ஏர்டெல் மோசடியின் தொடர்ச்சி…

bharti-airtel-new-ceo

ஜெ

Level 1: Customer care: 121/198 & [email protected], working Hours – 24/7
Level 2: Nodal Team: [email protected] & (9972534865), working hours: 9:30 AM to 6:30 PM: Monday to Friday.

Level 3: Appellate Authority: [email protected] & (9972544865), working hours: 9:30 AM to 6:30 PM. Monday to Friday.

Level 1: நம் பொது மக்களின் களி விளையாட்டுகளால் 121 & 198 உடன் பேசுவதால் எந்த பயனும் இல்லை, இவர்கள் airtel பணியாளர்களே அல்ல, எந்த உரிமையும் இன்றி செயல்படுபவர்கள், மிஞ்சி போனால் Rs.500 வரை தள்ளுபடி செய்ய முடியும்.

Level 2: நாம் பணம் செலுத்திய ரசீதை ஸ்கேன் செய்து இவர்களுக்கு மெயில் செய்தால், நிச்சயமாய் நமக்கு நிவாரணம் கிடைக்க வழி உள்ளது.

Level 3: இங்கு மெயில் செய்தால் மிக விரைவில் உங்கள் பிரச்சனை தீரும்.

இதற்கு பிறகு TRAI மற்றும் நுகர்வோர் நீதி மன்றம் செயல்படுகிறது.

கிருஷ்ணா

அன்புள்ள கிருஷ்ணா

என்ன நடக்கிறது என்று சொல்கிறேனே. நான் அனுப்பிய கடிதங்கள் விசாரணைகள் எதற்கும் ‘அவங்க கிட்ட கேளுங்க’ என்பதுதான் பதில். ஆகவே இணையத்தில் கட்டுரை எழுதினேன். இதற்கெல்லாம் அசரமாட்டார்கள் என்று தெரியும்

இரண்டாவது கட்டுரை வந்தபின்னரும் எந்த எதிர்வினையும் இல்லை. அக்கட்டுரையின் இணைப்பை அனுப்பினேன். அதன்பின்னர் அந்த பில்லின் ஸ்கான் காப்பி அனுப்பவும் என ஒற்றைவரி. மேலிடங்களுக்கு மேலும் மின்னஞ்சல் செய்தேன். இவர்கள் என்ன செய்வார்கள் என நன்றாகத்தெரியும். பார்ப்போமே என ஓர் ஆர்வம், அவ்வளவுதான்

ஓர் அம்மணி கூப்பிட்டார்கள். என்ன பிரச்சினை என்றார்கள். மீண்டும் ஸ்கான் காப்பி அனுப்பவும் என்றார்கள். நான் கேட்டேன், “ரோஷன் நிறுவனம் உங்களுக்கு என் எண்ணை இண்டர்நேஷனல் ரோமிங் ஆக்குவதற்காக தகவல் அனுப்பி அதை நீங்கள் செய்து என்னிடம் கட்டணமும் வசூலித்திருக்கிறீர்கள். அவர்கள் உங்கள் தொழில்பங்காளிகள். அவர்களின் மின்னஞ்சலோ எண்ணோ உங்களிடமிருக்கும். அவர்களிடம் ஏன் ரோமிங் அப்டேட் செய்துவிட்டு பணம் மட்டும் அனுப்பவில்லை என்று கேட்கலாமே?”

“அவர்கள் வேறு நிறுவனம், எங்களுக்கும் அவர்களுக்கும் நேரடிச் சம்பந்தம் இல்லை” என்றாள். “ஸ்கேன் காப்பி அனுப்பினால் நாங்கள் கேட்டுப்பார்ப்போம். மற்றபடி இது உங்களுக்கும் அவர்களுக்குமான பிரச்சினை” ஸ்கான் காப்பியை அனுப்பினேன். அனேகமாக அது சரியில்லை என்று சொல்வார்கள் என்றுதான் நினைத்தேன்

கொஞ்சநேரத்திற்கு முன்பு ரோஷன் நிறுவனம் அழைத்தது [9500182672 என்னும் எண். அவர்கள்தானா அல்லது அவர்கள் அதை மறுபடியும் அவுட்சோர்ஸிங் செய்திருக்கிறார்களா என்று தெரியாது]. “நீங்கள் எங்கே பணம் கட்டினீர்கள் ” என்றார்கள். நான் ரோஷன் நிறுவத்தில்தான் என்றேன். [89, கடை எண் 4,5 ஆர்காடு ரோடு கோடம்பாக்கம் சென்னை 24] சென்னையில் ஓட்டலில் தங்கியிருந்தேன், ஆகவே சென்னையில் அப்டெட் செய்தேன் என்றேன். ரசீது எண்ணை அளித்தேன். ‘நீங்கள் நேரில் வந்து யாரிடம் பணம்கட்டினீர்கள் என்று அடையாளம் காட்டமுடியுமா?’ என்றார்கள்

‘உங்கள் நிறுவனத்தின் ரசீதுபுத்தகத்தை எடுத்து இன்னொருவர் பணம் பெற்றுக்கொள்வார்களா என்ன? அப்படி பணம்பெற்றுக்கொண்டால் நீங்கள் உடனடியாக போலீஸில் புகார்செய்யவேண்டும்” என்றேன். “இல்லை நீங்கள் எங்களிடம்தான் செய்தீர்களா என்று பார்க்கவேண்டும்” என்றார். “பணம்பெற்றது மட்டுமல்லாமல் எண்ணுக்கு இண்டர்நேஷனல் ரோமிங் அப்டேட்டும் நீங்கள்தானே செய்திருக்கிறீர்கள்” என்றேன். “நீங்களே வந்தீர்களா? எங்கே எப்படி செய்தீர்கள் என்று அடையாளம் காட்டமுடியுமா?” என்றார். நான் சத்தம்போட்டதும் போனை வைத்துவிட்டார்

ஆச்சரியம்தான். இந்த அளவுக்கு அப்பட்டமான மோசடி நிகழுமென நான் நினைக்கவேயில்லை. இவ்வளவுக்கும் நான் ரசீதை வைத்திருக்கிறேன். வழக்கமாக அப்படி ரசீதுகளைப் பேணும் மனநிலை கொண்டவன் அல்ல. ரசீது இல்லாவிட்டால் ‘சரிதான் போ’ என்பதுதான் பதில். இப்போது ரசீதுடன் நேரில் வா என்கிறார்கள். நேரில் சென்றால் அடுத்த திங்கள் கிழமை வரமுடியுமா என்பார்கள். நானே சலித்து விட்டுவிடவேண்டும். மீண்டும் மீண்டும் பகல் முழுக்க கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சாராம்சம் ஒன்றுதான் ‘உன் காசு வராது. சும்மா வெறுக்கடிப்போம், பேசாமல் இரு’

இதை எழுத ஓர் இணையதளம் எனக்கு இருக்கிறது. பிறர் இதைக்கூடச் செய்யமுடியாது. இப்படி எத்தனை ஆயிரம், லட்சம் ரூபாயை ஆட்டைபோட்டிருப்பார்கள்!

ஜெ

முந்தைய கட்டுரைஏர்டெல் சேவையெனும் மோசடி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 87