‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 88

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 1

சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் புரவிகளில் ஏறி துவாரகையின் வணிகத் தெருவுக்கு வந்து புகைச்சுருள் என வானிலேறிய சுழற்பாதையினூடாக மேலேறினர். நகரம் எப்போதும் போல அசைவுகளும் ஓசைகளும் வண்ணங்களுமாக கொந்தளித்துக் கொண்டிருந்தது. இருபக்கமும் திறந்திருந்த கடைகளின் முன் குவிக்கப்பட்டிருந்த உலர்மீனும் புகையூனும் தேனிலிட்ட கனிகளும் மணத்தன. அதனூடாக இன்கள்ளின் மணத்தை அறிந்த திருஷ்டத்யும்னன் திரும்பி சாத்யகியிடம் “யாதவரே, சற்று கள்ளருந்தி செல்வோம். இக்கணத்தை கொண்டாடுவோம்” என்றான்.

சாத்யகியின் கண்களில் ஒரு கணம் திகைப்பு வந்தது. திருஷ்டத்யும்னன் “யாதவரே, இக்கணம் உங்கள் உள்ளம் அதை விழைகிறது என்றால் யார் பொருட்டு அதை தடுக்கிறீர்கள்? நாம் இளையவர் முன் நம்மை முற்றுமெனத் திறந்து நிற்கப் போகிறோம். நம் மும்மலங்களுடன் அவர் அள்ளி தன் நெஞ்சோடு அணைப்பாரென்றால் அதுவே வேண்டும் நமக்கு. நீர் விழையாவிட்டாலும் நான் கள்ளருந்தப் போகிறேன்” என்றான். சாத்யகி ஏதோ சொல்ல வாயெடுக்க கைநீட்டித் தடுத்து “கள்ளுடன் ஊனும் உண்ணப் போகிறேன். இந்நாளில் நான் கட்டற்றுக் கொண்டாடவில்லை என்றால் பிறகெப்போது?” என்றான்.

சாத்யகியின் முகம் மலர்ந்தது. “ஆம். கள்ளுண்போம், ஊனுண்போம். குடுமியில் மலர் சூடி தாம்பூலம் மென்றபடி களிமயக்கக் கோலத்தில் சென்று அவர் முன்னால் நிற்போம். இளையவரே, உம் விழிமுன் இந்நகர் ஒரு மாபெரும் களியாட்டு. இந்நகர் அமைந்த இப்புடவி ஒரு மாபெரும் களியாட்டு. இதில் ஒவ்வொரு கணமும் நான் களிமகன் என்பேன்” என்றான். திருஷ்டத்யும்னன் உரக்க நகைத்தபடி “ஆம், அதுவே நாம் அவருக்கு சொல்லும் மறுமொழி” என்று சொன்னபின் “வருக!” என்று புரவியைத் திருப்பி விரைந்தான்.

இருவரும் சாலை ஓரத்து சிறு சந்து ஒன்றுக்குள் சென்றனர். அங்கு அப்பகல் நேரத்திலும் கடல் வணிகரும் நாளெல்லாம் மகிழ்ந்திருக்கும் களிமகன்களும் தெருவோரத்து கல்பரப்புகளில் கூடியமர்ந்து ஊனுண்டு மதுவருந்திக் கொண்டிருந்தனர். ஒருவன் கை நீட்டி ஓடி அவனருகே வந்து “இதோ வந்துவிட்டார்கள், பகலிலும் கள்ளருந்தும் பெருவீரர்கள். தோழரே, இவர் எங்களுக்குரியவர். எனையாளும் இணை தெய்வங்கள் இவர்கள்” என்று கூவினான். “என் தலைவர்களே வருக! இவ்வெளியவனுக்கு கள் வாங்கி ஊற்றி அருள்க!” என்று தலைக்குமேல் கை குவித்தான். அவனுக்குப் பின்னால் நின்றிருந்த அவனுடைய தோழர்கள் உரக்க நகைத்து அவனை ஊக்கினர்.

அவன் அவர்களுடன் ஓடிவந்தபடி “இந்தத்தெருவுக்கு இவ்வேளையில் உங்களை கொண்டுவந்த தெய்வங்கள் வாழ்க!” என்றான். அவர்களின் புரவி கள்ளங்காடி முன் சென்று நின்றபோது அவன் பின்னால் வந்து “வீரர்களே, என் பெயர் குசலன். மென்மையான சொற்களை சொல்பவன். மென்மையானவை என்பவை நாம் விரும்புபவை. நாம் விரும்புபவை என்பவை நமது ஆணவத்தை வருடுபவை. நமது ஆணவமென்பது பிறிதெவருமிலாத தனி உலகில் நின்றிருக்கும் நெடுந்தூண். அத்தூணின் உச்சியில் வந்தமர்கிறது பாதாள நாகமொன்று. நான் அந்த நாகத்தின் பணியாள்” என்றான். திருஷ்டத்யும்னன் சிரித்தபடி “இவன் நன்கு பேசக்கற்றவன்” என்றான்.

“இளையவரே, இது என் பேச்சல்ல. கள்ளில் உறையும் தெய்வத்தின் குரல். இதோ இக்கள் விற்பவன் இருபதாண்டுகளாக எனக்குத் தெரிந்தவன். இவர்கள் இருக்கும் இக்களம் ஐம்பதாண்டு தொன்மையானது. ஆனால் இக்கள்ளின் முதுமூதாதை இருநூறு தலைமுறைக்கும் மேல் தொன்மையானது. இப்புவியில் உள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையும் புதிதாக பிறந்தெழுந்தவை. மலர்கள், கனிகள், காய்கள்… கள் மட்டும் இறப்பற்றது. தன் உயிரை அடுத்த கலத்தின் கள்ளுக்கு அளித்துவிட்டு தேவர்களுக்கும் பாதாள தெய்வங்களுக்கும் அவியாகி வியனுலகும் மயனுலகும் செல்கிறது.”

வேதாந்தச் சொற்பொழிவாளன் போல அவன் தன் கைகளைத் தூக்கி கூவினான் “மாமன்னர் கார்த்தவீரியர் அருந்திய கள்ளின் எச்சம் இக்கலத்திலுள்ளது என்று சொன்னால் எப்படி மறுப்பீர்கள்? மானுடர் பிறந்திறப்பார். பாதாள நாகங்கள் பிறப்பும் இறப்பும் அற்றவை. வருக! கள்ளை வணங்குக! நாகங்கள் நஞ்சு சூடுவதுபோல பாலாழி பாம்பை ஏந்துவதுபோல கள்ளை கொள்க!” திருஷ்டத்யும்னன் “இவன் இக்கள்விற்பவனின் வழிகூவுபவன் போலும்” என்றான். கீழே நின்ற குசலன் “பிழை செய்கிறீர் இளவரசே. இங்கு வருபவர் ஒவ்வொருவருக்கும் அவருக்குரிய மதுவை சுட்டிக்காட்டும் கடமை கொண்டவன் நான். விண்ணுலகுக்கும் வீழுலகுக்கும் வழிகாட்டிகள் தேவை. மென்சிறகுகளும் ஒளிரும் விழிகளும் கொண்ட கந்தர்வர்களால் விண்ணுக்கு வழிகாட்டப்படுகிறது. இருண்ட உடலும் எரியும் விழிகளும் கொண்ட சிறிய நாகங்கள் பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றன” என்றான்.

“அதோ, பெண்களால் துயருற்றவர்கள் அருந்தும் கள் அது. பெண்களால் மகிழ்வுற்றவர்கள் அருந்தும் கள்ளும் அதுவே. பொன்னால் துன்புற்றவர்களுக்குரியது அந்தக் கள். பொன்னால் மகிழ்வுற்றவர்களுக்கு அதன் எதிரிலுள்ள கள். நோய்க்கு அந்த முதியகள். அதனருகே இளங்கள் அதற்கு மருந்தாக. அச்செந்தலைப்பாகை அணிந்தவன் விற்பது அது. தனிமைத் துயர் கொண்டவர்களுக்கான கள்ளை அதோ சுவர்க்கர் விற்கிறார். நண்பருடன் இணைந்து களியாடுபவருக்குரிய கள் அதற்கப்பால் பன்னிரு குலத்து வணிகர்களால் விற்கப்படுகிறது” என்று குசலன் கூவினான். “இனியவர்களே, இது மெய்மையின் விளிம்பை அடைந்தவர்களுக்கான கள். இவ்வழி வருக… இதுவே உங்களுக்கு.”

அவர்கள் சிரித்தபடி இறங்கிக் கொண்டதும் “மெய்மை என்பது மயக்களிப்பது. பொருள் வரையறுக்கப்பட்ட இனிய சொற்களை வேண்டிய அளவு அள்ளிக்கொள்கிறார்கள். அஞ்சி அஞ்சி தொட்ட அவை கைகளுக்குப் பழகும்போது அள்ளி வீசி கைகள் பெருக அம்மானை ஆடுகிறார்கள். பின்னர் தங்கள் முற்றத்தில் களம் வரைந்து அவற்றைப் பரப்பி சதுரங்கமாடுகிறார்கள். இறுதியாக ஒவ்வொன்றாக எடுத்து பின்னால் வீசியபடி பாதை தேர்ந்து முன் செல்கிறார்கள். இறுதிக் கல்லையும் அவர்கள் வீசிவிடும்போது சிரிக்கத் தொடங்குகிறார்கள். சிரித்தபின் இக்கள்ளை அருந்துபவன் முடிவிலாது அச்சிரிப்பில் வாழ முடியும். அதற்கு முன் அருந்துபவன் திரும்பி வீசிய கற்களை ஒவ்வொன்றாக பொறுக்கத் தொடங்குகிறான்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “நீர் அச்சிரிப்பில் வாழ்பவர் போலும்” என்றான். “ஆம். கேட்டுப்பாருங்கள். இக்கள்மகன் காலையில் கடை திறந்து தூபம் ஏற்றி பூச்சிகளை விரட்டி இக்கலத்தின் மூடியைத் திறந்து நெடுந்தூரம் ஓடிய புரவியின் வாய்நுரையென அதன் ஓரத்தில் படிந்திருக்கும் கள்நுரையை கையால் சற்று விலக்கி சிற்றெறும்புகளும் வண்டுகளும் மிதக்கும் மேல்படிவுக் கள்ளை மூங்கில் குழாயால் சுழற்றி அள்ளி முதலில் அளிப்பது எனக்கே. நான் அதை அரித்துக் குடிப்பதில்லை. இரவெலாம் கள்ளில் திளைத்து இறந்த உயிர்களைப்போல் எனக்கு அணுக்கமானவை பிற ஏதுண்டு?” என்றான் குசலன். சாத்யகி நகைத்தபடி “இவனுக்கு கள் வாங்கி அளிக்கவில்லையென்றால் இவன் நாவில் வாழும் கள்ளருந்திய கலைமகள் நமக்கு தீச்சொல் இடுவாள்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “குசலரே, மெய்மை தேடும் இரு பயணிகளுக்குரிய கள்ளை நீரே சொல்லும். மெய்மை அடைந்தவருக்கானதை நீர் வாங்கி அருந்தும்” என்றான். “ஆம், இதோ” என்றபடி குசலன் திரும்பி கள்வணிகனிடம் “நாகா, எடு கள்ளை. முதல் கள் முற்றிலும் நுரைத்திருக்கட்டும். அதன் குமிழிகள் அனைத்திலும் வானம் நீலத்துளிகளாக தெரிய வேண்டும். இரண்டாவது கள் சற்று வெளியே நுரை வழிந்திருக்க வேண்டும். மூன்றாவது கள் முற்றிலும் நுரையற்று பளிங்கு போல் அமைதி கொண்டிருக்க வேண்டும். மூன்றாவது கள் எனக்கு என்றறிந்திருப்பாய்” என்றான். நாகன் சிரித்தபடி “இளவரசர்களே, இவ்வேளையில் இவ்வாறு எவரையாவது இட்டு வருவது இவன் வழக்கம். இவன் சொல்லும் சொற்கள் அனைத்தும் இக்கணம் இவனில் எழுபவை. இவனில் ஊறிச்செல்லும் கள் இறங்கியபின் இதில் ஒரு சொல்லையேனும் நினைவுகூரமாட்டான்” என்றான்.

“அதையே நானும் சொல்கிறேன். எளியவன் நான், என்னில் எழுந்தருளியது கள்ளெனும் தேவன். அருந்துக கள்ளை! அருந்துக கள்ளை! இப்புவி ஒரு பெரும் ஆடல்! அதில் கள்ளென்பது நுண்களியாடல்! கள்ளறியாத கனவுகளேதும் இங்கில்லை. அருந்துக கள்ளே!” என்றான் குசலன். திருஷ்டத்யும்னன் இருமிடறுகளாக அம்மூங்கில் கோப்பையிலிருந்ததை குடித்து முடித்தான். சாத்யகி துளித்துளியாக அதை உறிஞ்சிக் கொண்டிருந்தான். குசலன் ஒரு முறை கள்ளை கூர்ந்து நோக்கி “ஓம்” என்ற பின் “ஆகுதி ஆகுக!” என்றபடி ஒரே மிடறில் குடித்து குவளையை தரையில் வைத்தான். “இன்கடுங்கள்! விண்ணை தலையில் சூடி மண்ணை உறிஞ்சி நிற்கும் கரும்பனையின் கனிந்த நஞ்சு” என்றான். உடம்பை சற்று உலுக்கியபின் “பிறிதொரு கோப்பை வேண்டுமல்லவா பாஞ்சாலரே?” என்றான்.

சாத்யகி அப்போதும் பாதிக் கோப்பையை குடித்து முடித்திருக்கவில்லை. “அவர் அருந்துவது குறைவு. அடைவது மிகுதி. அதை சென்றடைய நாம் மும்முறை அருந்த வேண்டும்” என்றான் குசலன். “கள் எழுக!” என்று திரும்பி நாகனிடம் சொன்னான். நாகன் சிரித்தபடி மீண்டும் கள்ளை அள்ளி சற்றே தூக்கி ஊற்றி நுரை எழுந்து சரியச் செய்தான். நுரையற்று அடியில் தங்கியதை குசலனின் கோப்பையில் ஊற்றினான். “அப்பங்கள்?” என்றான் குசலன். “ஊன் பொரித்து மாவில் வைத்து இலையில் சுற்றி சுட்ட அப்பங்கள் உயர்ந்தவை. ஏனெனில் வாழ்நாளெலாம் அன்னத்தை உண்ட விலங்கை இதில் அன்னம் உண்டிருக்கிறது” என்றான். சாத்யகி நகைத்தபடி கோப்பையை கீழே வைத்துவிட்டான். “இளவரசே, இவன் உயர் தத்துவமும் கற்றிருக்கிறான்.”

“ஏன் கள்ளங்காடி நடுவே ஒரு கீதை உரைக்கப்படலாகாதா? இளையவர்களே, வேதாந்த நூல் சொல்லும் கீதைகள் நூறு. அருகமர்ந்த மாணவர்களுக்கு சொல்லப்பட்டவை. வழிச்செல்லும் வணிகர்களுக்கு சொல்லப்பட்டவை. கன்று சூழ்ந்தமர்ந்திருக்கும் ஆயர்களுக்கு சொல்லப்பட்டவை. வயலில் விதையுடனெழும் வேளிர்களுக்கு சொல்லப்பட்டவை. குடிநிறைந்த பெண்டிருக்கும் துணிந்து கீதையை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கள் முனையில் சொல்லப்பட்ட கீதை இது ஒன்றே. அவற்றில் ஒவ்வொன்றிலும் இருந்து ஒரு சொல் எடுத்து உருவாக்கப்பட்டது இது” என்றான் குசலன்.

சிரித்து “இதுவே முழுமையான கீதை போலும்?” என்றான் திருஷ்டத்யும்னன். “அல்ல, பல்லாயிரம் கள்ளக கீதைகளிலிருந்து ஒரு சொல் வீதம் எடுத்து உருவாக்கப்பட்ட பிறிதொரு கீதையே முழுமையானது. அது எழுக!” முகம் மாறி “குசலரே, இம்மண்ணில் அத்தனை பெரிய களியாட்டுக்கூடம் எது?” என்றான் திருஷ்டத்யும்னன். “அது ஒரு பெருங்களம். குருதி மழைத்து குருதி ஒழுகி குருதி உலரும் நிலம். அங்கு ஒவ்வொருவரும் கள்ளுக்கு நிகராக தங்கள் வஞ்சத்தை அருந்தி முழுமையான மதிமயக்கு கொண்டிருப்பார்கள். ஒருவன் மட்டிலுமே நெற்றிக்குள் விழிதிறந்தவனாக இருப்பான். அவன் சொல்வதே முழுமையுற்ற கீதை” என்றான் குசலன். தன் மதுக்கோப்பையை முழுமையாக இழுத்துக் குடித்துவிட்டு “நாகா, மூடா, நிறைந்த கோப்பைக்கும் ஒழிந்த கோப்பைக்கும் நடுவே இருக்கும் ஒரு கணம் தெய்வங்கள் வஞ்சம் கொள்ளும் பேருலகம் ஒன்று திறக்கும் தருணமென்று அறியாதவனா நீ? ஊற்றுடா” என்றான்.

நாகன் “மெல்ல மெல்ல இவன் உருமாறிக்கொண்டே இருப்பான். புழு பாம்பென்று ஆகும் மாற்றம். உருவெளி மயக்கம் என்று இங்கே சொல்வார்கள்” என்றான். “ஊற்றடா கள்ளை” என்றான் குசலன். சாத்யகி தன் கோப்பையை முடித்து கீழே வைத்து வாயை கையால் துடைத்துக் கொண்டான். “யாதவரே, இன்னுமொரு கோப்பை?” என்றான் நாகன். வேண்டாம் என்று கை சரித்தான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் இரண்டாவது கோப்பையை முடித்து மூன்றாவது கோப்பையை வாங்கும்போது குசலன் “மீண்டும்” என்று நான்காவது கோப்பைக்கு ஆணையிட்டான். சாத்யகி இனிய களைப்புடன் உடம்பைத் தளர்த்தி நீட்டிக் கொண்டான். திருஷ்டத்யும்னன் குசலனிடம் “சொல்லுங்கள் குசலரே, அந்த கீதையை உரைக்கப்போகிறவர் யார்? கள் கோப்பையுடன் நீர் களம் புகுவீரோ?” என்றான்.

“இல்லை. நூறு வஞ்சங்களை என்னால் காண முடியும். ஆயிரம் சினங்களை அறிய முடியும். பல்லாயிரம் விழைவுகளை தொட்டுணர முடியும். ஆனால் இன்றிருப்பவர் நேற்றிருந்தவர் நாளை எழுபவர் என இப்புவியில் நிகழும் அனைவரும் கொள்ளும் கோடானுகோடி வஞ்சங்களை சினங்களை விழைவுகளைக் கண்டு அவை ஒன்றையொன்று நிகர்செய்து உருவாக்கும் ஏதுமின்மையில் நின்று சிரிப்பவன் ஒருவன் மட்டிலுமே அதை உரைக்க முடியும். முற்றிலும் தனித்து நிற்கத் தெரிந்தவன். அவனையே யோகிகளின் இறைவன் என்கிறார்கள்… யோகீஸ்வரன்.” அவன் ஆவியெழும் உலைக்கலத்து துளை என ஏப்பம் விட்டு உடலை உலுக்கிக்கொண்டான். பழுத்திருந்த கண்கள் சிவந்து அனலில் வாட்டி எடுத்தவை போலிருந்தன.

“தலைக்குமேலும் மண் இருப்பவர் மானுடர். தலைக்குமேல் விண்ணிருப்பவர்கள் முனிவர். இளவரசர்களே, காலுக்குக் கீழும் விண் கொண்டவன் யோகி. அவன் யோகிகளின் தலைவன். முனிவர்கள் தங்கள் நெற்றிப்பொட்டில் அவன் பெருவிரல் நகத்தின் ஒளியை உணர்வார்கள். யோகீஸ்வரன்! என்ன ஒரு சொல். பொன்போல மிளிர்கிறது.” குசலனின் தலை தாழ்ந்து வந்தது. “நெற்றிப்பொட்டிலெழும் நகமுனை. நெற்றிப்பொட்டு…” என்றான். “மான்கண் போல. நீருக்குள் விழுந்த வெள்ளி நாணயம் போல. இலைத்தழைப்புக்கு அப்பால் ஒளிந்திருந்து நோக்குகிறது கட்டைவிரல்நகம். நெற்றிப்பொட்டில் எழும் ஆயிரம் இதழ் தாமரையின் மையம்.”

எடைமிக்க தலையை தூக்கமுயன்று முடியாமல் தரையில் அமர்ந்தான். கையை ஊன்றி உடலை இழுத்துச் சென்று கள்கடை நடுவே நாட்டப்பட்டிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்தான். “பேச்சுதான் பெரிதாக உள்ளது. கள் தாங்க உடலில்லை” என்றான் சாத்யகி. “அவர் குடிக்கும் குடிக்கு உடலென்று ஒன்று இருப்பதே வியப்பு” என்றான் நாகன். “மான்கண் நகம்!” என்று கைதூக்கி விரல்சுட்டி சொன்னான் குசலன். “தனித்த வேட்டைக்காரன் நான்! ஆறு முனைகளிலிருந்தும் அம்பெய்கிறேன். என் மூலாதாரத்தின் அம்பு தவறுகிறது. சுவாதிட்டானத்தின் அம்பு தவறுகிறது. மணிபூரகத்தின் அம்பு தவறுகிறது. அனாகதம் பிழைக்கிறது. விசுத்தி பிழைக்கிறது. ஆக்கினை நின்று தவிக்கிறது.”

“ஆறாவது அம்பு சென்று தைக்கும் ஏழாவது அம்பின் நுனி. ஆம் அதுதான்… அதுவேதான். ஆயிரம் பல்லாயிரம் சொல்லெடுத்து எய்பவர் அடையாத ஒன்றை சொல்லறியா வேடனொருவன் அடைவானோ?” குமட்டலெடுத்து பன்றிபோல் ஒலியெழுப்பி முன்னால் சரிந்து உடல் அதிர்ந்தான். ஆனால் வாந்தி வரவில்லை. வழிந்த கோழையை துடைத்தபின் தலையை இல்லை இல்லை என அசைத்தான். கொதிநீர் ஊற்று போல எச்சில் தெறிக்க அவன் இதழ்கள் வெடித்து வெடித்து மூச்சை வெளிவிட்டன. தலை தொய்ந்து தோளில் அழுந்தியது. ஊன்றிய கை விடுபட பக்கவாட்டில் விழுந்து துயிலத் தொடங்கினான். “செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.

மெல்லிய உடலாட்டத்துடன் திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் வெளியே வந்து புரவிகளில் ஏறிக் கொண்டனர். சாத்யகி “இதற்கிணையான விடுதலையை நான் அறிந்ததே இல்லை. கைவிரித்து சற்று எம்பினால் பறந்துவிடுவேன் என்று தோன்றுகிறது” என்றான். திருஷ்டத்யும்னன் “நான் அவர் சொன்னதை எண்ணிக் கொண்டிருக்கிறேன். பொருளற்ற சொற்கள். ஆனால் உணர்வெழுச்சியுடன் சொல்லப்படுகையில் பொருளற்ற சொற்களைப்போல ஆற்றல் மிக்கவையாக பிறிதெதுவும் இல்லை” என்றான்.

காறித்துப்பிவிட்டு கையை மேலே தூக்கி “ஆ” என்றான் சாத்யகி. “இத்தனை கள்ளுக்கு அப்பாலும் உமது உள்ளம் சொல்லைக்கொண்டு களமாடுவது வியப்பளிக்கிறது. கலைத்து வீசும் அவற்றை… உப்புக் காற்று நிறைந்த இந்த வானம், களிவெறி கொண்ட முகங்கள் நிறைந்த இந்தத் தெரு… இது பாடுவதற்குரியது.” இரு கைகளையும் விரித்து “இந்திரநீலம்! நிறமொன்றேயான அது. பிறிதெதுவும் நிறமல்ல. தோழரே, நீலம் உருக்கொள்ளும் ஆடல் முகங்கள் அவையனைத்தும்” என்றான். கள்ளுண்டவனுக்குரிய சற்றே உடைந்த குரல் அவனுக்கு வந்துவிட்டிருப்பதைக் கேட்டு திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான்.

சாத்யகி இருபக்கமும் இருந்த மாளிகைகளை நோக்கி கை சுட்டி, உள்ளிருந்து எழும் சொல் அச்சுட்டலுக்கு உடனடியாக வந்து இணைந்து கொள்ளாமையால் சில கணங்கள் தவித்து சுட்டு விரலை சற்று ஆட்டியபின் “இம்மாளிகைகள்! இவை இத்தனை மகிழ்ச்சியானவை என்று எனக்கு இதுவரை தெரியாது பாஞ்சாலரே. இவை ஒவ்வொன்றும் என்னை நோக்கி சிரிக்கின்றன… இச்சிரிப்பை நான் பலகாலமாக அறிவேன். இன்றுதான் என்னால் திரும்பி சிரிக்க முடிகிறது” என்றான். ஒரு மாளிகையை நோக்கி கைகூப்பி “வணங்குகிறேன் வெண்பல்லரே” என்று இரு கைகளையும் விரித்தான். உரக்கச் சிரித்தபடி “ஆம், நாம் முன்னரும் கண்டிருக்கிறோம். அன்றெனக்கு அலுவல்கள் இருந்தன” என்றான்.

சுற்றிச் சுற்றி நோக்கியபடி “இத்தெருவில் உள்ள அத்தனை மாளிகைகளும் சிரிப்பதை இப்போதுதான் காண்கிறேன்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் தோளில் ஓங்கி அறைந்து “ஒரே நகைக்கொண்டாட்டமாக அல்லவா இருக்கிறது இது? என் செவிகள் உடையும் அளவுக்கு பேரொலி எழுகிறது” என்றான். இரு கைகளையும் தூக்கி வீசி “அஹ்ஹஹ்ஹஹ்ஹா!” என்று உரக்க சிரித்தான். அந்த விசையில் அவன் பின்னால் சரிய திருஷ்டத்யும்னன் அவன் புரவியின் கடிவாளத்தை பற்றிக்கொண்டான். “அதோ, நடுவே நின்று இடியோசையுடன் சிரிப்பது யார்? அதுதான் இந்த நீலன் கிருஷ்ணன் என்பவன் மாளிகையா?” என்றான் சாத்யகி. “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன்.

“அவன் என் களித்தோழன். அதுதான் உண்மை. அவனிடம் களமாடி கடலாடித்தான் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். அதை ஒருபோதும் நான் சொன்னதில்லை. ஏனென்றால் நான் இங்கு வருவதற்கு ஒருநாள் முன்னால் அவன் இங்கு வந்துவிட்டான். இங்கு வாழ்ந்த ஒரு பெரும் பூதம் அவனுக்கு இவ்வளவு பெரிய நகரை உருவாக்கி அளித்தது. இதோ இங்கு பல்வெண்மை ஒளிர நின்றிருக்கும் அத்தனை மாளிகைகளும் அப்பூதத்தின் ஏவலர்களே. அப்பூதமே அதோ அவ்விரண்டாம் குன்றின் மேல் ஒரு பெருவாயிலாக உருக்கொண்டு வளைந்து நின்றிருக்கிறது. அது கட்டியளித்த இந்த மாளிகையில் அமர்ந்து அவன் என்னிடம் ஐந்து குறிகளை உடலில் போடச்சொன்னான்.”

தன் தோளிலும் நெஞ்சிலும் அமைந்த தொழும்பக்குறிகளை கைகளால் அறைந்து “இவை எனக்கு சுமைகள். இந்த ஐந்து குறிகளுடன் என்னால் அவனை அணுக முடியவில்லை. அவன்முன் செல்லும்போதெல்லாம் நான் ஏவலனும் அவன் அரசனும் ஆகிறோம். அவன் முன் சென்று நின்று தலைவணங்குகையில் அந்த நாடகத்தைக் கண்டு எனக்குள் வாழும் இளையவன் நாணுகிறான். சினம் கொள்கிறான். அஞ்சி ஓடி என் கனவின் ஆழத்தில் எங்கோ அவன் பதுங்கியிருக்கிறான். அவனிடம் நான் சொல்ல வேண்டியது ஒன்றுதான், நீலா உனக்கெதற்கு இந்த வேடம்? இக்கீழ்மக்கள் சூழ்ந்து வாழ்த்தும் ஓசை? இறங்கிவா, நாமிருவரும் காடுகளில் கன்று மேய்ப்போம். நதிகளில் நீராடுவோம். களிக்களம் சேர்வோம்” என்றான்.

கையை இல்லை இல்லை என அசைத்து தரையில் காறித்துப்பி சாத்யகி சொன்னான் “ஆட்டத்தோழனொருவனை இத்தனை தொலைவில் காணும் இக்கீழ்மை என்னை வருத்துகிறது. இதோ சென்று கொண்டிருப்பது அதற்காகத்தான். அவன் அவை புகுந்து சொல்லப்போகிறேன். ‘அடேய் நீலா என்னுடன் களியாட வருவாயா இல்லையா?’ பொன்வண்டு தன் மேலோட்டை விட்டுவிட்டு உள்ளிருந்து புதிதாகக் கிளம்பிச் செல்வது போல இம்மூடர்கள் காணும் அவ்வரசை அரியணையை விட்டுவிட்டு உள்ளிருந்து அவன் எழுந்து வருவான். நான் அவனுடன் கிளம்பி கன்றுகள் மட்டும் நிறைந்த காட்டுமுகப்பை அடைவேன். அங்கு நான் அவனுக்காக கண்டுவைத்த நீலக்கடம்பு ஒன்று நின்றிருக்கிறது.” சிவந்த கண்களால் நோக்கி சுட்டு விரலை ஆட்டி சாத்யகி சொன்னான் “நீலக்கடம்பு!”

“நாம் அவனிடம் போவோம். நாங்கள் அங்கே…” கை சுட்டியபோது உடல் நிகர்நிலை இழக்க பின்னுக்குச் சரிந்த சாத்யகியை திருஷ்டத்யும்னன் பற்றிக் கொண்டான். “அங்கே அவ்வளவு தொலைவில் என்னுடைய ஆயர்பாடிக்கு சென்றுவிடுவோம். அங்கே இந்த மூடனை யாரும் அரசர் என்று நினைக்க மாட்டார்கள். கன்று சூழ்ந்து வா கள்வனே என்று மூதாய்ச்சியர் வெண்ணை கடைந்த மத்தால் அவனை மண்டையிலடிப்பார்கள். ஆம் மண்டையில்!” சாத்யகி உரக்க நகைத்து “மண்டையில்!” என்றுரைத்து அவனே அச்சொல்லால் மிக மகிழ்ந்து மேலும் மேலும் பொங்கிச் சிரித்தான். “ஆம், மண்டையில்! மண்டையிலேயே மத்தால் போட்டால்தான் இந்த மூடன் இவன் ஆடும் இந்த நாடகத்திலிருந்து வெளியே வருவான். மண்டையிலேயே!”

பற்களைக் காட்டி “மண்டையிலேயே!” என்று சொல்லிச் சிரித்தபடியே சாத்யகி வந்தான். அவன் புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி அரண்மனை வளாகத்தின் கோட்டை வாயிலை அடைந்தான் திருஷ்டத்யும்னன். அங்கிருந்த காவலர்கள் அவர்கள் வருவதை முன்னரே கண்டுவிட்டனர். அங்கே காத்து நின்றிருந்த சிற்றமைச்சன் ஒருவன் அவர்களை நோக்கி வந்து தலைவணங்கி “பாஞ்சாலரே, தாங்கள் இங்கு வருவீர்கள் என்றும் உங்கள் இருவரையும் நேரடியாகவே தன் கடல்மாளிகைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்றும் அரசரின் ஆணை” என்றான். “அரசர் இப்போது கடல் மாளிகையிலா இருக்கிறார்?” என்றான் திருஷ்டத்யும்னன்.

சாத்யகி “அவன் எங்கும் இருப்பான். வெறும் யாதவமூடன்! தன்னை அரசன் என்று காட்டுவதற்காக கடல்நுரையை அள்ளி இங்கொரு நகரம் செய்து வைத்திருக்கிறான். அதில் வீண்மாளிகைகளை சமைத்திருக்கிறான். யவனமூடர் அமைத்த பீடத்தில் கலிங்கத்து மூடர் அமைத்த மணிமுடியைச் சூடி அமர்ந்திருக்கிறான்” என்றான். கைசுட்டி “இதோ நான் செல்கிறேன். சென்றதுமே அவன் இடைசுற்றிய கச்சையைப்பிடித்து வாடா இந்த விளையாட்டெல்லாம் எனக்கு முன்னரே தெரியும் என்று சொல்வேன்” என்றான். திருஷ்டத்யும்னன் கோணலாகச் சிரித்து “சற்று புளித்த கள்ளை அருந்தியிருக்கிறார்” என்றான்.

அமைச்சன் சிரித்து “கள் மிகுதியாகி ஆன்மா நனைந்துவிட்டால் இங்குள்ள ஒவ்வொருவரும் இளைய யாதவரைப்பற்றி இதைத்தான் சொல்கிறார்கள். நேற்றுகூட ஒரு வாயிற்காவலன் உள்ளே சென்று அவரை அடேய் கிருஷ்ணா என்னடா நினைத்திருக்கிறாய் உன்னைப்பற்றி என்று கேட்டுவிட்டான்” என்றான். பின்னால் நின்றிருந்த காவலர்கள் அடக்க முடியாது சிரித்துவிட்டனர். ஒருவன் “இதோ இங்கிருக்கிறான்… இவன்தான். இவன் பெயர் கோவிந்தன்” என சிரித்தபடி சொன்னான். “பாதி கடித்த பழம் ஒன்றைக் கொண்டு சென்று அவருக்கு கொடுத்தான். இந்தமாதிரி பழத்தை நீ தின்றிருக்க மாட்டாய் மூடா என்று அவரிடம் சொன்னான்” என்றான் இன்னொருவன்.

உள்ளே வேலுடன் நின்ற அந்தக் காவலன் நாணம் தாளாமல் திரும்பி சுவருடன் முகத்தை புதைத்துக்கொண்டான். சாத்யகி “அவனிடம் நான் சொல்வேன்… என்ன சொல்வேன்?” என்று அமைச்சனிடம் கேட்டான். “ஆனால் அவனுக்கு என்னைத்தெரியாது. நீ யார் என்று என்னைக் கேட்டால் ஓங்கி ஒரே உதை, புட்டத்திலேயே உதைப்பேன்” என்றபின் விழிகளைத் தூக்கி முகத்தை சற்று அண்ணாந்து “எங்கே…? புட்டத்தில்! ஹாஹாஹாஹா புட்டத்தில்!” என்று சொல்லி உடல்சீண்டப்பட்டது போல் சிரிக்கத்தொடங்கினான்.

திருஷ்டத்யும்னன் “கடல் மாளிகையில் யார் இருக்கிறார்கள்?” என்றான். “அரசர் இருக்கிறார். பிறர் எவருளர் என தெரியவில்லை. தங்கள் இருவரையும் அங்கு வரச்சொன்னார். பிறிதெவரிடம் ஆணையிட்டிருக்கிறார் என்று அறியேன்” என்றான் அமைச்சன். திருஷ்டத்யும்னன் “நாங்கள் இத்தருணத்தில் இங்கு வருவோம் என அவர் அறிந்திருக்கிறாரா அல்லது எங்களைத் தேடி வரும்படி சொன்னாரா?” என்று கேட்டான். அமைச்சன் “இல்லை, இங்கு வருவீர்கள் என்றும் அப்போது இச்செய்தியை தங்களுக்கு அளிக்கவேண்டும் என்று மட்டுமே எனக்கு ஆணை. அதற்காகவே காத்திருந்தேன்” என்றான். தலையசைத்து “பார்ப்போம்” என்றான் திருஷ்டத்யும்னன். “பாஞ்சாலரே, புட்டத்தில்… அவன் புட்டத்திலேயே” என பொங்கிச்சிரித்தான் சாத்யகி.

முந்தைய கட்டுரைபி.எஸ்.என்.எல்லும்…
அடுத்த கட்டுரைஅர்ஜுன் சம்பத்தின் திருமுறை