ஜெ
இணையத்தில் உங்கள் கட்டுரைக்கு இந்த எதிர்வினையைக் கண்டேன்
*
இதில் ஒன்றைச்சொல்லுங்கள் ஜெயமோகன் அவர்களே,
///யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த பரபரப்பு என்பது ஊடகங்களால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. ///
///எந்த ஒரு தூக்குத்தண்டனையும் கடைசிநிமிடப் பரபரப்புடன் மட்டுமே நிகழும். ஏனென்றால் இந்தியாவின் சட்ட அமைப்பு அளிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவே குற்றவாளியின் வழக்கறிஞர்கள் முயல்வார்கள். ஒரு தூக்குத்தண்டனைகூட விலக்கல்ல.///
http://www.jeyamohan.in/77977#.VdhaciWqp-Q
ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள் மிஸ்டர் ஜெயமோகன். இதில் எது சரி? இரண்டாவது என்றால், பரபரப்பு வழக்கமான ஒன்றுதான் என்று ஆகிறது– பின் எப்படி அதை ஊடகங்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று சொல்ல முடியும் ?
*
உங்கள் எதிர்வினை என்ன? மௌனம்தானா?
சரவணன்
அன்புள்ள சரவணன்
என் இணையதளம் ஓரளவாவது அறிவுத்திறன் கொண்டவர்களுக்கானது. அதை ஒரு disclaimer ஆகவே போடலாமா என எண்ணிக்கொண்டிருக்கிறேன்
எந்தத் தூக்குத்தண்டனையும் கடைசிநிமிடத்தில் ஒரு பரபரப்பு கொண்டுதான் நிறைவேற்றப்படும் , அவை சட்டத்தளத்தில் நிகழ்பவை, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் உரியவை. ஆனால் அந்தப்பரபரப்பை தேசிய அளவிலான ஒரு பரபரப்பாக ஆக்கியவை ஊடகங்கள் — இவ்வாறுகூட புரிந்துகொள்ளமுடியாத ஒருவருக்கு இந்தவகையான கட்டுரையை வாசிக்கும் தகுதி இல்லை. மன்னிக்கவும்
எனக்கு வரும் எதிர்வினைகள் முழுக்க இந்தத் தளத்தில்தான். இவ்வளவுதான் சொல்ல இருக்கிறது இவர்களுக்கு.
ஜெ
*
ஜெமோ,
பால் தாக்கரே பற்றிய உங்கள் மறுப்பு மழுப்பல். அவர் கலவரங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளியா இல்லையா? சஜ்ஜன்குமார் போன்றவர்கள் குற்றவாளிகளா இல்லையா? அவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை?
சாம்
அன்புள்ள சாம்,
உலகின் எந்த ஜனநாயக நாட்டிலும் கலவரக்குற்றங்கள், பொருளியல் குற்றங்கள் தண்டிக்கப்படுவது மிக அரிது. ஏனென்றால் ஜனநாயக நடைமுறையும் நீதிமன்ற நடைமுறையும் பின்பற்றப்படுமென்றால் இவர்களைத் தண்டிக்கும் புறவயமான ஆதாரங்களை எளிதில் உருவாக்கமுடியாது. வேண்டுமென்றால் அமெரிக்க, ஜப்பானிய ஊழல்கள் பற்றிய சமகாலச்செய்திகளைத் தொடர்ந்து சென்று கவனியுங்கள். ஆரம்பகட்ட இரைச்சலுக்குப்பின் அவை அப்படியே நீதிமன்றங்களில் உறைந்து கிடக்கும், தள்ளுபடிசெய்யப்படும்.
ஆகவே இந்தியாவிலும் நம் கண்ணெதிரே சமூக அமைதியை அழிப்பவர்களும் பொருளியல் குற்றவாளிகளும் தப்பிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.போஃபர்ஸ் வழக்கு, ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு, ஜெயலலிதா வழக்கு என்ன ஆயிற்று என்று கண்டோம். நிலக்கரிபேர ஊழல்,.த்ரீஜி வழக்கு, சன் டிவி வழக்குகள் அவ்வாறே ஆகுமென்பதைக் காண்போம். இன்றுள்ள சூழலில் இங்கு வேறுவழியே இல்லை.
கலவரக்காரர்களைத் தண்டிக்கும் வழிமுறைகளை இறுக்கினால் அது கருத்துரிமை, அரசியலுரிமை ஆகியவற்றை அழிக்கும் சட்டங்களாகவே மாறும். பொருளியல்குற்றங்களை தண்டிக்கும் சட்டம் கறாரானதாக ஆனால் வணிகச்செயல்பாடுகளுக்கு எதிராகப் போகும். இது முதலாளித்துவ ஜனநாயகத்தின் சிக்கல்.எந்த சட்டநடைமுறையும் இல்லாத சர்வாதிகாரத்திற்கு இது மேல், அவ்வளவுதான்.
மதக்கலவரங்களைத் தூண்டியது கொலைக்கு அறைகூவியது உட்பட பலகுற்றச்சாட்டுகள் கொண்ட காஷ்மீரின் கிலானி, டெல்லி இமாம் புகாரி, ஹைதராபாதின் உவைசி, அமிர்த்சரஸின் சிம்ரத்சிங் மான் போன்றவர்களும் எப்போதும் தண்டிக்கப்பட்டதில்லை. ஒவ்வொருவர் பேரிலும் வழக்குகள் குவிந்துகிடக்கின்றன. இமாம் புகாரிக்கு வாரண்ட் கையளிக்கவே எட்டுவருடங்கள் ஆன கதை இங்கு உண்டு
கலவரங்களைத் தூண்டிய, நேரடியாகவே அருங்கொலைகளை நிகழ்த்திய, வடகிழக்கின் பிரிவினைவாதிகள் தண்டிக்கப்பட்டதில்லை. இவர்கள் அனைவருடனும் அரசு பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கிறது. ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. ஏன்,நம் உள்ளூர் சாதிக்கலவரங்களை நேரடியாகவே தூண்டுபவர்கள் கூட தண்டிக்கப்பட்டதில்லை. சிவகாசி, தென்காசி, மதுரை கலவர வழக்குகள் என்னாயின? ஆம்பூர் கலவர வழக்குகளே என்னாகிறது என்று பாருங்கள்.
அதற்கு என்னசெய்யலாம் என்பது வேறு தலைப்பு. ஆனால் குண்டுவெடிப்பு போன்ற குற்றங்களுக்கு அபூர்வமாக ஒருவர் சரியாக சிக்கிக்கொண்டு தண்டிக்கப்படும்போது மற்றவர்கள் தண்டிக்கப்படாததனால் இவரையும் தண்டிக்கக்கூடாது என்பதைப்போல அசட்டுத்தனமான வாதம் வேறில்லை. ஆனால் அதை தன்னை அறிவுஜீவி என நம்பும் ஒருவர் கூசாமல் முன்வைக்க நம் சூழல் அனுமதிக்கிறது.
ஜனநாயகம் உள்ள நாட்டில் பலசமயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாது போகிறார்கள். தனிமனித உரிமை, சட்டபூர்வ விசாரணைபோன்றவற்றின் இடுக்குகள் அப்படிப்பட்டவை. பல முக்கியமான குற்றங்களில் எளிய நடைமுறைச்சிக்கல்களைக் காரணம் காட்டி தண்டனையிலிருந்து தப்பியிருக்கிறார்கள். அப்படி சிலர் தப்பவிடப்பட்டால் உடனே பிறரையும் தண்டிக்கக்கூடாது என வாதிடுவதன் அபத்தத்தை இனி எப்படி சொல்லி விளங்கவைப்பது
ஜெ