தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது 2015

deva_2401337f

இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது தமிழ்ப்புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவரும் நவீனத்தமிழிலக்கிய இயக்கத்தின் மையங்களில் ஒன்றாகத் திகழ்பவருமான தேவதச்சனுக்கு வழங்கப்படுகிறது. தேவதச்சனை ஓர் ஆரம்பகட்ட இலக்கியவாசகனாக 1986ல் குற்றாலத்தில் சந்தித்தேன். அவருடன் கோயில்பட்டிக்குச் சென்று இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். நவீனக் கவிதை என்பதை எனக்கு அறிமுகம் செய்தவர்களில் அவரும் ஒருவர்.

மின்னல்கோக்கும் மொழி என எம்.கோவிந்தனைப்பற்றி ஆற்றூர் ரவிவர்மா ஒரு கவிதையில் சொல்கிறார். தமிழில் அத்தகைய உரையாடல் கொண்டவர் தேவதச்சன். அவரது உரையாடல் நகைச்சுவையும் அன்றாடத்தன்மையும் கொண்டதாக தொடங்கி எளிதில் கவித்துவமும் தத்துவதரிசனமுமாக மேலேறிசென்று திகைக்கவைக்கும் ஓர் உச்சத்தில் கேட்பவனை நிறுத்திச் செல்வது.

நான் சந்தித்த காலகட்டத்தில் தேவதச்சன் மிகக்குறைவாகவே எழுதியிருந்தார். அவரது ஆளுமை உரையாடல் வழியாக தனிப்பட்ட நட்புகளுக்கு மட்டுமே தெரிவதாக ஒடுங்கிவிட்டது என்னும் எண்ணம் அன்றிருந்தது. ஆனால் சமீபகாலமாக தொடர்ந்து கவிதைகள் எழுதி முக்கியமான தொகுதிகளாக அவற்றைக் கொண்டுவந்திருக்கிறார். இன்று தமிழில் மட்டுமல்ல இந்திய அளவிலேயே தேவதச்சனுக்கு நிகரான கவிஞர்கள் சிலரே என ஐயமின்றிச் சொல்லமுடியும். உலகில் எந்த மொழியில் எழுதும் பெருங்கவிஞர்களில் ஒருவராக அவரை முன்வைக்கமுடியும்

நவீனத்தமிழிலக்கியத்தின் மையங்களில் ஒன்றாக கோயில்பட்டி ஆனதில் முதன்மைப் பங்கு தேவதச்சனுக்கே. எஸ்.தமிழ்ச்செல்வன், வித்யாஷங்கர், கௌரிஷங்கர், அப்பாஸ், கோணங்கி, சமயவேல், யுவன் சந்திரசேகர், எஸ்.ராமகிருஷ்ணன் எனப் பலர் அவரது ‘சபையில்’ இருந்து எழுந்தவர்கள். தமிழ்ச்சூழலின் அற்புதங்களில் ஒன்று இந்த எழுச்சி.

உயிர்மை வெளியீடாக அவரது

கடைசி டினோசார்

யாருமற்ற நிழல்

ஹேம்ஸ் என்னும் காற்று

இரண்டு சூரியன்

ஆகியவை கிடைக்கின்றன. அவரது இணையதளம் http://devathachan.blogspot.in/

தேவதச்சன் குறித்து ஒரு நூல் எழுதப்பட்டு விருது அரங்கில் வெளியிடப்படும். அவரைப்பற்றி ஓர் ஆவணப்படம் எடுக்கவும் எண்ணம் உண்டு. விழா டிசம்பரில் கோவையில் நடைபெறும்

இவ்விருது அவரைக் கௌரவிப்பது என்பதைவிட ஒரு முன்னோடியாக விளங்கும் அவருக்கு அவரைத் தொடர்ந்து வந்த வாசகர்களின் எளிய வணக்கம் என்பதே பொருத்தமானது

தேவதச்சனுக்கு விளக்கு விருது

சந்திப்புகள் பற்றி

தேவதச்சன் நேர்காணல்

முந்தைய கட்டுரைகாந்தியின் கடிதம்
அடுத்த கட்டுரைஏர்டெல், அந்த 3000 ரூபாய்