க ந சு வின் கட்டுரையும், அதற்கு உங்கள் விளக்கமும் அருமை. நீங்களும் க நா சு பள்ளி என்றே எனக்கு படுகிறது. க நா சு வின் கருத்தே உங்கள் கருத்தாகவும் உள்ளது.
ஆனாலும் உதாரணமாக எனக்கு கர்நாடக சங்கீதம் ஈர்ப்பு, பழைய மலையாள பாடல்களில் இருந்து வந்தது. ஆக “கல்கியுகம்” என்ற ஒன்று இல்லையெனில் எழுத்து சாதாரண மக்களுக்கு போகுமா? கண்ணதாசன் பாடல்களில் இருந்த எளிமை பட்டினத்தார் பாடல்களில் / அருணகிரிநாதர் பாடல்களில் இல்லை. சில வாரங்களுக்கு முன்பு விவாதித்த சுஜாதா அறிவியல் கதைகள் மற்றுமொரு உதாரணம். வாசகனை அடுத்தபடிக்கு எடுத்த செல்ல வேண்டியதும் எழுத்தாளன் கடமை அல்லவே? [ தனிப்பட்ட முறையில் க நா சு வை நகையாடியது அவரவர் அறிவு குறைவு என்று விட்டு விடுவோம் ]
V.Ganesh
[email protected]
அன்புள்ள கணேஷ்
இந்த விவாதத்தில் எப்போதுமே அனிச்சையாக, மேலே யோசிக்காமல், இந்த வினாவே கேட்கப்படுகிறது என்பதைக் கவனித்திருப்பீர்கள். சுஜாதா விஷயத்திலும் இதே வரிதான் சொல்லபப்ட்டது. இதற்கான பதிலும் பலமுறை சொல்லப்பட்டு விட்டது. ஆனாலும் மீண்டும் கேட்கப்படும். மீண்டும் சொல்லியாகவேண்டும்.
கல்கி எளிய வாசகர்களுக்கு வாசிப்பை அறிமுகம் செய்தார். இளம் மனங்களில் ரசனையை உருவாக்கினார். தமிழ்ப்பண்பாட்டின் பல கூறுகளை அவர் எடுத்துச் சொன்னார். இதை யாரும் மறுக்கவில்லை. அதற்கான அங்கீகாரம் அவருக்கு அளிக்கப்படுவதில் பிழையும் இல்லை. ஆனால் அதைவைத்து அவரை பேரிலக்கியவாதியாக மதிப்பிடக்கூடாது என்றுதான் க.நா.சு சொன்னார்.
கல்கியின் எழுத்தை இலக்கியத்தின் உச்சமாக கருதி அதையொட்டி சிந்தனைசெய்தால் நாம் நல்ல இலக்கியங்களை உருவாக்க முடியாதென்று சொன்னார் க.நாசு. உலக இலக்கியங்கள் மீதும், இந்தியப்பேரிலக்கியங்கள் மீதும், நம் தமிழ் பண்டை இலக்கியங்கள்மீதும் உள்ள வாசிப்பே நம் ரசனையை உருவாக்கும் என்றும் நல்ல இலக்கியங்களை ரசிக்கவும் உருவாக்கவும் அதுவே அவசியம் என்றும் வாதிட்டார். அதாவது அவர் கல்கியை நிராகரிக்கவில்லை. அவருக்கான இடத்தை கொடுத்தார். அவரது தகுதிக்கு மீறிய இடம் அவருக்கு அளிக்கப்படுவதை மட்டுமே அவர் எதிர்த்தார்.
இப்படிச் சொல்லலாம். கணிதமேதை ராமானுஜன் தமிழகத்தில் பிறந்தவர். அவரது ஆய்வுகளை அவர் வாழ்ந்த காலத்தில் இங்கே மிகமிகச் சிலரே புரிந்துகொண்டார்கள். மேலைநாட்டு ஆய்வாளர் கவனத்துக்கு வந்த ஒரே காரணத்தால்தான் அவரை உலகம் அறிந்தது. இளமையின் வறுமையால் நோயுற்று நலிந்த உடல்கொண்ட அவர் இளமையிலேயே மறைந்தார். அவரது சாதனைகள் என்ன என்பதை அறிந்த தமிழர்கள் இன்னமும் கூட சில ஆயிரம்பேரே இருப்பார்கள். தன் வாழ்நாள்முழுக்க அவர் கணித ஞானத்தின் உச்சகணங்களை அடைவதிலேயே கவனமாக இருந்தார். மரணத்தருவாயில்கூட.
மறுபக்கம் ஒரு மிகச்சிறந்த கணித ஆசிரியர் அக்காலத்தில் அதே திருச்சியில் ஓர் உயர்நிலைப்பள்ளியில் இருந்தார் என்று கொள்வோம். அவர் பல ஆயிரம் இளைஞர்களுக்கு கணிதத்தில் சுவையை உருவாக்கினார் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் மாணவர்களில் ஒருவர் ‘ராமானுஜன் கணக்கு எவனுக்கு தெரிஞ்சது? எங்க கணக்குசார் கணக்குச் சொல்லிக்கொடுத்து எத்தனைபேர் முன்னுக்கு வந்தாங்க. அவரு வேஸ்ட், இவருதான் சூப்பர்’ என்று சொன்னால் அது எந்த அளவுக்கு பொருத்தமான தர்க்கமாக அமையும்?
சரி, ஒரு சமூகமே ராமானுஜனை புறக்கணித்து கணக்குவாத்தியார்தான் சிறந்த கணித மேதை என முடிவுசெய்தது என்றால் அச்சமூகத்தின் இளைஞர்களுக்கு அது அளிக்கும் முன்னுதாரணம் என்ன? கணக்கு வாத்தியார் சொல்லிக்கொடுக்கும் பழைய பாடங்கள் எளிமையாகப் புரிகின்றன , ராமானுஜன் போடும் கணக்குகள் ‘மக்களுக்கு’ புரிவதில்லை என்று சொன்னார்கள் என்றால் அது எந்த அளவுக்கு சரி?
க.நா.சு அதைத்தான் சொல்கிறார். ராமானுஜனை அவர் சுட்டிக்காட்டுகிறார். கணக்கு வாத்தியார் பெரியவர்தான். அவரது சேவை தேவையானதே. அவருக்கு கும்பிடு போடலாம்தான். ஆனால் ராமானுஜன்தான் தமிழின் சொத்து. அவர்தான் தமிழ்ச்சமூகத்தின் உச்சமுனை. அதை உள்வாங்கி அங்கிருந்து மேலே செல்ல முனவிவதே இயல்பான வளர்ச்சி. ஆகவே ராமானுஜனை புரிந்துகொள்வதும் அவரை முன்னோடியாகக் கொள்வதும்தான் தமிழ் சமூகத்தை மேம்படுத்தும். அவர்மீதுதான் தமிழ் அறிவுலகின் கவனம் குவிந்திருக்கவேண்டும். அடிப்படைகளை நாம் ராமானுஜனை வைத்தே உருவாக்க வேண்டும்.
கல்கி இலக்கியத்தில் சுட்டிக்காட்டிய ராமானுஜன்தான் புதுமைப்பித்தன். இருவருடைய வாழ்க்கைக்கும் பெரும் ஒற்றுமை உண்டு. புதுமைப்பித்தன் தமிழில் நிகழ்ந்த இன்னொரு மேதை. அவர் பணம் புகழ் எதற்காகவும் எழுதவில்லை. அவரது மனம் கட்டற்றது. தமிழ்ப்பண்பாட்டின் மிகச்சிறந்த மனங்களுக்காக அவர் எழுதினார் , இன்றும் நாளையும் இருக்கும் தமிழ் ரசனையை நோக்கி எழுதினார் என்று சொல்லலாம். தன் விமர்சனங்களை, சந்தேகங்களை, கொந்தளிப்புகளை ,ஆன்மீகமான மலர்தல்களை புதுமைப்பித்தன் மிக அந்தரங்கமான வேகத்துடன் எழுத்தாக்கினார்.
அவர்தான் இலக்கியத்தின் உச்சமுனை. அங்கிருந்து மேலே சென்றவர்களே இலக்கிய இயக்கத்தை முன்னெடுத்தார்கள். தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் புதுமைப்பித்தனின் கதைகளில் இருந்து மீண்டும் மீண்டும் புதிய தளங்களைக் கண்டுகொள்ளலாம். இன்னமும்கூட அவரது பல கதைகளை தமிழ் வாசக உலகம் முழுக்க உள்வாங்கிக் கொள்ளவில்லை. தன் வாழ்நாளெல்லாம் க.நா.சு புதுமைப்பித்தனை முன்வைத்துக்கொண்டே இருந்தார். இன்றுவரை தமிழ்ச்சிற்றிதழ் உலகில் புதுமைப்பித்தன் ஒரு முன்னோடிபிம்பமாக இருப்பதற்கு அவரே காரணம்.
க.நா.சு கல்கி புதுமைப்பித்தன் என்ற இருமையை உருவாக்கினார். கல்கி வாசக ரசனைக்காக எழுதியவர். வாசகர்களை மகிழ்வூட்டுவதே அவரது நோக்கம். வாசகர்களுக்கு எளிய முறையில் சில பண்பாட்டு அறிமுகங்களை அளித்தார். அவரை நல்ல கேளிக்கை எழுத்தாளர் என்றார் கநாசு. ஆனால் புதுமைப்பித்தன் நேர்மாறானவர். அவருக்கு வாசகர் முக்கியமில்லை. ‘வாழையடி வாழையாக’ வரும் யாருக்காகவோ தான் எழுதுவதாக அவர் சொன்னார். கல்கி புகழின் உச்சியில் இருந்தார். அரசியலில் சினிமாவில் ஜொலித்தார். வெகுஜன ரசனையின் குறியீடாக இருந்தார். புதுமைப்பித்தன் வறுமையில் புறக்கணிப்பில் திளைத்து தனிமையில் அற்பாயுளில் அழிந்தார்.
தன் கலையை முழுக்க முழுக்க தீட்டி தமிழ்ப்பண்பாட்டுக்கு அதன் உச்சத்தை அளித்துவிட்டுச் செல்வதைத்தவிர புதுமைப்பித்தன் எதையும் செய்யவில்லை. அதற்கு பதிலாக தமிழ்ச்சமூகம் அவருக்கு எதுவும் அளிக்கவில்லை. இன்றும்கூட! எத்தனையோ சர்வசாதாரணமான எழுத்தாளர்களுக்கு அரசியல்வாதிகளுக்கு சாதித்தலைவர்களுக்கு தமிழகத்தில் சாலைகள் உள்ளன, நினைவகங்கள் உள்ளன, சிலைகள் உள்ளன. புதுமைப்பித்தனுக்கு ஒரு சிறு நினைவுச்சின்னம் கூட இல்லை. ஏன் கணிதமேதை ராமானுஜனுக்குக் கூட இங்கே எந்த நினைவகமும் இல்லை. நம் சமூகத்தில் நிலவும் அந்த மௌட்டீகத்தைச் சுட்டிக்காட்டுவதையே க.நா.சு கடமையாகக் கொண்டார். அந்தப்பணி இன்னும் பெரும்பங்கு மிச்சம் என்பதே உண்மைநிலை.
புதுமைப்பித்தனே க.நாசு இலக்கியவாதிகளுக்குக் காட்டிய முன்னுதாரண வடிவம். வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எழுத்தாளனுக்கு முக்கியமே அல்ல என்றார் அவர். சமகால அங்கீகாரம், புகழ் எதுவும் அவனுடைய இலக்கு அல்ல. லௌகீகமான தோல்வி என்பது கலைஞனுக்கு இயல்பாக கிடைப்பதுதான். மாபெரும் கலைஞர்களில் பலர் சமகால அங்கீகாரம் இல்லாமல் அழிந்தவர்கள். காலம்சென்று பல்லாண்டு கழித்து கண்டுகொள்ளப்பட்டவர்கள் உண்டு. சமகாலத்தில் ஒட்டுமொத்தச் சமூகத்தாலும் புரிந்துகொள்ளப்படாமல் போன, தூற்றப்பட்ட, கொடுமைக்கு ஆளான, ஏன் கொல்லப்பட்ட மாபெரும் கலைஞர்கள் உண்டு. கலைஞனின் பணி என்பது அவனுடைய கலையின் உச்சகட்ட சாத்தியத்தை சமூகத்துக்கு அளித்துவிட்டுச் செல்வதே.
ஒரு கட்டுரையில் கல்பற்றா நாராயணன் இதற்கு ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரை உதாரணம் காட்டுகிறார். அவர் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து, ஒவ்வொரு நொடியும் தன் உடலை பயிற்றுவித்து, ஏற்கனவே ஒருவர் ஓடிய வேகத்தில் ஒரு கணநேரத்தை குறைக்கிறார். அதன் மூலம் அவர் மானுடஉடலின் சாத்தியத்தை ஒரு அணுவளவுக்கு மேலே கொண்டுசெல்கிறார். அடுத்தவர் அதில் இன்னொரு கணத்தை குறைப்பார். அந்த உடல்கள் வழியாக மானுடம் தன் சாத்தியங்களை வளர்த்துக்கொண்டே செல்கிறது.
தன் அறைக்குள் கதவைமூடி அமர்ந்து ஒரு காவியத்தை உருவாக்கும் கலைஞன் செய்வதும் அதையே. ஒரு கணிதமேதை, ஒரு தத்துவஞானி செய்வதும் அதையே. அவன் மானுடத்தின் அன்று வரையிலான வளர்ச்சியின் எல்லையை மேலும் விரிவாக்கம் செய்கிறான். ஒட்டுமொத்த மானுட சமூகத்துக்காக அதைச்செய்கிறான் அவன். ஒருவேளை அவன் வாழும் காலத்தில் ஒரே ஒருவர்கூட அதை புரிந்துகொள்ளாமலிருக்கலாம். ஆனால் மானுடம் பின்னொருநாள் அங்கே வந்துசேரும். அந்த தியாகமும் அர்ப்பணிப்புமே ஒரு சமூகத்தின் முன்னுதாரணமாக இருக்கவேண்டும். அனைத்து துறைகளிலும் உச்சங்களை நோக்கிச் செல்வதே அதன் கனவாக இருக்கவேண்டும். வாழ்நாள் முழுக்க தன்னலம் பாராமல் தன் வெற்றி கருதாமல் க.நா.சு தமிழ்ச்சமூகம் நோக்கிச் சொல்லிக்கொண்டிருந்தது அதைத்தான்.
உண்மையில் சிற்றிதழ் சார்ந்த இலக்கியத்தின் அடிப்படை மனநிலையை உருவாக்கியது அதுதான். சமகாலத் தோல்விகள் லௌகீகத் தோல்விகள் கலைஞனின் மாபெரும் வெற்றியாகக் கூடும் என்று சிற்றிதழ்சார்ந்த எழுத்துலகம் நம்பியது க.நா.சுவால்தான். இன்றல்லது என்றாவது என் எழுத்து வாசிக்கப்படும் என நம் கலைஞர்களை எழுதச்செய்த விசை அவ்வாறே உருவானது. அவர்களின் கால்தூசுக்குப் பெறுமானமில்லாதவர்கள் மேடைகளில் முழங்க, அங்கீகாரங்களில் சிறக்க அவர்கள் தங்கள் இருண்ட உலகில் இருந்துகொண்டு தங்கள் கலையில் தங்களை புதைத்துக்கொண்டார்கள். தங்கள் ஆன்மாவை ஒளியுடன் எழுப்பி தங்கள் ஆக்கங்களை சிறக்கச் செய்தார்கள்.
நம் முன்னோடி படைப்பாளிகள் பட்டினி கிடந்தார்கள். எழுத இடமில்லாமல் பூங்காத்தெருக்களில் கூட்டம் வருவதற்கு முன் அதிகாலையில் வந்திருந்து பனியில் அமர்ந்து எழுதினார்கள். காகிதம் வாங்க தாளில்லாமல் துண்டுபிரசுரங்களைச் சேகரித்து ஒருபக்கத்தில் எழுதினார்கள். மனைவிதாலியை விற்று அவற்றை அச்சிட்டார்கள். நூல்களை தலையில் சுமந்து கொண்டுசென்று விற்றார்கள். பிழைப்புக்காக எடுபிடி வேலை செய்தார்கள். அந்த எழுத்துக்கு வசைகளை பரிசாகப் பெற்றார்கள். அவ்வாறு அவர்கள் உருவாக்கிய இலக்கியச் செல்வமே இன்றும் தமிழின் சாரமாக உள்ளது. அந்த உத்வேகத்துக்குக் காரணம் க.நா.சு உருவாக்கிய புதுமைப்பித்தன் என்ற மகத்தான முன்னுதாரணம்.
அந்த முன்னுதாரணம் சமரசமில்லாத கறாரான விமர்சன அளவுகோல்களினால் ஆனது. ஒவ்வொருவரையும் அவரவர் இடத்தில் அமர்த்தி மேலும் மேலும் உச்சங்களை நோக்கிச் செல்லும் உத்வேகத்தால் ஆனது. தான் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் வரலாற்றில் விழுகிறது என்ற பிரக்ஞையால் ஆனது. அதை அனைவராலும் புரிந்துகொள்ள முடியாதுதான். அவர்களை ஒரு பொருட்டாக எண்ணாமல் தன் காலகட்டத்து தீவிரமனங்களை மட்டுமே இலக்காக்கிச் செயல்படுவது அது. இன்றும் அது ஒரு வாழும் பேராற்றல்தான்.
ஜெ
மறுபிரசுரம் , முதற்பிரசுரம் 2010/ ஆகஸ்ட்