‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 85

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 10

எல்லைக் காவல்கோட்டத் தலைவன் ரிஷபன் தன் புரவிமேல் அமர்ந்து ‘விரைவு விரைவு’ என உளம் தவித்தான். சூழ்ந்து வட்டமிட்ட குறுங்காட்டின் மரக்கூட்டங்களுக்கு அப்பால் குளம்படியோசை சிதறிப் பெருகி மீண்டெழுந்து அவனை சூழ்ந்தது. ‘மேலும்! மேலும்!’ எனக் கூவியபடி குதிகால் முள்ளால் அதை துரத்தினான். காற்றில் எழுந்து சிற்றோடைகளை தாவினான். சிறு பாறைகள் மேல் துடியோசை எழுப்பிக் கடந்து சென்றான்.

மாகிஷ்மதியின் சிறிய கோட்டை வாயிலைக் கண்டதும் ஒருகணம் பெருமூச்சுடன் நின்றான். பின்பு தன் இடையில் இருந்த மாகிஷ்மதியின் கொடியை எடுத்து வீசி பறக்கவிட்டபடியே கோட்டை வாயிலை நோக்கி புரவியில் முழுவிரைவில் சென்றான். எத்தனை விரைந்தும் அசைவற்று கோட்டை வாயில் அங்கேயே நின்றது. ‘எத்தனை தொலைவு! எத்தனை தொலைவு!’ என்று அவன் உள்ளம் தவித்தது. புரவி ஓடுகின்றதா நின்ற இடத்தில் காலுதைக்கிறதா என்று ஐயம் கொண்டான்.

கோட்டை அங்கேயே நின்றதென்றாலும் மேலும் மேலும் தெளிவு கொண்டன அதன் பழமையான தடிகளின் கருமைகொண்ட இரும்பு இணைப்புகள். மழையூறி வழிந்த அலை வளைவுகள் கருகிய பாசிப் பரப்பு மீது பறவை எச்சங்களின் வெண்ணிற வழிவுகள் என தெரிந்து கொண்டே இருந்தன. பின்பு அவன் கோட்டையின் பெருங்கதவத்தின் பித்தளைக்குமிழ்களின் ஒளியை அருகே கண்டான். கோட்டை முகப்பின் இருபக்கத்தின் யானைக்கால் தூண்கள் பட்டுத்துணிகள் சுற்றி அலங்கரிக்கப்பட்டிருந்தன. மரப்பட்டைக் கூரையிட்ட வளைந்த முகடுகளின் மேல் புதிய பட்டுக் கொடிகள் காற்றில் படபடத்தன. கொடித்தோரணங்களும் பட்டுப் பாவட்டாக்களும் அணிப்பட்டங்களும் நடனமிட்டுக்கொண்டிருந்தன.

ஒற்றைப் புரவி செல்லுமளவுக்கு திட்டி வாயிலை மட்டுமே திறந்து வைத்து பன்னிரு காவலர் ஈட்டிகளும் வாள்களுமாக காவல் நின்றனர். கோட்டைக்கு மேல் எழுந்த காவல் மாடங்களில் நாண்பூட்டிய விற்களுடன் செறிந்திருந்தனர் வில்லவர். புதுத்தோல் இழுக்கப்பட்ட பெருமுரசங்கள் காவல் மாடத்தின் முரசு மேடையில் இரு பக்கங்களிலாக வட்டம் சரித்து அமர்ந்திருந்தன. திட்டிவாயிலின் முன்பு குளம்புகள் சடசடக்க வந்து நின்ற அவன் முன்னால் எட்டு ஈட்டிகள் ஒளிர்முனை சரித்தன. கடிவாளத்தை இழுத்து புரவியைத் திருப்பி நிறுத்தி மூச்சிரைக்க “நான் தென்மேற்கு காவல்மாடத்து நூற்றுவர் தலைவன். என் பெயர் ரிஷபன். அமைச்சர் கர்ணகரை உடனடியாக சந்திக்க விழைகிறேன். மந்தணச்செய்தி” என்றான்.

ஐயம் கொண்டவனாக கண்களைச் சுருக்கி நோக்கி “முத்திரை?” என்றான் கோட்டைக்காவலன். ரிஷபன் தன் கணையாழியைக் காட்டியதும் அதை மூவர் மாறி மாறி நுண்ணோக்கினர். “விரைவு” என்றான் ரிஷபன். “விரைவல்ல, இங்கு தேவையானது எச்சரிக்கைதான்…” என்றான் கோட்டைக்காவலன். “நாங்கள் முறைமைகளை விடமுடியாது.” பிறிதொருமுறை நோக்கிவிட்டு ஒருவரை ஒருவர் விழிகளால் தொட்டுக் கொண்டபின் தலைவன் தலையசைத்து “செல்க!” என்றான். எரிச்சலுடன் தலைகுனித்து “நல்லது” என்றபின் அவன் திட்டிவாயிலினூடாக உள்ளே சென்றான்.

மாகிஷ்மதியின் அரச வீதி குறுகியது. காட்டு மரத்தடிகளை அடுக்கி தேர்ச்சாலை போடப்பட்டிருந்தது. அதன் மீது குளம்புகள் ஒலிக்க அவன் புரவி கடந்து சென்றது. இருபக்கமும் மரத்தாலான சிறிய மாளிகைகள் மந்தைபோல விலாமுட்டி செறிந்திருந்தன. கொம்புகள் பூட்டி புறப்படாமிட்டு அணி செய்யப்பட்ட கன்றுகள் என அவை தோரணங்கள் கொடிகள் சூடி வண்ணம் பொலிந்திருந்தன. முற்றங்களில் மலரணிக்கோலங்களும் சுடர் ஏந்திய மண்செராதுகளும் அமைக்கப்பட்டிருந்தன. அங்காடி வீதிகளில் கடைகள் தோறும் மலர்மாலைகளை வளைத்துக் கட்டியிருக்க வணிகப்பொருட்களின் மணத்துடன் கலந்த மலர்மணம் காற்றில் குழம்பியது.

ஆங்காங்கு தென்பட்ட நகர்மக்கள் அனைவரும் புத்தாடை புனைந்து அணிகளும் பூண்டிருந்தனர். ஆனால் எங்கும் பெருவிழவுக்கென எழும் களிவெறி ஏதும் தென்படவில்லை. ரிஷபன் எல்லைக் காவல் மாடத்தருகே தன் இல்லத்தில் துணைவியுடனும் மைந்தருடனும் வாழ்ந்தான். ஆண்டிற்கு இருமுறைகூட அவன் மாகிஷ்மதிக்குள் வந்ததில்லை. ஒவ்வொரு முறையும் மழையில் கருத்த மரப்பட்டைக் கூரைகளும் கருநாகம் என கரிய பளபளப்பு கொண்ட பழமையான தூண்களும் தலைமுறைகளின் உடல்பட்டு தேய்ந்து உலோகப் பரப்பென ஒளிவிட்ட கல் திண்ணைகளும் கொண்ட அந்நகரத்தின் சிறிய மாளிகைகள் அவனை உள எழுச்சி கொள்ளச் செய்வதுண்டு.

மாகிஷ்மதியன்றி பிற நகர் எதையும் அவன் கண்டிருக்கவில்லை. உஜ்ஜயினியில் நூறு ஏழ்நிலை மாடங்களுண்டு என்று அங்கு சென்று வந்த சூதனொருவன் பாடக்கேட்டிருந்தான். பிறிதொரு சூதன் பல்லாயிரம் பன்னிருநிலை மாடங்கள் கொண்ட பெருநகரம் துவாரகை என்று பாடக்கேட்டு எள்ளிச்சிரித்து “அது துவாரகை அல்ல, ஹிரண்யகசிபுவின் மகோதயபுரம் போலும்” என்றிருக்கிறான். அன்று மாகிஷ்மதி நூல்கண்டு என சுருள் விரித்து நீண்டு சென்றது. கோட்டை வாயிலிலிருந்து அரண்மனை முகப்பு வரை அத்தனை இல்லங்களிருப்பதை அவன் அப்போதுதான் அறிந்தான். மூன்று காவல் முகடுகளிலும் புத்தாடை புனைந்து கூர்வேல் ஏந்திய காவலர் நின்றனர். செம்முரசுத் தோல்கள் இளவெயிலில் ஒளிவிட்டன.

அரண்மனைச் சிறுகோட்டை முகப்பின் மீது கட்டப்பட்ட சுனாதம் என்ற பேருள்ள தொன்மையான பித்தளை மணி துலக்கப்பட்டு பொற்குவளை என மின்னியது. உயரமற்ற மரக்கோட்டை முகப்பை அடைந்து இறங்கி தன்னை அறிவித்துக் கொண்டான். “கர்ணகரை சந்தித்தாகவேண்டும். நான் எல்லைக்காவல்மாடத்து தலைவன் ரிஷபன்” என்று கூவினான். அவன் குரலிலேயே இடர் ஒன்றை உய்த்துணர்ந்த காவலன் படியிறங்கி வந்து அவனுடைய முத்திரைக் கணையாழியை மும்முறை நோக்கியபின் “அரண்மனையின் வலது எல்லையில் நூற்றெட்டு தூண்கள் கொண்ட அணி மண்டபத்தில் மங்கலப் பொருட்கள் ஒருக்கப்படுகின்றன. அதை மேல்நோட்டம் விட்டபடி கர்ணகர் நின்றிருக்கிறார். செல்க!” என்றான்.

அவன் அரண்மனை முகப்புக்குள் நுழைந்து புரவியை தேர்முற்றத்தில் நிறுத்திவிட்டு தரையென விரிந்த மரப்பரப்பின் மேல் இரும்புக்குறடுகள் ஒலியெழுப்ப விரைந்தோடினான். அரைவட்டமெனச் சூழ்ந்த அரண்மனை மாளிகைகளுக்கு நடுவே இருந்த களமுற்றத்தின் மையத்தில் அவந்தியின் சிட்டுக்குருவிக் கொடி பறந்து கொண்டிருந்தது. அதற்கு வலப்பக்கமாக அமைந்த வேள்விக்குளத்தில் எரியெழுப்பி வைதிகர் எழுவர் வேதமோதிக் கொண்டிருந்தனர். இடப்பக்கம் உயரமில்லாது அமைக்கப்பட்ட மேடைமேல் இசைச்சூதர்கள் தங்கள் யாழ்களுடனும் முழவுகளுடனும் காத்திருந்தனர். அரசகுடியினர் அமர்வதற்கான மேடை மரவுரி விரிக்கப்பட்டு அதன்மேல் அரியணையும் மயிலணையும் அணியணைகளும் போடப்பட்டு காத்திருந்தது. அதன் வளைந்த மேற்கூரையிலிருந்து புதுமலர் மாலைகளும் தளிர்த் தோரணங்களும் தொங்கி காற்றில் உலைந்தன.

முற்றத்தைச் சுற்றி நடப்பட்டிருந்த மூங்கில்கழிகளை இணைத்துக் கட்டிய வடங்களிலிருந்து மலர் மாலைகளும் துணித் தோரணங்களும் தொங்கின. பாவட்டாக்களும் அணிப்பட்டங்களும் காற்றில் குச்சலம் அசைய திரும்பி உலைந்து பொறுமையிழந்த மயில்களென விழிமயக்கு காட்டின. மணநிகழ்வுக்கு வந்துள்ள அரசர்கள் அமர்வதற்கென போடப்பட்ட பீடங்களின் மேல் வெண்பட்டுகளை ஏவலர் விரித்துக் கொண்டிருந்தனர். பெருங்குடியினரும் குலத்தலைவர்களும் வணிகர்களும் அமர்வதற்கான பீடங்களின் மேல் மரவுரிகள் விரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குலத்திற்கும் உரிய கொடிகள் அவ்விருக்கை வரிசைகளின் தொடக்கத்தில் நடப்பட்டு தெற்கிலிருந்து முற்றத்தைக் கடந்து சென்ற காற்றில் படபடத்தன.

நூற்றெட்டு கால் மண்டபத்தில் மலர்களும் காய்களும் கனிகளுமாக பொற்குடங்களில் நீரும் வெள்ளி நாழிகளில் ஒன்பது வகை மங்கலக் கூலங்களும் ஒருக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அருகே இடையில் கைவைத்து கர்ணகர் நின்றிருந்தார். வெண்தலைப்பாகை மேல் அவர் சூடிய நாரை இறகை தொலைவிலேயே கண்டு அணுகிய ரிஷபன் மூச்சிரைக்க நின்று “அமைச்சரை வணங்குகிறேன். மந்தணச்செய்தி ஒன்றுள்ளது” என்றான். அக்குரலிலேயே பெரும்பாலும் உய்த்துணர்ந்து கொண்ட கர்ணகர் திரும்பி அவன் தோளில் கைவைத்து “என்ன செய்தி?” என்றார். “இளைய யாதவர்” என்றான் ரிஷபன். “படையுடனா?” என்றார் கர்ணகர். அவன் “இல்லை அமைச்சரே, அவரும் இளம்பெண்ணொருத்தியும் அணுக்கர்கள் சிலரும் மட்டுமே” என்றான்.

கர்ணகர் அருகே நின்ற தன் ஏவலனிடம் “நீர் சென்று படைத்தலைவரிடம் எனது ஆணையை அளியும். நமது எல்லைகள் அனைத்திலும் உடனே படை நகர்வு நிகழ்ந்தாகவேண்டும். நான் இளவரசர்களை சந்தித்தபின் வந்து மேலே என்ன செய்வதென்று ஆணையிடுகிறேன்” என்றபின் திரும்பி ரிஷபனிடம் “வருக!” என்றபின் உடல் குலுங்க அரண்மனை நோக்கி ஓடினார். ரிஷபன் ஒரு கணம் அவரை நோக்கி நின்றபின் தொடர்ந்தான்.

அவர் அரண்மனைப் படிகளில் ஏறும்போது விழவுச்செயலகர் அவரை நோக்கி வந்து “அரசர்கள் எழுந்தருளலாமா என்கிறார்கள். விழவுக்கு தடையேதுமில்லையே?” என்றார். கர்ணகர் சீற்றத்துடன் “என்ன தடை? தடையை எதிர்பார்க்கிறீரா? தடை நிகழ்ந்தால்தான் உமது உள்நிறையுமா?” என்றார். “இல்லை, அதில்லை” என்றார் செயலகர். “எந்தத்தடையும் இல்லை. அனைத்தும் சித்தமாகட்டும். இன்னும் அரைநாழிகைக்குள் அரசகுடியினர் அவை எழுவார்கள்” என்றபின் சால்வையை அள்ளிச்சுற்றிக்கொண்டு ஓடினார். செயலகர் ரிஷபனை நோக்க அவன் அவரது விழிகளைத் தவிர்த்து தானும் தொடர்ந்தான்.

அரண்மனையின் இடைநாழிகளை அடைந்து தன்னை நோக்கி விரைந்து வந்த துணை அமைச்சர்களைப் பார்த்து கையசைத்து ஆணைகளை இட்டுக் கொண்டே சென்றார் கர்ணகர். “படைத்தலைவர்களை இளவரசரின் மந்தண அறைக்கு வரச்சொல்லுங்கள். அமைச்சர் பிரபாகரரும் அங்கு வரட்டும்” என்றார். துணை அமைச்சர் கிருதர் “அரசருக்குச் செய்தி?” என்று தொடங்கியதுமே “அரசருக்கு ஏதும் சொல்லப்படவேண்டியதில்லை சொல்லப்படவேண்டுமென்றால் அது மூத்தவரின் ஆணைப்படியே” என்றார் கர்ணகர். “ஆனால் எதுவும் தெரியவேண்டியதில்லை. விழவு நிகழட்டும்… அரசர் அவையமரட்டும். மங்கலங்கள் தொடங்கட்டும்.”

மூச்சிரைக்க இடைநாழியின் எல்லையிலிருந்த குறுகலான மரப்படிகளில் பாய்ந்து ஏறினார். பழைமையான மரப்படிகள் கருகியவை என தெரிந்தன. மணத்தன்னேற்பு நிகழ்வுக்காக புதுப்பிக்கப்பட்ட அவற்றில் ஓரிரு படிகள் மட்டும் புதுமர நிறத்தில் பல்வரிசையில் பொன் கட்டியதுபோல தனித்துத் தெரிந்தன. படிகளின் கைப்பிடிகள் பட்டு சுற்றப்பட்டிருந்தன. தூண்கள் தோறும் வண்ணப்பாவட்டாக்கள் காற்றில் அசைந்தன. ரிஷபன் அதற்கு முன் அரண்மனைக்குள் நுழைந்ததில்லை. அது உயரமில்லாத மரக்கூடங்களும் சிற்றறைகளும் கொண்டது என்பது அவனுக்கு ஏமாற்றம் அளித்தது. ஆனால் உள்ளம் ஒவ்வொன்றையும் வியந்துகொண்டும் இருந்தது.

அரண்மனையின் இரண்டாவது மாடியிலிருந்த மந்தண அறைக்குள் சென்ற கர்ணகர் அங்கு பீடத்தில் அரசணிகோலத்தில் அமர்ந்து சுவடிகளை நோக்கிக் கொண்டிருந்த அனுவிந்தரை நோக்கி தலைவணங்கி “இளவரசே” என்றார். அவர் வருவதை ஓசையாலேயே உணர்ந்து திகைத்து எழுந்த அனுவிந்தர் “இளைய யாதவரா? வந்துவிட்டாரா?” என்றார். “ஆம்” என்றார் கர்ணகர். “எங்குளார்?” என்றார் அனுவிந்தர். “நகர் நுழைந்துள்ளார்.” அனுவிந்தர் சுவடியை குறுபீடத்தில் வீசிவிட்டு உள்ளறைக்குள் விரைய அவரது சால்வை தரையில் இழுபட்டு விழுந்தது. அனுவிந்தரைத் தொடர்ந்து கர்ணகரும் செல்ல சற்று தயங்கியபின் ரிஷபனும் தொடர்ந்தான்.

உள்ளறை மேலும் சிறியது. அங்கே சிறிய பொற்பேழை ஒன்றிலிருந்து அருமணிகளை எண்ணி பிறிதொன்றில் போட்டுக்கொண்டிருந்த விந்தர் காலடியோசைகேட்டு திகைத்தெழுந்து “என்ன இளையோனே?” என்றார். ”நாம் அஞ்சியதுதான் மூத்தவரே. இளைய யாதவர் நகர் நுழைந்திருக்கிறார்” என்றார் அனுவிந்தர். “யார்? எப்போது?” என்றார் விந்தர் ஏதும் விளங்காமல். கர்ணகர் உரக்க “சற்று முன்னர்தான் அரசே. இவர் தென்மேற்குக் கோட்டைக்காவலர். இவர்தான் செய்தி கொணர்ந்தார்” என்றார். ஒருமுறை இமைத்துவிட்டு “படையுடனா?” என்றார் விந்தர். “இல்லை அரசே, படை ஏதும் கொணரவில்லை. தனியாக நகர் நுழைந்தார். நான் அவரைக் கண்டேன்” என்றான் ரிஷபன்.

“அவ்வண்ணமெனில் அவர்கள் இதற்குள் அரண்மனை புகுந்திருக்க வேண்டும். இங்கே இன்னும் அரைநாழிகைக்குள் மணத்தன்னேற்பு தொடங்கவிருக்கிறது என்று அறிந்திருக்கிறார்” என்றார் விந்தர். அனுவிந்தர் “ஆம். நான் அதை எண்ணத்தவறிவிட்டேன் அவந்தி எல்லைக்குள் நுழைந்திருந்தால் இந்நேரம் மாகிஷ்மதிக்குள்தான் வந்திருக்கவேண்டும். ஆனால் அவர்கள் நகருள் வந்த செய்தி கோட்டை வாயிலிலிருந்து இன்னும் நமக்கு வரவில்லை” என்றார். “இளவரசே, அவர்கள் மிக எளிய கோலத்தில் வந்தனர். நான் சற்று பிந்தியே உய்த்தறிந்தேன். கோட்டைக்காவலர் கூட்டத்தில் அவர்களை தவறவிட்டிருக்கலாம்” என்றான் ரிஷபன்.

“ஆம், அதுவே நிகழ்ந்திருக்கும்” என்றபின் அனுவிந்தர் வெளியே ஓடி அங்கு வந்த துணைஅமைச்சர் கர்க்கரிடம் “ஒற்றர்களை கேளுங்கள். நான்கு பக்கமும் படைகளை அனுப்புங்கள். இந்நகருக்குள் எவ்வழியிலேனும் இளைய யாதவரும் துணை வந்த பெண்ணொருத்தியும் நுழைந்திருக்கிறார்களா என்று நான் அறிந்தாகவேண்டும்” என்றார். “இக்கணமே இளவரசே” என்றபடி கர்க்கர் இறங்கி வெளியே ஓடினார். அனுவிந்தர் திரும்பி தன் பின்னால் வந்த கர்ணகரிடம் “நகர் நுழைந்திருந்தால் இன்னும் அரை நாழிகைக்குள் நமக்கு தெரிந்துவிடும். இந்நகர் ஒரு நாழிகை நேரத்திற்குள் சுற்றி வரும் அளவுக்கே சிறியது. இதில் எங்கும் எவரும் மறைந்துவிடமுடியாது” என்றார்.

அனுவிந்தர் அறைக்குள் மீண்டும் சென்றதும் விந்தர் “இளையோனே, அவருடன் ஏன் பெண்ணொருத்தி வருகிறாள்?” என்றார். பின்னர் கர்ணகரிடம் “அதைத்தான் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. புரவியில் ஓரிரவுக்குள் இத்தனை தொலைவு வரும் பெண்ணென்றால் அது சத்யபாமை மட்டும்தான். தன் முதல் துணைவியுடன் புதுமணம் கொள்ள அரசனொருவன் வருவானா என்ன?” என்றார். அனுவிந்தர் அதுவரை அதை எண்ணவில்லை. “ஆம். அவள் யாரெனத் தெரிந்ததா?” என்று கர்ணகரிடம் கேட்டார். “இல்லை இளவரசே” என்றார் கர்ணகர். ரிஷபன் “அவள் யாதவப்பெண் போல தெரிந்தாள். மிகஇளையவள்…” என்றான்.

விந்தர் பேழை இரண்டையும் மூடி வைத்துவிட்டு பீடத்தில் கால் தளர்ந்தவர் போல் அமர்ந்து தன் முகத்தை கைகளில் வைத்துக் கொண்டார். “என்னால் எதையும் எண்ணமுடியவில்லை. இந்த மணத்தன்னேற்புக்கு ஒரே ஒருவர் வரலாகாது என்று எண்ணினோமென்றால் அது இளைய யாதவரே. அவர் வருவாரென்றால் நாம் எண்ணிய எதுவும் நடக்கப்போவதில்லை” என்றார். அனுவிந்தர் “உளம் தளரவேண்டியதில்லை மூத்தவரே. அவர் படை வல்லமையுடன் இங்கு வரவில்லை. அஸ்தினபுரியின் அரசரோ திறன்மிக்க வில்லவரும் வாள்வீரரும் புடை சூழ வந்துள்ளார். நமது படைகள் இங்குள்ளன. நம்மை வென்று இங்கிருந்து அவர் செல்லமுடியாது. வந்து களம் நின்றாலும் கதை ஏந்தி போரிடும் வல்லமை கொண்டவரல்ல” என்றார்.

கர்ணகர் “பீமசேனரும் கீசகரும் பலராமரும் ஜராசந்தரும் வராதபோது பிறிதொருவர் நமது பெருங்கதாயுதத்தை தூக்கிச் சுழற்றி களம் வெல்வதைப்பற்றி எண்ணவேண்டியதேயில்லை” என்றார். அனுவிந்தர் “ஆம், அவர் களம் வந்து நிற்கப்போவதில்லை” என்றார். ரிஷபன் “ஒருவேளை மகளிர் மாளிகையைக் கடந்து நம் இளவரசியை கவர்ந்துசெல்ல அவர்கள் முயலக்கூடும்” என்றதும் அனுவிந்தர் திடுக்கிட்டு “மகளிர் மாளிகைக்கா? அவரா?” என்றபின் எழுந்து “ஆம். ஏன் அவர் பெண்ணுடன் வந்தார் என்று புரிகிறது. மகளிர் மாளிகைக்குள் சென்று அவளை கவரப்போகிறவள் அவளே” என்றார்.

“யார்?” என்றார் விந்தர். “அவள்தான். அவரது தங்கை சுபத்திரையைப் பற்றி சூதர் பாடி கேட்டிருக்கிறேன். தன் அன்னையைப் போல் பெருந்தோள் கொண்டவள். கதாயுதமேந்திப் போரிடும் பாரதவர்ஷத்துப் பெண் அவளொருத்தியே என்பார்கள்.” தன் உடைவாளை சீரமைத்தபடி அனுவிந்தர் வெளியே ஓடினார். குறடுகள் ஒலிக்க படிகளில் விரைந்திறங்கியபடி தன்னைத் தொடர்ந்து ஓடி வந்த கர்ணகரிடம் நமது “படைகளனைத்தும் மகளிர் மன்றுக்கு செல்லட்டும். அங்கே எவர் நுழைந்தாலும் அக்கணமே கொன்று வீழ்த்த ஆணையிடுகிறேன்” என்றார்.

அவர்கள் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தபோது எதிரே வந்த செயலகர் “அமைச்சரே, அரசர்கள் அவையமரத்தொடங்கிவிட்டனர். குலத்தலைவர்களும் குடிமுதல்வர்களும் அவை நிறைந்து கொண்டிருக்கின்றனர்” என்றார். “ஆம், அது நிகழட்டும்…” என்றார் அனுவிந்தர். அவர் தலைவணங்கி திரும்பிச்செல்ல கர்ணகரிடம் “இளவரசியை அவை மேடைக்கு கொண்டுவர வேண்டியதில்லை என்று எண்ணினோம். ஆனால் இப்போது அவள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய இடம் அவை மட்டுமே. அவளை படைசூழ அவைக்கு கொண்டு வருவோம். அவர் அவைக்கு வந்து நம் போட்டியில் வென்று அவளை அடையட்டும். இல்லையேல் அரசர்கள் அனைவரையும் போரில் வெல்லட்டும்” என்றார்.

இடைநாழிக்கு அவர்கள் வருவதற்குள்ளேயே மறுபக்க வாயிலினூடாக ஓடிவந்த படைத்தலைவர் முத்ரசேனர் உரக்க “யாதவ இளவரசி மகளிர் மாளிகைக்குள் நுழைந்துவிட்டார்கள் அரசே. அங்கு நம் காவலர் சிலரைக்கொன்று இளவரசியின் அறைக்குள் சென்றுவிட்டார்கள்” என்று கூவினார். “சூழ்ந்துகொள்ளுங்கள். மகளிர் மாளிகையிலிருந்து எவரும் வெளியேறக்கூடாது. அதன் நான்கு வாயில்களிலும் படைகள் திரளட்டும்” என்று கூவியபடி குறடுகள் தடதடக்க அனுவிந்தர் வாயில் நோக்கி ஓடினார். மேலே முதல்படியில் வந்து நின்ற விந்தர் “என்ன? என்ன நிகழ்கிறது இளையவனே?” என்றார்.

“யாதவ இளவரசி மகளிர் மாளிகைக்குள் நுழைந்துவிட்டாள். இளவரசியை கவர்ந்துசெல்ல முயல்கிறாள்” என்றார் அனுவிந்தர். “அவள் இளவரசியை மறுபக்கமிருக்கும் கலவறைக்கான சாலைவழியாக கொண்டுசெல்லக்கூடும். இளைய யாதவர் தேருடன் அங்கு வருவார் என நினைக்கிறேன். உடனே அங்கு மேலும் படைகள் செல்லட்டும்.” கர்ணகர் “இளவரசே, இடைநாழி வழியாக அவர்கள் அவைமன்றுக்கு வரமுடியும்…” என்றார். “அவைமன்றுக்கு ஒருபோதும் வரமாட்டார்கள்… அங்கே அரசர்குழு படைகளுடன் உள்ளது” என்று சொல்லியபடி இடைநாழிக்குச் சென்றதுமே அனுவிந்தர் திகைத்து நின்றார். அவைமன்றில் எழுந்த ஒலிகள் அனைத்தையும் சொல்லிவிட்டன.

கர்க்கர் அத்திசையிலிருந்து பாய்ந்துவந்து “இளவரசே” என்றார். “இளவரசியை அழைத்தபடி யாதவ இளவரசி அவை மன்றுக்குள் நுழைந்துவிட்டிருக்கிறார்.” அனுவிந்தர் “அங்கு எவர் இருக்கிறார்கள்?” என்றார். “அரசரும் இரு அரசியரும் மன்றமர்ந்துவிட்டனர். அஸ்தினபுரியின் இளவரசரும் பெரும்பாலான அரசர்களும் வந்துவிட்டனர். மன்று நிறைந்துள்ளது” என்றபடி ஓடிய அனுவிந்தருக்கு இணையாக ஓடினார் கர்க்கர். பின்னால் வந்த விந்தர் “இங்கே, மன்றுக்கே வந்துவிட்டார்களா? இளைய யாதவர் எங்கே?” என்று கூவியபடி படிகளில் எடைமிக்க காலடிகளுடன் ஓடிவந்தார்.

ரிஷபன் அனுவிந்தருக்குப் பின்னால் ஓடினான். மன்று ஓசைகளும் அசைவுகளுமாக கொந்தளித்துக் கொண்டிருந்தது. அரசரும் அரசியரும் மேடைமேல் எழுந்து நின்றிருக்க மன்றமர்ந்த அனைவரும் எழுந்துநின்று கைகளை வீசி கூச்சலிட்டனர். சிற்றரசர்கள் தங்கள் பீடங்களுக்கு முன் நின்று நோக்க துரியோதனன் மட்டும் பெருந்தோள்களில் தோள்வளைகள் மின்ன மார்பில் தொய்ந்த மணியாரங்களுடன் மீசையை நீவியபடி தொடைகளை நன்கு பரப்பி அசையாமல் அமர்ந்திருந்தான். அவனருகே அவனுடைய ஆடிப்பாவை என துச்சாதனன் அமர்ந்திருந்தான்.

மறுஎல்லையில் என்ன நிகழ்கிறதென்றே அவனால் முதலில் காணமுடியவில்லை. அங்கு வேல்களும் வாட்களும் ஏந்திய வீரர்கள் குழுமி ஒருவரோடொருவர் முட்டித்ததும்பி குழம்பி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அனுவிந்தர் அவர்களை நோக்கி ஓடியபடி “விலகுங்கள்! ஆணை!” என்று கூவினார். அவந்தியின் வீரர்கள் பயிற்சியற்றவர்கள் என்று சொல்லப்படுவதை ரிஷபன் கேட்டிருந்தான். அப்போது அது ஏன் எனத் தெரிந்தது. அனுவிந்தரின் குரல் கேட்டதுமே அத்தனைபேரும் ஒரேசமயம் விலக நடுவே ஒருகையில் மித்திரவிந்தையின் கைகளைப் பற்றி மறுகையில் குருதி சொட்டும் வாளுடன் நின்ற சுபத்திரையை பார்த்தான். அவள் காலடியில் ஏழு படைவீரர்கள் வெட்டுண்டு கிடந்து உடல்நெளிந்தனர்.

முந்தைய கட்டுரைக.நா.சுவின் தட்டச்சுப்பொறி
அடுத்த கட்டுரைஇரு எல்லைகளுக்கு நடுவே