ஏர்டெல், அந்த 3000 ரூபாய்

இன்று ரோஷன் நிறுவனத்தில் இருந்து கூப்பிட்டு விளக்கம் அளித்தனர். அவர்களிடம் நான் அளித்த 3000 ரூபாய் வரவு வைக்க தவறப்பட்டுள்ளது, அதற்குப் பொறுப்பான ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். அந்தப்பணம் திரும்ப அளிக்கப்பட்டது

உண்மையில் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும் ஏர்டெல் நிறுவனம் என் இணைப்பைத் துண்டிப்பதாக எனக்கு அறிவுறுத்திக்கொண்டே இருந்தது. சங்கரின் எந்திரன் திரைப்படவேலையாக செல்லவேண்டிய நிலை. ஆகவே மொத்தப்பணத்தையும் கட்டிவிட்டேன். ரோஷன் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது பதில் இல்லை. அப்படியே விட்டுவிட்டு மறந்துவிட்டேன்.

இப்போது ஒருமாதம் கழித்து மீண்டும் ஏர்டெல்லின் அடுத்த பணத்தைக் கட்டும்போது ஒரு சின்ன ஆர்வம் ஏற்பட்டது, வாடிக்கையாளர்களின் புகார்கள் எப்படிக் கையாளப்படுகின்றன என்று. ஆகவெதான் இதை முன்னெடுத்தேன். பணம் வந்துவிட்டது. ஆனால் சென்ற மூன்றுநாட்களாக நேரமும் மனமும் வீணாகியது. நேற்றும் முன்தினமும் வெண்முரசு ஒரு வரிகூட எழுதவில்லை.

ஒருவழியாக பணம் வந்துவிட்டது. ஏர்டெல் நிறுவனத்தைத் தலைமுழுகிவிட்டால் தொல்லை ஓய்ந்தது.அவர்களின் ‘வாடிக்கையாளார் சேவை’ போல ஒரு ஏமாற்றை இதுவரை கண்டதில்லை. அனைத்து மட்டங்களிலும் புகார் அளித்துவிட்டேன். இதுவரை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இந்த கட்டுரைகளை வாசித்துவிட்டார்கள். ஏர்டெல் நிறுவனம் அலட்டிக்கொள்ளவே இல்லை. அந்த மூவாயிரம் ரூபாயை விட அதிகமான பாதிப்பு நிகழ்ந்துவிடலாம் என்னும் சாதாரண வணிகநோக்கு கூட அவர்களிடமில்லை. ஏனென்றால் அப்படி எண்ணக்கூடிய எவரும் அங்கே இல்லை.

இன்றுவரை ஏர்டெல் நிறுவனம் முன்னரே தயாரிக்கப்பட்ட கடிதங்களை அனுப்புகிறது. திரும்பத்திரும்ப விசாரித்துக்கொண்டிருக்கிறோம் என பதில் சொல்கிறது. ஏதோ கடவு எண்ணை அனுப்பி என் புகாரை நானே சென்று விசாரித்துக்கொள்ளலாம் என்கிறது. இந்தியாவின் மக்கள்தொடர்புச் சேவையின் வழி இது. இதைப்பற்றி விரிவாக எழுதவேண்டும்

நமக்கு பி.எஸ்.என்.எல் தான் சரி. பேக்கேஜ்கள் எதுவுமே தேவையில்லை. பில் இருமடங்கானாலும் பரவாயில்லை,அரசுக்குத்தானே செல்கிறது. மறுமுனையில் மனிதன் ஒருவன் இருப்பான் என்பதே எவ்வளவு பெரிய ஆறுதல்.

பிகு

திரு மாயவரத்தான் அவர்களின் செய்திகள் டாட் காம் நிறுவனம் இதைப்பற்றி விரிவான செய்தி வெளியிட்டு தொடர்விசாரணையையும் செய்தது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

செய்திகள் காம்

செய்திகள் ஃபேஸ்புக்

முந்தைய கட்டுரைதேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது 2015
அடுத்த கட்டுரைபி.எஸ்.என்.எல்லும்…