய்தேன். இளையோனே, ஒவ்வொன்றின் ஊற்றுமுகமும் அதன் மையமே தான் என்றேன். அவனும் அவ்வாடலை நிகழ்த்த சித்தமாக இருந்தான். பாறையில் புரண்டு என்னை நோக்கி எவர் சொன்னது என்றான்.”
இளைய யாதவர் சொன்னார் “நான் சிரித்து, ‘இவ்வுலகுக்கு நான் சொல்கிறேன்’ என்றேன்.” “இந்த ஆற்றின் ஊற்று முகம் இந்நதியின் மையமாகும்” என்றேன். “இந்த ஆறு எதுவோ அது அந்த மையத்தில் இருக்கும். இந்த நதி அதிலிருந்து விலகிச் செல்லவில்லை. சுழன்று அதற்கே திரும்பி வந்துகொண்டிருக்கிறது.” அவன் எழுந்து தன் இடையாடையை சுற்றி இறுக்கி “அதையும் பார்த்துவிடுவோம்” என்றான். “எங்கு செல்கிறாய்?” என்றேன். “படகொன்றை எடுக்கிறேன். இந்நதியின் ஊற்று முகம் வரை செல்வோம். நீ சொன்னது உண்மையா என்று பார்த்துவிடுவோம்” என்றான்.
நான் சிரித்தபடி “வேதாந்த சிந்தனைகளை வாழ்க்கையில் தேடத்தொடங்குபவன் காலத்தை வீணடிக்கிறான். அவை பாதி உலகிலும் மீதி உள்ளத்திலுமாக முழுமை கொள்கின்றன” என்றேன். சிரித்தபடி அவன் “இது இரண்டாவது வேதாந்த கருத்து. நான் நீ சொன்ன முதல்கருத்தை மட்டுமே விவாதிக்க விழைகிறேன்” என்றான். “வேதாந்திகள் மண்ணில் காலூன்றி நின்று கேட்பவனுக்கு வாலையும் தனக்குத் தலையையும் காட்டும் விலாங்குமீன்கள். அதற்காகவே சாமானியம் விசேஷம் என்று உண்மையை இரண்டாக பகுத்து விடுகிறார்கள்” என்றேன். “உண்மையை எப்படி இரண்டாக பகுக்க முடியும்?” என்றான். நான் “ஏன், முளைக்கத்தொடங்குகையில் விதை இரண்டாக ஆகிறதல்லவா?” என்றேன். “உன்னுடன் பேசி வெல்ல முடியாது” என்றான் அவன்.
“பார்த்தா, நிகழ்தளத்தில் உண்மை என்பது நுண்தளத்தில் மேலுண்மை ஆகிறது. பகுபடும் உண்மை முழுமையுண்மையின் ஆடிப்பாவை மட்டுமே. உண்மை மேலுண்மை மேல் அமர்ந்திருக்கிறது, அலை கடல் மேல் அமர்ந்திருப்பதைப்போல. அலை நோக்குபவன் கடல் நோக்குவதில்லை. கடல் நோக்குபவன் கண்ணில் அலையும் கடலே” என்றேன். “சொல்லாடலை விடு. நான் வீரன். என் வில்லும் அம்பும் இம்மண்ணில் மட்டுமே இலக்கு கொண்டவை. நீ சொன்னதை என் விழி காண வேண்டும். என்னுடன் எழுக!” என்றான். “சரி, அவ்வண்ணமே ஆகட்டும்” என்று எழுந்தோம்.
இருவரும் யமுனைக் கரையில் கட்டப்பட்டிருந்த சிறு படகொன்றை அவிழ்த்துக் கொண்டோம். துடுப்புகளுடன் ஏறி ஒழுக்குக்கு எதிராக துழாவத்தொடங்கினோம். நான் “யோகமென்பது நதியை அதன் ஊற்று முகம் நோக்கி திருப்புதல். நாம் யோகவழியில் சென்று கொண்டிருக்கிறோமா?” என்றேன். “யாதவனே, இனி நீ ஆயிரம் சொல்லெடுத்தாலும் நான் ஒன்றையும் உளம்கொள்ள மாட்டேன். ஊற்று முகம் என்பது மையமாக ஆவது எப்படி? அதையன்றி பிறிதெதையும் கேட்க விழைகிலேன்” என்றான். சிரித்தபடி நான் “அவ்வண்ணமே ஆகுக!” என்றேன்.
கை சலிக்க துழாவி யமுனையின் எதிரோட்டத்தில் சென்றோம். செல்லுந்தோறும் ஒழுக்கின் விசை கூடிக்கூடி வந்தது. ஆழம் மறைந்து அலை மிகுந்தது. அமைதி அழிந்து ஓசை எழுந்தது. அந்தியில் அதன் நடுவே அமைந்த பாறை ஒன்றில் துயின்றோம். மீண்டும் காலையில் எழுந்து மீனும் கனியும் உண்டு படகிலேறி துழாவி யமுனை குகைவிட்டு அரசநாகம் என எழுந்து வரும் இருட்காடுகளுக்குள் நுழைந்தோம். அங்கே பாறைகளின் இடுக்கில் நாணலிட்டு மீன்பிடிக்கும் மலைமச்சர்களின் சிற்றூர்கள் நூறு உள்ளன. அவர்கள் நூலறியாதவர், முடியெதற்கும் வரிகொடுக்காதவர். அவர்களின் ஊர்களை இரவின் திரைக்குள் ஓசையின்றி கடந்து சென்றோம்.
பின்னர் அருவி என யமுனை மண்பொழியும் மலைச்சரிவை அடைந்து நின்றோம். படகை கரையணைத்து புதரொன்றில் கட்டியபிறகு கரையோர சதுப்பில் வளைந்து நீர்தொட்டு நின்றாடிய கிளைகளின் வழியாக தாவிச்சென்றோம். நச்சுதோய் வாளிகளும் நட்பிலா மொழியும் கொண்ட புளிந்தர்களின் எல்லையை கடந்தோம். புளிந்தவனம் ஆரியவர்த்தத்தின் முடிவு என்பார்கள். எனவே புதர் எழுந்து மூடிய இருண்ட காட்டில் எங்கள் உடல்கரைந்து மறைய காற்றென சென்றோம்.
கரிய பாறைகளுக்கு மேல் நுரை அலைத்து எழுந்தது. வெண்சுடர் நின்றெரியும் விறகுக்குவை என காளிந்தி. “இருளுக்கு மேல் வழியும் ஒளி” என்று இடையில் கை வைத்து அவன் சொன்னான். “இருளும் ஒளியுமான ஒன்று. நாம் அதன் தொடக்கத்தை காணச்செல்கிறோம்.” நான் சிரித்தபடி “வேதாந்தத்தை வணிகனின் துலாத்தட்டில் வைக்க எண்ணுகிறாய் பாண்டவனே” என்றேன். “டேய் யாதவா, இனி உன் ஒரு சொல்லையும் கேட்கமாட்டேன் என்று முன்னரே சொல்லிவிட்டேன். வாயைமூடிக்கொண்டு வந்து நீ சொன்னதை என் கண்ணுக்குக் காட்டு” என்றான் இளைய பாண்டவன்.
மரக்கிளைகளிலிருந்து மரக்கிளைகளுக்குத் தாவி பாறைகள்மேல் தொற்றி ஏறி சென்றுகொண்டிருந்தோம். பனிப்பெருக்காக காற்று வீசிய மலை உச்சிக்கு சென்றோம். தேவதாருக்கள் எழுந்த பெரும் சரிவில் இரவு தங்கினோம். மீண்டும் கரிய அமைதி என எழுந்த பெரும்பாறைகளினூடாக தாவியும் இடுக்குகளில் ஊர்ந்தும் சென்றோம். எங்கள் கால் பட்ட கூழாங்கற்கள் தவம் கலைந்து எழுந்து பாறைகளில் அறைந்து தங்கள் நெடும் பயணத்தை தொடங்கின. அவை அமைந்திருந்த பள்ளங்கள் விழிகளெனத்திறந்து திகைத்து நோக்கின.
“இம்மலை முற்றிலும் கருமை கொண்டிருக்கிறது. ஆகவேதான் இதற்கு களிந்தமலை என்று பெயர் போலும்” என்றான். நான்காவது நாள் இமயத்தின் மைந்தனாகிய களிந்தமலையின் உச்சியை அடைந்தோம். “களிந்தனின் விழிகளில் இருந்து வழியும் களிநீர் என்று காளிந்தியை சொல்கிறார்கள். இம்மலையின் முடிகளில் எங்கோ அது உள்ளது” என்றான். மேலும் ஒரு நாள் சிற்றோடை என பால் நுரைத்து சரிவிறங்கிக் கொண்டிருந்த யமுனையின் கரைப்பாறைகளினூடாக சென்றோம். அங்கே கம்பளி ஆடை அணிந்து வளைதடி ஏந்தி செம்மறி மேய்த்துக் கொண்டிருந்த மலைமகன் ஒருவனை கண்டோம். அவனிடம் பொன் நாணயமொன்றை கொடுத்து களிந்தவிழியை காட்டும்படி கோரினோம்.
குளிரில் உறைந்து இருள்குவை என விரிந்திருந்த கரும்பாறைகளினூடாக சிற்றோடைகள் வழிந்து பாசி படிந்த பாதையில் எங்களை அம்மலைமகன் அழைத்துச் சென்றான். தன் சிற்றிளமையில் தன் தந்தையுடன் ஒரே ஒரு முறை அவன் களிந்த விழியை கண்டிருந்தான். அங்கு யமுனை வெண்பட்டுச் சால்வையென பாறைகள் நடுவே சுழித்தும் கரந்தும் வளைந்தும் கிடந்தது. அதன் ஓசை அத்தனை பாறைகளில் இருந்தும் எழுந்து கொண்டிருந்தது. முழவுகள் என முரசுகள் என முழங்கும் பாறைகள் நடுவே நாங்கள் சொன்ன சொற்களெல்லாம் புதைந்து மறைந்தன. பின் உள்ளமும் சொல்லிழந்தது.
பகல் அந்தியாவது வரை நடந்து களிந்தவிழி கனிந்த துளிகள் மண் தொடும் முதற் புள்ளியை அடைந்தோம். அங்கு அகத்திய முனிவர் நாட்டிய சிற்றாலயம் இருந்தது. கல்பீடத்தின் மேல் தோளிலேந்திய நிறைகலம் தளும்ப நீந்தும் ஆமை மேல் அமர்ந்திருந்த யமுனை அன்னையை கண்டோம். குளிர் நீரள்ளிப் படைத்து அவளை வணங்கிவிட்டு மேலேறினோம். நூறு பாறை இடுக்குகள் வழியாக தொற்றி ஏறி மேலே சென்றோம். வான்தொட நின்ற பெரும் பாறையொன்றின் மேல் விரிந்த வெடிப்பில் கால் பொருத்தி வரையாடுகளைப்போல் ஏறி மேலே சென்றோம்.
முதலில் சென்ற மலைமகன் நின்று தான் அணிந்திருந்த மயிர்த்தோலாடையை இறுகக் கட்டிவிட்டு எங்களை நோக்கி மேலே வரும்படி கையசைத்தான். நான் ஏறிய பின் கை கொடுத்து பார்த்தனை ஏற்றிக் கொண்டேன். மேலே ஏறியதும் சூழ்ந்திருந்த முகிலன்றி ஏதும் தெரியவில்லை. மலை உச்சியிலா மண்ணிலா எங்கு நிற்கிறோம் என்று உணரக்கூடவில்லை. “யாதவனே, என்ன தெரிகிறது?” என்றான் பார்த்தன். “காத்திருப்போம். சற்று நேரத்தில் இம்முகில் விலகும்” என்றேன். மலைமகன் அவனது மொழியில் “அரைநாழிகை நேரம்” என்றான்.
காற்று பல்லாயிரம் கைகளுடன் எங்களை அள்ளி வீச முயன்றது. தொலைதூரத்து மலை இடுக்குகளில் பனியை அள்ளிக் குவிக்கும் அதன் ஓசையை கேட்டோம். முகில் அடர்நிறம் மாறுவது தெரிந்தது. கலங்கிய நீர் தெளிவது போல் அது ஒளிகொண்டது. பின்பு அதில் ஒரு பகுதி விரிசலிட்டு விலகி வடக்காக எழுந்து சென்றது. அவ்விடைவெளியில் குளிர்ந்த ஒளிப்பெருக்கென சூரியனை கண்டேன். ஒளி மிகுந்து வந்தது. எங்கள் காலடியில் தாழ்வறை ஒன்று பிறந்தது. கரிய மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் சரித்துவைத்த ஆடி போல வெண்ணிற பனித்தகடு ஒன்றை கண்டேன். வெயில் பட்டபோது சதை நீக்கிய முத்துச்சிப்பியென அது வானவிற்களை சூடியது.
மலைமகன் கை நீட்டி “களிந்த விழி” என்று சுட்டிக் காட்டினான். அப்பெரிய பனிப்பாளத்தின் நடுவே நீல விழியொன்று திறந்திருப்பதை கண்டேன். அது நிறைந்து வழிந்த நீலக்கோடு வளைந்து சரிந்திறங்கி மறுபக்கம் காளிந்தியென பாறை வளைவுகளில் பெருகிச் சென்றது. இந்திரநீல விழி ஒரு கணமும் நோக்கு விலக்க ஒண்ணாத ஈர்ப்பு கொண்ட முதல் முழுமையின் கண். பார்த்தன் என் தோளைத் தொட்டு “அவ்விழிக்கு அப்பால் அது என்ன?” என்றான்.
அந்நீலவிழிக்கு அப்பால் பிறிதொரு வளையமென கருமேகத்தீற்றல் ஒன்று எழுந்து பனி மூடிய மலைகளைக் கடந்து வானில் எழுந்து அப்பால் இறங்கியிருந்தது. “அவனிடம் கேள்” என்றேன். “இளையோனே, அது என்ன?” என்றான் பார்த்தன். “கடலிலிருந்து வரும் முகில் அது. மண் தொடா நதி. நதி விண்ணில் வழிந்து இங்கு பெய்து களிந்தவிழியை நிரப்புகிறது.” மலைமகன் கைநீட்டி சொன்னான் “அங்கு வரும் நீர்தான் இங்கு காளிந்தியாக செல்கிறது.”
பார்த்தன் மூச்சிழப்பதை கண்டேன். “அது கடலை அடைகிறது என்கிறார்கள்” என்றான் மலைமகன். “அந்தக்கடலும் நீலம் என்கிறார்கள்.” மெல்ல திரும்பி நோக்கிய பார்த்தன் முகில்வளைவு களிந்த விழியில் இறங்கி நதி நெளிவென ஆகி நீண்டு சென்று தொடுவானத்தைத் தொட ஒரு மாபெரும் வட்டத்தை கண்டான். என் கைகளைப்பற்றிக் கொண்டு “இப்போது கண்டேன், தொடக்கம் எதுவும் மையமே” என்றான்.