விஷ்ணுபுரம் விருது தேவதச்சன்

அன்புள்ள ஜெ

தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சி. அறியப்படாத கவிஞர்களை இவ்விருது என்னைப்போன்றவர்களுக்கு அறியப்படுத்துகிறது. நான் கவிதைகளை நிறைய வாசிப்பவன். எனக்குப்பிடித்தக் கவிஞர் சுகுமாரன். தேவதச்சன் கவிதைகளை வாசிக்கும்போது அவரை என் ரசனைக்கு உரியவராகச் சொல்லத்தோன்றவில்லை. அவற்றில் நான் கவிதைகளில் தேடும் உணர்ச்சிகரமான அம்சம் இல்லை. கவிதைகளுக்குரிய அழகான சொல்லாட்சிகளும் இல்லை. வேறு எந்த கவிதையம்சம் இருக்கிறது என்று சொல்லமுடியுமா என்று கேட்டேன். இப்படி அறிவிப்பு வந்தபிறகுஅவரது கவிதைகளை வாசித்தேன் அப்போதும் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. விவாதங்கள் எனக்கு அவரைத் தெளிவுபடுத்தும் என நினைக்கிறேன்

சண்முகம் குமரவேல்

அன்புள்ள சண்முகம்,

கவிதைக்கு மட்டும் ஒரு தனித்தன்மை உண்டு, அது புனைவிலக்கியம்போல புறவயமான உலகம் ஒன்றை உருவாக்கவில்லை. அது கவிஞனின் ஒருபகுதியாகவே எப்போதும் உள்ளது. அந்தக்கவிஞனைத் தனிப்பட்ட முறையில் அறிவது என்பது கவிதைக்குள் செல்ல முக்கியமான தேவை.

ஆகவேதான் பலசமயம் நேரில் கவிஞனை அறிந்தவர்கள் அக்கவிதைக்குள் எளிதாகச் செல்கிறார்கள். ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமல்ல. அவரது கவிதைகள் வழியாகவே அவரை நேரில் போலவே அணுக்கமாகத் தெரிந்துகொள்ளமுடியும். அந்தக் கவனமும் கரிசனமும்தான் கவிதையை அறிய மிக அவசியமானவை.

அவ்வகையில் ஒவ்வொரு கவிஞனும் தனியானவன். இன்னொருவரின் கவிதைக்கும் அவரது கவிதைக்கும் பெரிய தொடர்பேதுமில்லை என்பதை நாம் தெளிவாக்கிக்கொள்ளவேண்டும். அவரது அந்தத் தனித்தன்மையை உணர்வதே கவிதை வாசிப்பு என்பது

தேவதச்சன் இயல்புகளை என் வாசிப்பை வைத்து இப்படிச் சொல்வேன்

1. உணர்வுபூர்வமானவர் அல்ல. அவரது உலகம் அறிவார்ந்தது.

2. தேவதச்சனின் உலகம் புறவயமானது அல்ல. முழுக்கமுழுக்க அகவயமானது

3 தேவதச்சனின் உலகம் அன்றாட விஷயங்களால் ஆனது அல்ல. அன்றாட விஷயங்களில் அவர் தொடங்கினாலும் அவர் சென்றடைவது ஓரு நுண்ணிய உச்சநிலையை மட்டுமே.

4 அவர் அதைமட்டுமே பொருட்படுத்துகிறார். அதை மட்டுமே எழுத முயல்கிறார். அந்நிலைக்குச் செல்ல உணர்வுகள் தடையாகவே ஆகும். அந்நிலையைச் சொல்ல புறவுலகம் படிமங்களை அளிக்கும். ஆனால் புறவுலகில் அது வெளிப்பாடு கொள்வதில்லை

5 தேவதச்சன் சொல்லமுயல்வது ஓர் முழுமைத்தரிசனத்தை மட்டுமே. இவ்வுலகம் சிதறுண்ட காட்சிகளாலும் எண்ணங்களாலும் ஆனது. அவர் அவற்றைத் தொகுத்து ஒரு முழுமைத்தரிசனத்தை உருவாக்க முயல்கிறார்

6. ஆக அவரது வாசகர்கள் உலகியல் உண்மைகளை, உணர்வுநிலைகளை வாசிப்பவர்கள் அல்ல. அவரது முழுமைநோக்கை உடன் சென்று அறிய விழைபவர்கள் மட்டுமே

ஜெ

===========================================================================================================


தேவதச்சனுக்கு இவ்வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டுள்ளது

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

======================================================================================

தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு

தேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்

தேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

முந்தைய கட்டுரைபாரதி தமிழ்ச்சங்கம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாபநாசம் 55 நாள்