‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 87

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 12

இன்றென் அருகில் இரு. இங்கு நீ மட்டுமென இரு. இனியேதுமில்லையென்றாகு. இவையனைத்தும் என மேவு. கடந்துறை. கரந்துள யாவையும் என நிறை. நீ இது. நீயே அது. நீயே இங்கு நின்று உன்னை நோக்கி விழிதிகைத்திருக்கிறாய். உன் சொற்கள் இறுதியொளியுடன் மறைந்த ஊமைத்தொடுவானில் செவ்வொளிக் கதிர்களுடன் தோன்றுகிறாய். நீலவட்டம் தகதகக்க ஏழ்புரவித்தேரில் எழுந்தருள்கிறாய். உன் கண்ணொளியால் புடவி சமைக்கிறாய். நீ நிறைத்த மதுக்கிண்ணத்தை எடுத்து நீயே அருந்துகிறாய். இங்குள யாவும் உன் புன்னகை.

நெடுநேரம் அவளுடைய எண்ணங்களால் மட்டுமே ஆனதாக இருந்தது குடிசூழ்ந்த பெருமன்று. அமைதி மலைப்பாம்பென மெல்ல உடல்நெளித்து அதை சூழ்ந்துகொண்டது. இறுகி இறுகி ஒருவரோடொருவரை நெரித்தது. தோள் இறுக நெஞ்சு முட்ட அவர்களின் நரம்புகள் புடைத்தெழுந்தன. கண்களில் குருதிவலை படர்ந்தது. மூதாதையர் மூச்சுக்கள் பிடரிகளை தொட்டன. விண்ணில் நூறுகோள்கள் மெல்ல தங்களை இடம் மாற்றிக்கொண்டன.

பட்டத்தரசி பார்கவி அந்த அமைதியின் மறுபக்கமிருந்த காணாக்கதவொன்றை உடைத்துத் திறந்து உட்புகுபவள் போல பெருங்குரலில் கூவியபடி கைநீட்டி முன்னகர்ந்தாள். “பிடியுங்கள் அவனை! கொல்லுங்கள்! கொல்லுங்கள்!” அவள் குரல் பெரியதொரு தாலம் போல விழுந்து சிலம்பியது. அனுவிந்தர் “நமது படைகள் எழுக! சூழ்ந்துகொள்ளுங்கள்!” என்று கூவியபடி படிகளில் இறங்கி மன்றுமுற்றத்தில் ஓடினார். கர்ணகர் “புரவிப்படைகள் மன்றுபுகுக! காவல்மாடங்களுக்கு முரசொலி செல்லட்டும்…” என்று ஆணையிட்டுக்கொண்டு எதிர்ப்புறம் விரைந்தார்.

படைவீரர்கள் வாட்களுடன் முன்னால் செல்ல நீலனின் படையாழி சுழன்று வந்து முதல்வீரனின் தலைகொய்து சென்றது. அவனுடைய தலையற்ற உடல் ஆடும் கைகளில் வாளுடன் முன்னால் ஓடி தள்ளாடி குப்புறவிழ அவன் கால்கள் மண்ணை உதைத்து நீச்சலிட்டன. கைவிரல்கள் காற்றை அள்ளி அள்ளிப்பற்றின. அவனைத்தொடர்ந்து சென்றவன் தலையற்று அவன்மேலேயே விழுந்தான். குழல்சுழல விழிவெறிக்க வெள்ளிப்பற்களுடன் காற்றில்சுழன்ற தலை மண்ணை அறைந்து விழுந்து உருண்டு குருதிசிதற நின்றது. அம்முகத்தில் அக்கணத்தின் திகைப்பு நிலைத்திருந்தது.

மூன்றாமவன் கையை அறுத்து வாளுடன் வீழ்த்திய ஆழி அவனருகே நின்றவனின் வயிற்றைக்கிழித்து குருதித்துளிகளை கனல்பொறிகளெனச் சுழற்றியபடி சென்றது. சரிந்த குடலைப் பற்றியபடி அவன் கையறுந்துவிழுந்த தோழன் மேலேயே விழுந்தான். அடுத்த வீரன் ஓடிவந்த விசையில் நிலைதடுமாற அவன் தலைகடந்து சென்றது ஆழி. அவன் திகைத்து முழந்தாளிட்டான். அடுத்தவீரனின் தோளுடன் வாள் காற்றில் எழுந்து சுழன்று நிலம் அறைந்துவிழ அவனுடலின் நிகர்நிலை அழிந்து சுழன்று மறுபக்கத் தோள் மண்ணில் படிய விழுந்தான். முழந்தாளிட்டவனின் தோள்கள் துடிதுடித்தன. அவன் முன்னால் சரிந்து மண்ணில் கையூன்றினான். அவன் தலை பக்கவாட்டில் மெல்லத்திரும்பி விழித்தது. வாய் காற்றுக்காக திறந்து அசைந்தது. கன்னங்கள் இழுபட்டன. அவன் உடல் முன்பக்கமாக விழுந்தபோது தலை பின்பக்கம் சரிந்து முதுகின்மேலேயே விழுந்தது.

படையாழி அமைத்த வெள்ளிக்கோட்டைக்கு அப்பால் தொடமுடியாதவராக நீலன் வந்துகொண்டிருந்தார். மென்மழையெனப்பெய்த குருதியால் அவர் குதிரை செந்நிறமாகியது. அனலென அதன் பிடரிமயிர் பறந்தது. தன்மேல் விழுந்த சோரியை அது தசைவிதிர்த்தும் பிடரிமயிர் சிலிர்த்தும் உதறியது. விழுந்து நெளிந்த அறுபட்ட உடல்களின் மேல் தன் வெள்ளிக்கோல் கால்களைத் தூக்கிவைத்து நடனமென முன்னால் வந்தது. கைகளைத் தூக்கி அவர் உரக்கக் கூவினார்.

“அவையீரே, நான் இங்கு மேலும் குருதிபெருக்க விழையவில்லை. அரசே, ஷத்ரிய முறைப்படி உங்கள் அழைப்புக்கிணங்க அரசமகளை மணம்கொண்டு செல்ல வந்துள்ளேன்” என்றார். குளிர்நீர் அருவிக்குக் கீழ் என உடல் நடுங்க நின்றிருந்த பார்கவி அழுகையும் வெறியுமாக “என்ன பேச்சு அவனிடம்… நமது படைகள் அனைத்தும் வரட்டும். இறுதிவீரன் எஞ்சுவது வரை போர் நிகழட்டும்… விந்தா, அனுவிந்தா, எழுக களம்” என்றாள். தெய்வங்கள் சமைத்த போர்நாடகம் எனவிரிந்த அக்காட்சியால் சிலைக்கப்பட்டு அரசமேடையருகே நின்றிருந்த விந்தர் “இதோ அன்னையே” என தன் வாளை உருவினார். மித்திரவிந்தையருகே நின்றிருந்த அனுவிந்தர் திரும்பி நீலனை நோக்கி ஓடினார்.

மேடையிலமைந்த அரியணையில் அமர்ந்திருந்த ஜெயசேனர் கையூன்றி எழுந்து முன்னால் வந்தார். எதிர்க்காற்றில் நிற்பவர் போல உடல் வளைத்து ஆடி நின்று இரு கைகளையும் தூக்கி “நிறுத்துங்கள்… கர்ணகரே நில்லும்” என்று கூவினார். திகைத்து அவரை நோக்கித் திரும்பிய அரசி “அரசே…” என்று ஏதோ சொல்ல முயல்வதற்குள் “பேசாதே, இது என் அரசு” என்றார். “விந்தா, அனுவிந்தா, இது என் ஆணை. என் அழைப்புக்கிணங்க அவைபுகுந்தவர் அவர். மணத்தன்னேற்பு நிகழ்க!” அவரது கழுத்தின் தளர்ந்த தசைகள் கொதிக்கும் நீரென அலையிளகின. பற்களைக் கிட்டித்து உடல் நடுங்க திரும்பி அமைச்சரிடம் “பிரபாகரரே” என்றார்.

அமைச்சர் பிரபாகரர் அரசருக்குப் பின்னாலிருந்து கைகளைத் தூக்கியபடி முன்னால் வந்து “யாதவரே, இங்கு ஓர் மணத்தன்னேற்பு முறைமை ஒருங்கியுள்ளது. மன்றில் அமைந்துள்ள விசலம் என்னும் அந்த கதாயுதம் இத்தேர்வுக்கென கலிங்கச்சிற்பிகளால் வார்க்கப்பட்டது. எங்கள் கோட்டைக்காவல் தெய்வமான மேழிநாதருக்கு உரியது. அதை எடுத்து தோளிலேற்றி அறைகூவல்விடும் அனைவரையும் வென்று நிற்பவருக்குரியவள் எங்கள் இளவரசி” என்றார்.

புன்னகையுடன் நீலன் “அமைச்சரே, களம்வென்று மகள்கொள்ளவே வந்தேன். ஆனால் ஷத்ரிய முறைமைப்படி நானோ எனக்கென வந்துள்ள என் குடிகளில் ஒருவரோ இந்தத் தேர்வில் வென்றால் போதும். இப்போது என் தங்கை சுபத்திரை எனக்காக அந்த கதாயுதத்தை எடுத்து அறைகூவுவாள். இங்கு அவளுடன் கதைகோக்கும் வல்லமைகொண்ட எவரேனும் இருந்தால் எழுக!” என்றார். பிரபாகரர் “ஆனால்…” என்று சொல்ல கலிங்கன் எழுந்து “பெண்களுடன் ஷத்ரியன் போர்புரிவதில்லை” என்றார். “அவ்வண்ணமெனில் அவளுடன் போர் புரிய நீங்கள் ஒரு பெண்ணை அனுப்பலாம் கலிங்கரே” என்றார் நீலன்.

அரசர் அவையில் அனைவரும் மாறிமாறி கூச்சலிடத்தொடங்கினர். அவர்களை கையமர்த்தியபடி எழுந்து “யாதவரே, மணத்தன்னேற்பில் பெண்கள் எழுந்ததில்லை. இதற்கென முறையேதும் இதுவரை அமைந்ததில்லை” என்று மாளவர் கூவினார். “கதாயுதம் ஏந்தும் பெண்ணும் இதுவரை கண்டதில்லை” என்று நீலன் சிரித்தார். “ஆனால் நெறி என்பது ஒவ்வொரு கணமும் தெய்வங்களால் உடைக்கப்படுகிறது. ஆகவே நெறிவகுப்போர் தெய்வங்களை தொடர்ந்து சென்றாகவேண்டும். என்ன நெறியென்று முதுவைதிகர் கார்க்கியாயனர் சொல்க!”

கார்க்கியாயனர் “இதற்கு நெறியென ஏதுமில்லை” என்றார். கலிங்கர் “ஆம், இதுவரை நெறிவகுக்கப்படவில்லை. மன்று வந்து கதாயுதத்தை கையில் எடுக்க இவளுக்கு உரிமை இல்லை” என்றார். “ஆம், அவள் விலகட்டும்… இக்கணமே விலகட்டும்” என பிற மன்னர் கூவினர். விந்தர் “இங்கு பெண்கள் படைக்கலம் எடுத்து மன்று நிற்க ஒப்புதல் இல்லை. ஆணையிடுகிறேன், அவள் இக்கணமே விலகட்டும்… இளையோனே, அவளை விலக்கு” என்று ஆணையிட்டார். அனுவிந்தர் அவளை நோக்கி உடலில் ஓர் அசைவை காட்டினாலும் கால்கள் மண்ணிலிருந்து அசையவில்லை.

சுபத்திரை “ம்ம்” என்று உறுமினாள். அவைநிறைந்திருந்த அத்தனை விழிகளும் சுபத்திரையை சென்று தொட்டன. உடனே திரும்பி துரியோதனரை நோக்கின. அவர் தன் பீடத்தில் அங்கு நிகழ்ந்தவற்றை எளியதோர் நாடகம்போல நோக்கி அமர்ந்திருந்தார். சுபத்திரை மித்திரவிந்தையை பற்றியிருந்த பிடியை விட்டுவிட்டு வலக்கையால் குருதியுலர்ந்து சடைத்திரிகளென ஆகிவிட்டிருந்த குழல்கற்றைகளை அள்ளி தலைக்குப்பின் சுழற்றி முடிந்து செருக்குடன் முகம்தூக்கி இளங்குதிரையின் தொடையசைவுகளுடன் நடந்து மன்றுமுற்றத்தின் மையத்தை நோக்கி சென்றாள்.

மன்றுநடுவே போடப்பட்ட தாழ்வான பெரிய மரப்பீடத்தில் விசலம் வைக்கப்பட்டிருந்தது. துதிக்கையுடன் வெட்டி வைக்கப்பட்ட பெருங்களிற்று மத்தகம் போலிருந்தது அது. பெருந்தோள் கொண்டவர்கள் ஏந்தும் கதாயுதங்களைவிட இருமடங்கு பெரியது. உலையிலிருந்து எழுந்து எவராலும் ஏந்தப்படாததனால் உலையின் அச்சுவடிவம் அப்படியே பதிந்திருந்தது அதன்மேல். வார்க்கப்பட்டபோது எழுந்த குமிழிகள் அதன் கரிய பளபளப்பில் இளம் கன்னத்துப் பரு போல தெரிந்தன.

சுபத்திரை அதன்முன் சென்று நின்றபோது அரசர் நிரையில் எவரோ மெல்லிய குரலில் ஏதோ சொல்லும் ஒலி அனைவருக்கும் கேட்டது. எவரோ இருமினர். அவள் அதனருகே சென்று நின்று குனிந்து நோக்கினாள். வெண்விழிமுனைகளில் செம்மை மின்ன உயிருண்ட வேல் போன்றிருந்தன கண்கள். போர்முனையில் நூற்றுக்கணக்கான விற்கள் நாணேறுவதைப்போல அவள் உடலில் ஒவ்வொரு தசையாக இறுகுவதை மித்திரவிந்தை கண்டாள். குனிந்து அந்த பெருங்கதாயுதத்தின் குடுமியை காலால் உதைத்தாள். சினந்தது போல் அதன் கைப்பிடி மேலெழ அதைப்பற்றி அக்கணமே உடலை நெளித்துச் சுழன்று ஒரே வீச்சில் தன் முதுகுக்குப் பின்னால் பறக்கவிட்டு கொண்டுவந்து அதே விசையில் மேலேற்றி தோளில் அமைத்துக் கொண்டாள். இடையில் மறுகையை வைத்து கால் பரப்பி நின்று “உம்” என்ற ஒலியால் அரசர் அவையை அறைகூவினாள்.

அரசர் அவை திகைத்ததுபோல் அமர்ந்திருந்தது. அவள் ஒவ்வொரு அரசரையாக நோக்கி திரும்ப அவர்கள் விழிவிலக்கி துரியோதனரை நோக்கினர். நீலன் “இதோ ஓர் அறைகூவல் எழுந்துள்ளது. உங்கள் நெறி எதை வகுக்கிறது? அதை கூறுங்கள்” என்றார். விந்தர் “இது முறையல்ல… அமைச்சரே” என்றார். “அறைகூவல் வந்தபின் நெறியென ஏதுள்ளது அரசே? வெற்றியோ வீழ்ச்சியோ மட்டுமே இனி பேசப்படவேண்டியது” என்றார் அவர்.

சுபத்திரை துரியோதனரை நோக்கி நின்றாள். அவர் தன் மடியில் இரு கைகளையும் வைத்தபடி விழிஅசையாமல் அமர்ந்திருந்தார். “ம்ம்” என்று சுபத்திரை மீண்டும் அறைகூவினாள். அவ்வொலியால் உடலசைவுற்ற துச்சாதனர் தன் தமையனை நோக்கிவிட்டு அவளை நோக்கினார். காற்றில் கலையும் திரைஓவியம் போல பெருமூச்சுடன் எழுந்த துரியோதனர் தன் சால்வையை தோளில் சீரமைத்துக்கொண்டு கைகூப்பி “யாதவ இளவரசியை வணங்குகிறேன். கதாயுதநெறிகளின்படி நான் பெண்களுடன் போரிடுவதில்லை” என்றார். “மேலும் தாங்கள் என் ஆசிரியரின் தங்கை. இங்கு இப்பெருங்கதையை தாங்கள் தூக்கிய முறைமை எனக்கு மட்டுமே என் ஆசிரியர் கற்றுத்தந்தது. சுழற்சிவிசையை ஆற்றலென்றாக்கும் வித்தை அது.”

சுபத்திரை தலைவணங்கினாள். “தங்கள் பாதங்களை என் ஆசிரியருக்குரியவை என்றெண்ணி வணங்குகிறேன் இளவரசி. அவையில் தாங்கள் வென்று முதன்மை கொண்டதாக அறிவிக்கிறேன்” என்றார் துரியோதனர். துச்சாதனர் எழுந்து “எந்த அவையிலும் என் மூத்தவர் சொல்லே இறுதி. இளவரசி வென்றிருக்கிறார்” என்றார். மறுகணம் மன்றென சூழ்ந்திருந்த மானுடத்திரள் ஒற்றைப்பெருங்குரலென ஆயிற்று. “வெற்றி! யாதவ இளவரசிக்கு வெற்றி. அவந்திமகள் அரசியானாள். குலமே எழுக! சூதரே சொல் கொள்க!” என எழுந்தன வாழ்த்தொலிகள்.

சுபத்திரை கதாயுதத்தை சுழற்றி மண் அதிர தரையில் வைத்தாள். “மூத்த கௌரவரே, என் ஆசிரியரின் முதல் மாணவரென எனக்கும் நீங்கள் நல்லாசிரியர். தங்கள் கால்களை பணிகிறேன். தங்கள் வாழ்த்துக்களால் நானும் என்குலமும் பொலிவுறவேண்டும்” என்றாள். கைகூப்பி அருகணைந்து துரியோதனரின் கால்களைத் தொட்டு வணங்க அவர் திரும்பி தன் தம்பியை நோக்கினார். துச்சாதனர் பரபரக்கும் கைகளால் கச்சையிலிருந்து எடுத்து அளித்த பொன்நாணயங்கள் மூன்றை அவள் தலையில் இட்டு வாழ்த்திய துரியோதனர் “நீங்கா மங்கலம் திகழ்க! நிகரற்ற கொழுநரையும் அவரை வெல்லும் மைந்தனையும் பெறுக! என்றும் உம் குலவிளக்கென கொடிவழியினர் இல்லங்களில் கோயில்கொண்டமர்க!” என்றார்.

மித்திரவிந்தை தனித்து நிற்க முடியாமல் கால் தளர்ந்து விழப்போனாள். காற்றைப்பற்றிக் கொள்பவள் போல கை துழாவியபின் கண்களைமூடி இரு கன்னங்களிலும் கை வைத்து தன் அகத்துலாவை நிலைகொள்ளச்செய்தாள். அவன் குரல் எங்கோ எழுவதை கேட்டாள். எங்கிருக்கிறோம் என சில கணங்கள் மறந்தாள். மிக அருகில் கடலலையொன்று அணுகுவதை அறிந்து விழிதூக்கும்போது அவள் இடையை தன் கைகளால் சுற்றித் தூக்கி அவர் தன் கையில் எடுத்துக் கொண்டார். அவள் முலைகள் அவர் முகத்தில் அழுந்தின. அவர் தலை சூடிய பீலி அவள் முகத்தில் பட்டது. அவள் கால்கள் காற்றில் நடந்தன.

அவளை தூக்கிச்சென்று தன் புரவிமேல் வைத்தார். அனுவிந்தர் அவரை நோக்கி வாளுடன் கூச்சலிட்டபடி ஓடிவர சிரித்தபடி அதிலேறிக்கொண்டு அவையிலிருந்து வெளியேறினார் யாதவர். அவரது வலது கை அவள் இடையைச் சுற்றி தன் உடலுடன் அணைத்துக் கொண்டது. இடக்கையால் கடிவாளம் சுண்டப்பட்ட வெண்புரவி பாய்ந்து முற்றத்து மரப்பரப்பில் குளம்புகள் முழங்க விரைந்து சென்றது. அங்கு நின்றிருந்த யாதவப் படைவீரர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர். அவை மன்றிலிருந்து உரக்க நகைத்தபடி வெளியே ஓடிவந்த சுபத்திரை தன் புரவிமேல் ஏறி அதை கனைத்தபடி எழுந்து பாயச்செய்து அவரைத் தொடர்ந்து வந்தாள்.

மன்றுக்கு வெளியே கூடி நின்ற நகர்மாந்தர் வாழ்த்தொலி கூவினர். “இளைய யாதவன்! துவாரகை ஆளும் நீலன்! விண்ணிழிந்த தெய்வ உருவினன்! மண்ணாளும் மாமானுடன்! வாழ்க அவன் கொற்றம்! வாழ்க அவன் கோல்! வாழ்க அவந்தியின் அரசி!” அவளைச் சூழ்ந்து எழுந்த வாழ்த்தொலிகள் மேல் அவள் மிதந்துசென்றாள். மாமரக்காடு தளிர்விட்டது போல நகரமே வாழ்த்தும் நாவுகளால் ஆனதாக இருந்தது. ஒவ்வொரு முகத்தையும் அவளால் நோக்க முடிந்தது. ஒவ்வொரு கண்ணையும் நோக்கி அவள் புன்னகை செய்தாள்.

நகரத்தின் வெளிக்கோட்டை வாயிலைக் கடந்து செம்மண்பரவிய பெருஞ்சாலையை அடைந்தபோது பின்னால் போர்க்குரலுடன் தேர்களும் புரவிகளும் அவர்களை தொடர்ந்து வருவதை கேட்டாள். இளைய யாதவரின் தோள்களில் கை வைத்து எழுந்து திரும்பி பின்னால் நோக்க தன் தமையர்கள் விந்தரும் அனுவிந்தரும் இரு புரவிகளில் வில்லேந்தி தொடர்வதை கண்டாள். போர்க்கூச்சலெழுப்பி அவர்களின் முகங்கள் காற்றில் உறைந்திருந்தன. மிக அண்மையிலென அவ்விழிகளை காணமுடிந்தது.

அவந்தியின் படைவீரர்களின் அம்புகள் சிறு புட்கள் போல சிறகதிரும் ஒலியுடன் அவளை கடந்துசென்றன. மண்ணில் தைத்துநின்று நடுங்கிய அவற்றை கடந்துசென்றன புரவிகள். அவளுக்கிணையாக புரவியில் வந்த யாதவ வீரர்களில் ஒருவன் அலறியபடி கீழே விழுந்தான். பிறிதொருவன் எழுந்து உடல் திருப்பி நின்று வில் தொடுக்கையில் தோளில் அம்பு பட்டு முன்னால் விழுந்து தன் புரவிக்கால்களால் எற்றுண்டு சிதறினான். அவன் மேல் மிதித்துக் கடந்து வந்த புரவி திரும்பி நிற்க அதை பிறிதொரு அம்பால் அலறிச் சரியவைத்து அதன் துடித்து எம்பும் பேருடலை தன் புரவியால் தாவிக் கடந்து வந்தார் அனுவிந்தர்.

இளைய யாதவர் அவளிடம் “இளவரசி, இப்புரவியில் செல்க! உன்னை என் இளையவள் காக்கட்டும்” என்று சொல்லி கடிவாளத்தை அவளிடம் அளித்துவிட்டு ஓடும் புரவியிலிருந்து புள்ளெனப் பாய்ந்து வீரனை இழந்து ஒழிந்த புறபீடத்துடன் ஓடிவந்த புரவியின் மேல் பாய்ந்து ஏறி அதை திருப்பிக் கொண்டார். அக்கணமே அவர் கையிலிருந்து எழுந்த வெள்ளிச் சுழலாழி விந்தரின் புரவியின் கடிவாளத்தை அறுத்து மீண்டது. அது தடுமாறும் கணத்தில் மீண்டும் சுழன்று சென்று அவர் வில்லை அறுத்தது. மீண்டும் சுழன்று அவரது தோளில் அணிந்த ஆமையோட்டுக் கவசத்தை உடைத்து மீண்டது. அவர் “நில்… நின்று போர் செய்… உன் முன் இங்கு இறந்தாலும் சிறப்பே” என்று கூவியபடி தொடர்ந்து வந்தார்.

சுபத்திரை அவளருகே வந்து ”விரைந்து முன்னால் செல்லுங்கள் இளவரசி. எங்கள் அமைச்சர் அக்ரூரரின் தலைமையில் யாதவப்படை அவந்தியின் விளிம்பை அடைந்துவிட்டிருக்கிறது” என்றபின் தான் திரும்பி தன் கையிலிருந்த வேலைத் தூக்கி வீசி அவந்தியின் படைத்தலைவனை மண்ணில் விழச்செய்தாள். விந்தர் “நில் யாதவனே, நின்று எங்களை எதிர்கொள்” என்று கூவியபடி வந்தார். அவரது தலைக்கவசத்தை உடைத்தெறிந்தது படையாழி. மீண்டும் சென்று அவர் தோள் வளையத்தை உடைத்தது. இளைய யாதவர் “உங்கள் மார்புக் கவசத்தை உடைக்க ஒரு நொடி போதும் எனக்கு. இங்கல்ல களம், திரும்பிச் செல்லுங்கள். பிறிதொரு போர் இருக்கிறது நமக்கு. அங்கு காண்போம்” என்று கூறினார்.

“இளையவனே, நாங்கள் உயிருடனிருக்க எங்கள் இளவரசியுடன் நீ எங்கள் எல்லையை கடக்கப்போவதில்லை” என்று கூவியபடி அனுவிந்தர் பாய்ந்து முன்னால் வந்தார். இரு கைகளாலும் மாறி மாறி படையாழியை செலுத்திய இளையவரின் புரவி அவர் உள்ளத்தில் இருந்தே ஆணைகளை வாங்கி விண்ணில் செல்லும் பறவையென முன்னால் செல்ல படையாழி அவந்தி நாட்டு வீரர்களின் உயிர்கொண்டு மீண்டதை அவள் கண்டாள். எத்தனை உயிர் உண்டால் இதன் பசி தணியும்? குருதியாடுந்தோறும் அது ஒளி கொண்டது. காதலில் நெகிழ்ந்த கை என சூழ்ந்துகொண்டது. கல்வியளித்து விடைதரும் ஆசிரியனின் தலைதொடும் வாழ்த்து போல கனிந்து உயிர்கொய்தது.

அனுவிந்தரின் குதிரை தன் முன்னங்கால்கள் அறுபட்டு தலை மண்ணில் மோதி விழுந்து பின்னங்கால்கள் ஓட்டத்தின் விசையில் தூக்க அவரைத் தூக்கி விசிறியபடி உருண்டு சிதறிச் சரிந்தது. மண்ணில் விழுந்த அவர் மேல் பின்னால் வந்த புரவி ஒன்று மிதித்துக் கடக்க அவரது உடல் தரையில் கிடந்து துடித்தது.

விந்தர் திரும்பி நோக்கிய கணம் அவரது புரவியின் கழுத்தை அறுத்துச் சென்றது படையாழி. பக்கவாட்டில் சரிந்து மண்ணில் நெடுந்தூரம் உரசி வந்து ஓடிய கால்களின் விசையறாது காற்றை உதைத்தது. எடைமிக்க புரவியின் விலாவுக்கு அடியில் கால்கள் சிக்கி அலறிய விந்தர் உருவியபடி எழுந்தபோது அவரது குழலை சீவி பறக்கவிட்டுச் சென்றது ஆழி. சுபத்திரை திரும்பி நோக்கி உரக்க நகைத்து “போர் முடிந்தது அவந்தியின் அரசி. இனி உங்கள் நகர் துவாரகை” என்றாள்.

விண்ணேகும் பறவை ஒன்று
வீழ்த்தியது ஓர் இறகை.
தோழரே இளஞ்சிறைப் பறவை
மணி நீலப்பறவை
வீழ்த்தியது ஓர் இறகை
மென்னிறகை
காற்றில் எழுதி இறங்கிய
இன்சிறகை, தன்னை
அப்பறவையின் பெயரென்ன?

தோழரே தோழரே
விண்ணீலமோ முடிவிலா பெரும் பறவை
வீழ்த்தியது அது ஓர் இறகை
இளநீல இறகை
மணிநீல இறகை
மண்ணில் சுழன்று தன்னை எழுதும்
ஓர் மெல்லிறகை
தோழரே அது இங்கு எழுதிசெல்வது என்ன?
இந்தக் காலடியெழுத்துக்கள்
சொல்லும் கதைதான் என்ன?

சூதனின் கைகள் கிணையின் தோல்பரப்பில் துள்ளுவதை சாத்யகி நோக்கியிருந்தான். முத்தாய்ப்பென விரல்கள் தோல்பரப்பில் ஆழ்ந்து முத்தமிட்டு விலக முத்தமிடப்பட்ட பகுதி அது பெற்ற பல்லாயிரம் முத்தங்களின் தடத்துடன் நின்று துடித்தது. மெல்ல அதிர்வடங்கி அது மீள்வதை மட்டும் அவனால் பார்க்க முடிந்தது. திருஷ்டத்யும்னன் அவன் தோளில் கை வைத்து “யாதவரே!” என்றான். சாத்யகி விழித்தெழுந்து புன்னகைத்தான்.

சூதன் தலைவணங்கி “நீலம்! விரிந்த வான் கீழ் அமர்ந்து கேட்கும் சொல்லெல்லாம் நீலம் படிந்ததே! நீலம் துணையிருக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினான். திருஷ்டத்யும்னன் தலைவணங்கி தன் இடையிலிருந்து பொற்காசுகளை எடுத்து அவன் இடைக்குக்கீழே தாழ்த்தி நீட்டினான். அவன் நீட்டிய கைக்கு மேல் தன் கை வரும்படி அமைத்து அக்காசுகளை அவன் எடுத்துக் கொண்டான். இருவர் தலையிலும் தன் இடக்கையை வைத்து வாழ்த்தி “வீரம் விளைக! வெற்றி துணையாகுக! வென்றபின் அறம் வழிகாட்டுக!” என்று தானும் தலைவணங்கி திரும்பிச் சென்றான்.

சாத்யகி பெருமூச்சுவிட்டான். திருஷ்டத்யும்னன் “இத்தருணத்தில் இப்பாடலுடன் இவர் வந்தது ஒரு நன்னிமித்தமே” என்றான். “அவர் வெற்றி கொள்ளப்படமுடியாதவர். விட்டு விலகி எங்கும் செல்ல இடமில்லை என்று இப்பாடல் எனக்குச் சொன்னது. திரும்புவதன்றி நமக்கு வேறு வழியில்லை யாதவரே.”  சாத்யகி புன்னகைத்து “மாறாக எனக்கு இப்பாடல் சொன்னது பிறிதொன்று. எங்கு எவ்வண்ணம் இருப்பினும் அங்கு நம்மைத் தேடி வந்து ஆட்கொள்ளும் இறை அவர். ஆட்கொண்டார் என்ற பெயரன்றி பிறிதொன்று நிகரில்லை” என்றான்.

தன் ஆடையை சீரமைத்து புரவியை நோக்கி சென்றபடி “பாஞ்சாலரே, அவர் நம்முடன் கொள்ளும் உறவு நான்குவகை என்கின்றன தொல்நூல்கள். தேடிவந்து முலை அருந்தும் கன்றுக்கு கனிந்தூட்டும் பசு. தன் குட்டியை வாயில் கவ்விச்செல்லும் புலி. குட்டி தன்னை கவ்விக்கொள்ளவேண்டுமென எண்ணும் குரங்கு. சினந்தால் குட்டியை உண்டுவிடும் பன்றி. ஆனால் ஐந்தாவது வகை ஆசிரியர் ஒருவர் உண்டென்று இப்போதறிந்தேன்” என்றான். “எந்தப்புதருக்குள் எவ்வகை வளைக்குள் சென்றொளிந்தாலும் காலடி மணம் முகர்ந்து தேடி வரும் ஓநாய். காத்திருந்து கைபற்றும் வேட்டைக்காரர். அவரிடமிருந்து நான் விழைந்தாலும் விலக முடியாது.”

“ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். “இக்கதையிலேயே சுபத்திரை ஆற்றவிருக்கும் பணி என்ன என்று மித்திரவிந்தை சிறுமியாக இருக்கும்போதே இளையவர் அறிந்திருக்கிறார் என்று தெரிகிறது” என்று சிரித்தான் சாத்யகி. “பறக்கும் புள்ளுக்கு பத்துமுழம் முன்னால் என்பார்கள். புள் முட்டையிலிருக்கையிலேயே அம்பு எழுந்துவிடுவதை இப்போதுதான் காண்கிறேன்.” திருஷ்டத்யும்னன் “அரிய ஒப்புமை. ஒரு சூதருக்கு நாமே சொல்லிக்கொடுக்கலாம்” என்றான்.

“சிறுத்தை தன் இரையைக் கவ்வி புதர்கள் மேல் பாய்ந்து செல்வது போல் மித்திரவிந்தையுடன் இளையவர் வந்தார் என்று இச்சூதன் பாடிய வரி என் செவி தொடாமல் ஆன்மாவை தைத்தது. அப்போது அடைந்த மயிர்ப்பை என் உடல் எப்போதும் அறிந்ததில்லை. அக்கணமடைந்த மெய்மை இனி எஞ்சிய வாழ்நாளெலாம் எனை வழி நடத்தும்” என்றான் சாத்யகி. புன்னகைத்து “செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.

முந்தைய கட்டுரைஏர்டெல் மோசடியின் தொடர்ச்சி…
அடுத்த கட்டுரைகாந்தியின் கடிதம்