அர்ஜுன் சம்பத்தின் திருமுறை

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் தளத்தை சுடச்சுட அன்றாடம் படித்துவிடுபவன் ஆதலால் இந்த பதிலை நீங்கள் பதிவேற்றியவுடன் படித்துவிட்டேன். இஸ்லாமிய தீவிரவாதம் முதலில் இஸ்லாமியருக்கே தீங்கு விளைவிக்கிறது என்பதை முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். பின் லேடனுக்காகவும் சதாம் உஸேனுக்காகவும் அம்மாப்பேட்டையில் ஆதரவு குரல் எழுவது நாராசம். அமெரிக்காவிலும் அடிக்கடி கேட்கும் குறைபாடு “அவர்களுக்குள் மிதவாதிகள் இருக்கிறார்கள், இருக்க வேண்டும் என்பது அவா, ஆனால் அவர்கள் குரல் மேலெழும்பாத வரை தீவிரவாதகளின் குரலே இஸ்லாமியரின் குரலாகின்றது என்ற கசப்பான உண்மையை அவர்கள் உணர வேண்டும்”.

ரசமான செய்தி ஒன்றை சென்ற முறை சொல்ல மறந்து விட்டேன். இங்கே கலிபோர்னியாவில் “பாரதி தமிழ்ச் சங்கம்” என்று ஒன்று இயங்கி வருகிறது. அங்கேயே இருந்த தமிழ் சங்கம் பிராமண எதிர்ப்பு எனும் திராவிட குப்பையை அள்ளிக் கொண்டதால் சங்கம் பிளவுற்று ‘பாரதி தமிழ் சங்கம்’ உருவானது (என்று கலிபோர்னியா நண்பர்கள் சொல்லக் கேள்வி). இச்சங்கத்தின் அறிவிப்புகளை நான் இணையத்தில் காண்பதுண்டு. இவர்கள் தங்களை தமிழ்ச் சங்கம் என்று அழைத்துக் கொள்வதை விட “இந்து சங்கம்” என்று அழைத்துக் கொண்டால் மிகப் பொருத்தம். இப்படிக் கூறியதற்காக அவர்கள் என் மேல் பாய்வார்கள். நான் கூறுவது அவர்கள் பட்டவர்த்தனமாக இது தான் நாங்கள் என்று சொல்லி விட்டு சுதந்திரமாக செயல் படலாமே. அதற்கு தான் இங்கு அளவற்ற சுதந்திரம் இருக்கிறதே. போகட்டும். சமீபத்தில் வெளி வந்த அறிவிப்பு என்னை அதிர்ச்சிகுள்ளாக்கியது. “பன்னிரு திருமறைகள்” பற்றி அர்ஜுன் சம்பத் உரையாற்றுவார் என்பதே அந்த அறிவிப்பு. இந்த அர்ஜுன் சம்பத் தான் சமீபத்தில் கோட்ஸேவிற்கு கோயில் கட்டினால் தவறில்லை என்று முத்து உதிர்த்தவர். அவர் திருமுறைகள் குறித்துப் புலமையுள்ளவர் என்றே வைத்துக் கொள்வோம் இருப்பினும் அவர்தானா அவர்களுக்கு கிடைத்தார்? இவர்களின் பிள்ளைகள் அமெரிக்கப் பள்ளிகளில் மற்றும் பல்கலைக் கழகங்களில் அது போன்ற பேருரைகளையா கேட்டு வளர்கின்றனர்? அமெரிக்காவில் பல காலம் குடியிருந்து, பொருளாதாரத்தில் உயர்ந்து, உலகை வேறு கோணங்களில் அறிந்து, இவ்வளவு வாய்ப்புகள் வாய்க்கப் பெற்றும் இவர்களுக்கு அர்ஜுன் சம்பத் தான் தேவை. இப்போது நான் அந்த பின் லேடனுக்காக குரல் கொடுக்கும் கிராமத்து இஸ்லாமியரை கொஞ்சம் கனிவோடு பார்க்கிறேன்.

கலவை வெங்கட் என்றொருவர் வீரமணி ரேஞ்சில் பேசுவார். யேசு மக்தலீனாவோடு உறவு கொண்டார் என்று கீறல் விழுந்த ரெகார்ட் போலக் கத்துவார். நான் நகைத்துக் கொள்வேன் இதெல்லாம் கஸண்ட்ஸாகீஸ் முதல் டான் பிரவுன் வரை எழுதியாயிற்று. அவரைப் பொறுத்தவரை இந்திய சிறுபான்மையினர் ஒரு வைரஸ் நோயால் பீடிக்கப் பட்டவர்கள். அப்படித் தான் அவர் எழுதுவார். வெறுப்பின் கூறுகள் கலவை வெங்கட் ஆயினும், வீரமணி ஆயினும், ஒவைஸி ஆயினும் ஒன்றே. இவர்களுடைய உத்திகளும் ஒன்றே.

மன்னிக்கவும் சாதாரண “பதிலுக்கு நன்றி” என எழுத முற்பட்டு வேறெங்கோ சென்றுவிட்டேன்.

நன்றி
அரவிந்தன் கண்ணையன்.

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 88
அடுத்த கட்டுரைதேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது