‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 86

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 11

மித்திரவிந்தை சிற்றெறும்புகளின் நீள்நிரையை நோக்கிக் கொண்டிருந்தாள். உருசிறுத்து அணுவென்றாகி அவற்றுடன் சென்றாள். ஓசையற்றவை என அவள் எண்ணியிருந்த அவை ஒரு கணமும் ஓயாது உரையாடுபவை என்றறிந்தாள். சென்றவை, வருபவை, ஊடே நின்றதிரும் நிகழ்பவை என அவற்றுக்கும் காலக்களியாட்டு என்பதுண்டு என்றறிந்தாள்.

மூன்று நிரைகளாக அவை சென்று இறங்கி மறைந்த புற்றின் சிறுவாயிலருகே தயங்கி நின்றாள். அவளை பின்நின்று அணுகிய எறும்புப் பெண்ணொருத்தி “இளவரசி உள்ளே வருக!” என்றாள். “மீள்வேனா என்று அச்சமுறுகிறேன்” என்றாள் மித்திரவிந்தை. “பிறிதொரு உலகம் அது. அங்கு இங்குள அனைத்தும் உள்ளன. மீள்வதும் அங்கு தொடர்வதும் தங்கள் முடிவே” என்றாள் எறும்புப்பெண்.

“என் பெயர் விமலை. இங்கு சோனகுலத்துத் தலைவன் மகள்” என்றாள். அவளருகே நின்றிருந்த பிறிதொருத்தி ”என் பெயர் மித்ரை. ஹ்ருஸ்வ குலத்தவள். அஞ்ச வேண்டாம். வருக இளவரசி” என்றாள். மித்ரையின் தோள்களை மெல்ல பற்றிக் கொண்டு அஞ்சும் அடி எடுத்து வைத்து இருள் சுழி எனத் தெரிந்த புற்றுக்குள் இறங்கினாள். “சிற்றுலகம்” என்றாள் மித்திரவிந்தை. “உலகங்களனைத்தும் சிற்றுலகங்களே” என்றாள் மித்ரை.

செங்குத்தாக சுழன்று கீழிறங்கியது சுரங்கம். அச்சுருளின் சுவரைப் பற்றிக் கொண்டு நீர்வழிவதுபோல ஊர்ந்து இறங்கினர். சில கணங்களுக்குப்பின் விழிகள் இருளை ஒளியெனக் கொள்ளத்தொடங்கின. இருளுக்குள் இருளென புடைத்தெழுந்த காட்சிகள் தெளிவான உருவங்களாயின. காற்று மெல்லிய ஒழுக்கென கடந்து சென்றது. அனைத்து நிரையும் ஒரேதாளத்தில் அசையும் பல்லாயிரம் கால்களால் ஆனவையாக இருந்தன. முகக்கொம்புகள் அசைந்தசைந்து பேசிய சொற்களை முகக்கொம்புகள் கேட்டன.

மையப்பாதையின் இரு பக்கமும் பிரிந்து சென்றன பல நூறு கைவழிகள். அச்சிறு வளைவுகளின் ஓரங்களில் செறிந்த சிற்றறைகளில் கருவறை மணம் நிறைந்திருந்தது. அங்கே மைந்தர் உறங்கும் வெண்பையை நெஞ்சோடணைத்து கனவில் ஆழ்ந்திருந்தன அன்னையெறும்புகள். மெல்ல நொதித்துக்கொண்டிருந்த முலைப்பாலின் மணத்தில் சொல்லின்றி நடமாடினர் செவிலியர்.

குவிந்தெழுந்த மேடுகளில் நூற்றுக்கணக்கான சிற்றறை முகப்புகள் திறந்திருந்தன. அங்கே அமர்ந்து கீழே நோக்கி களியாடின பெரிய எறும்புகள். அப்பால் பெரும் களஞ்சியமொன்று உணவு அடுக்குகளால் நிறைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு கணமும் ஓயாதவர்களென சுமை இழுத்துச் சென்றனர் ஏவலர். “இங்கும் அங்குளது போலவே குல அடுக்குகள் உள்ளன. படைக்கலம் ஏந்துபவர், அவர்களுக்கு சொற்களம் அமைப்பவர், அக்களம் நின்று ஆடும் அரசர், அரசருடன் இணைந்திருக்கும் சான்றோர், அவர்களுக்கு அகவிழி ஒளிகாட்டும் முனிவர்” என்றாள் மித்ரை.

சிரித்தபடி “ஆம், அனைவரும் உள்ளனர். அண்டிவாழ்பவர், வஞ்சம் கூறுபவர், மிகை விழைபவர், அழித்தலொன்றையே இயல்பெனக்கொண்டவர், தீமையில் உவகையை அறிபவர்” என்றாள் விமலை. மித்ரை “குருதியை இருளும் ஒளியும் ஆள்கின்றன இளையவளே” என்றாள்.

பாதை வளைந்து இறங்கி நீள்வட்டக் கூடமொன்றை சென்றடைந்தது. அங்கே கூடி அலையடித்து நின்ற இளையோர் நடுவே இருவர் கால்களையும் கைகளையும் பின்னி நிகர் விசை கொண்டு அசைவிழந்து மற்போரிட்டுக் கொண்டிருந்தனர். “இங்கு சமரில்லாத தருணமென ஒன்றில்லை” என்று மித்ரை சொன்னாள். “எங்கள் அரசு வென்றவருக்கு உரியது. இங்குள அனைத்தும் அரசுக்குரியவை. ஒவ்வொரு கணமும் ஆற்றலால் அளக்கப்படுகிறது.” விமலை “இங்குள்ள அனைத்துச் சொல்லும் செயலும் போரே” என்றாள்.

மித்திரவிந்தை வியந்த விழிகளுடன் இறங்கிச்சென்றாள். இரு பெண்களின் தோள்களைப் பற்றி எழுந்து நோக்கினாள். உடல்களில் கல்லித்த அசைவின்மை ஒரு கணத்தில் கலைந்து உச்சவிரைவென மாறி ஒருவன் மற்றவனை தூக்கிச் சரித்தான். தன் கால்களால் அவன் வயிற்றை உதைத்து மண்ணோடு அழுத்திக் கொண்டான். சூழ நின்ற குடியினர் கைவிரித்து ஆர்த்தெழுந்து அலையடித்தனர். தோற்றவன் எழுந்து தள்ளாடி விலக, வென்றவன் இரு கைகளையும் தூக்கி களத்தைச் சுற்றி வந்தான். பிறிதொரு மல்லன் தன் இரு கைகளையும் தூக்கி அறைகூவியபடி மன்று நடுவே வர அவனை ஊக்கியபடி கூச்சலிட்டது சூழ்ந்திருந்த கூட்டம்.

இருவரும் கைகளை மெல்ல அசைத்தபடி ஒருவரோடொருவர் விழிகோத்து சித்தம் நட்டு சுற்றி வந்தனர். அவர்கள் காலூன்றிய நிலம் அதிர்ந்து கொண்டிருந்தது. அவ்வதிர்வில் சூழ்ந்திருந்தவர்களும் அசைந்தனர். எண்ணியிராத கணமொன்றில் நான்கு கால்களும் நான்கு கைகளும் ஒன்றுடனொன்று பின்னிக் கொள்ள பொங்கியெழுந்த விசைகள் இரண்டும் ஒன்றையொன்று சந்தித்தன. துலாக்கோல் முள்ளென இருபக்கமும் மாறி மாறிச்சென்ற ஆற்றல் முற்றான நிகர்நிலைப் புள்ளியை கண்டடைந்ததும் அசைவின்மையாயிற்று.

உறைந்தது என விழிக்குத்தெரிந்த அக்கணத்தின் உள்ளே மிக மெல்ல ஒருகணத்தின் கோடியில் ஒருபகுதி ஓர் அலகென ஆகி ஆற்றல் தன்னை அளந்துகொண்டது. காலம் ஒரு கணத்தின் தொடக்கத்திலிருந்து தொடுவானெனத் தெரிந்த மறு எல்லை நோக்கி சென்றது. அந்த ஓர் அலகின் மெல்லிய திசைதிரும்பலில் ஒருவன் பிறிதொருவனை வென்றான். சுழற்றி மண்ணில் அடிக்கப்பட்டவன் தன் கால்களால் வென்றவனை அறைவதற்குள் அவன் தன் முழு உடலாலும் விழுந்தவன் மேல் விழுந்து இறுகப்பற்றிக் கொண்டான்.

சூழ்ந்திருந்தவர்கள் மாயக்கனவொன்றில் இருந்து விடுபட்டவர்கள் போல் தங்களை உணர்ந்து கைதூக்கி எம்பிக் குதித்து ஆர்ப்பரித்தனர். வென்றவன் எழுந்து இரு கைகளையும் விரித்து சூழநோக்கி வாழ்த்தொலியை ஏற்றான். அவர்களின் குரல்களினூடாக அவன் ஏறிஏறிச்சென்றான். அப்போது அக்களமெங்கும் இளநீல ஒளி எழுந்ததை அவள் கண்டாள். மென்குளிரொன்று பரவியதைப் போல் உணர்ந்தாள். அதை உணர்ந்தவர்கள் போல நீலம் தெரிந்த விழிகளுடன் ஒவ்வொருவரும் திரும்பி மறுதிசை நோக்கினர்.

அங்கிருந்து நீலமணி உடல்கொண்ட எறும்புருவான இளையவன் ஒருவன் எழுந்து வந்தான். “இளையோன்! விண்ணளந்தோன் வடிவென நம்முருவில் எழுந்தவன்!” என்று அவர்களில் ஒரு முதியவர் கூவினார். சிறுவாயில் ஒன்றிலிருந்து வெளிவந்து மேடையின் மேல் நின்றான். வென்று ஆர்ப்பரித்து நின்ற மல்லன் திரும்பி அவனைக் கண்டான். இருவர் விழிகளும் ஒன்றையொன்று தொட்டன. ஒருகணம் கொம்பு தாழ்த்தி பின்னெட்டு எடுத்துவைத்த அவன் மறுகணம் நிமிர்ந்து கைதூக்கி “வருக!” என்றான்.

மேலிருந்து ஒரே தாவலில் இளைய நீலன் இறங்கி வந்தான். இருவரும் கைகளை நீட்டியபடி சுற்றிவந்தனர். கூட்டம் ஓசையழிந்து நின்றது. இக்கணம் இக்கணம் என இருள் அதிர்ந்தது. அவர்கள் கைகோத்து தலைமுட்டி ஓருடலாக இறுகி உருண்டு அசைவிழப்பதை பின்னர் கண்டனர். வலியோன் பேருடலும் வஞ்சம் எழுந்த விழிகளும் கொண்டிருந்தான். ஆனால் அவன் உடல் உருகிவழிவதைப்போல் வலுவிழப்பதை அனைவரும் கண்டனர்.

இக்கணம் இக்கணம் என்று அங்கிருந்த உடல்வெளி பொறுமையிழந்தது. சட்டென்று அவ்வுடலில் பற்றி எழுந்த நீலத்தழல் போல எழுந்தான். அதை தன் நான்கு தடக்கைகளால் அறைந்து பரப்பினான். எட்டு கைகால்களும் அதிர்ந்து நடுங்க மாமல்லன் தன் கால்களை மடக்கி தலையால் நிலம் தொட்டான். உடல் மெல்ல அதிர “எந்தையே!” என்றான். அவன் உள்ளே ஏதோ முறியும் ஒலி கேட்டது. விழிகள் நிலைக்க முகக்கொம்புகள் நடுங்கி நிலைத்தன. ஆழ்ந்த அமைதி சூழ்ந்த அக்கூட்டத்தில் எவரோ என ஒரு பாடல் வரியை அவள் கேட்டாள். ’யுகங்கள் தோறும் நான் நிகழ்கிறேன்.’

அறைக் கதவு ஓங்கி உதைத்துத் திறக்கப்பட்ட ஓசை கேட்டு விண்ணிலிருந்து சரடற்று விழுந்தவள் போன்று பின்னுக்குச் சரிந்து கையூன்றி தலைதூக்கி நோக்கினாள். குருதிச் சொட்டுகள் தெறித்த நீண்ட வாளுடன், நிணம் ஒட்டி மெல்ல வழிந்த நீண்ட வெண்ணிறக் கைகளுடன் உள்ளே வந்த கன்னி “உம்” என உறுமினாள். “யார்?” என்று மித்திரவிந்தை நடுங்கியபடி கேட்டாள். அறியாமல் கையூன்றி பின்னால் நகர்ந்தாள்.

உரத்த குரலில் அவள் “இளவரசி, என் பெயர் சுபத்திரை. துவாரகையை ஆளும் இளைய யாதவரின் தங்கை. அவருக்கு அரசியாக எழுந்தருள தாங்கள் விழைவீர்கள் என்றால் என்னுடன் இக்கணம் கிளம்புங்கள்” என்றாள். ஆயிரம் முறை கேட்ட பெயர் எனினும் அவள் கேட்டதெல்லாம் ஒலியற்ற வடிவிலேயே என செவியில் அச்சொல் விழுந்தபோது உணர்ந்தாள். இளைய யாதவர் என்று சொல்ல முள்ளில் வண்ணத்துப்பூச்சியென சிறகு தைக்க அமைந்து துடிதுடித்தாள்.

“கிளம்புங்கள் இளவரசி. நமக்கு பொழுதில்லை” என்றாள் சுபத்திரை. “யார்? யார்?” என்றாள் மித்திரவிந்தை. “இளைய யாதவரை நீங்கள் அறிந்ததில்லையா? அவர் மேல் உங்கள் உள்ளம் காதல் கொண்டதில்லையா?” என்றாள். “நான் சற்று முன் அவரை நோக்கிக் கொண்டிருந்தேன்” என்றாள் மித்திரவிந்தை. “யுகங்கள் தோறும் நிகழ்பவர். அறனில அழித்து அறம் நாட்டும் வருகையர்.”

அவளுடைய பித்தெழுந்த விழிகளை நோக்கி சுபத்திரை புன்னகைசெய்தாள். “ஆம் மானுட உருக்கொண்ட விண்ணவர் அவர் என்று கவிஞர் பாடுகிறார்கள். விண்கதிர் மண் தழுவுதல்போல் இன்று உங்களை அவர் ஆட்கொண்டிருக்கிறார். ஒப்புதல் இருந்தால் எழுங்கள்.” மித்திரவிந்தை அஞ்சி “எந்தை…” என்றாள். “நான் கேட்பது உங்களிடம். கூலம் விளையும் வயலில் இருந்து அறுவடை செய்யப்பட்டாக வேண்டும்.” அவளுக்குப்பின்னால் காலடியோசைகள் கேட்டன. காவலர் கூச்சலிட்டு மேலேறி வந்தனர்.

மித்திரவிந்தை. “என் அன்னைக்கு…” என மீண்டும் தொடங்கினாள். “இனியொரு சொல் எடுக்கும் உரிமை எனக்கில்லை. என்னுடன் வர ஒப்புதல் இருந்தால் என்னை தொடருங்கள்” என்று சொல்லி சுபத்திரை திரும்பினாள். அப்பால் மரப்படிகளில் படைவீரர்கள் கூச்சலிட்டபடி ஏறிவந்தனர். திறந்த வாயிலினூடாக இரு கூர்வாள்கள் உள்ளே பாய்ந்தன. இரண்டையும் தன் வாளால் தடுத்த சுபத்திரை பூனை கிளை தாவுவதுபோல உடல் வளைத்து வாள் திருப்பி அவற்றை தெறிக்க வைத்தாள். வாளேந்திய இருவரும் நிலைதடுமாறும் கணத்தில் இருவர் கைகளையும் துண்டித்தாள்.

அவர்களுக்குப்பின்னால் வந்த வீரர்கள் தங்கள் முன் கையற்று வீழ்ந்த படைத்தலைவன் உடலை தொடாமலிருக்க பின்னோக்கி நகர்ந்து சென்றார்கள். அறுந்த கைகள் வாளை இறுகப்பற்றியபடி தசையிறுகி நெகிழ்ந்தன. அம்மாளிகையில் எழுந்த கைகள் வாளேந்தியிருப்பதுபோல தோன்றியது. மித்திரவிந்தை நடுங்கியபடி மேலும் பின்னடைந்தாள்.

விழிகளை எதிர்வந்த வாள்களுடன் சுழலவிட்டு “வருக இளவரசி” என்றபடி முன்னால் சென்றாள். அவள் கைகளில் வெள்ளிமலர் போலிருந்தது கூர்வாள். யாரிவள்? என்ன நிகழ்கிறது இங்கு? நானறிந்த இனிமைகள் இக்கொடுங்கனவுக்கு அப்பால் உள்ளனவா என்ன? இக்குருதியை மிதித்துக் கடக்காமல் நான் அங்கு செல்லவியலாதா? எழுந்து இவளைத் தொடர்கிறேன். இல்லை இங்கு இறந்த உடலென அமர்ந்திருக்கிறேன்.

தன் சித்தம் திகைத்து மயங்கி நிற்பதை உணர்ந்தாள். கரும்பாறையென்று அவள் பாதை மேல் அமைந்திருந்தது அக்கணம். அய்யோ இக்கணம், இது நான் நோக்கி இருந்த தருணம். இன்று சற்றே அஞ்சினாலும் இது என்னை விட்டு விலகிச் சென்றுவிடும் என்று அவள் சித்தம் தவித்தது. உளஎழுச்சி கொண்டு அப்பாறையை அள்ளிப் பற்றி புரட்டி விலக்க அவள் முனைந்தபொழுது அது வெறும் கருமுகிலென தன்னைக் காட்டி மறைந்தது. ஆனால் அதைக் கடந்து காலடி வைக்க அவளால் இயலவில்லை.

தன்னை எதிர்த்துவந்த வாள்நாவுகளை வாளால் எதிர்கொண்டு உரசிச் சுழற்றி விலக்கியும் மணியொலியுடன் தடுத்தும் அலறல்கள் எழ வெட்டிச்சரித்தும் சுபத்திரை தன் அறையிலிருந்து காலை எடுத்து வெளியே வைப்பதைக் கண்டதும் மித்திரவிந்தை நெடுந்தூரத்துக்கு அப்பால் உதிர்க்கப்பட்டுவிட்டவள் போல் உணர்ந்தாள். அறியாமல் எழுந்து ஓடி சுபத்திரையின் பின்னால் சென்று அவள் மேலாடை நுனியைப்பற்றியபடி “நான் வருகிறேன்” என்றாள்.

“இளவரசி என் முதுகுக்குப்பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள். தங்கள் கையோ உடலோ வெளிவரத் தேவையில்லை” என்றாள் சுபத்திரை. தன்னைவிட அரைமடங்கு பெரிய உடல் கொண்ட இளையவள் அவள் என்பதை மித்திரவிந்தை உணர்ந்தாள். கோட்டைச்சுவர் என அவள் முதுகு முன்னால் நிகழ்வதனைத்தையும் முற்றும் மறைத்தது. வாள் கொண்டு பாய்ந்துவந்த நால்வரை வெட்டி வீழ்த்தி சுபத்திரை இடைநாழிக்கு வந்தாள். மரத்தரையெங்கும் பசுங்குருதி சிதறி கால்கள் வழுக்கின. சூழ்ந்திருந்த மரச்சுவர்களில் குருதிச் சொட்டுகள் நழுவித் தயங்கி இணைந்து வழிந்து இறங்கின.

மாடிப்படிகளில் குறடுகள் முழங்க மேலும் வீரர்கள் கூச்சலிட்டபடி வந்தனர். முன்னரே வீழ்ந்துகிடந்தவர்களும் அவர்களின் குருதியிலாடிய சுபத்திரையின் நிமிர்ந்த உடலும் அவர்களை முன்னரே தோற்கடித்துவிட்டிருந்தன. ஒவ்வொரு கணமும் சுபத்திரையின் கைகள் பெருகுவதைப் போல் உணர்ந்தாள். அவளது வாளின் விசையில் பாதி கூட எதிர் கொள்ளும் வாள்களில் இல்லையென்பது அவை அறைபட்ட ஓசையிலிருந்து தெரிந்தது. அவள் வாள் தொட்ட படைவீரரின் வாள்கள் கல் பட்ட நாயென ஒலியெழுப்பி பின்னுக்குச் சென்றன. சில்லென்ற ஒலியுடன் உடைந்து தெறித்தன.

வாளையே எடைமிக்க கதாயுதம்போல சுழற்றினாள். ஒவ்வொருமுறை அவள் வாள் பிறிதொரு வாளை சந்திக்கையிலும் வலுவான மணிக்கட்டு அதிர்ந்தது. அவள் தோள்தசைகள் காற்றில் புடைக்கும் படகுப் பாய்கள் என ஆயின. ஒரு முறை அவள் கை சுழன்று வந்தபோது அவள் முன் நின்ற வீரனின் தலை வெட்டுண்டு தெறித்து நீர்கொண்ட மண்குடம் விழும் ஓசையுடன் மரத்தரையில் விழுந்து படிகளில் உருண்டது.

தன் உடல் முழுக்க குருதி வழிவதை மித்திரவிந்தை உணர்ந்தாள். குருதி நீராவியென எழுந்து சூழ முடியுமென்று அறிந்தாள். அதன் துளிகள் கன்னங்களில் தோள்களில் முதுகில் வருடியபடி வடிந்தன. முதல் சில கணங்களுக்குப்பின் குருதி அவளையும் மத்துறச்செய்தது. தெய்வங்களுக்குரிய இனிய மது அது என ஏன் சொல்கிறார்கள் என்று அப்போது உணர்ந்தாள். சித்தத்தை களியுறச்செய்யும் உப்புச் சுவையொன்றிருந்தது அதற்கு. உடலெனும் வேள்விக்குளத்தில் எரியும் நெருப்பு. ஒளி ஒரு திரவமாகும் என்றால் அது குருதி. விழைவும் வஞ்சமும் சினமும் செந்நிறம் கொண்டவை.

“இளவரசி, என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்று கூவியபடி அவளை ஒரு கையால் பற்றி மறுகையால் வாளைச்சுழற்றியபடி சுபத்திரை படிகளை அடைந்தாள். தரையெங்கும் கைகால்கள் விரித்த உடல்கள் பலவாறாக விழுந்து ஓருடல் மேல் பிறிதுடல் ஏறி நான்குபக்கமும் இழுத்து உதறிக் கொண்டிருந்தன. வெட்டுண்ட கைகளும் தலைகளும் சிதறிக்கிடந்தன. படிகளில் வழிந்திறங்கிய கொழுங்குருதி கீழே சொட்டி கூடத்து மரத்தரையில் வட்டங்களாகி விளிம்பு நீண்டு ஓடையென ஒழுகத்தொடங்கியிருந்தது. அவர்கள் கீழே வந்தபோது மாடியிலிருந்து குருதி அருவி விழுதென கீழே நீண்டு நின்றது.

“இளவரசி! அவளுடன் இளவரசி இருக்கிறாள்!” என ஒரு காவலர் தலைவன் கூவினான். “அம்புகளும் ஈட்டிகளும் அமைக! இளவரசிக்கு புண்பட்டுவிடலாகாது!” வாள் ஏந்தி அவள் முன் வந்த வீரர்கள் ஒவ்வொருவராக கைநடுங்க விலகினர். அவளை இழுத்துக் கொண்டு சுபத்திரை இடைநாழியினூடாக ஓடினாள். ஒவ்வொரு அறைக்கதவையும் ஓங்கி உதைத்துத் திறந்து இருளிலும் ஒளியிலுமாக பாய்ந்து கடந்து குறுகிய படிகளில் அவளை இடை சுற்றித் தூக்கி தாவி விரைந்தாள்.

புலியன்னையால் குருளையென கவ்விக்கொண்டு செல்லப்படுவதாக மித்திரவிந்தை உணர்ந்தாள். எதிர்கொண்டு வந்த வீரனொருவனை வெறும் காலாலேயே சுவருடன் சேர்த்து உதைக்க அவன் வாயிலும் மூக்கிலும் பொங்கிவந்த குருதியைக் கண்டபோது அவளை வெண்காளை என்று எண்ணினாள். முன்கூடமொன்றைக்கடந்து செல்லும்போது ஒரு கணம் நின்று தன் குழலிலும் ஆடைகளிலும் சொட்டிய குருதித் துளிகளை அவள் உதறிக்கொண்டபோது மதமெழுந்த காட்டுப் பன்றியென வியந்தாள்.

தொலைவில் அவைமன்றின் பேரொலியை அவள் கேட்டாள். மன்றுக்கா செல்கிறோம் என்று வியந்தாள். வழி தவறிவிட்டாளா? அவள் தோளைப்பற்றியதுமே எங்கு செல்கிறோம் என்ற உறுதி அவளுக்கிருந்ததை உணர்ந்தாள். ஐயுறுபவளாகவோ அஞ்சுபவளாகவோ அவள் தோன்றவில்லை. குருதி சொட்டும் உடலுடன் படிகளில் ஏறி சிறு வாயிலைத் திறந்து அவள் எழுந்தபோது அங்கு நின்றிருந்த படைவீரர்கள் அஞ்சி பின்னகர்ந்தனர். எவரோ “கொற்றவை!” என்பதை அவள் கேட்டாள்.

மன்றுக்குச்செல்லும் செம்பட்டு விரித்த பாதையினூடாக விரைந்து சீர்ப்படிகள் வழியாக அவளைச் சுழற்றிப் பற்றித் தூக்கி மேலேற்றி அவள் நின்றபோது தன்னெதிரே விரிந்த மன்றை மித்திரவிந்தை கண்டாள். ஒளிரும் முட்களுடன் புதர் ஒன்று எழுந்து சூழ்ந்தது போல அவந்தியின் படைவீரர்கள் அவர்களை முற்றுகையிட்டனர். இடை சுற்றி அவளை முன்னால் தூக்கி தன்முன் நிறுத்தி வாளை முன்னால் நீட்டியபடி கால்களைப் பரப்பி வைத்து நின்றாள் சுபத்திரை.

“இளவரசி! இளவரசி மேல் படைக்கலன்கள் படலாகாது” என்று பின்னாலிருந்து எவரோ கூவ அவளைச் சூழ்ந்து நாகங்கள் என நெளிந்து அலையடித்தன பலநூறு வாள்முனைகள். தொலைவில் ஒரு குரல் எழுந்தது. திரை தூக்கப்பட்டது போல் படை வீரர்கள் விலக அவள் வெட்ட வெளியில் குருதி நீராடிய உடலுடன் நின்றாள். விழிகள் வெறித்த அவ்வெளிச்சத்தைக் கண்டு திகைத்து சுபத்திரையின் உடலுக்குப்பின் பதுங்கிக்கொண்டாள்.

அக்கணம் மன்றின் மறு எல்லையில் உடலலைகளின் மேல் நீலமலர் என வெண்புரவியில் அவன் எழுவதை கண்டாள். அவனைநோக்கி இடிந்துசரியும் நதிக்கரை என படைவீரர்கள் சூழ்ந்தனர். போர்க்குரல்கள் எழுந்தன. “நீலன்! இளைய யாதவன்! துவாரகையாளும் வேந்தன்” என்று அவையினர் கூச்சலிட்டனர். அவனைப் பார்ப்பதற்காக மக்கள் ஒருவர் தோள்மேல் பிறிதொருவர் என முண்டியடித்து ஏறினர். கைகளை வீசி ஆடைகளைத் தூக்கி மேலெறிந்து பிடித்து ஆர்ப்பரித்தனர். “நீலன். தோல்வியறியாத வீரன்” என்று சூதர் ஒருவர் கைதூக்கி கூவி குதித்தார்.

அவள் விழிகளே தானென நின்று அவனை நோக்கினாள். நீலத்தோள்கள் கடல் அலையென எழுந்தமைவதை, அவற்றிப் வெண்ணிறநுரை என படையாழி எழுந்து மின்னலிட்டு மீள்வதை, அவன் குழல் சூடிய மயில்பீலியின் புன்னகையை, அவன் முன் செம்முத்துக்கள் செவ்விதழ்மலர்கள் செந்தழல்கீற்றுகள் என சிதறிய குருதியினூடாகக் கண்டாள். ‘நஞ்சு, நஞ்சு’ என அரற்றியது நெஞ்சம். உயிர் கொல்லும் நஞ்சு. உளம் கொல்லும் நஞ்சு. அடைந்தவை அனைத்தையும் அழித்து தானென ஆகி நின்றிருக்கும் நஞ்சு. கொன்று உண்டு உயிர்ப்பித்து மீண்டும் கொன்று விளையாடும் அழியா நஞ்சு.

முந்தைய கட்டுரைஏர்டெல்லும் இந்தியாவும்
அடுத்த கட்டுரைவடக்கிருத்தல் தற்கொலையா?