நகைச்சுவை:மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

ஒரு தீவிரமான விஷயத்தைப்பற்றிய நகைச்சுவை அதைச்சார்ந்துள்ள பல்வேறு முடிச்சுகளை அவிழ்த்துவிடுகிறது. நம்பிக்கை என்பதில் உள்ள எல்லைகளை அது நமக்குப் புரியச்செய்கிறது. தீவிரமான விஷயங்களை மிதமிஞ்சி அழுத்துந்தில் இருந்து அது விடுதலை அளிக்கிறது. தமிழகம் மனிதர்கள் மீதும் கொள்கைகள் மீது பற்றும் வெறியும் கொண்டவ்ர்களால் ஆனது. அனைத்தையுமே தீவிரமாக எடுத்துக்கொள்ளும் மனிதர்கள் இங்குள்ளவர்கள். ஆகவே அவர்கள் நம்பக்கூடியவற்றை பாதுகாக்கும்பொருட்டு சண்டைபோடத்தயாராக இருப்பார்கள். எந்தவகையான விவாதத்தையும் மாற்றுக்கருத்தையும் அவர்களால் ஏற்க முடியாது. தங்களைத்தாங்களே கிண்டல்செய்வது எப்படி என்றும் அவர்கள் அறிய மாட்டார்கள். ஆகவே உங்கள் குரு நித்யாவை நீங்கள் கிண்டல்செய்வதை வாசகர்களை விட அவர்தான் மிகவும் ரசித்திருப்பார் என்று உறுதியாகச் சொல்லலாம். ஆன்மீகமான முதிர்ச்சி என்பது தன்னைத்தானே கிண்டல்செய்வதுதான்.

நான் விடுதலைப்புலிகளை, திமுகவை, இடதுசாரிகளை,தமிழியத்தை, சமூகப்போராட்டத்தை, கர்நாடக சங்கீதத்த, மதநம்பிக்கைகளை ,அதிதீவிர இலக்கியத்தை, அதை இதை  ஆதரிக்க ஆரம்பித்தால் அதன்மீதான எந்தவகையான விமரிசனத்தையும் என்னால் தாங்க முடியாது. சிந்திப்பவர்கள் பாம்பு போல சட்டையை உரித்தபடி முன்னகர்ந்துகொண்டே இருந்தாகவேண்டும். விவேகம் என்பதே அப்படி சிரிப்பு மூலம் தன்னிடமிருந்து வெளியேறிக்கொண்டிருப்பதுதான்.

சில சமூகங்கள், சாதிகள் தங்களைத்தாங்களே கிண்டல் செய்துகொள்ளும் முதிர்ச்சியுடன் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். குறிப்பாக பஞ்சாபி விவசாயிகள். ஐரிஷ் விவசாயிகள். தமிழ்நாட்டில் கம்மா நாயக்கர்கள். தங்களைப்பற்றி தாங்களே நகைச்சுவைகளை உருவாக்கிப்பரப்புவார்கள். கி.ராஜநாராயணன் அவரது கம்மா நாயக்கர் ஜாதியைப்பற்றி அவர்களுடைய கிண்டல்களை தொகுத்திருக்கிறார்.

எம்.பி.ஏ போன்ற நிர்வாகம் அல்லது ஐஐடி போன்ற தொழில்நுட்பம் சார்ந்த உயர்தகுதி கொண்டவர்கள் மிக உலர்ந்தவர்களாகவும் தங்களுடைய இடம்பற்றிய பிரக்ஞை மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். நவீனக்கல்வி நகைச்சுவை உணர்ச்சியை இந்த அளவுக்கு இல்லாமலாக்குகிறதா என்ன? ஏன் இவர்கள் இன்னும் கொஞ்சம் தங்களைப்பார்த்துச் சிரிக்கக் கூடாது? உண்மையிலேயே இது புரிவதில்லை.

இளங்கோ கல்லானை
[தமிழாக்கம்]

அன்புள்ள இளங்கோ,

நான் கடந்த 20 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். பலவிதமான கட்டுரைகளை எழுதி விதவிதமான விவாதங்களை உருவாக்கியிருக்கிறேன். ஆனால் இந்த நகைச்சுவைக்கட்டுரைகளை எழுதிய பிறகு உருவான எதிர்ப்பும் கசப்பும் வசைகளும் எப்போதுமே வந்ததில்லை. அதுதான் நான் இதை எழுதும் வீம்பை அடைந்ததற்கு முக்கியமான காரணம். மிக எளிய கிண்டல்களைக்கூட மிகத்தீவிரமாக உணர்ச்சிகரமாக எடுத்துக்கொண்டு கோபம் கொள்கிறார்கள். நாட்கணக்கில் நண்பர்களிடம் புலம்புகிறார்கள். சில சமயம் வேடிக்கையாக சில சமயம் நம்பமுடியாதபடி இருக்கிறது. என்ன காரணம்? எனக்குப்படுவது ஆழமான தாழ்வுணர்ச்சிதான் என்று. தாங்கள் சொல்லும் விஷயங்களில் அவர்களுக்கே ஆழமான நம்பிக்கை ஏதும் இல்லை.

இதில் சில விஷயங்களைக் கவனித்தேன். பொதுவாக பழைய ஆட்கள் நகைச்சுவையை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள். விஷ்ணுவை கிண்டல் செய்தால் ஒரு மரபான வைணவருக்கு கோபம் இல்லை. ‘சரிதான், எங்க சம்பிரதாயத்திலே இதுக்கும் ஒரு எடம் உண்டு’ என்று சாதாரணமாகச் சொல்லிச் சிரித்தார்கள். வேதாந்தம் பற்றி சொல்லவே வேண்டாம். வேதாந்தத்தைக் கிண்டல் செய்தால்தான் அது வேதாந்தம். மதம் சார்ந்த கிண்டல் கட்டுரைகளுக்கும் வசைகள் வந்தன. ஆனால் அவை எந்த வகை மத அறிவும் இல்லாத எளிய பக்தர்கள் சிலரிடமிருந்துதான்

ஆனால் நம்முடைய முற்போக்கு இலக்கியம், தமிழியம், பெரியாரியம் தரப்புகள் சிறு கிண்டலைக்கூட தாங்கமுடியும் நிலையில் இல்லை.  தாக்குதலாகவே எடுத்துக்கொள்கிறார்கள். உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். என்னைக் கிண்டல்செய்தாயே சரி அவனைக் கிண்டல் செய்வாயா — இதுதான் எப்போதும் எழும் கேள்வி. அவனை ஏற்கனவே கிண்டல் செய்துவிட்டேனே என்றால் சரி அப்படியானால் உவனை கிண்டல்செய்வாயா என்ற கேள்வி. எத்தனை பலவீனமான மனிதர்கள்!

இந்த லட்சணத்தில் நாம் உலக இலக்கியம் பற்றிப் பேசுகிறோம். உலக இலக்கியச்சூழல் இப்படித்தான் எளிய கிண்டல்களையோ விமரிசனங்களையோ தாங்க முடியாமல் இருக்கிறதா?

இதில் இன்னும் சிக்கலான விஷயம் நடுநிலையாளர்கள். இவர்கள் எதையுமே படிப்பதில்லை. எழுத்தாளர்களை தெரிந்து வைத்துக்கொண்டு சூழலில் இருப்பார்கள். ‘எதுக்கு சார் இதெல்லாம்? ஏன் இப்டி எழுதணும்?’ என்று கேட்கிறார்கள்.”ஏன் எழுதக்கூடாது?” என்றால் ‘ரொம்ப வருத்தப்படுகிறார் சார்’  என்று பதில். ‘ யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் அவர் இலக்கியத்துக்கு வந்தாரா?’ என்றால் பதில் இல்லை.

இப்படி இருக்கிறது தமிழ்ச்சூழல்

ஜெ

வணக்கம் குரு.,
உங்களை போன்ற நேர்மையான படைப்பு மனம் தரும் எந்த எழுத்தும் வீண் அல்ல.நீங்கள் குறிப்பிட்டது போல, தமிழர்களின் நகைச்சுவை உணர்ச்சி மறைந்து எந்த சிறிய விமர்சனத்திற்கும் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று மறைந்த திரு சுஜாதா சார் அவர்கள் குறிப்பிட்டு வருத்தப்பட்டது நினைவுக்கு வருகிறது. படைப்புத்தருணம் என்ன நிகழ்த்தப் போகிறது என்று முன் கூட்டி எவ்வாறு வகுக்க இயலும். ரேடியேட்டர் சூடாகிவிட்டால் தண்ணீர் ஊற்றுவதில்லையா? உங்கள் படைப்பின் உச்சத்திற்க்கு பிறகு ஒரு மீட்பு தேவைப்படுகிறது, அதைவிட என்னைப் போன்ற வாசகர்களுக்கு உங்கள் நகைச்சுவை கட்டுரை பெரும் களிப்பு தருகிறது.
                            அன்புடன் மகிழவன்.

அன்புள்ள மகிழவன்

ஆன்மீகத்தில் சிரிப்புக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. நாராயணகுரு வாழ்நாள் முழுக்க உபதேசம் செய்ததில்லை, நகைச்சுவைதான் பேசினார் என்று ஒரு கூற்று உண்டு. நம்மையும் நம் சூழலையும் பார்த்து சிரிப்பது நம்மை எப்போதுமே புதிதாக வைத்திருக்கிறது. என்னுடைய படைப்புகளைப் படித்த வாசகர்களுக்கு இந்த நகைச்சுவை ஒன்றும் புதிதல்ல. ஏனென்றால் என் எல்லா படைப்புகளிலும் — விஷ்ணுபுரம் முதல் ஏழாம்உலகம் வரை — அங்கதமும் நக்கலும் உண்டு. சீரியஸ் எழுத்தாளர்லாம் இப்டி எழுதலாமா என்ற கேள்வியை  எழுப்புபவர்கள் என்னுடைய நாவல்களைப் படித்ததில்லை

ஜெ

888

அன்புள்ள ஜெ., அவர்களுக்கு,

அ. ‘நகைச்சுவை : கடிதங்கள்’ படித்தேன். கொங்குத் தமிழ் இன்னும் சரியாக சொல்லக் கூடவில்லை என்று வருந்தி இருந்தீர்கள். ஈரோட்டுப் பகுதிகளில் ஆண்டாண்டு காலங்களாகச் சுற்றினாலும் அது கைகூடுவது சிரமம். நகர்ப்பகுதிகளில் பொது மொழி உள் நுழைந்து விட்டது. ஏனைய சமுதாயங்களைப் போலவே இன்னும் கிராமப் புறங்களில் மட்டுமே பண்பாட்டுக் கூறுகள் உயிர்ப்புடன் இருக்கின்றது.

கொங்கு மண்டலம் என்பது கோவை, உதகை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பரவி இருந்தாலும் காவிரி நதிக்கு இருபுறங்களிலும் பேசப்படும் மொழியும், வாழ்முறையும் வேறு!

எனவே தேன் அனைய கொங்கு மொழி அறிய கோவை கிராமங்களைச் சுற்றுதலே சரி. ஈரோடு கிராமங்களில் அது கிடைப்பது சிரமமே…!

கொங்குத் தமிழில் ஒரு கதை ::
http://kaalapayani.blogspot.com/2008/07/blog-post_2266.html

***

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்துவருகிறேன். உண்மையில் உங்கள் இதரக் கட்டுரைகளுக்கு நகைச்சுவைக் கட்டுரைகளே ஒருவித ஆழ்த்தைக் கொடுக்கின்றன. மேலும் உங்களது நகைச்சுவை ஒருவன் fanatic ஆக மாறுவதிலிருந்து காப்பாற்றுகின்றன என்பது எனது தனிப்பட்ட அனுபவம். சுய-கிண்டல் இழைந்த சுயவிமர்சனத்துக்கான ஒருவித கருவியாகவே நீங்கள் நகைச்சுவையை மாற்றியுள்ளீர்கள். நீங்கள் இந்து தரிசனங்களை கிண்டலடித்து எழுதியவை ஒரு ஆத்திரத்தை தூண்டவேயில்லை என சொன்னால் அது அப்பட்டமான பொய்யாகத்தான் இருக்கும். ஆனால் அந்த ஆத்திரம் நாளடைவில் சுயவிமர்சனமாக மாறியது. (எனது தனிப்பட்ட உரையாடலில் உங்கள் நகைச்சுவையை அதன் உண்மையான பரிமாணங்களுடன் சுட்டிக்காட்டியவர் வலைப்பதிவுலக நண்பரான ஜடாயு. அவர் தொடக்கத்திலிருந்தே உங்கள் நகைச்சுவையை மிகவும் சிலாகிப்பவர்.) நம்மிடமிருந்து வேறுபடும் மக்களிடம் ஒரு புரிதலுணர்வையும், நம்மிடமுள்ள ஆதீத மேன்மையுணர்வுகளின் அபத்தத்தையும் அவை புரியவைக்கின்றன. உங்கள் நகைச்சுவை எனது அகவளர்ச்சிக்கு மிகவும் பயன்பட்டுள்ளது. அதற்கு உங்களுக்கு என்றென்றும் நன்றிகள். (ஜடாயுவுக்கும்.)

பணிவன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்  

**

அன்பு ஜெ,

உங்கள் நகைச்சுவை எழுத்து குறித்து ஒருவர் எழுதிய கடிதம்  படித்தேன். கடுமையான வன்மம் இருந்தாலொழிய ஒரு எழுத்தாளருக்கு அப்படி ஒரு கடிதத்தை எழுத ஒருவரால் முடியாது. எழுத நாம் யார் என்று நமக்குத்தோன்றாதா என்ன? உங்கள் நகைச்சுவை கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. தமிழில் நாம் இழந்துவிட்ட ஒரு பெரிய விசயத்தை அவை நமக்கு அளிக்கின்றன. நம்மையும் நம் பண்பாட்டையும் எண்ணி நாம் சிரிக்கும்போதுதான் அவற்றை புரிந்துகொள்ளும் தகுதி நமக்குக் கிடைக்கிறது. உதாரணமாக நான் ஒரு சிவ பக்தன். பக்தர் மண்டலிகளில் உழவாரப்பணியும் ஆற்றுகிறேன். ஆனால் உங்கள் ஆலயம் தொழுதல் கட்டுரையில் துவாரபாலகர்கள் ஒரு ரூபாய் உள்ளே கொடுங்கள் என்று சொல்லிய இடத்தை வாசித்து கண்ணீர் வருமளவுக்கு சிரித்தேன். சமீபத்தில் சங்கரன்கோயிலில் திருச்சேவை செய்யும்போது துவாரபாலகர்களைக் காட்டி அதைச் சொன்னேன். நண்பர்களும் சிரித்தார்கள். துவார பாலகர் சிலைகளை பார்க்கும்போது சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அந்த ஆலகாலமுண்ட அழகனும் சிரித்திருப்பான்

சிரியுங்கள் ஜெ. அதுவே நம் பண்பாடு

சுப்ரமணியம்

888

அன்புள்ள ஜெ,

நகைச்சுவை பற்றி நீங்கள் எழுதிய வரிகளை பலவாறாகச் சிந்தித்தேன். சமூக தளத்திலும் ஆன்மீகத்திலும் நகைச்சுவைக்கு இருக்கக்கூடிய இடத்தைப்பற்றி நிறையவே எழுதப்பட்டிருக்கிறது. சமூக தளத்தில் விளையாட்டுகள் எந்த இடத்தை வகிக்கின்றனவோ அந்த இடத்தை நகைச்சுவை வகிக்கிறது. உண்மையான போர்கள் காலப்போக்கில் போர் விளையாட்டுகளாக மாறி இன்றைய நவீன விளையாட்டுகளாக உருவம்கொண்டன. இன்றுகூட ஆப்ரிக்க பழங்குடிகள் நடுவே போரா விளையாட்டா என்று பிரித்தறிய முடியாத– ஓரளவு ரத்தகாயம் வரக்கூடிய, ஆனால் மரணம் நிகழாத– விளையாட்டுகள் உள்ளன. இப்படி போரை விளையாட்டாக மாற்றிக்கொண்டதன் வழியாகவே சமூகம் தன்னுடைய நெடுங்கால வன்மங்களை மழுங்கச்செய்து பதற்றங்களை குறைத்துக்கொண்டது. இவ்வாறுதான் நாகரீக சமூகங்கள் உருவாயின. ஒரு நல்ல சமூகத்திலே வன்முறை இருக்காது, பதிலுக்கு விளையாட்டு நடந்துகொண்டிருக்கும்.

நகைச்சுவையும் இப்படித்தான். சமூக தளத்தில் உள்ள பல்வேறு அழுத்தங்கள், வன்மங்கள், வெறுப்புகளை அது மழுப்பி வேறு வகையில் வெளிப்பாடு கொள்ளச் செய்கிறது. சமூகத்தில் உள்ள பிரிவுகளுக்கு இடையே கண்டிப்பாக வன்மங்கள் இருக்கும். முதலாளிக்கும் தொழிலாளருக்கும் இடையே வன்மம் இருக்கும். அப்பாவுக்கும் மைந்தர்களுக்கும் நடுவே இருக்கும். அரசாங்கத்துக்கும் குடிமக்களுக்கும் இடையே கூட  வன்மங்களை தவிர்க்க முடியாது. அவை நகைச்சுவையாக ஆகும்போது அந்த இறுக்கம் இல்லாமலாகிறது. இயல்பான ஒரு சமூக இயக்கம் நிகழ ஆரம்பிக்கிறது. பணியிடத்திலும் குடும்பத்திலும் நகைச்சுவைக்கு இடமிருந்தாலே போதும், இயக்கம் சுமுகமாக ஆகிவிடும்.

ஆனால் ஆன்மீகமான நகைச்சுவை என்பது வேறு வகை. அது ஆன்மீகமானது நம்பிக்கைகள் மற்றும் தத்துவங்களில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான வழிமுறை என்று தோன்றுகிறது. ஓஷோவைப்பற்றிச் சொன்னீர்கள். ஓஷோ அவரை எவரும் ஒரு தத்துவ வாதியாக அல்லது மத நிறுவனராக ஆக்கிவிடாமலிருக்கும்பொருட்டே நகைச்சுவையை பயன்படுத்துகிறார் என்று எண்ணுகிறேன்

ஆறுமாதமாக உங்கள் இணைய தளத்தை விரும்பி படித்துவருகிறேன். தமிழில் இன்று இதற்கு இணையான ஒரு இணையப்பத்திரிகையோ சிறு பத்திரிகையோ இல்லை  என்று உறுதியாகச் சொல்வேன். இதன் விஷயங்களில் உள்ள விரிவும் இதில் உள்ள ஆழமும் சாதாரணமாக தமிழில் காணக்கிடைக்காதவை. எழுத வேண்டுமென எண்ணி ஒத்திப்போட்டுக்கொண்டே இருந்தேன். இப்போதுதான் எழுத முடிந்தது. ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். இதுவே நான் எழுதும் முதல் கடிதம்

டேனியல் செல்வநாயகம்

அன்புள்ள டேனியல் செல்வநாயகம்,

நித்யசைதன்ய யதி சொல்வதுண்டு. சிறுகுழந்தைகள் விளையாடுவதைக் கூர்ந்து கவனிக்கவேண்டுமென. ஒரு பொருளை எடுத்து விளையாடினால் கூர்ந்து கவனித்துவிட்டு அடுத்து அவைசெய்வது அதை தலைகீழாகக் கவிழ்ப்பதைத்தான். அதை எப்போதும் சிந்தனையில் நாம் செய்யவேண்டும் என்பார். ஆன்மீக- தத்துவ சிந்தனையில் ஒன்றை நிறுவியபடியே செல்வது எளிது. ஏனென்றால் மீபொருண்மை [மெட்ட·பிஸிக்ஸ்] அடித்தளம் இல்லாத ஒரு கட்டிடம். அங்கே எதையும் நிறுவ முடியும். அதை உடனடியாக கவிழ்த்தும் பார்ப்பவர் மட்டுமே அதில் இருந்து முன்னகர முடியும். நகைச்சுவை அதற்காகவே
ஜெ 

நகைச்சுவை:கடிதங்கள்

முந்தைய கட்டுரைஒழுக்கம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைமரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி