விஷ்ணுபுரம் விருது, தேவதச்சன் கவிதை மீண்டும்…

deva_2364361f

ஜெ

விஷ்ணுபுரம் விருது பெற்றிருக்கும் தேவதச்சனுக்கு வாழ்த்துக்கள்.

தேவதச்சன் கவிதைகளை நான் பல சந்தர்ப்பங்களில் வாசித்திருக்கிறேன். அவற்றை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. பல கவிஞர்கள் அவரைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். திரும்பத்திரும்ப அவர்களும் புகைமூட்டமான தரிசனம் பேருணர்வு போன்ற சொற்களை மட்டுமே எழுதியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் காற்று ஆடாத மரத்தைக் கண்டதில்லை என்ற கவிதையை மூன்று படிமங்களாகப்பிரித்து எழுதியிருந்தது ஒரு வாசிப்பனுபவத்தை அளித்தது. அந்தக்கவிதைக்குள் நுழைய ஒரு நல்ல வாசல் சட்டென்று திறந்துகொண்டது. அதைப்போன்ற சிறந்த வாசிப்பனுபவமாக ஆகக்கூடிய விவாதங்கள் நிகழும் என்றால் மிகச்சிறப்பாக இருக்கும். அதற்கு இந்த விருது வழிவகுக்கட்டும்

செல்வா

அன்புள்ள செல்வா,

தேவதச்சனின் கவிதையில் உணர்வுநிலைகள் இல்லை. சொல்லழகு நேரடியாக வெளிப்படுவதில்லை. இவ்விரு விஷயங்களுமே பொதுவான வாசகனுக்குத் தடையாக அமைகின்றன. இவை கவிதைக்கு இன்றியமையாதவை என எண்ணுவதே தடை என்று குறிப்பாகச் சொல்லலாம். அவை இல்லாத, அவை தேவையில்லாத கவிதைகள் இவை என்று கொண்டீர்கள் என்றால் பிரச்சினை இல்லை

தேவதச்சன் முன்வைக்க விரும்புவது ‘பிரபஞ்சதரிசனம்’ மட்டுமே. அதற்கு உணர்ச்சிகரம், மொழியழகு தேவை இல்லை. ஒருவகையில் திருமூலர் என்று வைத்துக்கொள்ளுங்கள். மிகநேரடியான மொழி, உணர்ச்சிகரம் இல்லாத கவிதை, அதுதானே திருமந்திரத்தின் இயல்பும்? ஏனென்றால் நேரடியாகவே பிரபஞ்சத்தன்மை நோக்கி செல்பவை அவை

நாங்கள் காட்டுக்குச் சென்ற தருணம் ஒன்றில் ஒரு நண்பர் ‘இந்த மரம்லாம் எதுக்குமே பயன்படாது இல்ல?’ என்று கேட்டார். சில கணங்களுக்குப்பின்னர்தான் அவர் என்ன கேட்கிறார் என்று புரிந்தது. அவர் ஊரில் பார்த்த எல்லா மரத்துக்கும் ஏதேனும் பயன் உண்டு. அதாவது மனிதர்களுக்கு. பயனற்ற மரம் வளரவிடப்படுவதில்லை.

ஆனால் காடு மனிதன் இல்லாதது. அங்கு நிற்பவற்றில் பெரும்பாலான மரங்களுக்கு மனிதனுக்கான பயன் இல்லை.அந்த உண்மை முதன்முதலாக காட்டுக்கு வந்த அவரை பிரமிக்கச்செய்தது.மனிதன் இல்லாத உலகம்! அவரால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. கொஞ்சநேரம் கழித்து ‘வெறகா பயன்படுத்தலாம்’ என்றார். காட்டை மனிதப்படுத்திவிட்டார்!

நாம் இவ்வுலகை நம் தேவைகளால் இரண்டாகப்பிரித்து வைத்திருக்கிறோம். தேவையற்றவற்றை வெளியேதள்ளி தேவையானவற்றால் ஆன உலகில் வாழ்கிறோம். நம் அறிதல்களால் வகுத்து வைத்திருக்கும் உலகமே நாம் வாழ்வது. அதற்கப்பால்? இந்திய தத்துவத்தின் தொடக்கம் முதலே வேதாந்திகள் இந்தப் பிரமிப்பை நோக்கி உள்ளம்திறந்திருக்கிறார்கள்

*


உபயோகமில்லாத பொருட்கள்

உபயோகமில்லாத பொருட்கள் எதையாவது எப்போதாவது
நீ கையால் தொடுகிறாயா
உபயோகமற்ற பொருட்கள் ஒரு விலங்கைப் போல்
மூச்சுவிட்டுக் கொண்டிருக்கின்றன.
அகிலம் எல்லாம் அசைந்து கொண்டிருக்கும்போது
அவை அசைவற்று நிற்கின்றன.
நாளைக்காலை, இந்தக்
கனியின் தோல்
குப்பைக் கூடையில் கிடக்கும்
அப்போது அது
காணும் கனவுகளிலிருந்து அதுவும்
தப்பிக்க முடியாமல் போகும்,
மூலைக்கு மூலை தள்ளி விடப்பட்ட
முதியவர்கள் போல.
எனினும் நம் விரல்களுக்கு, ஏதோ
வினோத சக்தி இருக்கிறது
உபயோகமற்றபோதும், உடைவாளை சதா
பற்றிக் கொண்டிருக்கிறது
சென்று வாருங்கள், உபயோகமற்ற பொருட்களே
நீங்கள்
இன்னொரு ஆறைப்போல் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்
எப்போது வேண்டுமானாலும் திரும்பி வாருங்கள்
வந்து,
மீண்டும் மீண்டும்
அன்பின் தோல்வியைக் காணுங்கள்.

*

இந்தக்கவிதை மிக அன்றாட அனுபவம் ஒன்றில் இருந்து தொடங்குகிறது. நம்மைச்சூழ்ந்துள்ள உபயோகமற்றபொருட்கள் என்ன ஆகின்றன? எத்தனை விரைவாக அவை மறக்கப்படுகின்றன. எத்தனை விரைவாக அவை தூசால்போர்த்தப்படுகின்றன. எத்தனை குரூரமாக அவை கைவிடப்படுகின்றன.

அவை இருப்பது நாம் அறியாத பிறிதொரு உலகில். அவை இங்கிருந்து அங்கே சென்று கொண்டே இருக்கின்றன. கூடத்தில் கிடக்கும் சோபா கொஞ்சம் கொஞ்சமாக பரண் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மனிதர்களும் அப்படித்தான். கொள்கைகள், கலைகள் எல்லாமே அப்படித்தான். உண்மையில் மரணம் என்பது அதுதான்

அவை அந்த உலகில் இருந்து நம்மை நோக்கும்போது காண்பது என்ன? மனிதனின் தேவையால் வகுக்கப்பட்ட ஓர் உலகை. அதனுள் உள்ள ஓர் உணர்வே அன்பு என்பது. அழகுணர்வு என்பதும் நீதியுணர்வு என்பதும் அப்படித்தான்.

ஒரு பிரமிப்பை இக்கவிதை அளிக்கிறது. இங்குள்ள ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் ஒவ்வொருகணமும் ‘உபயோகமற்றவை மட்டுமே கொண்ட’ ஓர் உலகுக்கு சென்றுகொண்டிருக்கும் சித்திரம். அந்த முழுமைப்பார்வையே தேவதச்சனின் கவித்துவத்தின் சாரம்.

ஜெ

================================================================================================

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

======================================================================================

தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு

தேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்

தேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 91
அடுத்த கட்டுரைவாசிப்பின் நாட்டிய சாஸ்திரம்