இரு கட்டுரைகளை இன்று வாசித்தேன். இரண்டுமே இந்துத்துவர்களின் கருத்துக்கள். அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை மேலைநாட்டு விழிகளால் பிழையாகவும் உள்நோக்கத்துடனும் புரிந்துகொள்ளப்பட்டு அவர்களின் சொல்வழியாக இந்தியர்களுக்கே அறிமுகமான இந்தியப் பண்பாட்டின் அடிப்படைத் தொன்மங்கள், விழுமியங்கள் பற்றிய அறிவார்ந்த சித்திரத்தை முன்வைக்கிறது
ராஜ்நாத் சிங்கின் பேச்சு அறிவார்ந்த அடிப்படை ஏதும் இல்லாமல் மொண்ணையாக புரிந்துகொண்டு மொண்ணைகளுக்கே உரிய அபாரமான தன்னம்பிக்கையுடன் ஒரு மரபார்ந்த பற்றை மட்டும் முன்வைக்கிறது. முதல்கட்டுரையை மரபு மீட்பு என்று புரிந்துகொள்கிறேன். ஓர் உயர்மரபு மானுடத்தின் சொத்து என்பதனால் அதை சரியாக அறிமுகப்படுத்துவதென்பது ஓர் ஆக்கபூர்வச் செயல்பாடு. மரபை முடிந்தவரை எளிமைப்படுத்தி அதை ஓர் அடிப்படைவாதமாக ஆக்குவது இரண்டாவது கட்டுரை. ராஜ்நாத் சிங் அதற்குமேல் எப்போதும் சென்றவர் அல்ல.
இரண்டு கட்டுரைகளுக்கும் இடையே என்ன வேறுபாடு? முதல் வேறுபாடு, அறிவுத்திறன்தான். அதன்பின்னரே மேட்டிமைநோக்கும் சுயநலமும் எல்லாம் வருகின்றன. உண்மையில் எல்லா வகையான அறிவியக்கங்களிலும் அரசியலியக்கங்களிலும் இவ்விரு எல்லைகளும் உள்ளன. இவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டை உணர்வதே சிந்தனை என்பதன் பயன். ஒட்டுமொத்தமாக ஏற்பதோ மறுப்பதோ இன்னொரு வகை மொண்ணைத்தனம் அல்லது வெறும் காழ்ப்பு.