எழுதுவதன் ரகசியம்:ஒரு கேள்விபதில்

images

அன்பு எழுத்தாளர் ஜெ.அவர்களுக்கு…

கருவைச் சுமப்பதும், கதையைச் சுமப்பதும் ஒன்றா என்ற சந்தேகம் எனக்கு!

சில குட்டிநாவல்களின் கருக்கள் மனதில் உருவாகின்றன. ஒவ்வொன்றாகத் தோன்றுகின்றனவா..? அதுவும் இல்லை. முதலில் தோன்றிய கதை வெளியேறுவதற்கு முன்பே மற்றொன்று கருக் கொள்கின்றது.

எழுதவும் நேரம் அமைவதில்லை. எழுதாமல் மனதில் சுமந்து  ண்டிருக்கையில், ஒரு கனமாகத் தங்கிக் கொண்டே இருக்கின்றன.

குழந்தை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வது போல், சம்பவங்களைக் காட்சிப் படுத்திக் கொண்டே இருக்கிறேன். குழந்தையின் பெயரை எழுதி எழுதிப் பார்ப்பது போல், கிடைக்கின்ற சீட்டுகளில் கதையின் பெயரை எழுதிப் பார்த்து, கதைச் சுருக்கத்தை எழுதிப் பார்த்து மகிழ்கிறேன்.

சிசேரியன் பண்ணி எடுத்து விடலாம் என்று நினைத்தாலோ, பயமாக இருக்கின்றது. குழந்தை சரியான வளர்ச்சியின்றி இருந்து விட்டால்…? என்ற தாய்ப்பயம்.

சுமந்து கொண்டிருப்பதிலே ஆனந்தமும் இருக்கின்றது; ஒரு வலியும் இருக்கின்றது.

என்ன தான் செய்வது? எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படி ஒரு பிரசவ நிலை தான் இருக்குமா…?

இந்தக் கஷ்டத்தை எப்படி சமாளிப்பது..?

தயவு செய்து தங்களது அறிவுரையை எதிர்பார்க்கிறேன்.

நன்றிகள்.

அன்புடன்,
இரா.வசந்த குமார்.

அன்புள்ள வசந்தகுமார்,

படைப்பியக்கம் சார்ந்த உங்கள் கடிதம் கண்டேன். படைப்பியக்கம் பற்றி அப்படியெல்லாம் பொதுவாக ஏதும் சொல்லிவிடமுடியாது. இருந்தாலும் நீங்கள் கேட்டதனால் என் தனிப்பட்ட அனுபவம் சார்ந்து சில விஷயங்களைச் சொல்கிறேன். இவை உங்களுக்கு உதவக்கூடும்.

எழுத்தின் ரகசியம் எழுதுவதே என்றார் சுந்தர ராமசாமி. எழுதித்தான் எழுத்தில் உள்ள சிக்கல்களையும் தடைகளையும் தெரிந்துகொள்ள் முடியும். எழுதும்போது எழுத்தில் நம் மனம் ஒன்ற வேண்டும். நாம் முழுமையாக அதில் ஈடுபடவேண்டும். ஒரு கனவு போல கதை நம்மில் நிகழ வேண்டும். கதைமாந்தர்களையும் சூழலையும் நாம் கண்ணெதிரே காண வேண்டும்.

அதற்கான பயிற்சி என்பது தொடர்ச்சியாக எழுதுவதே. ஆரம்பத்தில் நமக்கு அப்படி எழுத முடியாமைக்குக் காரணம் நாம் எழுத்துக்குப் பழகவில்லை என்பதே. நம் மனம் கற்பனைசெய்யும்போது எழுத முடிவதில்லை. எழுதுவதில் உள்ள கவனம் நம் கற்பனையை தடுக்கிறது. ஆகவே இரண்டையும் சமன்செய்யும்பொருட்டு நாம் மாற்றி மாற்றி எழுதிப்பார்க்கிறோம். கிழித்துப்போடுகிறோம். எரிச்சல் கொள்கிறோம்

தொடர்ந்து எழுதிக்கோண்டே இருந்தால் எழுத்து கைக்கும் மனதுக்கும் பழகி விடும் . அது தானாகவே நிகழும். நீங்கள் கற்பனைமட்டும் செய்தால் போதும். சிலம்பாட்டம் கற்றுக்கொள்ளச் சென்றால் முதலில் சிலம்பைச் சுழற்றவே கற்றுக்கொடுப்பார்கள். சுழற்றிச் சுழற்றி சிலம்பு கையிலிருப்பதே தெரியாமல் ஆகும். அப்போது வித்தையில் மட்டுமே கவனம் இருந்தால் போதும். மனம்செல்லும் இடத்துக்கு கம்பு போகும். அதைப்போல எழுத்து வசமாகவேண்டுமென்றால்  எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். ஆரம்பகட்டத்தில் இது அவசியம்.

கதைக்கருவை ஒருபோதும் சுருக்கி எழுதிப்பார்க்காதீர்கள். இலக்கியத்தின் எதிரியே சுருக்குவதுதான். கருவில் ஒன்றுமே இல்லை. கலை இருப்பது நுண்விரிவில் –details- தான். கதையை அக்கதை நிகழும் சூழல், கதைமாந்தரின் இயல்புகள், நிகழ்ச்சிகள், உரையாடல்கள் ஆகிய அனைத்துடனும் சேர்த்து ஓர் உண்மையான அனுபவம் அளவுக்கு முழுமையாகவே நம் மனதில் விரித்துக்கொள்ள் வேண்டும். சுருக்கி எழுதிய பின் விரித்தால் அது செயற்கையாகவே இருக்கும்.

கதையை பேசியோ விவாதித்தோ பார்க்காதீர்கள். கதையைப்பற்றி மனதில் முழுமையாகவே கற்பனைசெய்யாதீர்கள். அந்தக் கற்பனையிலேயே கதை நடந்து முடிந்துவிடும். எழுத முடியாது. கதையை எழுத ஆரம்பிக்கும்போது அதைப்பற்றி ஒரு தெளிவற்ற சித்திரம் உங்களிடம் இருப்பதே நல்லது. எழுதி எழுதி அந்த தெளிவின்மை மறைய வேண்டும். எழுதுவதன் வழியாக கதை உருவாகி வரவேண்டும். அதாவது நீங்கள் எழுதும் கதை எழுதும்போதுதான் உங்களுக்கே தெரிய வேண்டும்.

அப்போதுதான் நாம் எழுத எழுத ஆர்வம் பெருகும். எழுத்து விரிந்து விரிந்து வரும். சிறுகதை என்றால் ஒரு முடிவு மட்டும் லேசாகத்தெரிந்தால் போதும். கவிதை என்றால் தொடக்க வரியே போதும். என்னுடைய பெரும்பாலான கதைகளை நான் தொடங்கும்போது முதல் வரி அல்லது ஒரு மனிதனின் முகம் அல்லது ஒரு காட்சி மட்டும்தான் இருக்கும். மொத்தக்கதையும் நான் எழுதும்போதுதான் உருவாகி வரும்.

ஆகவே ஒரு கரு லேசாக மனதில் உருவானதுமே அதை எழுதிப்பாருங்கள். மேலே ஓடவில்லை என்றால் விட்டுவிடுங்கள். பின்னெ சமயம் வேறு வகையில் அதை எழுத முடியும். எழுதினால் மட்டுமே அதில் என்ன சிக்கல் இருக்கிறதென தெரியும். பல சமயம் எழுதி நாலைந்து பத்தி போனதும்தான் அந்தக் கரு நல்ல கருவே அல்ல என்று தெரியும். மனதில் இருக்கும்போது அது தீவிரமானதாகவே நாம் எண்ணிக்கொண்டிருப்போம்.

எழுதிப்பார்க்கும்போது பல விஷயங்கள் தெரியவரும். அந்தக்கதையை அப்படி தொடங்கியிருக்கக் கூடாது என்று தெரியவரும். நாம் எழுதும் மொழிநடை உத்தி போன்றவை அக்கதைக்குப் பொருத்தமானதாக இல்லை என்று தெரியவரும்.அதேபோல அந்தக் கணம் வரை நாம் உணராத பல சாத்தியங்கள் சட் சட்டென்று திறந்தும் கிடைக்கும்.

ஆகவே, ”எழுது,அதுவே அதன் ரகசியம்”

ஜெ

88

ஒரு படைப்பு உருவாக்கப்படும்போதே அது இலக்கியத் தரத்தின் எல்லையைத் தொடவேண்டும் என்ற எண்ணத்தோடு ஆக்கப்படுகிறதா

கேள்வி பதில் – 58, 59

கதையோ, கவிதையோ தன்னைதானே எழுதிக்கொள்வது என்றால் என்ன?

கேள்வி பதில் – 56

கதைக்கான கரு எப்போது spark ஆகிறது? எவ்விதம் அதனைக் கதையாக வளர்த்தெடுக்கிறீர்கள்?

கேள்வி பதில் – 53, 54, 55

 

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Dec 3, 2008

முந்தைய கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-2
அடுத்த கட்டுரைதினமலர் – 3: குற்றவாளிகள் யார்? கடிதங்கள்-1