புன்னகைக்கும் பெருவெளி

BASHEER

”இந்திய எழுத்தாளர்களில் உங்களுக்கு மிகப்பிடித்தமானவர் யார்?’ என்றார் ஓர் இலக்கிய நணபர். இம்மாதிரி வினாக்களுக்கு எளிதில் பதில்சொல்ல முடியாது. ஒவ்வொரு இலக்கியமேதையும் நம்மை ஒருவகையில் கவர்ந்தவர். நான் யோசித்தேன். தாரா சங்கர் பானர்ஜியா, மாணிக் பந்த்யோபாத்யாயவா? சிவராம காரந்தா ?எஸ்.எல்.·பைரப்பாவா? தி.ஜானகிராமனா? ஜெயகாந்தனா?

சற்று நேரம் கழித்து ”வைக்கம் முகமது பஷீர்தான்”என்றேன். ”ஏன்?” என்றார் நண்பர்.
”மற்ற இலக்கியமேதைகளின் உலகில் மனிதர்கள் மட்டுமே உண்டு.
பஷீரின் உலகில்தான் மிருகங்களும் பறவைகளும் இருக்கிறார்கள்”
என்றேன்

”உலக இலக்கியத்தில் உங்களுக்குப் பிடித்தவர் யார் என்ற கேள்வியை இப்படி மாற்றிக் கேட்கிறேன், தல்ஸ்தோயா தஸ்தயேவ்ஸ்கியா?” என்றார் நண்பர். ”தல்ஸ்தோய்தான். காரணம் முன்பு சொன்னதே. தஸ்தயேவ்ஸ்கியின் உலகில் மனிதர்கள் மட்டுமே உள்ளனர். இயற்கை இல்லை. விலங்குகளும் பறவைகளும் இல்லை” என்றேன்.

அன்று வெகுநேரம்வரை அதைக்குறித்துப் பேசிக் கோண்டிருந்தோம். பிற உயிரினங்கள் படைப்பில் வருவதிலேயே பலவகைகள் உள்ளன. கதைச்சூழலின் ஒருபகுதியாக அவற்றைக் கொண்டுவருவது ஒருமுறை. அது விரிவான ஒரு சூழல் சித்தரிப்பின் பகுதியே. மைக்கேல் ஷோலக்கோவ் குதிரைகளை விரிவாக வருணிப்பதுபோல. இயற்கையை மனிதனுக்கு எதிராக நிற்கும் வல்லமையாக உருவகித்துக் கொண்டு அதன் உயிர்ச்சலமாக விலங்குகளையும் பறவைகளையும் சித்தரிப்பது இரண்டாம் வகை. மோபிடிக் எழுதிய ஹெர்மன் மெல்வில் ஒரு சிறந்த உதாரணம். ஏர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோச·ப் கான்ராட் போன்ற படைப்பாளிகள் இவ்வகைப்பட்டவ்ர்கள். இவர்களை நான் வெறுக்கிறேன். இவர்களின் எந்த இலக்கிய நுட்பத்தையும் என்னால் பொருட்படுத்த முடியவில்லை.

பொதுவாக ஐரோப்பிய- அமெரிக்க புனைகதை எழுத்தாளர்களில் பலர் அவ்வகைபப்ட்டவர்கள். அவர்களிடமிருந்தே இயற்கையை அழிவுசக்தியாகவும் மனிதனுக்கு எதிரான அறைகூவலாகவும் தொடர்ந்து சித்தரிக்கும் ஹாலிவுட் சினிமாக்கள் உருவாகின. தீங்கற்ற கடற்காக்கைகளை நாசகாரச் சக்தியாகச் சித்தரித்த ஆல்ப்ரட் ஹிச்சாக் [தி பேர்ட்ஸ்] அதன் முன்னுதாரணம். இன்றுவரை ‘அனக்கோண்டா’ ‘ராட்சச முதலை’ என்றெல்லாம் ஹாலிவுட் அந்தக்கதையை மீண்டும் மீண்டும் சொல்லி இளம் மனங்களில் இயற்கையை வெறுக்க கற்றுத்தருகிறது.

முதல்வகை எழுத்தை நான் பொருட்படுத்துகிறேன்.ஆனாலும் என் பிரியத்துக்குரியது பஷீரின், தல்ஸ்தோயின் புனைவுலகம்தான். அந்நோக்கில் ஆழ்ந்த பிரபஞ்ச தரிசனம் ஒன்று உள்ளது. மனிதர்கள் இப்பிரபஞ்சத்தின் ஒரு துளி மட்டுமே என்ற போதம் அது. இங்குவாழும் அனைத்து உயிர்களும் ஒரே உண்மையின் பல்வேறு தோற்றங்கள்தான் என்ற பிரக்ஞை. ஆகவே சகமனிதனைப்பற்றி எழுதும் அதே சகஜத்தன்மையுடன் சக உயிர்களைப்பற்றியும் எழுதுகிறார்கள் இவ்விலக்கிய மேதைகள்.

இங்கே சகஜத்தன்மையை அழுத்திக் காட்டவிரும்புகிறேன். உயிர்கள் மீதான ‘கருணை’ ஓர் உயர்ந்த உணர்வல்ல. கருணை காட்டும் இடத்தில் இருபப்வன் மனிதன் என்ற நோக்கு அதில் உள்ளது. மனித உடலின் கையானது அதன் காலைப்பார்த்து கருணை காட்டுவது போன்றது அது. சகஜத்தன்மை என்பது ‘கண்ணில் காணும் அனைத்தும் நானே, நான் என்பது இவையனைத்துமே’ என்ற உயர்ந்த அத்வைத நிலையின் வெளிப்பாடு. உண்மையில் ‘கருணை’என்ற சொல் மூலம் யோகாச்சார பௌத்தமரபு உத்தேசிப்பது இந்த பரந்தமனநிலையையே.

இதை எழுதிக் கொண்டிருக்கும்போது என் கணிப்பொறிக்குக் கீழே தாடையையும் மார்பையும் குளிர்ந்த தரையில் ஒட்டவைத்து படுத்துக் கொண்டு ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்த என் லாப்ரடார் இன நாய் ஹீரோ எழுந்து வாலை ஆட்டி என் கையை மூக்கால் தட்டி விசைப்பலகையிலிருந்து அகற்றுகிறான். இருபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக எழுதுவது இலக்கியமல்ல என்ற எண்ணம் அவனுக்கு உண்டு. நான் எழுந்துபோய் குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து ஒரு அரை முறுக்கு எடுத்து கொடுத்தபோது வாங்கிக் கொண்டு வெளியே சென்றான்.

ஹீரோ அனைத்திலும் சிலவகை ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பவன். தின்பண்டங்களை குளிர்சாதனப்பெட்டியிலிருந்தே எடுக்க வேண்டும் என்பதிலும் அவற்றை வெளியே கொண்டுபோய் மட்டுமே சாப்பிடவேண்டும் என்பதிலும் தெளிவு உண்டு. எண்பதுகிலோவுக்குமேல் எடையுள்ள அவனுடைய வாய்க்கு அரை முறுக்கு என்பது ஒரு வாசனைக்குமேல் ஏதுமில்லை. இருந்தாலும் தின்பண்டம் அளிக்கப்படுவது என்பது நாயுலகில் ஒரு முக்கியமான கௌரவம்.

என் அப்பா ஒரு மிருகப்பிரியர். எந்நேரமும் ஏதேனும் ஒரு மிருகத்தின் அருகே இருக்க விரும்புவார். வீட்டில் நாய்,பூனை, பசு,எருமை என பலவகை உயிர்கள் இருக்கும். அவற்றுடன் உரையாடுவார். எங்கள் கரிய நாய் டைகருடன் பத்திரப்பதிவுத்துறையின் சட்டச்சிக்கல்களைப்பற்றி உரையாடியபடி அவர் தனியாக வாழைத்தோட்டத்தில் நடந்து போகும் சித்திரம் என் மனதில் அழியாமலிருக்கிறது. அவருக்கு இலக்கிய, தத்துவத் தொந்தரவெல்லாம் இல்லை. ஆனால் என் வாழ்நாளின் மகத்தான சொற்றொடர் ஒன்றை அவர்தான் தன் நண்பரிடம் பேசும்போது சொன்னார் ”வேறு உயிர்கள் நம் மனதைப் புரிந்துகொள்கின்றன என்பதைப் பார்க்கும்போதுதான் இந்த உலகத்தில் நாம் தனியாக இல்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. வாழ்க்கையில் ஒன்றும் அர்த்தமில்லாதவை அல்ல என்ற நிறைவும் உருவாகிறது”

அப்பாவிடமிருந்து எனக்குவந்தது மிருகங்கள் மீதான பற்று. அது மேலும் பலமடங்காக என் பையனிடம் தொடர்வதைக் காணும்போது எங்கள் குடும்பச் சொத்தே இதுதான் என்னும் பெருமிதம் உருவாகிறது. வீடு கட்டியதுமே நாய் வளர்க்க ஆரம்பித்தேன். முதல் நாய் ‘குட்டன்’. திடீரென்று ஓடிப்போய் நோயுற்று திரும்பி இறந்தது. அதற்கு அடுத்த நாய், ‘வள்சலா’. காரணப்பெயர். முதல்நாயை நான் தேர்ந்தெடுத்தேன். இரண்டாம் நாய் என்னைத் தேர்வுசெய்தது. பின்னால் பிடிவாதமாக வந்து கேட் அருகே நின்று பால் கேட்டு கீச்சுக்குரலில் அதட்டியது. ஊட்டியதுமே மடியிலேயே தூங்கி உடனே விழித்துக்கொண்டு ‘அய்யோ என்னோட பால் எங்கே?” என்றலறியது. அதுவும் பருவ இச்சையால் ஓடிப்போய் நோயுடன் வந்தது.

அதன்பின்புதான் ஹீரோ. போனஸ் பணத்துடன் நான் தக்கலை தெருவில் நடக்கும்போது ஒரு கடைக்குள் கம்பிக்கூண்டுக்குள் ஹீரோ தொங்கிய காதும் குழந்தைக் கண்களுமாக கரியபளபளப்புடன் அமர்ந்து கூண்டைப்பிராண்டி என்னை அழைத்தான். கடையில் ஆள் இல்லை. அருகிலேயே அமர்ந்து அவனுடன் பேசினேன். கூண்டைத் திறந்துவிடுடா என்றான். இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கி வந்தேன். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்துகொண்டு ஹீரோவை மடியில் வைத்துக் கொண்டேன். தோள்வழியாக ஏறி தலையில் அமர்ந்துகொண்டு உலகை பார்த்தான்.

வீட்டுக்கு வந்ததும் குழந்தைகளைப் பார்த்து உற்சாகம் கொண்டு நாலைந்து முறை சுற்றிவந்ததுமே களைத்து கால்பரப்பி நின்று சிறுநீர் கழித்தான். உடனே பசி. கால்லிட்டர் பசும்பால் குடித்ததும் ஐந்துநிமிடம் சுற்றல்,சிறுநீர் பசி. இப்படி மூன்றுமுறை ஆனதும் உடனே படுத்து கண்வளர்தல். லாப்ரடார் இன நாய்க்குட்டிகள் பின்கால்களை கும்பிடுவதுபோல பின்னுக்கு நீட்டிப் படுப்பது ஒரு வேடிக்கை. என் மகன் அஜிதன் அதற்கு ஹீரோ என்று பெயரிட, பாலுடன் இணைந்த ஓர் ஒலி என ஹீரோ அதை அக்கணமே புரிந்துகொண்டு அதைச் சொல்லும்படிக் கோரி குட்டிவாலை ஆட்டி நின்றான். ஒரு நாய்க்குட்டி அதைவிட பலமடங்கு பெரிதாக இருந்தபோதிலும் கூட குழந்தைகளை எப்படி தன்னைப்போல குட்டிகள்தான் என புரிந்துகொள்கிறது என்பது மகத்தான விந்தை.

விலையைக் கேட்டதும் அருண்மொழிநங்கை என்னைப்பற்றி சிந்து பாடப்போகிறாள் என்று அஞ்சினேன். ஆனால் அம்மிக்குழவி போன்ற கறுப்பழகனைப் பார்த்த அக்கணமே அவள் அதற்கு தாயாக ஆனதைக் கண்டு மறுநாளே மிஞ்சிய போனஸ் பணத்தில் ஒரு டாபர்மேன் நாயை வாங்கிவந்தேன். இதற்கு டெட்டி என்று என் மகள் சைதன்யா பேரிட்டாள். இதற்கு பின்னங்கால்கள் அபார நீளம். அதைவைத்துக் கொண்டு எபப்டி நடப்பது என்று தெரியாமல் வளைந்து தடுமாறித் தடுமாறிச் செல்வான். ஹீரோ அதை முகர்ந்து பார்த்து லேசாக உறுமிவிட்டு நட்பாக ஏற்றுக்கொண்டான். டெட்டிக்கு அவன் முன் எவரும் முகத்தை மூடிக்கொள்ளக் கூடாது என்பதைத்தவிர வாழ்க்கை பற்றிய புகார்கள் ஏதுமில்லை. சைதன்யா வேண்டுமென்றே அவன் முன் முகத்தை மூடிக் கொண்டால் கைகளை எடுக்கும்வரை காள் காள் என்று கத்திக் கொண்டிருப்பான். வெளியே சென்று சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் வந்து தன் டப்பாவுக்குள் சுருண்டு படுக்கும்நேரம் மட்டுமே புறவுலக நடமாட்டம்.

நாய்க்குட்டிக்குள் குடியிருக்கும் பிரபஞ்ச சக்தியின் உக்கிரம் பிரமிப்பூட்டுவது. தீபோல நா நீட்டி தழலாட்டமிடுகிறது அதன் பசி. ‘அன்னம்! அன்னம் !’ என்று அது கூவுகிறது. உணவை வைத்து நிமிர்வதற்கு முன் பாதியைத் தின்றுவிட்டிருப்பார்கள். அப்போது அவர்களின் உடலசைவு கூட தீயின் நடனம் போலிருக்கும். இறைச்சியை மசியவைத்து ஸ்பூனால் குழைத்து வைப்போம். சாப்பிட்டு முடித்ததும் வயிறு தரையை தொடும்படி தொங்க தள்ளாடி நடந்து சாக்குக்குள் ஒண்டிக்கொண்டு உடனே தூங்கும்போது கனவில் நாய்ப்பிரபஞ்சத்தின் நாய்த்தேவதைகளைக் கண்டு வாலை ஆட்டி ‘மங்! மங்!’ என்று குரைப்பதுண்டு

பாலிதீன் உறை என்ற அற்புதத்தைப் புரிந்துகொண்டபிறகு ஹீரோவுக்கு உலகில் எதன்மீதுமே வியப்பு இல்லாமலாயிற்று. தன் காலைதானே பார்க்க முடியும்போதும் அது வேறு ஒன்றாக மணக்கும் திகில். உயிருடன் தன்னுடன் விளையாடும் ஒன்று பிடிபட்டதுமே வெறும்பொருளாக ஆகிவிடும் விந்தை. நார்நாராக கிழிபட்டபின் சிறகு முளைத்து பூச்சிகளாக அது மாறிப் பறக்கும் உவகை. ஹீரோவில் இளமைப்பருவம் பலநிற பாலிதீன் உறைகளினாலானதாக இருந்தது. ”ஒரு கவரை அவன் முன்னாடி போட்டா ஒருமணிநேரம் சினிமா பாக்கலாம் அப்பா”என்றாள் சைதன்யா. டெட்டிக்கு சோப்புகள் மேல் ஆர்வம் இருந்தது. லைப்பாய் சோப்பு இனிய சுவை உடையதென்றாலும் காதிபார்சோப் மலமிளக்கி என்று மூன்றுநாள் அனுபவத்தில் புரிந்துகொள்வதுவரை அது நீடித்தது.

நீண்டநாள் ஹீரோ குரைக்கவேயில்லை. டாக்டரிடம் ஏன் என்று கேட்டேன். ”நாய்களிலேயே புத்திசாலி லாப்ரடார்தான். அது சாதாரணமா குரைக்காது. குரைக்கிற அளவுக்கு முக்கியமாக எதையும் அது பாக்கலியோ என்னமோ”என்றார். இரண்டுமாதம் கழிந்தபிறகுதான் ஒரு நாள் ஸ்டீரியோ·போனிக் வீச்சுடன் அதன் குரைப்பைக் கேட்டோம். ஒரு பூனை எங்கள் வீட்டு சுற்றுச் சுவரில் ஏறி அமர்ந்து அலுப்புடன் கொட்டாவி விட்டதை ஹீரோ முற்றிலும் விரும்பவில்லை. சத்தம் அதிகமானபோது தூக்கிக்கொண்டு சென்று குளியலறையில் அடைத்தோம். அங்கே பக்கெட்டை உள்ளே ஏறி நின்று உருட்டுவது இன்பமாக இருந்ததனால் ஓசை அடங்கியது. மறுபடியும் வெளியே கொண்டுவந்து விட்டபோது பூனை நடமாடிய வழிகளை ஏல்லாம் நுட்பமாக முகர்ந்து நோக்கி அதை புரிந்துகொள்ள முயன்றான்.

ஆனால் சீக்கிரமே துருதுருப்பை இழந்து எந்நேரமும் படுத்துக் கொண்டிருக்க ஆரம்பித்தான். நேர் மாறாக டெட்டி எந்நேரமும் நிலைகொள்ளாத ஜென்மமாக ஆனான். டெட்டியை யாருமே நெருங்க முடியாது. எங்கள் வீட்டுக்கு வரும் அனைவரையும் ஹீரோ அன்புடன் வரவேற்று மரியாதையுடன் வழியனுப்பி வைப்பான். பேச்சு நடுவே அவர்கள் யாரோ, சீரோ, நீரோ போன்று எதையாவது சொல்லிவிட்டால் காதைக் கூர்ந்துவிட்டு எழுந்து வந்து என்ன என்று கேட்பதுண்டு. நாங்கள் சினிமா பார்த்தால் முழுநேரமும் அருகிலேயே படுத்திருந்தாலும் பொதுவாக டிவியை கவனிப்பதேயில்லை. அப்படியும் சொல்லமுடியாது. ‘குட் பேட் அக்லி ‘ படத்தின் மாபெரும் போர்க்களக்காட்சியில் ஒரு நாய் தொலைவில் சென்றபோது ஹீரோ ‘டேய்,பட்டா எவென்டாவன்?’என்று கேட்டான்.

”லாப்ரடார் இன நாயை நீங்கள் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது” என்றார் டாக்டர் ”அது பெரும்பாலும் அசமந்தம்போலத்தான் இருக்கும். ஆனால் மிகமிகக் கூர்மையாக உங்களை அது கவனித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் யாரை விரும்புகிறீர்கள்,யாரை வரவேர்கிறீர்கள் என அது தெரிந்து வைத்திருக்கும். ஆகவே குரைக்கவோ கடிக்கவோ அதற்கு சந்தர்ப்பம் வருவதேயில்லை. சந்தர்ப்பம் வந்தால் அது ஒரு அச்சமே இல்லாத காவலன் என்று தெரியும்”. உண்மைதான்.சுந்தர ராமசாமி இறந்த நாளில் நான் மிகவும் மனம் சோர்ந்திருந்தேன். அப்போது ஹீரோவின் நடத்தையே வேறுமாதிரியாக இருந்தது. என்னருகேயே இருக்க விரும்பினான். அடிக்கடி வந்து என்னை மெல்ல முத்தமிட்டு வாலாட்டி அன்பைத் தெரிவித்தான். அந்தத் தருணங்களில் அவன் என்னுடனிருந்தது ஒரு சகோதரனை விட நெருக்கமான உறவை உணரச்செய்தது.

டெட்டிக்கு ஓடுவதே வாழ்க்கை. கோபம் வந்தாலும் பசி வந்தாலும் குதூகலமென்றாலும் நாற்பதுமுறை வீட்டைச்சுற்றி ஓடுவதுதான் அவனறிந்தது. மொட்டைமாடிக்குப் போய் கைப்பிடிச்சுவரில் ஏறிநின்று வலசை போகும் நாரைகளைப் பார்ப்பதும், சுற்றுசுவரில் எம்பி நின்று வெளியே செல்லும் எருமைமாடுகளை குரைப்பதும், வெளியே குழந்தைகள் விளையாடும்போது கூடவே உள்ளே ஓடுவதும் பிடிக்கும். வேட்டைக்குணம் உண்டு. மனைக்குள் வரும் எலிகள், பல்லிகள், ஓணான்கள்,பூனைகள் ஆகியவற்றை திறமையாக கொன்றுவிடுவான். பகிர்ந்துண்டு மகிழும் பெருங்குணம் இருப்பதனால் கொன்ற உயிரை வீட்டுமுன் முற்றத்தில் போட்டுவிட்டு குரைத்து கதவை தட்டி கூப்பிடுவான். எடுத்து புதைக்கப்போனால் கவ்விக் கொண்டு ஓடுவான். பிடுங்கி எடுப்பதற்குள் நமக்கே ஒரு வேட்டையாடிய களைப்பு ஏற்பட்டுவிடும்.

நாய் வளர்ப்பது காவலுக்கு என்பது ஒரு நடைமுறைப் புரிதல். ஆனால் காவலுக்கு என ஒருவர் நாய் வளர்த்தால் அதைவிட முட்டாள்தனமான செயல் வேறு இல்லை.நம் வீட்டுக்காவலனை நாம் கொல்லைக்குக் கொண்டுபோகவேண்டும் ,குளிப்பாட்டவேண்டும், அவன் காதுகளையும் மூக்கையும் சுத்தம்செய்ய வேண்டும் என்றால் எவ்வளவு கஷ்டம். நாய் வளர்ப்பவர்கள் ஒருபோதும் வளராத குழந்தை ஒன்றை வளர்க்கும் அனுபவத்துக்காகவே வளர்க்கிறார்கள். சோப்பை எடுத்தாலே குளியலை எண்ணி குந்தி அமர்ந்து நடுங்க ஆரம்பிக்கக் கூடிய, தட்டு அசைந்தால் சாப்பாட்டை எண்ணி நடனமிடக்கூடிய, நம் உள்ளாடைகளைக் கொண்டுபோய் பதுக்கிவைத்து முகர்ந்து மகிழக்கூடிய, இசகுபிசகாக எதையாவது செய்துவிட்டால் கண்களை தாழ்த்திக் கொண்டு முகத்தை குனிந்து குற்றவுணர்வுடன் மூலையில் அமர்ந்திருக்கக் கூடிய, ஆட்டோ வந்தாலே வெளியே போகப்போகிறோமென ஊகித்து துள்ளிக் குதிக்கக் கூடிய, மருந்துவாசனையை உணர்ந்ததுமே குப்புறப்படுத்து அடம்பிடிக்கக்கூடிய குழந்தைகள் இரண்டு வீட்டுக்குள் இருப்பது எவ்வளவு உல்லாசமான விஷயம்! இரக்கமில்லாத இரும்புவிதிகளால் ஆன வெளியுலகை விட்டு வீடு திரும்பும்போது நிபந்தனையில்லாத பேரன்பு நம்மைநோக்கி துள்ளிக்குதிப்பதைக் காண்பது எத்தனை பெரிய வரம்!

குழந்தை ஒரு வீட்டுக்குள் எதைக் கொண்டுவருகிறது?வீடு என்பது திறந்த வான்வெளிக்கு எதிராக நாம் உருவாக்கிக் கொண்ட சிறு சதுரம். நம் அன்றாடவாழ்க்கையின் கவலைகளினாலும் கனவுகளினாலும் ஆனது. குழந்தை அதற்குள் பிரபஞ்சப்பெருவெளியின் மகத்தான ஆக்கசக்தி ஒன்றின் துளியாக வந்து படுத்திருக்கிறது. விண்ணகத்தில் கோள்களை உலவவிடும் சக்தி அதற்குள் உயிராக நின்று துடிப்பதைக் காண்கிறோம். ஒரு குழந்தை நம்மை அடையாளம் கண்டு கொள்ளும்போது நாம் அடையும் பரவசத்தை வேறு எப்படி விளக்க முடியும்? குழந்தையின் ஒவ்வொரு தருணத்திலும் ஒளிரும் அழியா அழகை எப்படி வர்ணிக்க முடியும்? குழந்தை மொழிக்குள் நுழையும்போது ஒவ்வொரு சொல்லும் புதிய பொருள்கள் கொண்டு கவிதையாக ஆவதை வேறு எப்படி புரிந்துகொள்ள முடியும்?

மனத்தடைகளைக் கடந்தவர்களால் விலங்குகள் எல்லாமே குழந்தைகள்தான் என்பதை எளிதில் உணரமுடியும். நம்மை குழந்தைகள் அல்லாமலாக்கி நமக்குள்ளேயே கட்டிப்போடும் சுயமெனும் சுமை இல்லாத மனங்கள் அவை. அதனால்தான் நம் தியானமரபு விலங்குகளை காமமும் குரோதமும் மோகமும் இல்லாத தூய வடிவங்களாகச் சொன்னது. ஒரு மலரின் ,மரத்தின் விலங்கின்,பறவையின் அருகாமை நம்மை தூய்மைப்படுத்தும் என்றது. தியானம் பழகும் ஒருவன் மனிதர்களை விட்டு விலகி மிருகங்கள் சூழ வசிக்கவேண்டுமென ஆணையிட்டது

நம்மைச்சூழதிருக்கும் இயற்கை என்பது விண்ணளாவிய பெருவெளியே. அது நாம் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டது. காலமும் தூரமும் எண்ணமும் சென்று ஒடுங்கும் பேராழம். ஆனால் இதோ என் முன் மீண்டும் வந்து நின்று சப்புகொட்டி ‘இன்னுமா எழுதுகிறாய்?’என்று கரிய கண்களைக் காட்டி வாலாட்டும் இவ்வுயிரும் இயற்கையே. இதுவும் பெருவெளியின் துளியே. ஆனால் இதற்குள் என் மீதான கனிவும் அன்பும் நிறைந்துள்ளது. இதையும் என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாதுதான், ஆனால் இதற்கு என்னைத்தெரியும். அது போதும்

எண்ணிப்பார்க்கிறேன், விலங்குகளைப்பற்றி அழகாக எழுதிய படைப்பாளிகளே குழந்தைகளைப்பற்றியும் அப்படி எழுதியிருக்கிறார்கள். பஷீரும் தல்ஸ்தோயும். காரணம் அவர்கள் மனித அகங்காரமென்ற இரும்புத்திரைக்கு அப்பாலிருந்து வந்த ஒரு மகத்தான ஒளியின் உதவியால் இப்பிரபஞ்சத்தைக் கண்ட ஞானிகள்.

மற்பிரசுரம்/ முதற்பிரசுரம் Nov 22, 2007

முந்தைய கட்டுரைபஷீரும் ராமாயணமும்- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 25