«

»


Print this Post

புதுமைப்பித்தனின் வாள்


க ந சு வின் கட்டுரையும், அதற்கு உங்கள் விளக்கமும் அருமை. நீங்களும் க நா சு பள்ளி என்றே எனக்கு படுகிறது. க நா சு வின் கருத்தே உங்கள் கருத்தாகவும் உள்ளது.

ஆனாலும் உதாரணமாக எனக்கு கர்நாடக சங்கீதம் ஈர்ப்பு, பழைய மலையாள பாடல்களில் இருந்து வந்தது. ஆக “கல்கியுகம்” என்ற ஒன்று இல்லையெனில் எழுத்து சாதாரண மக்களுக்கு போகுமா? கண்ணதாசன் பாடல்களில் இருந்த எளிமை பட்டினத்தார் பாடல்களில் / அருணகிரிநாதர் பாடல்களில் இல்லை. சில வாரங்களுக்கு முன்பு விவாதித்த சுஜாதா அறிவியல் கதைகள் மற்றுமொரு உதாரணம். வாசகனை அடுத்தபடிக்கு எடுத்த செல்ல வேண்டியதும் எழுத்தாளன் கடமை அல்லவே? [ தனிப்பட்ட முறையில் க நா சு வை நகையாடியது அவரவர் அறிவு குறைவு என்று விட்டு விடுவோம் ]

V.Ganesh
[email protected]

அன்புள்ள கணேஷ்

இந்த விவாதத்தில் எப்போதுமே அனிச்சையாக, மேலே யோசிக்காமல், இந்த வினாவே கேட்கப்படுகிறது என்பதைக் கவனித்திருப்பீர்கள். சுஜாதா விஷயத்திலும் இதே வரிதான் சொல்லபப்ட்டது. இதற்கான பதிலும் பலமுறை சொல்லப்பட்டு விட்டது. ஆனாலும் மீண்டும் கேட்கப்படும். மீண்டும் சொல்லியாகவேண்டும்.

கல்கி எளிய வாசகர்களுக்கு வாசிப்பை அறிமுகம் செய்தார். இளம் மனங்களில் ரசனையை உருவாக்கினார். தமிழ்ப்பண்பாட்டின் பல கூறுகளை அவர் எடுத்துச் சொன்னார். இதை யாரும் மறுக்கவில்லை. அதற்கான அங்கீகாரம் அவருக்கு அளிக்கப்படுவதில் பிழையும் இல்லை. ஆனால் அதைவைத்து அவரை பேரிலக்கியவாதியாக மதிப்பிடக்கூடாது என்றுதான் க.நா.சு சொன்னார்.

கல்கியின் எழுத்தை இலக்கியத்தின் உச்சமாக கருதி அதையொட்டி சிந்தனைசெய்தால் நாம் நல்ல இலக்கியங்களை உருவாக்க முடியாதென்று சொன்னார் க.நாசு. உலக இலக்கியங்கள் மீதும், இந்தியப்பேரிலக்கியங்கள் மீதும், நம் தமிழ் பண்டை இலக்கியங்கள்மீதும் உள்ள வாசிப்பே நம் ரசனையை உருவாக்கும் என்றும் நல்ல இலக்கியங்களை ரசிக்கவும் உருவாக்கவும் அதுவே அவசியம் என்றும் வாதிட்டார். அதாவது அவர் கல்கியை நிராகரிக்கவில்லை. அவருக்கான இடத்தை கொடுத்தார். அவரது தகுதிக்கு மீறிய இடம் அவருக்கு அளிக்கப்படுவதை மட்டுமே அவர் எதிர்த்தார்.


இப்படிச் சொல்லலாம். கணிதமேதை ராமானுஜன் தமிழகத்தில் பிறந்தவர். அவரது ஆய்வுகளை அவர் வாழ்ந்த காலத்தில் இங்கே மிகமிகச் சிலரே புரிந்துகொண்டார்கள். மேலைநாட்டு ஆய்வாளர் கவனத்துக்கு வந்த ஒரே காரணத்தால்தான் அவரை உலகம் அறிந்தது. இளமையின் வறுமையால் நோயுற்று நலிந்த உடல்கொண்ட அவர் இளமையிலேயே மறைந்தார். அவரது சாதனைகள் என்ன என்பதை அறிந்த தமிழர்கள் இன்னமும் கூட சில ஆயிரம்பேரே இருப்பார்கள். தன் வாழ்நாள்முழுக்க அவர் கணித ஞானத்தின் உச்சகணங்களை அடைவதிலேயே கவனமாக இருந்தார். மரணத்தருவாயில்கூட.

மறுபக்கம் ஒரு மிகச்சிறந்த கணித ஆசிரியர் அக்காலத்தில் அதே திருச்சியில் ஓர் உயர்நிலைப்பள்ளியில் இருந்தார் என்று கொள்வோம். அவர் பல ஆயிரம் இளைஞர்களுக்கு கணிதத்தில் சுவையை உருவாக்கினார் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் மாணவர்களில் ஒருவர் ‘ராமானுஜன் கணக்கு எவனுக்கு தெரிஞ்சது? எங்க கணக்குசார் கணக்குச் சொல்லிக்கொடுத்து எத்தனைபேர் முன்னுக்கு வந்தாங்க. அவரு வேஸ்ட், இவருதான் சூப்பர்’ என்று சொன்னால் அது எந்த அளவுக்கு பொருத்தமான தர்க்கமாக அமையும்?

சரி, ஒரு சமூகமே ராமானுஜனை புறக்கணித்து கணக்குவாத்தியார்தான் சிறந்த கணித மேதை என முடிவுசெய்தது என்றால் அச்சமூகத்தின் இளைஞர்களுக்கு அது அளிக்கும் முன்னுதாரணம் என்ன? கணக்கு வாத்தியார் சொல்லிக்கொடுக்கும் பழைய பாடங்கள் எளிமையாகப் புரிகின்றன , ராமானுஜன் போடும் கணக்குகள் ‘மக்களுக்கு’ புரிவதில்லை என்று சொன்னார்கள் என்றால் அது எந்த அளவுக்கு சரி?

க.நா.சு அதைத்தான் சொல்கிறார். ராமானுஜனை அவர் சுட்டிக்காட்டுகிறார். கணக்கு வாத்தியார் பெரியவர்தான். அவரது சேவை தேவையானதே. அவருக்கு கும்பிடு போடலாம்தான். ஆனால் ராமானுஜன்தான் தமிழின் சொத்து. அவர்தான் தமிழ்ச்சமூகத்தின் உச்சமுனை. அதை உள்வாங்கி அங்கிருந்து மேலே செல்ல முனவிவதே இயல்பான வளர்ச்சி. ஆகவே ராமானுஜனை புரிந்துகொள்வதும் அவரை முன்னோடியாகக் கொள்வதும்தான் தமிழ் சமூகத்தை மேம்படுத்தும். அவர்மீதுதான் தமிழ் அறிவுலகின் கவனம் குவிந்திருக்கவேண்டும். அடிப்படைகளை நாம் ராமானுஜனை வைத்தே உருவாக்க வேண்டும்.

கல்கி இலக்கியத்தில் சுட்டிக்காட்டிய ராமானுஜன்தான் புதுமைப்பித்தன். இருவருடைய வாழ்க்கைக்கும் பெரும் ஒற்றுமை உண்டு. புதுமைப்பித்தன் தமிழில் நிகழ்ந்த இன்னொரு மேதை. அவர் பணம் புகழ் எதற்காகவும் எழுதவில்லை. அவரது மனம் கட்டற்றது. தமிழ்ப்பண்பாட்டின் மிகச்சிறந்த மனங்களுக்காக அவர் எழுதினார் , இன்றும் நாளையும் இருக்கும் தமிழ் ரசனையை நோக்கி எழுதினார் என்று சொல்லலாம். தன் விமர்சனங்களை, சந்தேகங்களை, கொந்தளிப்புகளை ,ஆன்மீகமான மலர்தல்களை புதுமைப்பித்தன் மிக அந்தரங்கமான வேகத்துடன் எழுத்தாக்கினார்.

அவர்தான் இலக்கியத்தின் உச்சமுனை. அங்கிருந்து மேலே சென்றவர்களே இலக்கிய இயக்கத்தை முன்னெடுத்தார்கள். தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் புதுமைப்பித்தனின் கதைகளில் இருந்து மீண்டும் மீண்டும் புதிய தளங்களைக் கண்டுகொள்ளலாம். இன்னமும்கூட அவரது பல கதைகளை தமிழ் வாசக உலகம் முழுக்க உள்வாங்கிக் கொள்ளவில்லை. தன் வாழ்நாளெல்லாம் க.நா.சு புதுமைப்பித்தனை முன்வைத்துக்கொண்டே இருந்தார். இன்றுவரை தமிழ்ச்சிற்றிதழ் உலகில் புதுமைப்பித்தன் ஒரு முன்னோடிபிம்பமாக இருப்பதற்கு அவரே காரணம்.

க.நா.சு கல்கி புதுமைப்பித்தன் என்ற இருமையை உருவாக்கினார். கல்கி வாசக ரசனைக்காக எழுதியவர். வாசகர்களை மகிழ்வூட்டுவதே அவரது நோக்கம். வாசகர்களுக்கு எளிய முறையில் சில பண்பாட்டு அறிமுகங்களை அளித்தார். அவரை நல்ல கேளிக்கை எழுத்தாளர் என்றார் கநாசு. ஆனால் புதுமைப்பித்தன் நேர்மாறானவர். அவருக்கு வாசகர் முக்கியமில்லை. ‘வாழையடி வாழையாக’ வரும் யாருக்காகவோ தான் எழுதுவதாக அவர் சொன்னார். கல்கி புகழின் உச்சியில் இருந்தார். அரசியலில் சினிமாவில் ஜொலித்தார். வெகுஜன ரசனையின் குறியீடாக இருந்தார். புதுமைப்பித்தன் வறுமையில் புறக்கணிப்பில் திளைத்து தனிமையில் அற்பாயுளில் அழிந்தார்.

தன் கலையை முழுக்க முழுக்க தீட்டி தமிழ்ப்பண்பாட்டுக்கு அதன் உச்சத்தை அளித்துவிட்டுச் செல்வதைத்தவிர புதுமைப்பித்தன் எதையும் செய்யவில்லை. அதற்கு பதிலாக தமிழ்ச்சமூகம் அவருக்கு எதுவும் அளிக்கவில்லை. இன்றும்கூட! எத்தனையோ சர்வசாதாரணமான எழுத்தாளர்களுக்கு அரசியல்வாதிகளுக்கு சாதித்தலைவர்களுக்கு தமிழகத்தில் சாலைகள் உள்ளன, நினைவகங்கள் உள்ளன, சிலைகள் உள்ளன. புதுமைப்பித்தனுக்கு ஒரு சிறு நினைவுச்சின்னம் கூட இல்லை. ஏன் கணிதமேதை ராமானுஜனுக்குக் கூட இங்கே எந்த நினைவகமும் இல்லை. நம் சமூகத்தில் நிலவும் அந்த மௌட்டீகத்தைச் சுட்டிக்காட்டுவதையே க.நா.சு கடமையாகக் கொண்டார். அந்தப்பணி இன்னும் பெரும்பங்கு மிச்சம் என்பதே உண்மைநிலை.

புதுமைப்பித்தனே க.நாசு இலக்கியவாதிகளுக்குக் காட்டிய முன்னுதாரண வடிவம். வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எழுத்தாளனுக்கு முக்கியமே அல்ல என்றார் அவர். சமகால அங்கீகாரம், புகழ் எதுவும் அவனுடைய இலக்கு அல்ல. லௌகீகமான தோல்வி என்பது கலைஞனுக்கு இயல்பாக கிடைப்பதுதான். மாபெரும் கலைஞர்களில் பலர் சமகால அங்கீகாரம் இல்லாமல் அழிந்தவர்கள். காலம்சென்று பல்லாண்டு கழித்து கண்டுகொள்ளப்பட்டவர்கள் உண்டு. சமகாலத்தில் ஒட்டுமொத்தச் சமூகத்தாலும் புரிந்துகொள்ளப்படாமல் போன, தூற்றப்பட்ட, கொடுமைக்கு ஆளான, ஏன் கொல்லப்பட்ட மாபெரும் கலைஞர்கள் உண்டு. கலைஞனின் பணி என்பது அவனுடைய கலையின் உச்சகட்ட சாத்தியத்தை சமூகத்துக்கு அளித்துவிட்டுச் செல்வதே.

ஒரு கட்டுரையில் கல்பற்றா நாராயணன் இதற்கு ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரை உதாரணம் காட்டுகிறார். அவர் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து, ஒவ்வொரு நொடியும் தன் உடலை பயிற்றுவித்து, ஏற்கனவே ஒருவர் ஓடிய வேகத்தில் ஒரு கணநேரத்தை குறைக்கிறார். அதன் மூலம் அவர் மானுடஉடலின் சாத்தியத்தை ஒரு அணுவளவுக்கு மேலே கொண்டுசெல்கிறார். அடுத்தவர் அதில் இன்னொரு கணத்தை குறைப்பார். அந்த உடல்கள் வழியாக மானுடம் தன் சாத்தியங்களை வளர்த்துக்கொண்டே செல்கிறது.

தன் அறைக்குள் கதவைமூடி அமர்ந்து ஒரு காவியத்தை உருவாக்கும் கலைஞன் செய்வதும் அதையே. ஒரு கணிதமேதை, ஒரு தத்துவஞானி செய்வதும் அதையே. அவன் மானுடத்தின் அன்று வரையிலான வளர்ச்சியின் எல்லையை மேலும் விரிவாக்கம் செய்கிறான். ஒட்டுமொத்த மானுட சமூகத்துக்காக அதைச்செய்கிறான் அவன். ஒருவேளை அவன் வாழும் காலத்தில் ஒரே ஒருவர்கூட அதை புரிந்துகொள்ளாமலிருக்கலாம். ஆனால் மானுடம் பின்னொருநாள் அங்கே வந்துசேரும். அந்த தியாகமும் அர்ப்பணிப்புமே ஒரு சமூகத்தின் முன்னுதாரணமாக இருக்கவேண்டும். அனைத்து துறைகளிலும் உச்சங்களை நோக்கிச் செல்வதே அதன் கனவாக இருக்கவேண்டும். வாழ்நாள் முழுக்க தன்னலம் பாராமல் தன் வெற்றி கருதாமல் க.நா.சு தமிழ்ச்சமூகம் நோக்கிச் சொல்லிக்கொண்டிருந்தது அதைத்தான்.

உண்மையில் சிற்றிதழ் சார்ந்த இலக்கியத்தின் அடிப்படை மனநிலையை உருவாக்கியது அதுதான். சமகாலத் தோல்விகள் லௌகீகத் தோல்விகள் கலைஞனின் மாபெரும் வெற்றியாகக் கூடும் என்று சிற்றிதழ்சார்ந்த எழுத்துலகம் நம்பியது க.நா.சுவால்தான். இன்றல்லது என்றாவது என் எழுத்து வாசிக்கப்படும் என நம் கலைஞர்களை எழுதச்செய்த விசை அவ்வாறே உருவானது. அவர்களின் கால்தூசுக்குப் பெறுமானமில்லாதவர்கள் மேடைகளில் முழங்க, அங்கீகாரங்களில் சிறக்க அவர்கள் தங்கள் இருண்ட உலகில் இருந்துகொண்டு தங்கள் கலையில் தங்களை புதைத்துக்கொண்டார்கள். தங்கள் ஆன்மாவை ஒளியுடன் எழுப்பி தங்கள் ஆக்கங்களை சிறக்கச் செய்தார்கள்.

நம் முன்னோடி படைப்பாளிகள் பட்டினி கிடந்தார்கள். எழுத இடமில்லாமல் பூங்காத்தெருக்களில் கூட்டம் வருவதற்கு முன் அதிகாலையில் வந்திருந்து பனியில் அமர்ந்து எழுதினார்கள். காகிதம் வாங்க தாளில்லாமல் துண்டுபிரசுரங்களைச் சேகரித்து ஒருபக்கத்தில் எழுதினார்கள். மனைவிதாலியை விற்று அவற்றை அச்சிட்டார்கள். நூல்களை தலையில் சுமந்து கொண்டுசென்று விற்றார்கள். பிழைப்புக்காக எடுபிடி வேலை செய்தார்கள். அந்த எழுத்துக்கு வசைகளை பரிசாகப் பெற்றார்கள். அவ்வாறு அவர்கள் உருவாக்கிய இலக்கியச் செல்வமே இன்றும் தமிழின் சாரமாக உள்ளது. அந்த உத்வேகத்துக்குக் காரணம் க.நா.சு உருவாக்கிய புதுமைப்பித்தன் என்ற மகத்தான முன்னுதாரணம்.

அந்த முன்னுதாரணம் சமரசமில்லாத கறாரான விமர்சன அளவுகோல்களினால் ஆனது. ஒவ்வொருவரையும் அவரவர் இடத்தில் அமர்த்தி மேலும் மேலும் உச்சங்களை நோக்கிச் செல்லும் உத்வேகத்தால் ஆனது. தான் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் வரலாற்றில் விழுகிறது என்ற பிரக்ஞையால் ஆனது. அதை அனைவராலும் புரிந்துகொள்ள முடியாதுதான். அவர்களை ஒரு பொருட்டாக எண்ணாமல் தன் காலகட்டத்து தீவிரமனங்களை மட்டுமே இலக்காக்கிச் செயல்படுவது அது. இன்றும் அது ஒரு வாழும் பேராற்றல்தான்.

ஜெ

மறுபிரசுரம் , முதற்பிரசுரம் 2010/ ஆகஸ்ட்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7798

27 comments

Skip to comment form

 1. எம்.ஏ.சுசீலா

  வாசிப்பின் ஆரம்ப நிலையைக் கல்கியிலும்,சுஜாதாவிலும் தொடங்கும் ஒருவர் ,இலக்கியப் படைப்புக்களின் உச்ச பட்ச சாத்தியக் கூறுகளை அறியும் தேட்டமும்,தீவிர இலக்கியப் பிடிப்பும் கொண்டவராக இருந்தால் அவர் சென்று சேரும் இடம் ….
  அன்றைய சூழலில் புதுமைப் பித்தனாகவும்,
  இன்று ஜெயமோகன் ,எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோராகவுமே இருக்கும்.
  தொடக்க நிலையிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் கண்ணதாசன் போன்றவர்களுக்குப் பூப் போட்டுக் கொண்டே பொழுதை ஓட்ட வேண்டியதுதான்.

 2. bala

  ராமானுஜன் மிகச் சரியான உதாரணம்,, ஜெ.. bulls eye

 3. pichaikaaran

  அன்புள்ள ஜெ மோ . .

  கல்கி போன்ற எழுத்தாளர்களையும் , புதுமை பித்தன் போன்ற எழுத்தாளர்களையும் வெவ்வேறு துருவங்கள் என நினைப்பது சரி அல்ல . ஒருவரை ஒருவர் நிறைவு செய்கிறார்கள் . பொன்னியின் செல்வன் இல்லாவிட்டால் , விஷ்ணுபுரம் படிக்கும் ஆவல் ஏற்பட்டு இருக்காது.

 4. ஜெயமோகன்

  அன்புள்ள பிச்சைக்காரன் அவ்வளவு சொன்னபின்னரும் மீண்டும் அதே பாட்டை பாடுகிறீர்கள்… ரெகே பாடல்களில் பல்லவி சம்பந்தமில்லாமல் திரும்பத்திரும்ப ஓரமாக ஒலித்துக்கொண்டே இருப்பதுபோல இருக்கிறது))

 5. droana

  அன்புள்ள ஜெ,
  புதுமைபித்தனை இலக்கியத்தின் உச்சமாக கொண்டாடுவோர்களுக்கு இணையாக அவரது எழுத்துக்கள் அபத்தம் என வசைப் பாடுவோர்களும் இருக்கவே செய்கிறார்கள்.தன்னுடைய வறுமையை மட்டுமே தனது எழுத்தின் கருவாக அவர் பெரும்பாலும் கொண்டிருந்தார் எனவும் அதனோடு , “காஞ்சனை” “கொலைக்காரனின் கை” முதலிய கதைகளில் சாதாரண ஜனரஞ்சக மர்மக்கதை எழுத்தாளரின் நடையினையே அவர் கொண்டிருந்தார் எனவும் வாதாடுபவர்களுக்கான பதிலினை நீங்கள் விரைவில் வழங்குவீர்கள் என நம்புகிறேன்.
  அன்புடன்: துரோணா.

 6. RV

  அன்புள்ள ஜெயமோகன்,
  // கணக்கு வாத்தியார் பெரியவர்தான். அவரது சேவை தேவையானதே. அவருக்கு கும்பிடு போடலாம்தான். ஆனால் ராமானுஜன்தான் தமிழின் சொத்து. அவர்தான் தமிழ்ச்சமூகத்தின் உச்சமுனை. //
  உங்களை சரியாக புரிந்து கொள்கிறேனா என்று தெரியவில்லை. கல்கியின் சேவை பெரியதே, ஆனால் அவர் நிலைத்து நிற்கும் இலக்கியம் எதுவும் படைக்கவில்லை என்று சொல்கிறார்போல இருக்கிறது. என் கண்ணில் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் இலக்கியமே. (அலை ஓசையும், பார்த்திபன் கனவும் இல்லை) நீங்கள் பொ. செல்வனை இலக்கியம் என்று கருதவில்லையா? ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை இலக்கியம் என்று சொல்ல மாட்டீர்களா? அலெக்சாண்டர் டுமாவின் 3 மஸ்கிடீர்ஸ், மாண்டி கிறிஸ்டோ? வால்டர் ஸ்காட்? ஸ்டீவந்சனின் ட்ரெஷர் ஐலன்ட்?

 7. Rajan

  அன்புள்ள ஜெயமோகன்

  ”ஏன் கணிதமேதை ராமானுஜனுக்குக் கூட இங்கே எந்த நினைவகமும் இல்லை.”

  கும்பகோணம் கல்லூரியில் அவருக்கு ஒரு மார்பளவு சின்னச் சிலை செய்யப் பட்டதாகவும் அது வைக்கப் படும் பொழுது “பாப்பாரப் பயலுக்கு போய் எப்படி சிலை வைப்பீர்கள்” என்று நம் கழகக் கண்மணிகள் சண்டைக்கு வந்து சிலையை சாக்கடையில் தூக்கி எறிந்ததாகவும் முன்பொருமுறை கும்பகோணத்தைச் சேர்ந்த கனடா வெங்கட் அவர்கள் எழுதியிருந்த நினைவு. சமீபத்தில் ராமானுஜன் வீட்டுக்குச் சென்று வந்த சேதுபதி அருணாச்சலமும் கூட அவரது கசப்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார்.

  நீங்கள் அமெரிக்கா வந்திருந்த பொழுது ஜாக் லண்டனுக்கும், ஸ்டைன்பெக்குக்கும், மார்க் ட்வைனுக்கும், ஹெமிங் வேவுக்கும் இன்னும் எண்ணற்ற எழுத்தாளர்களுக்கும் வைக்கப் பட்டிருந்த நினைவகங்களையும், ம்யூசியங்களையும், சாலைப் பெயர்களையும் கண்டீர்கள். இன்றைய தமிழ் நாட்டைப் பார்க்கும் பொழுது ………….. சரி வேண்டாம். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்

  வருத்தத்துடன்
  ராஜன்

 8. ஜெயமோகன்

  அன்புள்ள துரோணா
  அவர்களிடம் புதுமைப்பித்தனை படிக்கும்படிச் சொல்வேன், அதுவே என் பதில்
  ஜெ

 9. ஜெயமோகன்

  அன்புள்ள ஆர்வி
  இதை நான் பலமுறை எழுதியிருக்கிறேன். இலக்கியமென்ற விரிவான தளத்தில் பல வகைமைகள் உள்ளன. வெகுஜன இலக்கியம் அதில் ஒன்று. துப்பறியும் நாவலிலும் கூட அந்த தளத்துக்குள் முக்கியமான படைப்புகள் இருக்கலாம். ஆனால் இலக்கியம் என்ற இயக்கத்தின் மையமாக இருப்பவை அந்தப்பண்பாட்டின் ஆழத்தையும் அந்த மக்களின் மன உச்சங்களையும் காட்டும் இலக்கியங்களே. கல்கி எழுதிய நாவல்களை ரொமான்ஸ் எனலாம். அந்தவகைமைக்குள் அவரும் சாண்டில்யனும் ஜெகசிற்பியனும் நா பார்த்தசாரதியும் எல்லாம் குறிப்பிடத்தக்க கதைகளை எழுதியிருக்கிறார்கள். அந்த எல்லைக்குள் அவர்களை அங்கீகரிப்பதில் பிழையும் இல்லை

  ஆனால் இலக்கியத்தின் மையமாக, அந்த கலை விடுக்கும் அறைகூவலைச் சந்திக்கும் ஆற்றல் கொண்டவையாக, நாம் புதுமைப்பித்தன் லா ச ராமாமிருதம் திஜானகிராமன் கு அழகிரிசாமி சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் கி.ராஜநாராயனன் என்ற இலக்கிய ஆசிரியர்களின் படைப்புகளினால் ஆன மரபையே சொல்ல முடியும்

  உண்மையிலேயே கல்கிக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் ஒரு வாசகருக்கு தெரியவில்லை என்றால் ‘நல்லது நண்பரே, வாழ்க’ என்று சொல்லி ஒதுங்கிவிடுவதே என் வழிமுறை. ஒன்றுமே செய்யமுடியாது. வேறுபாட்டை உணர்ந்தவரிடம் அதிகம் விவாதிக்கவேண்டியிருக்காது. இந்த வகைமையை மட்டும் சுட்டிக்காட்டினால் போதும்

  வால்டர் ஸ்காட்டும் அலக்ஸாண்டர் டூமாவும் ரொமான்ஸ் வகை படைப்புகளை எழுதியவர்களாக கருதப்படுகிறார்கள். அந்த தளத்தில் ஆராயப்படுகிறார்கள். தல்ஸ்தோய்க்கும் காஃப்காவுக்கும் உள்ள இடம் அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்பதை மேலை இலக்கிய விமரிசனத்தை மேலோட்டமாக பார்த்தாலே உணரலாம். ருஷ இலக்கியத்துக்கு தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் செகாவும் பிரெஞ்சு இலக்கியத்துக்கு விக்டர் யூகோவும் மார்சல் புரூஸ்தும் மாப்பசானும் தான் முன்னுதாரணங்கள். அங்கே ரொமான்ஸ்களை எழுதித்தள்ளியவர்கள் அல்ல.

  இங்கே சிக்கல் படைப்பாளிகளின் இடத்தில் கேளிக்கையாளர்கள் வைக்கப்படுவதே. இந்த வேறுபாட்டை இத்தனை வருடங்கள் மீளமீளச் சொல்லியும் ஏன் புரிந்துகொள்ளச் செய்யமுடியவில்லை. உண்மையிலேயே புரியவில்லை. தமிழ் மன அமைப்பில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்ன?

  ஜெ

 10. mmurali

  அன்புள்ள ஜே.

  ராமானுஜன் மற்றும் புதுமைபித்தன் ஒப்பிட்ட நோக்கு சிறப்பாக இருந்தது. புரிந்து கொள்ளவும் சுலபமாக இருந்தது.

  நீங்கள் குறிப்பிட்டது போல், மன அமைப்பு சிக்கலோ என தமிழ்ச் சமூகம் மற்றுமன்றி ஏனைய சிறு சமூக அமைப்பிலும் எண்ணியுள்ளேன்.

  சில சமயம் நாம் எழுதும் விவரணங்களை, எழுத்தாளர்கள் மீதான விமரிசனத்தை தன் மீது ஏனோ ஏற்றிக் கொண்டு சங்கடப் படுகிறார்கள்.

  பொதுவாக நாம் பரிந்து உரைக்கும் விஷயங்களை (எழுத்தோ, இசையோ, நாடகமோ அல்லது திரை படமோ ) அனுபவிக்கும் வரை அவர்கள் (மெல்லிய) கோபம் தீருவதில்லை.

  இதை பற்றி சற்று யோசித்து எழுதினால், ஒரு சில பரிந்துரைகள் உபயோகமாக இருக்கலாம்

  முரளி

 11. V.Ganesh

  நன்றி சார்.
  இன்று காலையில்தான் “கோலத்தில் பாய்வது” என்ற உங்கள் குறிப்பு (article) படித்தேன். எங்களை போன்ற சாமான்யர்களுக்கு சில விஷயங்களை எத்தனை முறை கூறினாலும் புரிவதில்லை. அதாவது ஒரு குறிப்பு என்றால் நம்முடைய மனப்பாங்கே அதில் ஏதாவது ஒரு நிலை சார்ந்து விமரிசிக்க வேண்டும் என்று ஆகிறது. இது ஒரு அடிப்படை தவறு என்றும் கருதலாம். முத்திரை குத்துதல்.
  ஆனால் இது போன்ற விஷயங்களில் உலகம் ஒரு பொதுவான அழிவை நோக்கி போகிறது என்பது என் கருத்து. அதாவது general degradation in quality. அனைத்து துறைகளிலும்.

 12. karthik_s1

  சார், ஏழ்லாம் உலகம் நாவெல்ல அந்த பிள்ள பிடிக்கிற பையன்னுக்கு ஏன் சார் ராமானுஜன் னு பேர் வச்சீங்க?

 13. கோவை அரன்

  ராமானுஜம் உதாரணம் மிகப் பொருத்தம் , ஜெவின் தொடர்ந்த வாசகர்களே சுஜாதாவின் கட்டுரைக்கு மனமுடைந்து போனார்கள் , சுஜாதாவின் (அவர் இருந்தபோதே) அறிவியல் சிறுதைகளுக்கு எழுதிய முன்னுரையிலேயே ஜெ சொன்ன விசயம்தான் இது ,

  சொல்ல வந்ததை மிக தெளிவாக்கிய கட்டுரை இது .

  சுஜாதா கட்டுரைகள்

  சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் http://www.jeyamohan.in/?p=174

  விளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்] http://www.jeyamohan.in/?p=3288

  எழுத்தாளர்களை அணுகுதல்….http://www.jeyamohan.in/?p=3684

  சுஜாதா, இருவம்புகள் http://www.jeyamohan.in/?p=376

  சுஜாதாவுக்காக ஓர் இரவு http://www.jeyamohan.in/?p=288

  சுஜாதா: மறைந்த முன்னோடி http://www.jeyamohan.in/?p=286

 14. RV

  அன்புள்ள ஜெயமோகன்,

  கல்கியின் படைப்புகளும் இலக்கியத்தின் ஒரு வகையே என்று நீங்கள் எழுதி இருப்பது என் சந்தேகத்தை தீர்க்கிறது. கணக்கு வாத்தியார் என்று எழுதி இருந்த உதாரணத்தால் குழம்பிவிட்டேன். வாத்தியார் (சாதாரணமாக) படைப்பாளி இல்லை அல்லவா? அவர் ஏற்கனவே இருக்கும் அறிவு நிலையை விளக்குபவர் மட்டுமே அல்லவா? அது என்னை குழப்பிவிட்டுவிட்டது.

 15. gomathi sankar

  உங்கள் உதாரணத்தையே பயன்படுத்துவதற்கு மன்னிக்கவேண்டுகிறேன்.ராமானுஜத்தைவிட கணக்குவாத்தியார் அதிகம் கவனிக்கப் படுவதின் காரணம் அவரால் ராமானுஜம் அளவுக்கு வரமுடியாவிட்டாலும் அவரது மாணவர்களுக்கு கணித ஆர்வத்தை ஊட்டி மேலும் சில ராமானுஜன்களை உருவாக்கமுடியும் என்பதே.வாத்தியான் புத்திசாலியா இருந்தா அவனே படிச்சு டாக்டராயிட வேண்டியதுதானே நம்ம உசிர ஏண்டே வாங்குறான் என்று படிக்கும்போது சலித்துக் கொண்டதுதான் நினைவு வருகிறது.ராமானுஜன் போன்றவர்கள் வேறு தளம் வேறு நிலை என்பது உண்மையே.ஆனால் அவரும் சுயம்பு அல்ல.அவருக்கும் கணிதத்தில் சுவை ஊட்டிய ஒரு ஆசான் உண்டு.ஆனால் ராமானுஜனால் இன்னொரு ராமானுஜனை உருவாக்க முடியாது .என்பதும் உண்மை.புதுமைப் பித்தன் வாசகனை நோக்கி எழுதவில்லை.வாசகனுக்காகவும் எழுதவில்லை.சரிதான்.அதனால்தான் வாசகர்கள் அவரைக் கவனிக்கவில்லை.ராமனுஜன் புதுமைப் பித்தன் போன்றவர்கள் உலகுடன் உரையாடுவதில்லை.அவர்கள் உலகம் தன்வயமானது.அவர்கள் எப்போதும் தன்னுடனே உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் தங்களுக்கென ஒரு உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு ஒரு சராசரி மனிதனுக்கு சற்றும் தொடர்பற்ற ஒரு தளத்தில் இருக்கிறார்கள்.ஆகவே அவர்களது வட்டமும் சிறியதாகவே இருக்கும்.அப்படித்தான் இருக்கவேண்டும் அல்லவா..எனது இணைய தளத்துக்கு வருபவர் எண்ணிக்கையை வடிகட்டி குறைக்கவேண்டும் என்று நீங்கள் முன்பொரு சமயம் எழுதியிருந்ததை நினைவு படுத்துகிறேன்.

 16. ஜெயமோகன்

  ஆர்வி,

  கல்கி வெறும் கதைசொல்லி மட்டும் அல்ல. அக்காலத்தில் ஒரு கலாச்சார சக்தி. இசை, நடனம், மரபிலக்கியம் என பல தளங்களில் செயல்பட்டார். ஒருவகையில் ஒருமிகச்சிறந்த ஆசிரியர். அந்த அர்த்ததில் சொன்னேன். தமிழ் வரலாற்றில் சதாசிவப்பண்டாரத்தார் ஸ்ரீனிவாச சாஸ்டதிரி போன்றவர்கள் உருவாக்கிய அலையை வெகுஜனப்படுத்தியவர் அவர். அந்த அர்த்ததில் நான் சொன்னேன் [அவர் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களைப் பற்றி என்ன சொன்னார் என்று தெரிந்த்ால் அவரது நேர்மையில் தீவிரம் புரியும்]
  ஜெ

 17. ஜெயமோகன்

  கோமதிசங்கர்

  அதைத்தான் க.நா.சுவும் சொல்கிறார். வடிகட்டலை. புதுமைப்பித்தனை ஒருபோதும் வெகுஜன எழுத்தாளராக ஆக்க முடியாது. அதற்கு முயலவேண்டும் என்றும் க.நா.சு சொல்லவில்லை. தேர்ந்த வாசகர்கள் கூட பிரபலத்தை வைத்து இலக்கியத்தை அளக்கக்கூடாது என்றே சொல்கிறார். ஒரு சமூகத்தின் இலட்சியம் அதன் உச்சநிலையாக இருக்கவேண்டும். அச்சமூகத்தின் சிறந்த மனங்கள் அதை நோக்கி ஆற்றுப்படுத்தப்பட வேண்டும் – க.நாசு வலியுறுத்துவது அதையே. மாறாக வெகுஜனக்கலை இலட்சியப்புள்ளியாக முன்னிறுத்தப்பட்டால் அச்சமூகம் தன் உச்சங்களை நோக்கிச் செல்லமுடியாத ஒன்றாக ஆகும் – ஊனமுறும்

  ஜெ

 18. gomathi sankar

  பிறகு அவர்கள் போதிய கவனம் பெறவில்லை என்ற விசனம் ஏன்..அவரைப் போன்றவர்கள் எப்போதுமே போதிய கவனம் பெறவே மாட்டார்கள்.அதற்கான விதை அவர்கள் ஆளுமையிலேயே உள்ளது.அவர்தான் உச்சம் என்பதில் சந்தேகமில்லை.ஆனால் அதை யார் ஒத்துக் கொள்வார்கள்..அந்த தளத்துக்கு அருகாமையில் நிற்கும் வெகு சிலரே..இரும்புக்கை மாயாவி காமிக்ஸை படித்துவிட்டு கண்விரியக் கதை சொல்லும் சிறுவனிடம் நான் ஒரு நூறு வருடத் தனிமையைப் படிடா ..அதுதான் உச்சம் என்று சொல்லமாட்டேன்.அதேசமயம் அவன் ஒரு நூறு வருடத் தனிமைக்கு என்றேனும் வரும் வழியின் சாவி இரும்புக்கை மாயாவியிடம் உள்ளது என்பதை மறக்கமாட்டேன்.சுஜாதாவைப் பற்றிய கட்டுரைக்கு கடும் எதிர்வினைகளுக்கு காரணம் அது அவர் செய்த பல விசயங்கள் பற்றிய விமர்சனம் என்பதைவிட அவர் செய்யாத விசயங்கள் பற்றிய விமர்சனமாக இருந்தது என்பதே..ஆம்..அவர் இன்னும் சற்று ஆழமாக தீவிரமாக எழுதியிருக்கலாம்.ஆனால் எழுதவில்லை.ஏன் எனில் அவர் சுஜாதா.ஜெயமோகனின் கதைகளை அவர் ஏன் எழுதவேண்டும்?அதற்கு ஜெமோ இருக்கிறாரே.

 19. stride

  ஜெ,

  நீங்கள் முந்தைய “வாசகனும் எழுத்தாளனும்” கட்டுரையில் நீங்கள் கூறியது

  “அவர் எழுதிய விமர்சனங்கள் அவருக்கு கடுமையான வசைகளையும் ஏளனங்களையும் பெற்றுத்தந்தன. அவற்றுக்கெல்லாம் அவர் பொறுமையாக நீண்ட விளக்கங்களை அளித்தார். மீண்டும் மீண்டும் ஒரே கேள்விகளே அவரிடம் கேட்கப்பட்டன. அவற்றுக்கு அவர் மீண்டும் மீண்டும் விளக்கம் அளித்தார். இரண்டுதலைமுறைக்காலம் அவர் தன் தரப்பை சலிக்காமல் சொல்லிக்கொண்டே இருந்தார்.


  சோர்வேயில்லாமல் போரிட்டார். தன் வாழ்க்கையையே அதற்காக அவர் அர்ப்பணித்தார்”

  க.நா.சுவின் பந்தத்தை நீங்கள் பொறுமையாக சுமந்து செல்வது மகிழ்ச்சி தருகிறது.

  இந்த கேள்விகள் அறுபது ஆண்டுகளாக விடாமல் எழுந்து கொண்டே இருப்பதற்கு ஒரே காரணம் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போல் ஒன்பதாம் வகுப்பு முதலே இலக்கியத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தாதது தான் என்று தோன்றுகிறது. இங்கே ஹியூஸ்டன் நகருக்கு நாற்பது மைல் தள்ளி இன்னமும் நாட்டுப்புறமாக இருக்கும் ஒரு பள்ளியின் இலக்கிய வாசிப்பு பாட திட்டத்தை பாருங்கள்.

  http://www.tomballisd.net/content/campus.aspx?sectionId=138

  English Summer Reading: என்னும் தலைப்பின் கீழுள்ள கோப்புகளை திறந்தால் காணலாம்.

  நாட்டின் எதோ ஒரு மூலையில் இருக்கும் பள்ளியிலேயே இப்படி இருந்தால் கல்வி அறிவு அதிகம் கூடிய வட கிழக்கு மற்றும் மேற்கு கடலோர மாகாணங்களின் பள்ளிகளில் வாசிப்பு இன்னமும் விரிவாக இருக்கும் என நம்பலாம்.

  நல்ல ஆரம்ப நிலை பயிற்சி இல்லாவிடில் பிறகு கடினம் தான். இது என்னுடைய சொந்த அனுபவத்தில் அறிந்தது. விட்டதை இப்போது தேடிப் படிப்பதற்கு முதலில் நேரமில்லை, நேரம் இருந்தாலும் முப்பது வயது ஆவதற்குள் இலட்சியவாதம் விடை பெற்று சென்று விட்டதால் அந்த ஆக்கங்கள் மனதில் உண்டாகியிருக்க கூடிய எழுச்சியை கூட கற்பனை செய்து தான் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

  சிவா

 20. Tharamangalam Mani

  அன்புள்ள ஜெ,

  ஒரு எழுத்தாளன் வாசகனுக்குப் புரியவேண்டுமே என எழுதத் தொடங்கும்போதே சமரசம் செய்துகொள்கிறான். அவனுடைய முழுமை வெளிப்பட இது ஒரு தடையாக இருக்கிறது.அவனுடைய முழு வீச்சை அது தடை செய்கிறது. எழுத்தாளன் சமூக சேவை செய்ய வரவில்லை. அவன் ஒரு கலைஞன். கலைஞனுக்கு தனது கலையை முழுமையாக வெளிக்கொணர்வது ஒன்றே குறிக்கோளாக இருக்கமுடியும். அதுவும் தானாக நடக்கும், அவன் அதற்காக முனைவதில்லை. அது ஒரு by product .எல்லாரும் புரிந்துகொள்ள எழுதினால் அது கன்னித்தீவை தாண்டிவர முடியாது என நான் நினைக்கிறேன்..

 21. ஜெயமோகன்

  கோமதி சங்கர், இரண்டே வரியில் முடித்துவிடுகிறேன். கநாசு புதுமைப்பித்தனுக்கு போதிய கவனம் கிடைக்கவில்லை என்று சொன்னது வெகுஜனவாசகர்களிடம் கிடைக்கவில்லை என்று அல்ல, தரமான வாசகர்களாக ஆவதற்கான தகுதி கொண்டவர்களிடம் கிடைக்கவில்லை என்றே. அந்த வாசகர்கள்கூட கேளிக்கை எழுத்தின் பிரபலத்தை அளவீடாகக் கொண்டிருந்ததை அவர் விமரிசித்தார். அந்த கவனத்தை உருவாக்கி அளித்தார்

  ஜெ

 22. ஜெயமோகன்

  சிவா,
  மிகச்சரியாக உங்கள் கருத்தே என் கருத்தும். நம் பிள்ளைகளுக்கு அடிபப்டைகள் அவை கற்கப்படவேண்டிய வயதில் சொல்லித்தரப்படுவதில்லை. பின்பு ஆளுமை -அகங்காரம் – உருவாகி விடுகிறது. புரிதலுக்கான வழிகளை முழுக்க அது அடைத்துக்கொள்கிறது. தன்னை உடைத்து வார்க்க சித்தமான சிலர் தவிர பிறர் அதன் பின் எதையும் கற்றுக்கொள்வதில்லை. தன்னை தக்கவைத்துக்கொள்ளும் விவாதங்களில் ஈடுபடுகிறார்கள்.

  இதையே வாசிப்பைப் பற்றியும் சொல்வேன். நம் குழந்தைகளுக்கு ஒரு நூலை வாசித்து புரிந்துகொள்ளும் பயிற்சியே இல்லை. அவர்கள் மனப்பாடம் மட்டுமே செய்யக்கற்றவர்கள்

  ஜெ

 23. V.Ganesh

  ஜெயமோகன்
  பிரச்சினை என்னவென்றால் என் குழந்தைகளுக்கு தமிழ் வாசிக்க / எழுத தெரியாது. நான் மும்பையில் அநேக காலம் பணி புரிந்ததின் விளைவு. நான் சொல்லும் வாசிப்பு என்பது அவர்களால் ஒரு நல்ல / சாதரணமான தமிழ்க் கவிதையை ரசிக்க முடியாது. ஆனால் இங்கிலீஷ் கதைகள் வாசிப்பதில் சமர்த்தர்கள். என் குழப்பமே இவர்களுக்கு நல்ல தமிழை எப்படி அறிமுக படுத்துவது என்பது தான்.
  தமிழ் summer reading என்று துவங்கினால் என்ன? இங்கே தமிழ் என்றாலே அரசியல் ……

 24. RV

  அன்புள்ள ஜெயமோகன்,

  கல்கி காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பற்றி என்னதான் சொன்னார்?

 25. ஜெயமோகன்

  தேடுங்கள் கிடைக்கும் – இல்லையேல் சலவைக்காரி ஜோக் போல அறிந்த ரகசியம்
  ஜெ

 26. Muthu

  @ RV,

  கேரளாவில் நடந்த தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவுப்போராட்டத்தை கைவிடும்படி – காரணம் அது இந்து தர்மத்துக்கு எதிரானது என்பதால் – கேட்டுக்கொள்ள காஞ்சி பெரியவர் கேரளாவுக்கு சென்று (நடந்தே என்பது உள்ளிடை) காந்தியை சந்தித்த நிகழ்வை விமர்சித்து கல்கி எழுதியதாக படித்த நினைவு. (அவரது வார்த்தைகளை அப்படியே தர இயலவில்லை. நினைவில் இருந்தவரை தந்திருக்கிறேன். ஆனால் தொனி அதேதான். படித்தபோது திகைத்துப்போனேன்)

  “அவர் (காஞ்சி பெரியவர்) இந்துக்களின் பிரதிநிதி அல்ல; ஒட்டுமொத்த பிராமணர்களுக்கே கூட தலைவர் அல்ல; அவர் ஒரு மடத்தின் நிர்வாகத்தலைவர் மட்டுமே. ஆகவே இது போன்ற சமூக முன்னேற்ற நிகழ்வுகளில் அவர் தலையிடுவது தேவையற்றது”

  அன்புடன்
  முத்து

  பி.கு : ஜெ, மன்னியுங்கள் ப்ளீஸ் :)

 27. RV

  முத்து, நன்றி! எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் கூட காஞ்சி சந்திரசேகரேந்திரர் முப்பதுகளில் ராஜாஜி அரசு ஆலயப் பிரவேச மசோதாவை கொண்டு வந்தபோது அதை எதிர்த்தார் என்று எழுதி இருப்பதாக நினைவு (எதிர்த்த இன்னொருவர் பெரியாராம்!)

Comments have been disabled.