அன்புள்ள ஜெயமோகன்,
மேமன் விவகாரத்திற்கு முன்பாக வேறு சில விஷயங்களிலிருந்து ஆரம்பிக்கிறேன்.
நீங்கள் கூறிய ‘Reader’s Edition” பற்றி சமீபத்தில் நினைவு கொள்ள நேர்ந்தது. Alan Ryan என்பவரின் 2-வால்யூம் “Politics” மிகவும் பிரசித்தி பெற்ற சமீபத்திய புத்தகம். பழங்கால கிரேக்க சமூகம் முதல் இன்றுவரை அரசியல் சிந்தனைகளின் தொகுப்பு அது. இப்போது அந்தப் புத்தகத்திலிருந்து சில தேர்ந்தெடுத்த சிந்தனையாளர்கள் பற்றி (Marx, Aristotle etc) Readers Edition என்று சொல்லத் தக்க எளிதில் படிக்கக் கூடிய மற்றும் சிறு தொகுப்புகளுக்கே உரிய கட்டுக் கோப்புடனும் கூடிய புத்தகங்களைப் பார்த்தபோது வெண்முரசு குறித்த உங்கள் கனவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. என்றாவது ஒரு நாள் இப்படிப்பட்ட Readers Edition வெண்முரசு புத்தகங்கள் வெளிவர வேண்டும். நீங்கள் கூறியது போல அதற்கான சாத்தியக் கூறுகள் வெண்முரசிற்கு நிறைய உள்ளது.
இரண்டாவது தருணம் “Yoga Sutra of Patanjali: A biography” by David Gordon White படித்துக் கொண்டிருந்தப் போது. இப்புத்தகத்தைத்தான் நான் உங்களிடம் கொடுத்தேன். இந்த தொகுப்பு நூல்கள் முக்கியமான மத நூல்களின் ‘வாழ்க்கை வரலாறுகள்’. முன்பு இது போல பகவத் கீதை பற்றி வந்த நூலொன்றினுக்கு நான் மதிப்புரை எழுதினேன். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது யோக சூத்திரம் பற்றிய உங்கள் பதிவுகளை தொகுத்துப் படித்தேன். சில பகுதிகளை தவிர்த்து அருமையான பதிவுகள். நீங்கள் அந்த இரண்டாம் சூத்திரம் மிகப் பிரபலமாகப் பேசப் படுவது குறித்து மிகவும் கிண்டல் தொனியில் எழுதி இருப்பீர்கள். டேவிட்டின் புத்தகத்தில் அந்த சூத்திரத்தை வைத்து முக்கியமான ஒரு ஆய்வுக் கோணத்தை சொல்லி இருப்பார். அவரும் அந்த இரண்டாம் சூத்திரத்தின் பிரபல்யம் குறித்துக் கூறியிருப்பார். உங்கள் பதிவுகளைப் படித்து விட்டு நான் அடைந்த மன உற்சாகம் அதிகம். அருகில் இருந்திருந்தால் உங்கள் கரம் பற்றியிருப்பேன். உங்களை வெண்முரசும் பாபநாசமும் கொள்ளை கொண்டது ஒரு நஷ்டமே.
மூன்றவது தருணம் தாஸ்குப்தாவின் இந்திய தத்துவ வரலாற்றைப் புரட்டிய போது. இது குறித்து விரிவாகவே உங்களிடம் எழுதிக் கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். மெக்காலே இந்திய தத்துவ மற்றும் இலக்கிய மரபுகளை எள்ளி நகையாடியது இன்று வரை வாயில் நுரை ததும்ப இந்தியர்கள் பலரால் மேற்கோள் காட்டப் படுவது. தாஸ்குப்தா தமிழக பக்தி மரபு பற்றி எழுத முற்படும் போது சொல்கிறார் “எனக்கு ஸமஸ்கிருதம் தவிர வேறு பிராந்திய மொழிகள் தெரியாது ஆகையால் ஸமஸ்கிருதம் அல்லாத பிராந்திய தத்துவ மரபுகள் குறித்து பரிச்சயம் கிடையாது. தமிழகத்தில் இருந்து தழைத்த பக்தி மரபிற்கு ஸம்ஸ்கிருத தத்துவ மரபுகளைப் போல் தத்துவ கட்டுமானம் கிடையாது”. மொழி தெரியாதென்று ஒப்புக் கொள்கிறார் ஆனால் அம்மொழியில் இருப்பது தத்துவம் என்றுக் கூறத்தக்க கட்டுமானம் இல்லாததென்று எள்ளி நகையாடவும் செய்கிறார். மேற்கத்திய ஆய்வாளர்கள் கிரேக்க மரபுகளை ஆய்வு செய்யும் முறைமைகளைக் கொண்டு இந்திய தத்துவ மற்றும் கலை ஆகியவற்றை ஆய்வு செய்து விமர்சித்தால் நமக்கு இரத்தம் கொதிக்கிறது ஆனால் நம் இந்திய மெக்காலேக்கள் அதையே இந்திய பிராந்திய மொழிகள் மற்றும் மரபுகள் நோக்கி செய்யும் போது அது நமக்கு objectionable ஆகத் தெரிவதில்லை. நீலகண்ட ஸாஸ்திரியார் ஸமஸ்கிருதம் எனும் “மந்திரக் கோலின்” ஸ்பரிசத்தால் தமிழ் மேன்மையுற்றது என்கிறார். கேள்வி, தமிழ் பக்தி மரபுக் குறித்த உங்கள் பார்வை என்ன? அதை வேதங்களை மதிப்பிடும் அளவுகோல்களைக் கொண்டே அளக்க வேண்டுமா?
இப்போது மேமன். ஒன்றைத் தெளிவாக சொல்லி விடுகிறேன். என்னுடைய பதிவில் நான் மேமன் குற்றவாளியல்ல என்று கூறவில்லை. மூவர் தூக்கு விஷயமாகட்டும் மேமனாகட்டும் இந்தியாவின் உச்ச நீதி மன்றமே அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துவிட்டது. நான் படித்த வரையில் அவர்கள் யாரும் நிரபராதிகள் கிடையாது. நான் மரண தண்டனையை ஆதரிப்பவன். சிலர் தாங்கள் வாழும் உரிமயை தாங்கள் செய்யும் பாதக செயல்களால் இழக்கிறார்கள். சிறு பிள்ளைகளை வன்கலவி செய்பவர்கள், தீவிரவாதிகள் இவர்கள் எல்லோரும் வாழ்வதற்கான தகுதியை இழக்கிறார்கள். ஓக்லஹோமாவில் குண்டு வைத்த டிமோதி மெக்வே ஆகட்டும், மேமனாகட்டும் எனக்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்துப் பெரிதாக ஒன்றும் உளைச்சலில்லை. அது போல தாக்கரே தண்டிக்கப் படவில்லை ஆகவே மேமன் தண்டிக்கப்படக் கூடாதென்று வாதிடுவதற்கு நான் மூளை குழம்பிய இடது சாரியுமல்ல. இந்தக் கேஸைப் பொறுத்தவரை நீதி கிடைத்ததா என்பது தான் முக்கியம். அது கிடைத்தது என்று கூறலாம்.
9/11-ஐ வைத்து மார்க்ஸியர்கள் குமட்டும் அளவிற்கு கும்மியடித்தது என் போன்றோர் இன்றும் மறவாதது. சுஜாதா விகடனில் ‘சிவந்த செவ்வாய்’ என்று எழுதி தன் அமெரிக்க எதிர்ப்பு அரிப்பை தீர்த்துக் கொண்டார். அமெரிக்காவில் இருந்து கொண்டு தீவிரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம் போன்றவற்றின் விவாதங்களின் அறிமுகம் கூட இல்லாமல் இருக்க முடியாது. 9/11 பற்றிப் பலப் பதிவுகளை நான் எழுதியுள்ளேன்.
உங்கள் கட்டுரையோடு நான் முரண்பட்டது மேமனின் இறுதி ஊர்வலத்திற்கு திரண்ட மக்களைக் குறித்து நீங்களும் மற்றவர்களும் வைத்த விமர்சணங்கள் குறித்துதான். சிறுபான்மையினருக்கு நீதி அமைப்பின் மீது அவ நம்பிக்கை இருப்பது நான் அமெரிக்காவிலும் காண்பது. அவர்களுக்கு அவர்கள் பார்வையில் எது நீதி என்று நினைக்கிறார்களோ அது நடக்காத வரை அவர்கள் நீதி அமைப்புகளின் எந்த முடிவையுமே நிராகரிக்கிறார்கள். ஓ.ஜே. சிம்ப்ஸன் கொலை வழக்கில் அமெரிக்காவே இன வாரியாகப் பிரிந்தது. வெள்ளைக்காரர்கள் ஸிம்ப்ஸனை கொலைக்காரன் என்று கருதினார்கள். கறுப்பு இனத்தவரோ அவனை நிரபராதி என்று நினைத்தனர். இதோ இப்போது பெர்குஸனிலும் அதைப் பார்க்க முடிந்தது. அஜ்மல் கஸாப் தூக்கிலடப்பட்டபோது எத்தனை இஸ்லாமியர் கூடி அழுதனர்? கஸாப் கொலைகாரன் என்று நீதி மன்றம் அறிவிக்கத் தேவையில்லாத வண்ணம் அவனின் கொலைத் தாண்டவம் டீவியில் ஒளிப் பரப்பானது.
தாக்கரேவை நீங்கள் “தாக்கரே இந்து அடிப்படைவாதம், மராட்டிய இனவாதம் பேசியவர். ஆனால் அவர் இந்தியாவின் ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு அதற்குரிய ஆதரவு வளையம் ஒன்றை உருவாக்கியவர்.” இது என் போன்றோருக்கு சற்றும் ஒப்புக் கொள்ள முடியாத சித்தரிப்பு. ஒரு வகையில் இது ஏமாற்றம் அளிக்கக் கொள்ளக் கூடிய சித்தரிப்பும் கூட. இங்கிலாந்தில் அஞ்சம் சவுத்திரி என்றொரு இஸ்லாமிய பிரசாரகர் இருக்கிறார். அவர் அனல் கக்கும் பிரசாரங்கள் செய்பவர். அவர் பிரசாரங்களால் உந்தப் பட்டு ISIS போன்ற அமைப்புகளுக்கு சென்று சேர்ந்தவர் அநேகம். கருத்து சுதந்திரம் எனும் போர்வையின் கீழ் அவர் செய்த சில்மிஷங்கள் ஏராளம். ஆனால் அவரை இங்கிலாந்தின் சட்டங்களின் படி சமீப காலம் வரை ஒன்றும் செய்ய முடியவில்லை ஏனென்றால் நீதி மன்றங்கள் கருத்து சுதந்திரம் எனும் காரணம் கொண்டு அவரை விடுதலை செய்து விடும். மிகச் சமீபமாக தான் அவர் எல்லை கடந்து பேசவும் அவர் மீது வழக்கு பதிவு செய்ய முடிந்தது. தாக்கரே வெறும் வாய்ச்சொல் வீரர் அல்ல. வார்த்தைகளுக்கு வலிமையுண்டு. வெறும் பிரசாரகரான அன்வர் அல் அவ்லாக்கியை அமெரிக்கா கொல்லவே வேண்டியிருந்தது. தாக்கரேவை ஏதோ தெரு முனைப் பேச்சாளர் போல் நீங்கள் excuse செய்கிறீர்கள்.
தாக்கரேவை விசாரிக்க வேண்டுமென்ற நிர்பந்தம் வந்த போது ஒரு அரசாங்கமே அவருக்கு அரணாக நின்றது. அவரை விசாரிக்கக் கூட முடியாதபடி ஒரு நெருப்பு வளையம் அவரை சுற்றி இருந்தது. அது தான் அவரை தாவூத் போன்றவர்களைவிட பயப்பட வேண்டியவராகக் கருதக் கூடிய நிலைக்கு என்னைத் தள்ளுகிறது. மேமனின் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களது தேசப் பற்று கேள்விக் குறியாக்கப் படுகிறது ஆனால் தாக்கரேவிற்கு கூடிய கும்பல்? இங்கேக் கேள்வி தாக்கரே-மேமன் அல்ல. ஒருவருக்கு கூடிய கூட்டம் தேச விரோதக் கும்பல் போலவும் இன்னொருவருக்கு, அவரை போன்றே வன்முறையாளருக்கு, கூடிய கூட்டம் தேச பக்திக் கூட்டம் போல் சித்தரிக்கப் படுவதும் தான். தாக்கரேவிற்கு அரசு மரியாதை என்பதெல்லாம் ஓவர் என்றாவது ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
உங்கள் பதிவில் இஸ்லாமிய தீவிரவாதங்கள் சாட்சியங்கள் இல்லாமல், அவை இஸ்லாமிய தீவிரவாதங்கள் என்பதாலேயே, தீவிரவாதிகள் தப்பிக்க நேர்கிறது என்ற அர்த்தம் தொனிக்க எழுதியதற்காகத் தான் நான் சீக்கியப் படுகொலைப் போன்றவற்றை மேற்கோள் காட்டினேன்.
நீதி மன்றங்களை நம்பாதது, நீதி வழங்கப்பட்டது என்பதை நம்பாதது போன்றவையே அத்தகைய ஒரு ஏகோபித்த வெளிப்பாட்டிற்குக் காரணம். அப்படிப்பட்ட வெளிப்பாடு மற்றவர்களும் செய்கிறார்கள் ஆனால் அவர்களை நோக்கி வீசப்படாத சந்தேகப் பார்வைகளும் கண்டனக் கனைகளும் மேமனின் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களை நோக்கி மட்டும் வீசப் படுகிறது.
நன்றி
அரவிந்தன் கண்ணையன்
அன்புள்ள அரவிந்தன்,
உங்கள் கடிதம் உற்சாகம் அளிக்கிறது. தொலைதூரத்தில் வாழும் நண்பர் ஒருவரின் கடிதம் அவரது நிலப்பரப்புடன் சேர்த்து நினைவில் எழுகிறது. நாம் மீண்டும் சந்திக்கும்போது உங்கள் வீட்டைச்சூழ்ந்துள்ள அற்புதமான புல்வெளிச்சூழல் இருக்குமென நினைக்கிறேன், இந்தியாவிலென்றால் அந்த நம்பிக்கையை கொள்ள காரணமில்லை ))
ஐரோப்பிய அறிவியக்கத்துடன் ஒப்பிடத் தொடங்கினால் ரத்தம் முழுக்க அதற்கே சரியாகிவிடும். தமிழின் இந்திய சிந்தனை மரபைப்பற்றி மதநம்பிக்கைக்கு வெளியில் நின்று எழுதப்பட்ட நூல்கள் மிக குறைவு. அத்வைதம் போன்றவற்றை அறிமுகம் செய்யும் நூல்களே இல்லை. பொதுவான வாசகனுக்காக ஆயுர்வேதத்தை அறிமுகம் செய்யும் ஒரு நூல் இல்லை.
என்னிடம் ஒருமுறை கே.சச்சிதானந்தன் தமிழில் பிளேட்டோ பற்றி எத்தனை நூல்கள் உள்ளன என்று கேட்டார். நான் ஒரேஒருநூல் உள்ளது, வெசாமிநாதசர்மா எழுதியது என்று சொன்னேன். ‘ஒரே ஒரு நூல் என்றால் நூலே இல்லை என்றுதான் அர்த்தம். பலகோணங்களில் பலதரப்பட்ட வாசகர்களுக்காக எழுதப்பட்ட பதினைந்து நூல்களாவது இருந்தாகவேண்டும்’ என்றார். என்ன செய்வது?
பதஞ்சலி யோகசூத்திரத்தின் வரலாற்றை வாசித்தேன். அற்புதமான நூல். அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.திருக்குறளுக்கு இதேபோல ஒரு ‘வாழ்க்கைவரலாறு’ வந்தால் மிகச்சிறப்பாக இருக்கும் என நான் எழுதியிருக்கிறேன். சைவர்கள் அதை ஒரு சமணநூலெனக் கருதி வெறுத்து ஒதுக்கியதுண்டு. எப்போது அது ஒரு இந்து, சைவ நூலாக விளக்கப்பட்டது அடைந்தது என்பதை இன்றைய வாசகர் அறிந்திருக்கமாட்டார்கள். அறிவியக்கம் மிக விரிவான அளவில் நிகழும் மொழிகளிலேயே அதெல்லாம் சாத்தியம். இன்று நாம் செய்வது அப்படி ஒன்று அழிந்தேபோய்விடாமல் பார்த்துக்கொள்வது மட்டுமே
பக்தி என்னும் உணர்வு எப்போதும் உள்ளது. ஆனால் அதை அடிபப்டையாகக் கொண்டு எழுந்த முழுமையான சமூகநகர்வு ஒன்றையே நாம் பக்தி இயக்கம் என்கிறோம். இந்திய பக்தி இயக்கம் பற்றி நான் என் தளத்தில் அவ்வப்போது எழுதியிருக்கிறேன். அது தென்னகத்தில் தோன்றி வடக்கே சென்றது என்பதே என் எண்ணம். அதன் தொடக்கப்புள்ளி நம்மாழ்வார் என்று நினைக்கிறேன். உணர்வுநிலை, தத்துவார்த்தத் தன்மை இரண்டிலுமே அவர்தான் விதை. இதை நான் விரிவாகவே எழுதமுடியும். கே. சச்சிதானந்தன் போன்ற சில ஆய்வாளர்கள் எழுதியிருப்பதை வாசித்த நினைவிருக்கிறது.
எஸ்.என்.தாஸ்குப்தா அவரது பிரம்மசமாஜத் தொடர்புகள் காரணமாக ஐரோப்பிய மாணவர்களைப் பெற்றவர் என்பதனால் பெரும்புகழ்பெற்றார். இந்திய சிந்தனைமுறைகளைத் தொகுத்தவர்களில் ஒருவர் என்றமுறையில் ஒரு முன்னோடி. ஆனால் இன்று அவரை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.அக்காலகட்டத்தில் தென்னகத்தின் பேரிலக்கியங்கள் பற்றிய எளிய அறிமுகம் கூட வட இந்தியாவைச்சேர்ந்த பல அறிஞர்களுக்கு இருக்கவில்லை. ஏன், தென்னகத்திலிருந்த பேரரசுகளைப் பற்றிக்கூட தெரிந்திருக்கவில்லை. நான் மதிக்கும் பலரின் எழுத்துக்களில் எளிய குறிப்புக்கள் கூட இல்லை. உதாரணமாக, பல்லாண்டுக்காலம் தமிழகத்தில் வாழ்ந்த அரவிந்தரின் எழுத்துக்களில் தமிழ்ப்பேரிலக்கியங்கள் தத்துவநூல்களைப்பற்றிய குறிப்புகள் மிகக்குறைவு.
அறியாமை ஒருபக்கம் இருக்க ‘என்ன பெரிதாக இருக்கப்போகிறது’ என்ற மேட்டிமைத்தனமும் இருந்தது. அன்று இருந்த இந்தியவியலாளர்களுக்கும் தென்னக மொழிகளின் தத்துவ -இலக்கிய மரபு பற்றி ஒன்றும் தெரியாது. ஆகவே அவர்களின் ஆர்வம் முழுக்க சம்ஸ்கிருதத்தை மையமாகக் கொண்டிருந்தது. மேலும் ஐரோப்பிய ஆரிய இனவாதத்துடன் சம்ஸ்கிருதம் இணைக்கப்பட்டிருந்தமையால் ஐரோப்பிய அறிஞர்கள் அதற்கு மிக அதிக முக்கியத்துவம் அளித்தனர். அதை இங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் எதிரொலித்தனர். நீலகண்ட சாஸ்திரியின் குரல் அத்தகையதே. ஆரியமேட்டிமைவாதம் என்பது இவர்களுக்கு சாதிமேட்டிமைவாதமாக பொருள்தந்தது.
இன்றுகூட அந்த மனநிலையை நூல்களில் கண்டுகொண்டிருக்கிறேன். இந்தியாவில்கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் தென்னகத்தின் கல்வெட்டுகளே அதிகம். ஆகவே இந்தியவரலாறு சார்ந்த எந்த வினாவுக்கும் தென்னகக் கல்வெட்டுகளைக்கொண்டு விடைதேடலாம். இன்றைய நவீன வரலாற்றாய்வுகளில்கூட அந்தப்போக்கு தென்படுவதில்லை. இதை நானே பலநூல்களில் கண்டு சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
இந்தியாவின் முதன்மையான ‘இணைப்பு மொழியாக’ சம்ஸ்கிருதம் இருந்தது, சடங்குசார்ந்தும் அறிவுத்தள விவாதத்துக்கும். இன்று சடங்குகளுக்கு மட்டுமே சம்ஸ்கிருதம் உள்ளது. இந்து அறிவியக்கம் முழுமையாகவே ஆங்கிலத்துக்கு மாறிவிட்டது. இவ்வாறு இணைப்புமொழியாக சம்ஸ்கிருதம் இருந்தமையால் அது இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் சீரான பாதிப்பைச் செலுத்தியது. அந்தப்பாதிப்பு என்பது சம்ஸ்கிருதத்தின் கொடை அல்ல, சம்ஸ்கிருதம் வழியாக வந்த பிற இந்தியப்பகுதிகளின் பண்பாட்டுப் பாதிப்புதான்.
உதாரணமாக இன்று இந்தியமொழிகள் முழுக்க ஆங்கிலத்தின் பாதிப்பு உள்ளது. இன்றுள்ள உரைநடை இலக்கணமே ஆங்கிலம் வழியாக வந்ததுதான். இந்திய அறிவியக்கமே ஒருவகையில் மொழிபெயர்ப்புதான். அதைவைத்து ஆங்கிலத்தால் தமிழ் மேன்மையடைந்தது என்று கூறமுடியுமா என்ன? ஆங்கிலம் வழியாக வந்து தமிழில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியது பிரெஞ்சு இலக்கியமும் ரஷ்ய இலக்கியமும்தான் [மாப்பசான், விக்தர் யூகோ, தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி] இந்தியாவில் எந்த ஆங்கில எழுத்தாளரும் ஆழமான பாதிப்பைச் செலுத்தவில்லை.
சம்ஸ்கிருதம் இந்திய மொழிகளுக்குக் கொடையளித்துள்ளது. அதேபோல இந்தியாவின் அனைத்து மொழிகளும் பண்பாடுகளும் சம்ஸ்கிருதத்திற்குக் கொடையளித்துள்ளன. ஒவ்வொரு சம்ஸ்கிருதக் காவியத்திற்கும் அதற்குரிய வட்டாரச்சுவை உண்டு. காஞ்சிபுரமே ஒரு முக்கியமான சம்ஸ்கிருத மையம். இங்கு தண்டி போன்ற காவியகர்த்தர்கள் இருந்திருக்கிறார்கள். சம்ஸ்கிருதம் ஒருதொடர்பு மொழி. அது முன்வைத்தது இந்தியா முழுக்க இருந்து தொகுக்கப்பட்ட ஒரு பண்பாட்டையும், இலக்கியத்தையும். அது இந்துமதத்தின் மொழி மட்டும் அல்ல. அது எந்த சாதிக்கும் உரிய மொழியும் அல்ல.
இதெல்லாம் இன்று எந்த வாசகனும் எளிதில் அறியக்கூடியவை. ஆனால் இன்றும்கூட நம்மூர் நீலகண்டசாஸ்திரிகளிடம் சொல்லி புரியவைக்கமுடியாது. அறியாமையை ஒருவர் ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்என்றால் கும்பிட்டு விலகிவிடவேண்டியதுதான். என் தளத்தில் அப்படி நான் விலகிக்கொண்ட பல விவாதங்களை நீங்கள் காணலாம்.
கடைசியாக, நான் மெக்காலேயை வெறுப்பவன் அல்ல. மெக்காலே பற்றிய ‘இந்துத்துவத் தொன்மங்களை’ நான் எதிரொலிப்பதும் இல்லை. மெக்காலேயின் காலகட்டத்தில்தான் ‘தரப்படுத்தப்பட்ட பொதுக்கல்வி’ உருவாகி வந்தது. பல்வேறு பரிசோதனைகள், பிழைகளுடன்தான் எங்கும் அது பரவலாக்கப்பட்டது.எங்கும் ஆளும்வர்க்கமும் அரசும் அவர்கள் உருவாக்க எண்ணும் குடிமைச்சமூகத்திற்குத் தேவையான கல்விமுறையையே உருவாக்குவார்கள். மெக்காலே அவ்வாறு உருவாக்கிய கல்வியே இங்கு உருவான முதல் பொதுக்கல்வி.
அதன் நன்மைகள் பல. இங்கு ஒரு நவீனக்குடிமைச்சமூகத்தை அக்கல்விமுறையே தொடங்கிவைத்தது. இந்தியாவில் உருவான தேசியக் கல்வி இயக்கம் -அல்லது காந்தியக் கல்வி இயக்கம்கூட மெக்காலே கல்வியின் திருத்தப்பட்ட வடிவமே.இந்தியாவில் இன்றுவரை நீடிக்கும் நவீன ஜனநாயகத்தின் அடித்தளம் அதுவே. அதை பிரிட்டிஷ் காலத்திலேயே பலவாறாக மேம்படுத்தியிருக்கிறார்கள். மேலும் சமகாலப்படுத்த வேண்டியது நம் பொறுப்பு. செய்யவில்லை என்றால் அது நம் குற்றம். மெக்காலேக் கல்விமுறை அறிவியல்கல்வி, மதச்சார்பற்ற வரலாற்றுக்கல்வி ஆகியவற்றில் முன்னுதாரணமானது. கீழைப்பண்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு எதிரானது. இதுவே என் எண்ணம்.
மெக்காலே உருவாக்கிய கல்விமுறையில் இருந்த பிழைகளை உணர்வதும் திருத்திக்கொள்வதும் வேறு. மெக்காலே அக்கல்விமுறையையே இந்தியாவின் அறிவை அழிக்க ஒரு சதித்திட்டமாகத்தான் கொண்டுவந்தார் என்று நம்புவது வேறு.அது தன் சொந்த இயலாமைக்கு பிறரைக் குற்றம்சாட்டும் இழிவு மட்டுமே
மேமன் பற்றிய உங்கள் பதிவை புரிந்துகொள்கிறேன். நான் சொல்லவருவது இதுவே. பிரம்மாண்டமான மக்கள்தொகையும் அதற்கு சற்றும் பொருந்தாத நீதியமைப்பும் கொண்ட இந்தியாவில் குற்றவாளிகள் தப்புவது மிகச்சாதாரணம். பெரும்பாலான கலவர வழக்குகள் எளிமையாக கடந்துசெல்லப்படுகின்றன. இதில் இந்து முஸ்லீம் வேறுபாடே இங்கில்லை. குண்டுவெடிப்பு வழக்குகளே பெரும்பாலும் அத்தனைபேரும் விடுதலையாவதில்தான் முடிகின்றன.
இந்நிலையில் ஒரு வழக்கில் குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்படுகையில் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என ஆரம்பிப்பதும், அவர் மதநோக்கில் தண்டிப்பப்பட்டார் என பிரச்சாரம் செய்வதும் இந்தியாவின் நீதியமைப்பு, குடிமையமைப்புமேல் ஆழமான அவநம்பிக்கையை உருவாக்குபவை. நீண்டகால அடிப்படையில் அழிவை உருவாக்கக்கூடியவை.
இஸ்லாமியர் இந்தப்பிரச்சாரத்துக்கு ஆளாகி குண்டுவெடிப்புத் தீவிரவாதிகளை தியாகிகளாகக் காண்பதும் தங்கள் அடையாளங்களாக முன்வைப்பதும் மிகமிக ஆபத்தானவை. இங்குள்ள இந்து சமூகம் வேறெந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு இஸ்லாமியர் மேல் அவநம்பிக்கையும் அச்சமும் கொண்டு வருகிறது. ஒவ்வொரு தளத்திலும் இஸ்லாமியரை முழுமையாகத் தவிர்ப்பது வலுப்பெற்று வருகிறது.
[எனக்குவந்த முந்நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் அனைத்துமே அவர்களைப்பற்றி ஒன்றுமே எழுதவேண்டாம், ஏதாவது செய்துவிடுவார்கள், விட்டுவிடுங்கள் என மன்றாடுகின்றன. அத்தனை தொலைபேசி அழைப்புகளும் பேசாதீர்கள் என்று கண்ணீருடன் கோருகின்றன. நம்முடன் இருக்கும் ஒரு சமூகம் பற்றிய நம் அச்சம் இது. இருநூறாண்டுகளுக்கு முன்னர்தான் என் குடும்பவழியிலேயே ஒரு கிளை மதம் மாறியிருக்கிறது. அவர்கள் என் இளமைநினைவுகளிலேயே எங்களுக்கு உறவுகளாகத்தான் இருந்திருக்கிறார்கள்.ஆனால் நானும் அஞ்சுகிறேன் என்று சொல்ல தயக்கமில்லை]
அந்த அன்னியமாதலை மேலும் மேலும் வலுப்படுத்தி அதில் அரசியல் லாபம் அடையவே இந்துத்துவர்களும் மறுபக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் முயல்கின்றனர். கொஞ்சமாவது நடுநிலையுடன் சிந்திக்கவேண்டுமென நான் எதிர்பார்க்கும் இடதுசாரிகள் இன்னும் கீழிறங்குகிறார்கள்.
அப்படியானால் அதைக் கேட்டாயா, இதை சொன்னாயா என்றெல்லாம் விவாதிப்பதெல்லாம் விவாதத்திற்கே உதவும். எளிமையான உண்மை, நம்மைச்சூழ்ந்து பிரம்மாண்டமாக உருப்பெற்று வரும் உண்மை ஒன்றே. நேற்றுவரை இந்துத்துவர்களுக்குக் காதுகொடுக்காத சாமானிய இந்து இன்று அவர்களை ஏற்றுப் பேசத்தொடங்கியிருப்பது. இஸ்லாமியர் மீது உருவாகி வலுப்பெற்றுவரும் ஆழமான கசப்பு.
அதற்கு பிறரை குற்றம் சாட்டுவதில் பயனில்லை. உலகளாவிய சூழலில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பேரழிவுச்சக்தியாக உருக்கொண்டிருக்கிறது என்பது ஓர் உண்மை. அதை அப்படியே எதிரொலிக்கும் குரல்களை ஒவ்வொருநாளும் சாமானிய இந்தியன் கேட்டுக்கொண்டிருக்கிறான். யாகூப் போன்ற கொலைக்காரனை தியாகியாக்கி தூக்கிப்பிடிக்கும் இஸ்லாமிய சமூகம் , இந்துக்களிடம் நட்புடனிருந்தார் என்பதற்காகவே கலாமை வசைபாடும் இஸ்லாமிய சமூகம் இந்துக்களுக்கு அளிக்கும் செய்தி என்ன என்பதை அவர்களில் சிலராவது எண்ணிப்பார்க்கவேண்டும்.
அதற்கு அவர்களுக்கு இன்னின்ன காரணங்கள் உள்ளன என்பதெல்லாம் வேறு. விளைவு என்ன என்று மட்டுமே நான் கேட்கிறேன். அவர்களின் இந்த அடிப்படைவாதம் நோக்கிய நகர்வை ஆதரித்து நியாயப்படுத்தி தங்கள் அரசியலைச் செய்பவர்களைச் சுட்டிக்காட்டுகிறேன்.
இந்தியா போன்ற நாடுகள் இன்னும் வலுவாக உருப்பெறாத குடிமைச்சமூகம் கொண்டவை. சொல்லப்போனால் சுயநலனுக்காக ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான சமூகங்களின் தொகுப்பு இது. இன்றுள்ள சூழலில் இத்தகைய பொறுப்பின்மை மிகப்பெரிய அழிவுக்கு வழிகோலும். ‘இவர்களின் ஆதர்சம் எங்கள்மேல் குண்டுவைத்தவன் தானா?’ என்ற சாமானிய இந்தியனின் கேள்வியை எந்த சமநிலையுள்ள முஸ்லீமும் இன்று தவிர்க்கமுடியாது.
தங்கள் மத உணர்வுகள் புண்படுவதை அவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதைவிடப் பலமடங்காக சாமானிய இந்துக்களின் நட்புணர்வு இஸ்லாமியத் தீவிரவாதப்பேச்சுக்களால், நடத்தைகளால் புண்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதை அவர்கள் இனியாவது உணர்ந்தாகவேண்டும்.
என் இந்த குரலை இங்குள்ள இருதரப்புமே எதிர்த்தரப்புக்குரியது என விலக்கும். ஆனால் சொல்லியே ஆகவேண்டும். காந்தி இருந்தால் இன்று அவர் சொல்வது இதைத்தான் என நான் நம்புகிறேன்
ஜெ