«

»


Print this Post

இன்செப்ஷன், நனவுணர்வில் கண்ட கனவு


ஜெ,

இன்செப்ஷன் படத்தை நாலைந்துமுறை பார்த்துவிட்டு, மீண்டும் விஷ்ணுபுரத்தை ஆங்காங்கே நினைவில் நின்ற பகுதிகளைப் படித்துவிட்டு இதை எழுதுகிறேன். இன்செப்ஷனில் அடிப்படையாக உள்ள ’கனவுக்குள் நுழைதல்’ என்ற ஆட்டம் இன்னமும் சிக்கலாகவும் இன்னமும் விரிவாகவும் விஷ்ணுபுரம் நாவலில் உள்ளது என்று எனக்கு தோன்றியது. அந்த பிரமிப்புதான் இந்தக் கடிதத்தை எழுதுவதற்கான தூண்டுதல்.

இன்செப்ஷன் படத்தில் தகவல்களை திருடுவதற்காக பிறரது கனவுக்குள் கனவு கண்டு அதன் வழியாகவே நுழைகிறார்கள். விஷ்ணுபுரத்தில் பல முறைகளில் இந்த கனவுக்குள் நுழைதல் வந்துகொண்டே இருக்கின்றது. மகாகாசியபரும் அவரது மாணவர்களும் பிறரது கனவுக்குள் நுழையும் கலையில் சிறந்தவர்களாக இருக்கின்றார்கள். பிரசேன சிற்பியின் கனவுக்குள் நுழைந்து அவர் வடித்த சிலையை தங்கள் திட்டப்படி அவரது கைகளாலேயே வடித்துக்கொள்கின்றார்கள்.

அதைவிட சில்லிட வைக்கும் இடம் என்பது பிரசேனர் காசியபரை சந்திக்கும் இடம்தான். காசியபர் ஐந்து நூற்றாண்டுக்கு முன்னால் வாழ்ந்த வரலாற்று மனிதர். ஆனால் அவரது அன்கான்ஷியஸை அப்படியே ஒரு டப்ளரில் இருந்து இன்னொன்றுக்கு கொட்டுவதுமாதிரி இன்னொரு மனித மனத்துக்குள் கொட்டிவிடுகிறார்கள். ஆகவே தொடர்ச்சியாக பல்வேறு உடல்கள் வழியாக காசியபர் சாவே இல்லாத ஒருவராக இருந்துகொண்டே இருக்கிறார்.

‘நான் காசியபன்,உங்கள் புராணங்களில் எனக்கு அனேகம் பெயர்கள். உபகாலன்,சியாமன்,மகாவீரன்,ஜ்வாலாருத்ரன், அபராஜிதன்,அமிர்தன்..’ என்று காசியபர் சொல்கிறார். அந்தவரி எனக்கு ஒரு அதிர்ச்சி மாதிரி இருந்தது. ஒரு மனிதனின் மொத்த அன்கான்ஷியஸையே இன்னொரு மனத்திற்குள் கொட்டிவிடமுடிந்தால் மனிதனுக்கு சாவு ஏது? பர்சனாலிட்டி என்பதே அதுதானே?

நாவல் முழுக்க ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தின் கனவுக்குள் இருக்கின்றது என்பதுதான் விஷ்ணுபுரத்தில் உள்ள பெரிய அச்சரியம். முதல் வாசிப்பில் புரிந்துகொள்ள முடியாதபடி குழப்பமாக இருப்பதுகூட அதுதான். மொத்தக் கதையும் வேறு யாரோ கண்ட கனவுதான். அந்தக் கனவுக்குள் வருகின்ற ஒரு கதாபாத்திரம் நூறு வருஷம் கழித்து இன்னொரு மனிதன் கனவுக்குள் வாழக்கூடியதாக இருக்கின்றது.

விஷ்ணுபுரம்நாவலின் முதல் தோற்றுவாய் ஒரு பயங்கரமான கனவு இல்லையா. அந்தக்கனவில் தற்கொலைசெய்துகொள்ளும் ஒருவன் வெண்ணிறமான பறவையாக ஆகின்றான். ‘காற்றில் மிதந்தபடி சிவப்பான உதயஒளிபடர்ந்த வானத்தின் கீழ்மூலை நோக்கி சென்றபோது எங்கோ ஒருவனின் கனவில் புகுந்து அவனுடைய நனவில் விழித்தெழ ஆசைப்பட்டேன்’ என்று அந்த அத்தியாயம் முடிகின்றது. அந்த வெண்பறவைகள் பலநூறு வருடம் முன்னால் ஞானசபைக்குப் போய் அங்கே அமர்ந்திருக்கின்றன. இந்த சம்பவத்தை அங்கே அஜிதர் கனவாக காண்கின்றார். அதே சம்பவம் பலநூறு வருடம் தாண்டி பிரசேனசிற்பி தற்கொலை செய்துகொள்ளும்போது அவரது கனவுக்குள் நிகழ்கின்றது.

இப்படி கனவுகள் வழியாகவே விஷ்ணுபுரம் பின்னிப்பிணைந்து கிடக்கின்றது. இன்செப்ஷன் படத்தை இரண்டாம் தடவைபார்த்தால் சிக்கு எடுத்துவிடலாம். விஷ்ணுபுரம் நாவலோ மேலும் குழப்புகின்றது. காரணம் நிறைய கதாபாத்திரங்களும் நிறைய காலமும் இருப்பதனால்தான். மொத்த நாவலும் மகாபுராணம் என்ற ஒரு காவியம். அந்தகாவியம் வேறுவேறு கவிஞர்கள் எழுதிய 3 காவியங்களின் கலப்பு. அதில் ஒரு காவியத்தில் வரும் நான்கு பாணர்கள்தான் அந்தக்காவியத்தையே பாடுகின்றார்கள். அந்தபாணார்களின் கனவில்தான் அந்த காவியத்தின் எல்லா கதாபாத்திரங்களும் வருகின்றார்கள். அந்த கதாபாத்திரங்களில் மூன்றுபேர்தான் அந்த பாணர்களை கனவுகாண்கின்றார்கள். அந்த காவியத்தில் அல்லது கனவில் வரும் எல்லாருக்குமே அவர்கள் உண்மையில் வேறு யாரோ ஒருவரின் கனவுக்குள் இருக்கின்றார்கள் என்பது தெரிந்திருக்கின்றது.

இப்படியே போகின்றது நாவல்.கடைசியில் இருந்து சிக்கெடுத்து வந்தேன். முதலில் வந்த பிறகு மீண்டும் கடைசிக்குச் செல்லவேண்டியிருக்கின்றது. அதன்பின்பு ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி இன்னொருவரின் கனவுதான் தான் என்று உணர்கின்றது என்று பார்த்தேன். சிற்பி கனவுக்குள்தான் சாதாரணமாக இருக்கின்றார். ஷட்டர் ஐலண்ட் படத்தில் வருவது போல அவரது நிஜத்தில் கனவும் கலந்தே இருக்கின்றது. அஜிதன் ஒரு கனவுக்குள் அந்த பறவையை பார்க்கின்றான். விஷ்ணுபுரம் கனவுகளின் கேம்பிளே போலவேதான் இருக்கின்றது.

ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு வகை. எல்லா கனவுக்குள்ள்ளும் காலத்தின் அடையாளமாகிய கறுப்புநாய் வந்துகொண்டே இருக்கின்றது. அதுதான் கனவுகளை இணைக்கக்கூடியதாக இருக்கின்றது. விஷ்ணுபுரமே கிடையாது அது ஒரு கனவுதான் என்று பாண்டியநாட்டில் நம்புகின்றார்கள்.

இந்தமாதிரி வாசித்தபின்புதான் நாவலில் வரும் கவிதைகளை வாசித்தேன். முதல் இரு வாசிப்புகளில் கவிதைகளை நான் விட்டுவிட்டேன். இப்போது அதில் உள்ள வரிகள் தான் நாவலிலே உச்சகட்டமானவை என்ற நினைப்பு உருவாகியது.

என் மனப்பிரவாகமெங்கும்
அலையும் மேகங்களில் சிறகசைய
பறக்கும்மீன்களின் கனவின்
நிழல்படிந்த சேற்றுச்சதைப்பரப்பில்
சிலிர்த்த வரிகளில் உன்புரியாத காவியம்

*

சுழலுக்குள் சுழலுக்குள் சுழலுக்குள்
சுழலும் சுகந்த மணிநாதம்
உன் கூந்தல் மலர் என புலரி
உன் பாதத் தடமெனச் சொற்கள்

*

இந்தக் கவிதைகளில் நீங்கள் மொத்த நாவலிலும் சொல்லிக்கொண்டிருக்கும் கனவுக்குள் கனவுக்குள் கனவு என்ற அனுபவம் மிகவும் உக்ரமாக அனுபவமாகின்றது. அதேசமயம்

மழைக்கும் வெறிவானம் சிலிர்த்தெழும்
மழைரோமக்காடுகள்

என்பதுபோன்ற அற்புதமான உவமைகளும் மனதில் பதிகின்றன. நன்றிகள் ஜெ, விஷ்ணுபுரத்துக்காக

ஜெ, என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இந்த கனவுப்பரிமாற்றம் என்பது நம்முடைய பழைய மரபிலே இருந்ததா, இல்லை உங்களுடைய கற்பனைதானா?

ரவிச்சந்திரன்
நியூடெல்லி

*

அன்புள்ள ரவிச்சந்திரன்

நலம்தானே?

இன்செப்ஷன் பார்க்கவில்லை. என்னால் உரையெழுத்துக்கள் இல்லாமல் அதை புரிந்துகொள்ள முடியாதென நினைக்கிறேன். குறுவட்டு வந்ததும் வாங்கிப்பார்க்கவேண்டும்.

விஷ்ணுபுரத்தில் உள்ள கனவுகளில் இருந்து கனவுக்கு என்ற விஷயம் எளிமையாக காடு நாவலிலும் வருகிறது. அய்யர் சிவஞானபோதத்தில் இருந்து ஒரு பாடல் சொல்கிறார்

நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்திற்
தாக்காது நின்றுளத்தில் கண்டு இறைவன் ஆக்கத்தே
கண்ட நனவுணர்வில் கண்ட கனவுணர
கண்டவனில் இன்றாம் கட்டு

மொத்த காடு நாவலுக்கும் சாரம் அது. ‘நனவுணர்வில் கண்ட கனவுணர’ க்கூடிய ஒரு சில மாதங்கள், அதுதான் காட்டின் பேசுபொருள்.

சமீபத்தில் என்னைபபர்க்கவந்த என் வாசகரான குமார்பாபு, முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் உளமருத்துவமனையில் மருத்துவப்பேராசிரியராக இருந்தவர், இந்த வரியைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.காடு நாவலை பலமுறை வாசித்த அவருக்கு அதன் தத்துவச் சாரமாகவே ’நனவுணர்வில் கண்ட கனவுணர’ என்றவரி தென்பட்டதாகச் சொன்னார்.

நனவுக்குள் கனவும் கனவுக்குள் நனவும் என்பது இந்திய சிந்தனை மரபில் வேதாந்தம், மகாயான பௌத்தம், சைவசித்தாந்தம் மூன்றுக்கும் பொதுவான அகத்தரிசனம். பலபல கோணங்களில் இந்திய நூல்கள் அதை விவாதித்திருக்கின்றன. இந்த வாழ்வெனும் கனவுக்குள் இருந்து நாம் இன்னொரு கனவுக்குள் விழித்தெழுகிறோம், கனவுகளுக்குள் கனவாகச் சென்று உள்ளே இருக்கும் இன்மை வடிவம் கொண்ட பிரம்மத்தை அறிகிறோம் என்பதே அத்வைதம்.

வேதாந்தநூல்கள் மேலைநாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டில் அறிமுகமாயின. குறிப்பாக தத்துவத்தின் விளைநிலமாகிய ஜெர்மனியில். அவை உருவாக்கிய அலையே ’மனம்’ என்பதையும் ’யதார்த்தம்’ என்பதையும் பற்பல அடுக்குகளாக காணும் பார்வைக்கோணத்தை மேலைநாடுகளுக்கு அளித்தது. காண்ட், குரோச்சே, ஃப்ராய்ட், யுங் அனைவருக்குமே கீழை ஞானமரபு ஆழமான தூண்டுதலை அளித்தது.

லங்காவதார சூத்ரம் என்ற பௌத்த நூல் யுங்கில் ஆழமான பாதிப்பை உருவாக்கியது. குறிப்பாக ஆலயவிக்ஞானம் என்ற கருத்து. மானுடப்பிரக்ஞைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து ஒரே பிரக்ஞையாகவே உள்ளன, அது அனைத்து உயிர்களின் பிரக்ஞையும் கலந்து உருவாகி நேற்று இன்று நாளை இல்லாது ஓடும் இன்னொரு பெரும்பிரவாகத்தின் துளி என்பது விக்ஞானவாத பௌத்தத்தின் தரிசனம். அதை அவர்கள் ஆலயவிக்ஞானம் என்றார்கள். அந்த தரிசனத்தின் ஒரு எளிய வடிவமே யுங் உருவாக்கிய கூடுநனவிலி [ Collective unconscious ] என்ற கருதுகோள்

அந்தக்கருதுகோள் காலப்போக்கில் மேலைச்சிந்தனையில் பலவகையான விளைவுகளை உருவாக்கியது. நடைமுறைச் சிகிழ்ச்சை சார்ந்த உளவியலில் அது பயனற்றதாக கருதப்பட்டாலும் இலக்கியத்தில் அது ஒரு அலையை உருவாக்கியது. ஆழ்படிம விமர்சனம் [Archetypal literary criticism ] என்ற விமர்சனமுறை உருவானது. உலக இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக மானுடப்பிரக்ஞையாக காணும் போக்குக்கு வழி கோலியது. இலக்கியம் என்பதே மானுடஇனம் சேர்ந்து காணும் ஒற்றைப்பெருங்கனவு என்றுகூட கொள்கைகள் உருவாயின.

படைப்புகளில் கூட்டுநனவிலி என்பது உருவாக்கிய பாதிப்பைப்பற்றி பலநூறு பக்கங்கள் எழுதமுடியும். ஒருசமூகத்தின் கூட்டுநனவிலியே இலக்கியமாக வெளிப்படுகிறது என போர்ஹெஸ் சொல்லியிருக்கிறார். அவர் மகத்தான உருவகங்களை [ Metaphor] அப்படி ’தானாக’ உருவாகி வந்தவை என்று நம்புகிறார். நவீன இலக்கிய ஆக்கத்தின் பல அழகியல் கொள்கைகளில் கூட்டுநனவிலியின் அடிப்படைப் பங்களிப்பு உண்டு. மனிதர்களின் கனவுகள் ஆழ்மனங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும் சித்திரத்தை அற்புதமாக உருவாக்கிய பல மாய யதார்த்தப் படைப்புகளை சொல்லமுடியும் . மார்க்யூஸின் ‘நூறாண்டுத்தனிமை’ முதல் ராபர்ட்டோ பொலானோவின் ‘20666’ வரை

பொதுவாக திரைப்படங்கள் இலக்கியத்தின் அலைகளை ஒரு இருபத்தைந்து வருட இடைவெளி விட்டு பின்தொடர்கின்றன என்று படுகிறது. ஹாலிவுட் படங்களில் இன்று புகழ்பெற்றுள்ள நேர்கோடற்ற கதைசொல்லல், யதார்த்தங்களின் கலப்பு போன்ற பல விஷயங்கள் இலக்கியத்தில் பழையவை. ஓர் கதாசிரியனாக நான் இன்று அவற்றை அதிக ஆர்வத்துடன் பார்ப்பதில்லை. நான் மொழிதல் மற்றும் வரலாறு அமைதல் என்ற சிக்கலுக்குள் இன்று ஈடுபட்டிருக்கிறேன். அவற்றையே நான் எழுதுகிறேன். அசோகவனம் வரலாறு எப்படி அமைகிறது என்பதில் உள்ள சிக்கலான விளையாட்டை கவனிக்கும் ஆக்கம்

விஷ்ணுபுரம் பேசுவது வேதாந்தம் சொன்ன ‘நனவுணர்வில் கண்ட கனவு’ ‘’ அது தொன்மையான இந்திய தரிசனம், மேலைநாட்டுப் பின் நவீனத்துவ தரிசனம்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7809/

11 comments

Skip to comment form

 1. Dondu1946

  தான் பட்டாம்பூச்சியாக இருப்பது போன்ற கனவை அடிக்கடி காணும் அரசன் ஒருவனுக்கு ஒரே குழப்பமாம், “தான் பட்டாம்பூச்சியாக இருப்பதாக கனவு காணும் அரசனா அல்லது அரசனாக இருப்பது போன்ற பட்டாம்பூச்சியா என்று.

  அவன் குழப்பம் மேலே எவ்வாறு விரிவடைந்தது, அது தீர்ந்ததா இல்லையா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

  கனவு முடியும் வரைக்கும் அது யதார்த்தமே என்றும் ஓரிடத்தில் படித்துள்ளேன். திருமாலுக்காக நீர் சேந்தி வரச்சென்ற நாரதர் மாயையில் சிக்கி, பெண்ணாக மாறி குழந்தைகள் பெற்று என்றெல்லாம் போகும் கதையும் படித்துள்ளேன்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 2. pichaikaaran

  அன்புள்ள ஜெ மோ . . . இன்சப்ஷன் நல்ல படம்தான் . ஆனால் அந்த சிந்தனை முற்றிலும் புதிய ஒன்று என நம் எழுத்தாளர்கள் சிலர் சொல்வது, அவர்கள் இந்திய நூல்களை படிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. நம் தத்துவங்களை கூட வெள்ளைகாரன் மூலம் கேட்டால்தான் இவர்களுக்கு புரிகிறது. இந்த நிலைக்கு காரணம் என்ன ? தாழ்வு மனப்பான்மையா அல்லது வேறு ஏதாவதா

 3. kumarbabu

  இனிய நண்பர் ஜெயமோகன், அந்த வரிகள் என் வாழ்கையில்
  பெரிய திருப்பத்தை உண்டாகிற்று. நாற்பது வருட கால ஆன்மிக கேள்விகளுக்கு முடிவான ஒரு பதிலாகவே அமைந்தது. புத்த கயா சென்று செலுத்த வேண்டிய நேர்த்தி கடனை நாகர்கோயில் சென்று உங்களை சந்தித்து பூர்த்தி செய்துகொண்டேன். இதை எழுதும் இச் சமயம் கண்கள் பனிக்கின்றன. அந்த அளவு இந்த வரிகள் என்னை ஆட்கொண்டன. நண்பன் குமார் பாபு (சென்னை வரும் போது மறக்காமல் தெரிவிக்கவும். மீண்டும் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்)

 4. vasanthfriend

  மன்னிக்கவும். மாற்றிக் கொடுத்து விட்டேன். http://kaalapayani.blogspot.com/2008/07/blog-post_23.html

 5. prabha

  ஜெயமோகன் சார்,

  சென்னையில் சத்யம் தியேட்டரில் ஆங்கில சப்டைட்டிலுடனேயே inception திரையிடப்படுகிறது. நீங்கள் சென்னையிலிருந்தால் அந்தப் படத்தை நிச்சயம் சத்யம் தியேட்டரில் பாருங்கள். இந்தப் படத்தை இந்தத் திரையரங்கில் பார்ப்பது விசேஷ அனுபவமே. அந்தப் படத்தைப் பார்த்து விட்டு பிரமிப்பு இல்லாதது போல் இருந்து விடுவது ஒரு பாவனையே என்று நினைக்கிறேன். குழந்தை ஒரு பொருளை எடுக்கக் கூடாது என்பதற்காக அம்மா அதை தூக்கி வீட்டின் உயரமான இடத்தில் வைத்து விடுவார். கிறிஸ்டோஃபர் நோலனும் சினிமாவை அப்படித் தூக்கி உயரமான இடத்தில் வைத்து விட்டது போலத்தான் பிரமிப்பு ஏற்படுகிறது. படம் பார்த்த தருணத்தில் இதைப்போல் ஒரு கதையை கதையை ஒருவர் யோசித்து விட முடியாது, யோசித்தாலும் இப்படி எழுதி விட முடியாது . எழுதினாலும் இப்படி எடுத்து விட முடியாது என்றே எனக்குத் தோன்றியது. படம் பார்த்து இரண்டு வாரங்கள் ஆன பின்பும் அதே உணர்வே இருக்கிறது. நான் எல்லா நாளும் உங்கள் தளத்திற்கு வந்து அந்தப் படம் பற்றி நீங்கள் நிச்சயம் எழுதுவீர்கள் என்று நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். சீக்கிரம் பாருங்கள்.

  அன்புடன்
  பிரபா.

 6. ஜெயமோகன்

  அன்புள்ள பிரபா
  20666 – ராபர்ட்டோ பொலானோ- வாசித்த்ுக்கொண்டு இந்த அளவுக்குச் சிக்கல் தேவையா என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். அது ஒரு மோஸ்தராகவே இருக்கிறது இன்று. பார்க்கிறேன். சென்னை மீண்டும் செல சில நாட்களாகும்
  ஜெ

 7. Rajendran

  அன்புள்ள ஜெயமோகன்,
  நானும் விஷ்ணுபுரம் நாவலை படித்திருக்கிறேன். ஆனால் ரவிச்சந்திரனின் கடிதத்தை படித்ததும் மனச்சோர்வு தான் ஏற்பட்டது. எனக்கு புரியாத அநேகம் பகுதிகளை விட்டு விட்டு அதிலிருந்து எனக்கான ஒரு யதார்த்த பாணி நாவலை மட்டும் உருவாக்கி வாசித்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. இந்த லட்சணத்தில் நாவலை விமர்சித்து (ஞான சபை விவாதங்கள் தேவையா என்பது போன்ற அதி புத்திசாலித்தனமான கேள்விகளுடன்) ஒரு கடிதம் வேறு எழுதியதை எண்ணும்போது கொஞ்சம் வெட்கமாக உள்ளது. நாவலை இன்னும் சில முறையாவது முழுவதும் படிக்க வேண்டும்.

  பி.கு. சமீபத்தில் பின் தொடரும் நிழலின் குரல் படித்து முடித்தேன். மிகவும் பிடித்து இருந்தது என்பதை தவிர வேறு எதுவும் உளறபோவதில்லை.

 8. சார்லஸ்

  விஷ்ணுபுரம் படிப்பதை இனியும் தள்ளிப்போட முடியாது போலிருக்கிறதே.

 9. சார்லஸ்

  இன்செப்ஷன் அத்தனை சிக்கலான படம் இல்லை சார். மெமண்டோ போல இல்லை. எல்லாமே உரையாடலில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ‘கிரேட் டிரெயின் ராபரி’ போல, புத்திசாலியான கொள்ளைக்காரர்களின் சாகஸக் கதை போன்ற வடிவத்தில் இருக்கிறது. சப் டைட்டிலோடு பார்த்தால் ஒரு சிறு குழப்பமும் இல்லாமல் சாதாரணமாகப் புரிந்துகொள்ள முடியும். வணிகப் படமாக எடுத்ததால் நிறைய பேர் பார்க்க வேண்டுமென்று நோலன் தேவையில்லாமல் குழப்பவில்லை.

 10. cgseetha

  ஜெ,

  நனவுணர்வில் கண்ட கனவு”,இதப்பத்தி உளவியல் ரீதியாக நீரையா பேச இருக்கிறது.நாமெல்ல்லாரும் ஒரு விதத்தில் collective unconscious மூலம் செயல்படுவிக்கபடுகிறோம்?I have not seen the movie inception nor have i read vishnupuram. As a psychiatrist sometimes or once to be precise had the goodluck to be in the ‘presence’ of a situation similar to நனவுணர்வில் கண்ட கனவு”.It was a bit scary as the patient was talking normally but completley forgot that her partner was dead ,.it is hard to explain, cos i got palpitations thinking ‘didnot she say her partner is dead and how come she is talking in the present tense’…

  It happened in my personal life too.2 years ago my grandmother was dying and i was beside her .SHe was recalling her younger days ,the hardship of jointfamily systme ,how she lost her child as she was caught up in the kitchen…(it was a 3 year old baby and she drowned in the family farm pond);
  while she was poignantly talking she closed her eyes and almost became a 15 year old girl(she was married very young and died at 82)..She was busy cooking naivedyam for her father in law’s prayers and he was a tyrant.

  She cried and i was crying too but she was almost completely caught in her trauma that she didnot even acknowledge my presence after sometime.

  Experiencing her trauma in a secondhand manner made me hate our patriarchy more than ever.
  To my surprise i saw similar incident written by Ambai in her anthology வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. I am sorry for writing in english ,it is hard for me to capture in tamil everything i feel.

 11. sankar

  கிரிஸ்டோஃபர் நோலன் இன்செப்சனில் Jorge Luis Borges எழுத்துக்களிலிருந்து விசயங்களை எடுத்தாண்டுள்ளார்.

Comments have been disabled.